Tuesday, July 17, 2018

திருச்சி கதைகள்-5 (கடைசி பாகம்)


காந்தி மார்க்கெட் தஞ்சாவூர் சாலை வரகனேரி செல்லும் வழியில் அண்ணா மராட்டா புரோட்டா கடையை அடுத்த கடைகளில் ஒன்று சாஸ்தா உணவகம். மற்ற கடைகளின் டன்..டன்..டன்..கொத்து புரோட்டா, முட்டை புரோட்டா சத்தங்களுக்கு நடுவே இந்த சைவ உணவகத்தில் இட்லி, தோசை, புரோட்டா குருமா, இடியாப்பம், ஆப்பம் சாப்பிட கூட்டம் அள்ளும். சென்ட்ரல் டாக்கிஸில் மேல்நாட்டு மருமகள் செக்கன்டு ஷோ முடிந்து இரவு ரெண்டு மணி வரை எப்பவுமே ஜேஜேன்னு கூட்டம்.
கடை உரிமையாளர் பவித்ரன். மலையாளி. நெற்றியில் எப்பவும் சந்தனம், முகம் முழுக்க தாடி, வெள்ள சட்டை வேட்டி தான். இரவு இரண்டு மணிக்கு கடையை பாலனிடம் விட்டுவிட்டு சைக்கிள் மிதித்து உறையூர் பாண்டமங்கலத்தில் வீடு வந்து சேரும்போது காலை மணி மூன்றாகிவிடும். மதியம் பன்னிரண்டு வரை முன் ரூமில் பெஞ்சு மேல் தலகானியில்லாமல் தூக்கம். பின் மாலை ஏழு மணிக்கு மேல் குளித்துவிட்டு கடைக்கு போவார். பாலன் மற்றும் ஐந்து மலையாளி பையன்களை வைத்து நடத்தும் வியாபாரம்.
பல வருடங்களுக்கு முன் கேரளாவை விட்டு மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் திருச்சி வந்து நைட்டுக்கடை போட்டது நல்ல நேரம். பணம் தாராளமாக புழங்கியது. பீடி சிகரெட் தண்ணி கிடையாது. அடுத்து மூன்று குழந்தைகள். உறையூரிலேயே 90 ரூபாய் மாத வாடகை வீட்டை முப்பதாயிரத்திற்கு விலைக்கு வாங்கி, பின்பக்கம் பத்தடிக்கு இடத்தில் கொட்டாய் போட்டு கறவை பசுக்கள்.
மார்கழி மாதம் முழுவதும் அவர்கள் வீட்டில் ஐயப்ப பூஜை. ‘என்ன மணக்குது.. எங்கே மணக்குது’, ‘சபரிமலையில் வண்ண சந்த்ரோதயம்’ போன்ற பாடல்களை அவர்கள் மனமுருக பாடும் அழகே தனி.
மனைவி அனகா ஈரத்தலை, நெற்றியில் சந்தனத்துடன் சுகுமாரி மாதிரி இருப்பாள். செலவுக்கு எப்போது பணம் கேட்டாலும் கணவனின் ‘என்டே சர்ட்டில் நின்னும் எடுத்தோ’தான். கடை வருமானத்திலிருந்து வீட்டு செலவுக்கு அவள் எடுத்துக்கொள்ளும் பணம் மற்றும் பால் வியாபார பணத்தை அக்கம்பக்கத்தில் நூறு இருநூறு என வட்டிக்கு விட்டு இரண்டு சுற்று பெருத்திருந்தாள்.
பெரிய பெண்ணை பாலக்கரையில் லேத்து பட்டரை நடத்தும் மலப்புரம் விநோதனுக்கு கட்டிக்கொடுத்தார். இரண்டு பையன்கள் தென்னூர் இந்தி பிரச்சார சபா இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலில் படித்து காலேஜ் மேற்படிப்பு என போய் விட்டார்கள்.
