Tuesday, January 21, 2014

நண்பேன்டா ....


1986 ஆம் வருடம் ஒரு நாள்..அதிகாலை மணி 3... பம்பாய் மெயில் கல்யான் ஸ்டேஷனை தான்டியதும் மெதுவாக எழுந்து உட்கார்ந்து கொண்டேன். கையில் ஒரே பெட்டி. முதல்முறை பம்பாய் வருகிறேன். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் படித்ததால் கற்ற சரளமான ஹிந்தி, பள்ளிப்பருவத்தில் திருச்சி செயின்ட் ஜோசப்ஸில் விரல்கள் ஒடிக்கப்பட்டு imposition எழுதி grammer படித்தால் ஓரளவு சுமாரான ஆங்கிலம்......குடும்ப சூழ்நிலை காரணமாக CA மற்றும் ICWA இன்டர்மீடியட் பாஸ் செய்தவுடன் வேலை…பின் அடுத்த சில வருடங்களில் final பரிட்சை பாஸ் செய்ய வேண்டிய கட்டாயம்..இதுதான் சார் அப்ப நம்ம ப்ரொஃபைல். தண்டவாளங்கள் மாறும் ரயிலின் 'தடாம்...தடாம்' சப்தம் வெளியே கேட்டது....

திருச்சியில் ஆடிட்டர் குமாரராஜிடம் ஆர்டிகிள்ஸ் படிக்கும்போது அவரது partner ஆடிட்டர் முகுந்தன் ஆபிஸ் மாணவர்களுடன் வெளியூர் ஆடிட்கள் நான் போவதுண்டு. ஒருநாள் அவர்கள் ஆபிசில் இருந்து கணபதி சுப்ரமணியன் எனும் மாணவனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். நெடுநெடுவென உயரம், சோடாபுட்டி கண்ணாடி, சம்மந்தமில்லாத ஒரு டி.சட்டை, ஓரிரண்டு நாள் தாடி.. இதுதான் இந்த பதிவின் நாயகன் கணபதி. அன்று மாலையே மன்னார்புரம் ஹவுசிங் காலனி எங்கள் வீட்டிற்கு கணபதி வந்துவிட்டான். எங்கள் குடும்ப நண்பர் ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் சுபான்கான்' னீடம் தனக்கு accountancy பேப்பருக்கு டியூஷன் சேர உதவி கேட்டான்.

அடுத்த சில தினங்களில் டியூஷன் சேர்ந்து எனக்கும் நெருங்கிய நண்பன் ஆனான். என்னை விட ஒரு வருடம் சீனியர் வேறு. தினமும் நான் பொன்மலைக்கு போய் அவனுடன் படிக்கும் வழக்கமானது. நண்பன் மட்டுமில்லாது நமக்கு taxation, accountancy மற்றும் costing பாடங்களுக்கு அவன் தான் குரு. 'B' List of Contributories பற்றி விளக்கும்போது 'ஸ்ரீதரா.......நம்ம வீட்டு கல்யாணத்து பந்தியில நாம முதல்ல ஒக்காந்து சாப்பிடுவோமாடா.. அதுமாதிரி தான் ஒரு கம்பெனியை லிக்விடேட் செய்யும்போது…மொதல்ல யாராருக்கு பணத்த திருப்பி கொடுப்பா...'' என புரியும்படியான சில உதாரணங்களை சொல்லி accountancy இல் நம்ம டவுட்டுகளை க்ளியர் செய்வதில் கில்லாடி. படிக்கும் நேரத்தில் பாதி நேரம் பேச்சு தான். ('பொன்மலை' என என்னுடைய தனி பதிவில் இதைப்பற்றி எழுதிவிட்டேன்).

