Friday, June 20, 2025

QFR-ஜெயபார்கவி

 திருச்சி சாவித்ரி வித்யாசாலா பள்ளிக்கு யூனிஃபார்மில் செல்லும் சிறுமி போல இருக்கும் இந்த பெண்ணிடம் இவ்வளவு அற்புதமான குரலா என மலைத்துப்போகிறோம். இவள் பெயர் ஜெயபார்கவி. திருச்சிக்காரி. எங்க ஊர்க்காரர்களென்றால் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம்.

LR ஈஸ்வரி அவர்களைப்போலவே பாடுவதற்கெல்லாம் தனித்திறமை வேண்டும். அதாவது பாடல் வரிகளின் ஏற்ற இறக்கங்களை அநாயசிமாக பாடுவதும், நடுவே குரலை ஹஸ்கியாக்கிப்பாடுவதும், ராக ஆலாபனையை நீட்டிச்செல்வதிலும், சில இடங்களில் குளிருக்கு நடுங்குவது போல ஹஹ்ஹ ஹஹ்ஹ என நடுக்கத்துடன் பாடுவதில் LRE க்கு நிகர் யாருமில்லை. (உதாரணம்: பாலாடை மேனி பனிவாடைக்காற்றில்…. பட்டத்து ராணி பார்க்கும் பாவை’). இந்தப்பெண் ஈஸ்வரியவர்கள் பாடல்களை அசாத்தியமாக பாடுகிறாள்.
QFR-453 (வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே) பாடலெல்லாம் பாட ஒருவருக்கு முதலில் தைரியம் வேண்டும். இவளுக்கு இது லட்டு மாதிரியான பாட்டு. பல்லவிக்கு முன் ஆரம்பமாகும் வரிகளில்
‘ஓடி வா(1).. என்னிடம்.. நெஞ்சமே.. ஓடிவா(2)..கண்களே’ எனும் சங்கதிகள் இவளது தொண்டையிலிருந்து பிசிறில்லாமல் வருவது வியப்பளிக்கிறது.
சரணத்தின் கடைசி பகுதியியான ‘உன் கண்பட்டதோ.. கைபட்டதோ.. பெண்ணுள்ளமே.. புண்பட்டதேஏஏஏஏஏ’ எனும் வரிகளை அவ்வளவு சுலபமாக பாடி விட முடியாது. ‘ன’, ‘ண’ ‘ள’ என சரியான உச்சரிப்புக்கள், பாடல் வரிகள், தப்பாத ரிதம்(தாளம்),கடைசியில் ஏகாரம் (புண்பட்டதேஏஏ) இவை எல்லாமே அந்த 6 வினாடிக்குள் கனக்கச்சிதமாக இவள் முடிக்காவிட்டால் அடுத்த நொடி Shyam Benjamin கீபோர்டில் சர்ர்ரென இழுக்கும் swipeஉடன் clash ஆகிவிடும். இப்படம் வெளிவந்த 1967இல் இவளது அம்மாவே பிறந்திருப்பார்களா தெரியாது! எப்படி இந்த குட்டி ராட்சசி இவ்வளவு அபாரமாக பாடுகிறாள்!
QFR- 266 ‘மயக்கும் மாலை பொழுதே நீ’
முதல் வரி.. You tube பக்கம் போய் Time 5.45இலிருந்து அந்த உள்ளோசையை(கமகங்களை) கவனியுங்கள்! ‘இன்னலை தீர்க்கவா’வில் தீர்க்க வா..ஆ(1)..ஆ(2)..ஆ(3).. ஆ(4)..ஆ(5)..ஆ(6) எனும் dancing musical embellishments இவை. 2ஆம் சரணத்தின் முடிவில் ‘போடும் போர்வை கண்ணாலே’ என்ற வரிகள் இரண்டாம் முறை பாடும்போது கவனியுங்கள். ஜிக்கி அவர்களைப்போலவே அத்தனை நுணுக்கமான nuances ஐ தவற விடாமல் பாடுகிறாள். பல வருடங்கள் இவள் கர்நாடக சங்கீத பாடம் படித்திருக்க வேண்டும் இப்படி பாடுவதற்கு.