கடைக்குட்டி லெலிதா கல்யாணத்துக்கு காத்திருந்தாள். நெடுநெடுவென உயரம். வெளிச்செண்ணெயில் வளர்ந்த நீண்ட கேசம். அழகு, எழில், நளினம், வனப்பு, வாளிப்பு என எல்லா வார்த்தைகளுக்கும் அர்த்தமாக இருந்தாள். ஆனால் சரியான பையன் கிடைக்காதது பவித்ரனை கவலையில் ஆழ்த்தியது. மரக்கடை வித்யாதரன் பையனை லெலிதாவுக்கு பார்த்தார்கள். பையனிடம் எப்பவும் சாராய வாடை மற்றும் இருமும்போது தகர உண்டியல் சத்தம் (பீடி இருமல்). பேலஸ் தியேட்டர் காண்டீன் நடத்தும் செருதுருத்தி கோவிந்தன் பையன் ரெவி அழகாய் இருந்தாலும் கடன் அதிகம் என்பதால் பவித்ரனுக்கு இஷ்டமில்லை.
பவித்ரனுக்கு கடை தவிர வேறு எதுவும் தெரியாது. பையன்கள் யாரும் அவருக்குப்பின் கடையை எடுத்து நடத்தக்கூடியவர்கள் அல்ல. அவரை விட்டால் பரோட்டா மாஸ்டர் பாலனுக்குத்தான் கடை வரவு செலவு, சாதனங்கள் வாங்குவது போன்றவை தெரியும். பாலன் ஹைஸ்கூல் வரை படித்தவன். பல வருடங்கள் பவித்ரனுடனே இருந்து விட்டான். கோதுமை சிவப்பு நிறத்தில் சுருட்டை முடி, பட்டை மீசை, எடுப்பான பற்கள். மேலுதட்டையும் சேர்த்து மேலே தூக்கின மாதிரி மூக்கு. சுருக்கமாக..இளம் மம்மூட்டி சாயல்.
‘சரி ஶ்ரீதர். புரிஞ்சிடுச்சு! பாலன் நல்லவன். லெலிதாவுக்கும் கல்யாணமாகவில்லை. பவித்ரனுக்கு அப்புறம் கடையை பாலன் தான் பார்த்துக்கொள்கிறான். அதனால் லெலிதா- பாலன் காதல்! கரெக்ட்டா?’ என கேட்பவர்கள் தயவு செய்து மன்னிக்கவும்! தொடர்ந்து படிக்க!.
பவித்ரன் ஒரு வழியாக திருவல்லிக்கேணி பைக்ராஃப்ட்ஸ் ரோட்டில் டீக்கடை நடத்தும் மது என்ற பையனுக்கு லெலிதாவை பார்த்து கல்யாணத்தை முடித்தார்.
அடுத்த ஒரே வருடத்தில் அவருக்கு சர்க்கரை வியாதி, கால் வீக்கம் என கடை பக்கம் அதிகம் போக முடியாமல் போனது. மனைவி அனகா குடும்பத்தை குறையில்லாமல் நடத்த, பையன்களும் வேலைக்கு போக ஆரம்பித்தார்கள்.
கடையை பாலனுக்கே கொடுத்து விட முடிவு செய்து அது விஷயமாக அவனிடம் பவித்ரன் பேச, பாலனுக்கு இஷ்டமில்லை. அரசுக்கு சொந்தமான சாலையில் கடை இருந்ததால் பகடி ஐம்பதினாயிரம் கொடுத்து கடையை வாங்க நிறைய பேர் முன் வந்தும், பாலனுக்கே மிகக்குறைந்த விலையில் கடையை கொடுப்பதாக முடிவு செய்தார்.
ஒரு நாள் சென்னையிலிருந்து கைக்குழந்தையுடன் வந்திறங்கினாள் லெலிதா, இரண்டே வருடத்தில் கணவனால் விரட்டப்பட்டு... ‘என்டே பர்த்தாவு என்னெ கை விட்டு.. அது கொண்டானு ஞான் வீடு விட்டு எறங்ஙியது..’