அவன் படித்த பொன்மலை சாமியார் ஸ்கூலில் (கிறுஸ்துவ நண்பர்கள் மன்னிக்க..அப்படித்தான் சொல்வார்கள்) ஆங்கில இலக்கணம் சொல்லித்தரும் வாத்தியார் சுலபமாக நினைவில் வைத்துக்கொள்ள நிறைய tips கொடுப்பார்களாம். ….
"ஐவி வந்தா ஷல்லு (I,WE,SHALL), மத்ததெல்லாம் வில்லு (WILL), மாத்தி போட்டா கொல்லு……….."மூனாவது பையன் தனியே வந்தா செருப்பால(S) அடி" (third person singular)...
மற்ற உள்ளூர் வாத்தியார்கள் சீக்கிரம் வீட்டுக்கு போகும்போது தினமும் ஸ்ரீரங்கத்திலிருந்து வரும் பூகோள வாத்தியார் (ஸ்கூலில் 'அய்யிரு') லேட்டாகத்தான் போவாராம். யாராவது பையன்கள் அவரை சைக்கிளில் பொன்மலை ஸ்டேஷனில் விட்டு விட்டால் அங்கேயே சந்தியவதானம் செய்து விட்டு ஸ்ரீரங்கத்துக்கு ரயிலை பிடிப்பாராம்.பஞ்சகச்சம் அங்கவஸ்திரத்துடன் வரும் அவர் " இந்த பூமியே அய்யரு மாதிரி தாண்டா.. அங்கவஸ்திரத்த இப்பிடி போட்டா அட்ச ரேகை.. இப்பிடி மாத்தி போட்டா தீர்க்க ரேகை.. புரியுதா?" என அவர் மாணவர்களுக்கு புரியும்படி விளக்குவாராம்.
தினமும் படிக்கிறேன் பேர்வழி என்று பொன்மலை ரயில்வே கான்டினில் ராவா தோசை, மைசூர் பாக், பில்டர் காபி, காசி அல்வா என வாழ்க்கை சந்தோஷமாக போனது. கணபதி CA பாஸ் செய்து பாம்பேயில் வேலையில் சேர்ந்து பிறகு இரண்டே வருடங்களில் அவனது உபயத்தில் நானும்…இதோ வந்துவிட்டேன்..

ச்சாய்.... ச்சாய்... சத்தம் கேட்டு வெளியே எட்டிப்பார்த்தேன். விடியற்காலை 4 மணிக்கு பம்பாய் வி.டி. ரயிலடியை ரயில் அடைந்த போது எனக்கு லேசான பயம் தொற்றிக்கொண்டது. மிரள மிரள விழித்தபடி நின்ற என்னை நோக்கி கணபதி கொஞ்ச நேரம் கழித்து வந்தான். 'வாடா... எப்பிடி இருக்கே..' என வலி உயிர்போகும்படி தோளில் அடித்தான். செம்பூர் போக உள்ளூர் ட்ரெயின் ஒன்றை பிடித்தோம். '6 மணிக்கு மேல டிரெயின்ல கூட்டத்த பாத்தேன்னா அசந்துடுவே' என்று அவன் சொன்னது ட்ரெயின் சத்தத்தில் என் காதில் விழவில்லை. ஓரளவு கூட்டமாகத்தான் இருந்தது.

ட்ரெயினில் எங்கு பார்த்தாலும் 'Abortion-Only Rs.70'..டிரான்ஸ் எலெக்ட்ரா கம்பெனியின் 'டார்ட்டாய்ஸ் கொசுவர்த்திசுருள்' விளம்பர வாசகங்கள். காந்தி குல்லா ஜீப்பா பைஜாமா உடுத்தி பக்கத்தில் அமர்ந்த மராட்டிக்காரன் ஒருவனை மிக மரியாதையுடன் பார்த்தேன். மெல்ல ஜிப்பாவில் கை விட்டு ஒரு சிறிய டப்பாவில் இருந்து கொஞ்சம் புகையிலை தூளை எடுத்து இடது கையில் வைத்தான். அதே டப்பாவை தலைகீழாக திருப்பி மூடியை திறந்து ஆள்காட்டி விரல் நகத்தால் சுண்ணாம்பை கீறி எடுத்து புகையிலை தூளுடன் சேர்த்து பெருவிரலால் தேய்த்து டப்...டப்பென்று தட்டி தோலை பறக்கவிட்டு மீதிப்பொடியை விரலால் செல்லமாக அள்ளி தன் கீழ் உதட்டுக்கு கீழே அவன் அடைத்த பொழுது எனக்கு நெஞ்சை அடைத்தது. என்னோடு சேர்ந்து இன்னும் இரண்டு பயணிகள் தும்மினார்கள். அதற்குள் காந்தி குல்லாக்காரன் ஆள்காட்டி மற்றும் நடுவிரலை உதட்டில் வைத்து விரல் gap இல் சீராக 'ப்பச்ச்ச்சத்தூ' என ஜன்னலை பார்த்து துப்ப.. சில துளிகளுடன் ஜில்லென என் முகத்தில் அடித்த ஈரக்காற்றில் "மலைச்சாரலில்.. இளம் பூங்குயில் " பாடலை நான் பாடாத குறைதான். திடீரென ஆர்மோனிய சத்தம்..கண்ணில்லாத வயதான கிழவர் ஆர்மோனியம் வாசிக்க கூடவே ஒரு சிறுமி 'ஔலாது வாலோன்.. பூலோங் கிலோன்' என பாடியவாறே நம் தொடையை தட்டி தட்டி உரிமையாக பிச்சை கேட்டாள். மற்றவர்கள் இல்லையென்று சொல்லாமல் ஸலாம் மட்டும் வைத்தார்கள். சுத்தமான ஹிந்தி பேசும் எனக்கு பம்பாயின் 'ஏ பாஜூ... ஓ பாஜூ..' மற்றும் 'அபன் கோ நை மாலும்' போன்றவை வித்தியாசமாக இருந்தது.