QFR-32 ‘அன்பில் மலர்ந்த நல்ரோஜா’ பாடல் பற்றியெல்லாம் இவள் பாடியதை வைத்து ஆராய்ச்சி கட்டுரையே (தீசிஸ்) எழுதலாம். சுசிலாம்மா பிரமித்துப்போய் விடுவார்கள்.
423- ‘ஜாலிலோ ஜிம்கானா’ QFRஇன் டாப் 20 வரிசையில் இருக்க வேண்டும். இந்தப்பெண் ஜிக்கியவர்களுக்கு சற்றும் சளைக்காமல்பாடியிருப்பாள் இப்பாடலை.
QFR-107 (எந்தன் பார்வையின் கேள்விக்கு) பாடலைப்பாடியது இவள். எங்கே போனது இவளது LR ஈஸ்வரி ஸ்டைல்! எங்கே அந்த ஜிக்கி மற்றும் சுசிலா குரல்! அப்படியே ஜானகியவர்களின் கீச்சுக்குரலுக்கு தாவி விடுவாள் இவள். ராஜா.. ராஜா.. ராஜா.. எனும்போது அந்த 3வது ராஜாவில் சற்று குழைந்து ‘ஐயோ! கேட்டுக்கப்பா ராஜா!’ என ஆணித்தரமாக ஜானகியவர்கள் கெஞ்சுவதைப்போலவே கெஞ்சுவாள் இந்த குட்டி ராட்சசி.
QFR-152 (நீராட நேரம் நல்ல நேரம்), QFR-80(காலத்தை வென்றவன் நீ), QFR-17 (எண்ணப்பறவை சிறகடித்து) மற்றும் QFR- 42 (எனக்காவா நான் உனக்காகவா) என ஜமுனாராணி உட்பட எல்லா பாடகிகளையும் நம் கண் முன் வந்து நிறுத்துவாள் இவள்.
QFR-321 (முள்ளில் ரோஜா ) இவள் பாடிய பாடல்களிலேயே என்னை திகைக்க வைத்த பாடல் எனலாம். இவளுக்கு ரசிகர் மன்றமே உருவாகலாம் என Subhasree Thanikachalam அவர்கள் சொன்னதன் காரணம் இப்பாடலை இவள் கையாண்ட விதத்தில் தெரியும். பாடல் வரிகளுக்கேற்ப இவளது உடல்மொழி (body language) மற்றும் தலையை இங்குமங்கும் அசைத்து (‘கள்ளூரும் ரோஜா’ என பாடும்போது) இப்பாடலில் இவளது ஆளுமை தெரியும்.
இடையில் கொஞ்சம் nasal voice வேறு! கவனியுங்கள் சுசிலா, ஜானகி, ஜிக்கி இவர்கள் பாடல்களுக்கு இந்த யுத்தியை இவள் கொண்டு வரவில்லை. ஆனால் LR ஈஸ்வரி பாடலுக்கு இவள் சற்று nasal voice பிரயோகப்படுத்துகிறாள். எந்த இடத்தில்? 2வது சரணத்தில் ‘கட்டில் கட்டி காதல் சொல்வேன் மன்னன் என்றான்.. தொட்டில் கட்டி முத்தம் செய்வேன் பிள்ளை என்றான்’ எனும் வரிகளில் அந்த இரண்டு ‘என்றான்’களை மிதமாக மூக்கு வழியே ஒலியெழுப்பி பாடுகிறாள். இந்த பாடலுக்கு இவர்கள் வீடடில் திருஷ்டி சுற்றி போட்டிருக்க வேண்டும்.
யூட்யூபில் நிறைய பாடல்கள் மற்றும்
ராகமாலிகா TV நிகழ்ச்சிகளுக்காக நிறைய பாடல்கள் பாடியிருக்கிறாள்
‘ஹரியுடன் நான்’ நிகழ்ச்சியிலும் கலத்துகொண்டு நம்மை அசத்தியவள்.
QFRஇன் முக்கியமான முத்துக்களில் ஒன்று இவள்.

No comments:

Post a Comment