பவித்ரன் நிலைகுலைந்து போனார். பெற்ற பாசம். ‘நீ சங்கடப்படண்டா மோளே! ஞான் நின்னே நோக்கிக்கொள்ளாம்’ என அவளை தேற்றினாலும், உடல் நிலை சரியில்லாமல், மகள் திரும்பி வந்தது அவரை மேலும் வாட்ட, அடுத்த சில மாதங்களில் தூக்கத்திலேயே போய்ச்சேர்ந்தார்.
அனகா மனம் தளறாமல் லெலிதாவையும் குழந்தையையும் வைத்துக்கொண்டு குடும்பம் நடத்தினாள். உறவினர்கள் பாலனுக்கே லைலிதாவை கட்டி வைத்துவிடலாமேயென கேட்க ஆரம்பிக்க, லெலிதா தீவிரமாக மறுத்தாள். பாலன் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழலாமே என நினைத்தாள். அனகா என்ன நினைத்தாள்? பாலன் என்ன சொல்கிறான்? முடிவு தான் என்ன?
முடிவு-1
நீண்ட தயக்கத்திற்குப்பிறகு லெலிதா பாலனை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க, பவித்ரன் மீதுள்ள மரியாதையால் லெலிதாவையும் குழந்தையையும் பாலன் ஏற்றுக்கொள்கிறான். குடும்பத்தில் சந்தோஷம் நிலவுகிறது.
முடிவு-2
தன்னால் பாலன் எதற்காக வாழ்க்கையை தியாகம் செய்யவேண்டும்! நான் குழந்தையுடன் தனியாகவே இருந்து விடுகிறேனே என லெலிதா முடிவெடுக்க, பாலன் திருமணத்தை நல்ல முறையில் அனகா நடத்தினாள். பின் லெலிதா மற்றும் கைக்குழத்தையுடன் பவித்ரனின் நினைவுகளுடன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு பயணம் செய்யத்தொடங்கினாள்.
முடிவு-3
இந்த முடிவு தான் நான் எழுத நினைத்தது. என்னவாக இருக்கும்! நீங்களும் சொல்லலாமே!
சட்டென வரைந்த ஓவியத்துடன்
(சீதாபதி ஶ்ரீதர்)

திருச்சி கதைகள்-4


வடு என்கிற வடுகநாதன் தென்னூர் பருப்புக்கார தெருவில் வசிக்கும் செட்டியார் வீட்டுப்பையன். அப்பா ராமநாதன் புத்தூர் பெரியாஸ்பத்திரியில் கம்பவுண்டர்.
பையன் நல்ல சேப்பு கலர். நேஷனல் ஈவ்னிங் காலேஜில் BA கார்ப்பரேட். சுமாரான உயரம். நெஞ்சாங்கூடு கட்டி உரோமக்காடு. பேப்பரை சுருட்டியபடி காலை பதினோறு மணிக்கு ஜெனரல் பஜார் தெரு மொகனையில் டைப்ரைட்டிங் ஹையர் படித்தான். எதிரே அழகான பெண் வந்தாலும் ஏறெடுத்து பார்க்காத சுபாவம்.
டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் இன்ஸ்ட்ரக்டர் பிலோமினா நல்ல கருப்பான நிறம். கருங்கல் சிலை போலிருப்பாள். லேசாக விடைத்த மூக்கு. மூக்கின் மேல் வைரம் போல மின்னும் வியர்வைத்துளிகள். திருத்தமான புருவங்களுக்கிடையே கொஞ்சம் சொறுகின மாதிரி அழகிய கண்களில் எப்போதும் காந்தம். பேசும்போது நம் கண்களை அவள் வசீகரமாக ஊடுருவி பார்க்க, எந்த ஆணும் பயத்துடன் சட்டென பார்வையை அகற்றுவான். இரு காதுகளின் பின் பக்கம் எடுத்து விடப்பட்டிருக்கும் நீண்ட முடிக்கற்றை அவள் அழகை இன்னும் பத்து பர்ஸன்ட் கூட்டியது. மினி ஜாங்கிரி போன்ற ஈர அதரங்கள். நொடிக்கொரு தரம் தன்னையே குனிந்து பார்த்து, உடையை சரிப்படுத்தி, நம்மையும் படுத்தியெடுத்து ‘இப்ப நாம என்ன செஞ்சிட்டோம்!’ என நம்மை யோசிக்க வைப்பாள். நகங்களை அழகுபடுத்தி பிங்க் கலர் நெயில் பாலிஷ் இட்டு அவள் நளினமாக டைப் செய்யும்போது நமக்கு படு அவஸ்தை. ‘மஞ்சள் வானம்.. தென்றல் காற்றில்.. உனக்காகவே நான் வாழ்கிறேன்’ என நம்மை கனவு சீனுக்கு கொண்டு போய்... வேணாம்.. படுத்தாதே பிலோமினா!.