செம்பூர் ரயிலடியிலிருந்து 5 நிமிடத்தில் கணபதியின் ஃப்ளாட். அவனது நண்பர்கள் என்னை மேலும் கீழும் வினோதமாக பார்த்தார்கள். நாகராஜனுக்கு (CA மற்றும் ICWA) திருச்சி திருவானைக்காவல் கோவில் சமீபம் வீடாம். ஃபோர்ட் பகுதியில் A.F. பெர்குசன்னில் ஆடிட்டர் வேலை. கிருஷ்னரத்னம் (ICWA மற்றும் ACS ஆம்) சென்ட்ரல் வங்கி ப்ரொபெஷனரி ஆபீசர். நாகராஜன் நடு வகிடெடுத்து நெற்றியில் முடி புரள பேசிக்கொண்டிருந்த அந்த 10 நிமிடத்தில் 5 கெட்ட வார்த்தைகள். அதுவும் ஸ்பஷ்டமான உச்சரிப்புடன் சூடான பாலை டம்ளரில் ஊற்றி முட்டையை அடித்து கலக்கி குடித்துக்கொண்டே பம்பாய் பெண்களைப்பற்றிய சில புள்ளி விபரங்களை அவன் எடுத்து விடும்போது கிருஷ்னரத்னம் குளிக்கப்போக மனமில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தான். நமக்கும் கொஞ்சம் பயம் போய் இயல்பு நிலைக்கு வர முடிந்தது. சப்ஜெக்ட் அப்படி.. அந்தப்பக்கம் பாத்ரூமில் 'மணிகண்டா மணிகண்டா… மாமலை வாசா மணிகண்டா'.... பாடிக்கொண்டு கணபதி குளித்துக்கொண்டிருந்தான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் நானும் கணபதியும் ட்ரெயின் பிடிக்க செம்பூர் ஸ்டேஷனில் நின்றிருந்தோம். சுமார் 20 பேர் வெளியே தொங்கியவாறு ஒரு ட்ரெயின் வந்தது. "ரொம்ப கூட்டம் போல.. அடுத்த ட்ரெயின் பிடிக்கலாமா கணபதி?" என அப்பாவியாக நான் கேட்கும் முன், கணபதி என்னை ட்ரெயின் நுழை வாயில் அருகே தள்ளியவாறு நிற்க, பின்னாலிருந்து ஒரு கூட்டம் எங்களை அலாக்காக உள்ளே கொண்டுபோனது. நுழைவாயில் அருகிலேயே பீடிக்கட்டு மாதிரி நெருக்கமான கூட்டம். நானும் கணபதியும் கமல் ஸ்ரீதேவி மாதிரி பச்சக்கென்று ஓட்டிக்கொண்டு நின்றோம்.

நிறைய பேசினோம்..இனிமையான பாம்பே வாழ்க்கையின் ஈடு கொடுக்க முடியாத வேகம், 'மெஷினரி லைஃப்' என மற்ற மாநிலத்தவர் சொன்னாலும் அங்கு நிலவி வரும் அமைதியான வாழ்க்கை, பயமின்றி நடமாடும் இளம் பெண்கள், எத்தனை சம்பளமாக இருந்தாலும் அதற்கென வகுக்கப்பட்ட வாழ்க்கை முறைகள்.. அரசாங்கத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் தமிழ் CA க்கள் பெரும் பதவிகளில் கோலோச்சுவது… இப்படிப்போன எங்கள் பேச்சு மெல்ல அவ்வூர் பெண்டிர் பக்கம் தாவியபோது திருச்சியில் காய்ந்து கிடந்த நமக்கு உற்சாகம் கரைபுரண்டது. அதுபற்றி அப்புறம் தனியாக பேசுவோம்…. வெளியே குர்லா, சுன்னாபட்டி, கோலிவாடா, வடாலா, காட்டன் க்ரீன் போன்ற வித்தியாசமான பெயர்களில் ஸ்டேஷன்கள்.

