Friday, June 20, 2025

கோபிலி

 நண்பர் கோபிலி (Rajagopalan Trichy) இல்லத்தில் கார்த்திகை வேதபாராயணம்.

பெங்களூர் வஜ்ரஹள்ளி வேதபாடசாலையிலிருந்து வந்திருந்த 18 இளம் சிறார்கள் மஹா பெரியவா சந்திரசேகரேந்திரர் உருவப்படத்தின் முன் அமர்ந்து சிரத்தையாக வேதமந்திரங்களை கணீரென உச்சரிக்க, சுமார் 2 மணி நேரம் அந்த வேத ஒலியில் மயங்கி, தேனில் மூழ்கி கட்டுண்ட தேனீக்களில் நானும் ஒருவன்.
மனிதர்களுக்கான உயர்ந்த கொள்கைகளை வகுக்கவும், நெறிப்படுத்தவும், அறநெறி வழியை நம் மனிதத்திற்குள் செலுத்தவும் வேதம் மட்டுமே துணை புரிகிறது என்பதும் நிலைத்து நிற்கும் உண்மை.
‘வேதங்களுக்கு ஆதி அந்தம் எதுவும் இல்லை. கணக்கற்றவை, முடிவில்லாதவை’ என்கிறார் வேதவியாசர். வேதம் கற்கும் சிஷ்யர்களுக்கு குருவானவர் தன் வாய்மொழி மூலமாகவே படிப்பிக்கிறார். அதற்கென ஓலைச்சுவடிகள் எதுவும் இல்லையாம். உலகிலேயே முழுக்க முழுக்க வாய்மொழி மூலமாக ஆவணப்படுத்தப்பட்டு காப்பாற்றப்பட்டு வரும் ஒரே தெய்வீக நூல் வேதம் ஒன்றே என்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் நான் வரைந்த மஹாபெரியவாவின் உருவப்படம் அவர்களது இல்ல வரவேற்பறையை அலங்கரிக்க, தம்பதி சமேதராக 15 குடும்பங்கள் கலந்து கொண்ட வைபவம்.
நண்பர் கோபிலி ஒரு தீவிர சிவபக்தர். ஆன்மிகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உடைவர். காஞ்சி மடத்திற்கும், வேதபாடசாலைகளுக்கும், கோசாலைகளுக்கும் நிறைய நிதி உதவி அளிப்பவர். அதீத நகைச்சுவை உணர்வு கொண்டவர்.என் மீது அளவுகடந்த அன்பும் நட்பும் கொண்டவர். ‘என்ன ஶ்ரீதர்! சரியா சாப்டமாட்டேங்கறீங்க? உஷா பக்கத்துல இருக்கறதனாலயா?’ என நடுவே நம்மை கலாய்த்தார். எப்போதும் வார்த்தைக்கு வார்த்தை ‘ராம்..ராம்’ தான்.
சமையலறையில் ஒரு தெலுங்கு தம்பதி உணவு சமைத்துக்கொண்டிருந்தார்கள். பெங்களூரில் நிறைய வைபவங்களுக்கு சமைக்கிறார்களாம். வேதம் சொல்லும் பண்டிதர்களுக்கு வீட்டில் சமைத்த உணவு மட்டுமே அளிக்க வேண்டும் என்பது நியதியென கோபிலி தெரிவித்துக்கொண்டிருக்கும்போதே, வேத ஒலியையும் மீறி நம் நாசித்துவாரங்களில் சஞ்சரித்தது வடை மற்றும் பச்சகல்பூரம் தூவிய சக்கரை பொங்கல் வாசனை.
மாங்கா இஞ்சி பச்சடி, கோஸம்பரி (நம்மூர் கோஸ்மல்லி), கேரட் பாயசம், வடை, சர்க்கரை பொங்கல், அறைத்து விட்ட சாம்பார், பீன்ஸ் பருப்புசிலி, பூசனிக்காய் மிளகு கூட்டு, நந்தினி டெய்ரி பாலில் தோய்த்த கட்டித்தயிர் என பனையோலைத்தட்டில் திவ்யமான மஹாப்ரசாதம் (சாப்பாடுக்கு அல்லாடறதை டீசன்ட்டா நாங்க மஹாப்ரசாதம்னு சொல்லிக்கலாம் தானே!😄)
நிகழ்ச்சியின் கடைசியில் வேதம் ஓதிய அந்த 10இலிருந்து 15 வயதிற்குள்ளான பண்டித இளவர்களுக்கு எங்களுடன் சேர்ந்து தாம்பூலத்துடன் தக்ஷ்ணை அளித்து அவர்களிடம் ஆசி வாங்கி அனுப்பினர் கோபிலி -ஷோபனா தம்பதி.
இவ்வைபவத்தில் மனைவி Usharani Sridhar உடன் கலந்து கொண்டது மகிழ்ச்சியாகவும் மனதிற்கு நிம்மதியாகவும் உள்ளது. நண்பர்கள் Ramesh G & ஜெயலட்சுமி மற்றும் Iyer Pat தம்பதியினரும் கலந்துகொண்டனர். நிறைய புதிய நண்பர்களையும் நமக்கு அறிமுகப்படுத்தினார் கோபிலி.
ஸ்பஷ்டமாக உச்சரித்து வேதமந்திரங்களை ஓதிய அந்த குட்டியூண்டு சிறுவர்களின் கன்னங்களை ஆசையாக கிள்ளினர் சிலர். ‘நீ பேரு ஏமிபா?’ என நான் கேட்க அந்த குழந்தை ‘நா பேரு வேதவியாசா.. நாக்கு கொஞ்ச்சம் தமிழ் ஒஸ்துந்தி’ என்றது மழலையுடன்.
‘வேத உண்மைகள் யாவும் கண்டு கொள்ளப்பட்டவையே தவிர உண்டாக்கப்பட்டவை அல்ல, வெளிப்படுத்தப்பட்டவையே தவிர படைக்கப்பட்டவை அல்ல. வேதத்தை எவரும் படைக்கவில்லை. எனவே அவை தனிநபர் தொடர்பற்றவை’ என வேத விற்பன்னர்கள் கூறுகிறார்கள்.
வேத மந்திரத்தின் மூலம் நமது உடலையும் மனதையும் கட்டுப்படுத்தி, சாந்தப்படுத்தி, நலப்படுத்த முடியும்.
சர்வே ஜனா சுகினோ பவந்து! (அனைத்து மக்களும் சுகமாக வாழட்டும்!)
லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து! (அனைத்து உலகும் சுகம் பெறட்டும்!) எனும் வேத பிரார்த்தனை செய்து இந்த தெய்வீக வேதங்களைப் போற்றி நலம் பெறுவோமாக!

No comments:

Post a Comment