கதையை எழுதும் நமக்குத்தான் இவ்வளவு அவஸ்தை. தினமும் அங்கே டைப்பிங் செய்யும் வடு ஏதோ கோவில் பிரகாரம் சுற்றுவதுபோல இயந்திரமாய் வலம் வருவான். ‘அந்த கார்பன் சீட்டை எடுங்க’ என யாராவது ஒரு பெண் கேட்டால் நாம் ஜென்ம சாபல்யம் அடைந்த மாதிரி துள்ளிக்குதித்து பேப்பரை எடுத்துக்கொடுத்து ஜெமினி மாதிரி அவளை பார்ப்போம். வடு அப்படியல்ல. முகத்தை கூட பார்க்க மாட்டான்.
வடுவின் இந்த குணமே பல பெண்களை அவன் பக்கம் ஈர்க்க, அவன் வீசாத காதல் வலையில் பிலோமினா தொபுக்கடீரென விழுந்தாள்.
அவனுக்கு மட்டும் சில சலுகைகள கொடுப்பதை மற்ற பெண் இன்ஸ்ட்ரக்டர்கள் கவனிக்காமலில்லை. வடுவிற்கு சாமர்த்தியம் போறாது. அவனவன் பிலோமினாவிற்காக உயிரையே விடத்தயாராக இருக்க, இவன் ஏன் இப்படி ஜடம் மாதிரி?
மற்ற பையன்கள் சங்கிலியாண்டபுரம் போய் ரெண்டு ரூபாய் கொடுத்து ஸ்டெப் கட்டிங், முடியை பின் பக்கமாக காலர் வரை புரள விட்டு அப்படியே ரோலிங் கோம்பில் சுருட்டி, சமஸ்பிரான் தெரு ஆல்ஃபா டெய்லரிடம் பதினெட்டு இஞ்ச் பாட்டம் மற்றும் தேயாமலிருக்க ஜிப் வைத்து, நெஞ்சு வரை பேண்ட், கட்டையில் செய்த செறுப்பு, படு குட்டையான சட்டை, முழங்கை மூடிய அரைக்கை, ஸ்வஸ்திக் பக்கிள் வைத்த பட்டை பெல்ட்.. என இவ்வளவு முஸ்தீபுகளுக்குப்பின் கடைசியில் அந்த பெண்கள் ‘தேங்க்ஸ்ண்ணா!’ என வெறுப்பேற்றுவார்கள். ஆனால் சாதாரண பாட்டா செறுப்பில் வரும் வடுவிற்கு மட்டும் அப்படி என்ன மச்சம், பிலோமினா அவனைச்சுற்றி வர!
‘வடு! இங்க வாயேன்! இங்கிலீஷ் வார்த்தைகள் நீ ரொம்ப தெரிஞ்சுக்கனும். நல்லது தானே! இந்தா வச்சுக்கோ!’ என ஒருநாள் அவள் லிஃப்கோ டிக்‌ஷ்னரி கொடுக்கும்போது காதலுடன் அவனை ஓரக்கண்ணால் பார்த்து அனுப்பியதை அவன் கவனித்த மாதிரி தெரியவில்லை.