கணபதி நேராக என்னை நாரிமன் பாய்ன்ட்டில் A.P.ஆஷர், சார்டர்ட் அகௌன்டென்ட்ஸ் என்ற இடத்தில் சேர்த்தான். வேலையில் இருந்துகொண்டே நான் CA ஃபைனல் பாஸ் செய்து வேறு 2 ,3 வேலைகள் மாறினேன். தினமும் மதியம் அரை மணிநேரம் கணபதியை நேரில் பார்த்து அரட்டை… மாலை சேர்ந்து ரயில் பயணம்….சனி ஞாயிறு முழுவதும் அவனுடன் முலுன்டு மற்றும் செம்பூரில் இருக்கும் அவனது அக்காக்கள் வீடு, மாதுங்கா கோவில், உடுப்பி க்ரிஷ்னா, கன்செர்ன் மற்றும் சொசைட்டியில் அருமையான இரவு சாப்பாடு, ஞாயிறு மதியம் சயான் மணீசில் வெ.சாம்பார், உ.கி. கறி, செம்பூர் அஹோபில மடம், செம்பூர் முருகன் கோவில் கீழ் தளத்தில் நெய்வேலி சந்தானம் கச்சேரி, என நிறைய ஊர் சுற்றினோம்.

அடுத்த சில வருடங்களில் கணபதி பஹ்ரைனுக்கு வந்து விட 8 வருட பம்பாய் வாசத்தை விட்டு நானும் 1994இல் பஹ்ரைன் வந்திறங்கினேன் கணபதியின் கைங்கரியத்தில்.. இன்றுவரை அதே கம்பெனி. நம்மை மாதிரியே கணபதிக்கும் 2 பையன்கள். குழந்தைகளும் எங்களை மாதிரியே லூட்டியடிப்பவர்கள். நாங்கள் 'பஹ்ரைன் ஸ்லோகா க்ரூப்' ஆரம்பித்து சுமார் 10 குடும்பங்கள் குழந்தைகளுடன் வாரமொருமுறை பஜன் மற்றும் ஸ்லோகங்கள் சொல்லி வாழ்க்கையை அடுத்த 20 வருடங்களுக்கு நகர்த்தினோம் .

தற்போது கணபதி சென்னையில் ஒரு பெரிய ஆடிட் நிறுவனத்தில்... CA மட்டுமல்லாது CISA, SAP போன்ற படிப்புகள் முடித்து ஆடிட்டில் இருந்து ITக்கு தாவி சைனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் டியூ டெலிஜன்ஸ் மற்றும் இம்பிளிமெண்டேஷன் என்று கலக்குகிறான். வாரமொருமுறை குறைந்தது அரை மணி நேரம் என்னுடன் தொலைபேசியில் அரட்டை.. வருடமொருமுறை நான் ஒருவாரம் வுட்லாண்ட்ஸில் தங்கும்போது, பக்கத்தில் நீல்கிரீசுக்கு அருகிலே தங்கியிருக்கும் கணபதி விடிகாலை 6 மணிக்கு வந்து என்னை கடற்கரைக்கு கூட்டிப்போவது வழக்கமாகி விட்டது.

சென்ற வருடம் எங்கள் ஸ்லோகா க்ரூப்பின் குட்டீஸ் சென்னையில் கூடினார்கள். சென்னை IIT இல் M.Tech முடித்து தற்போது stanford பல்கலைக்கழகத்தில் Ph.D பயிலும் கணபதியின் பையன், அவனது இரண்டாம் பையன் மற்றும் நண்பர் ராஜகோபாலின் பையனுடன் சேர்ந்து C.A final படிக்கும் என் பையன், மற்றும் MBBS, MBA, BE படிக்கும் மற்ற வாண்டுகள் எல்லோரும் கூடியது எங்களை வியக்க வைத்தது.

ஆருயிர் நண்பன் கணபதியின் பிறந்த நாளான இன்று... அவனது குலதெய்வம் தஞ்சை கணபதி அக்ரஹாரம் மஹாகணபதியின் அருள் பெற்று சீரும் சிறப்புமாய் வாழ என் வாழ்த்துக்கள்.