முன்கூடத்தில் அப்பா அம்மா இருக்க, வடு ரூமுக்குள்ளே டிக்‌ஷ்னரியை சுவாரசியமில்லாமல் புரட்டினான். நடுவே சில பக்கங்கள் மடிக்கப்பட்டு இருக்க, ஏதோ நினைவாக அலட்சியமாக அந்த பக்கங்களை அவன் திரும்ப பார்க்க E, I, L,O,U,V எழுத்துக்கள் ஆரம்பமாகும் பக்கங்கள் முறையாக மடிக்கப்பட்டு இருந்தன. அதென்ன E I L O U V? சட்டென வடு பிரகாசமானான். அந்த எழுத்துக்களை மாற்றியமைத்தால் ‘I LOVE U’.. சட்டென தெப்பமாக நனைந்திருந்தான் வடு. தூரத்தில் எங்கோ 100 யானைகள் பிளிற, செண்டை மேளம் முழங்க, அணையில் வெள்ளம் புரண்டு ஓட, பாரதிராஜா பட கடைசி சீன் உடுக்கை சத்தம் கேட்க.. வடுவிற்கு முதல் முறை காதல்..
படாரென எழுந்து ஹாலுக்கு வந்தால் நிசமாகவே ஏதோ பாரதிராஜா படத்தின் கடைசி காட்சி.. திரையில் ‘அ ஃபிலிம் பை பாரதிராஜா’. ‘என்னாச்சுப்பா! ஏன் வியர்த்திருக்கே?’ என அவனது அப்பா அம்மா கேட்க, வழிந்தபடி ஏதோ சொல்லி சமாளித்தான். உடலெங்கும் இனம்புரியாத ஏதோ ஒரு சிலிர்ப்பு.
‘தம்பி! டிக்கெட் எடுத்தீங்களா இல்லியா? சோஃபீஸ் கார்னர் வந்துடுச்சு!’ என கண்டக்டர் சத்தம்போட்டதும் தான் சட்டென சகஜ நிலைக்கு வருவான் வடு. டவுன் பஸ்ஸில் போகும்போதும் ‘வடு மீது தலை வைத்து.. விடியும் வரை தூக்கமோ!’ என பிலோமினாவுடன் கனவு சீனில் இப்ராஹிம் பூங்காவில் பூக்கள் மத்தியில் கிடப்பான். பாதி தூக்கத்தில் திடுக்கென எழுந்து உட்கார்ந்து, மீதி தூக்கத்தை இழப்பான். புத்தகத்துடன் உட்கார்ந்தாலும் நடுவே தானாகவே சிரிப்பான். யாரும் பார்க்கவில்லையே என சுற்றுமுற்றும் பார்த்துக்கொள்வான். அரியர்ஸை மட்டும் கவனமாக குறைக்காமல் பார்த்துக்கொண்டான்.
வடு-பிலோமினா காதல் விஷயம் இன்ஸ்டிட்யூட்டில் பரவ, அடுத்த சில நாட்களில் ‘கொஞ்சம் டவுட் இருக்கு. லிஃப்கோ டிக்‌ஷ்னரி இருக்கா?’ என பையன்கள் விஜாரிக்க ஆரம்பித்தார்கள். எல்லா பையன்கள் காலிலும் சாதாரண பாட்டா செறுப்பு.
இங்கே செட்டியார் அப்பா பூமிக்கும் ஆகாசத்துக்குமாக குதித்துக்கொண்டிருந்தார். ‘டேய்! நாம செட்டியாருங்க.. அவங்க கிரிஸ்டியன். ஒத்து வராது. தள்ளி வச்சுருவாங்க’
‘யாரு தள்ளி வப்பாங்க?’ தெகிரியமா கேட்டான் வடு.
‘நம்ம சமூகம் தான். எந்த கல்யாணம், சாவுக்கும் இனி போக முடியாது.’
‘ஆமா.. பெரிய சமூகம். இப்பவே தள்ளித்தானே இருக்கோம் திருச்சியில. நீ எந்த கல்யாணத்துக்கும் காரைக்குடி பக்கம் போறதே இல்லியே! அப்பிடியே போனாலும் ஒரு ரூபா தானே மொய் வெக்கிறே உன் சமூகத்துக்கு!’ வடு சமயம் பார்த்து ராவினான்.
‘ நம்ம சமூகத்துல ஒரு ரூபா மொய் வெக்கிறது தானே வழக்கம்! அதெல்லாம் இருக்கட்டும். இந்த கல்யாணம் நடக்காது’ தீர்க்கமாக சொன்னார் செட்டியார்.
இதற்குள் பிலோமினாவின் அப்பா ஒரு பங்கு தந்தையுடன் செட்டியாரை பார்க்க வந்தார். அவர்களுக்கு இந்த திருமணத்தில் ஆட்சேபனை இல்லையாம்.
‘வணக்கம் சார். நான் பெஞ்சமின். என் பொண்ணு பிலோமினா. நான் கோர்ட்டுல அமினா’
‘க்கும்.. கவிதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு. அமினா பொண்ணு பிலோமினா.. பொருத்தமாத்தான் பேர் வச்சிருக்கீங்க. கல்யாணம் மட்டும் சரிப்பட்டு வராதுய்யா!’ செட்டியார் வெடித்தார்.
‘ இல்லீங்க! சர்ச்சுல வச்சு கல்யாணம் பண்ணீறலாம்’. இதோ பங்கு தந்தையே சொல்றாரு..’
‘யோவ்! அவரு பங்கு தந்தை.. பையனுக்கா தந்தை? அவர் பங்குக்கு எதையாச்சும் சொன்னா நீயும் வந்துடறதா? போய்யா அப்பால!’
வாக்குவாதங்களுக்கு நடுவே ஒரு நாள் வடு, பிலோமினா திருமணம் பீமநகர் ரெஜிஸ்த்ரார் ஆபிசில் நடந்து முடிந்தது. வடுவை சமூகம் தள்ளி வைத்தது.
கலப்புத்திருமணத்தால் பிலோமினாவின் தங்கை கல்யாணம் தள்ளிப்போனது. ‘இன்னும் எத்தினி நாள் பொறுமையா இருக்கச்சொல்லுவீங்க?’ என பங்கு தந்தையிடம் எரிந்து விழுந்தார் அமினா.
ஒருநாள் செட்டியாருக்கு பெராலிடிக் அட்டாக்.. அப்பாவை பார்க்க வடு ஓடினான். சமூகம் உள்ளே விட மறுத்தது. ‘அடேய்! அவரு எங்கப்பாடா! சமூகமா வந்து தைலம் தேய்க்கும்?’
உங்களாலத்தான் என் தங்கை கல்யாணம் நடக்கல என பிலோமினாவும், உன்னாலத்தான் அப்பாவுக்கு உடம்புக்கு வந்தது என வடுவும், ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு, அவர்களுக்குள் தினமும் நடக்கும் சண்டையை சமூகமும் பங்கும் வேடிக்கை பார்த்தன.
ஒருநாள் வடு ஆபிசிலிருந்து வீடு வந்தபோது பிலோமினா எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள். பக்கத்தில் மேசை மீது லிஃப்கோ டிக்‌ஷ்னரி. எடுத்துப்பார்த்தான்.
C D E I O R V எழுத்து கொண்ட பக்கங்கள் மடிக்கப்பட்டு இருந்தன.
சட்டென வரைந்த ஓவியத்துடன்,
(சீதாபதி ஶ்ரீதர்)

திருச்சி கதைகள்-3


மன்னார்புரம் (அரசு குடியிருப்பு) செங்குளம் காலனி. பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர். ஒரு ஃப்ளாட்டில் மரக்கடை சையத் முர்துசா பள்ளியின் தமிழாசிரியர் குடியிருப்பாரென்றால் பக்கத்து ஃப்ளாட்டில் தாசில்தார் அலுவலக குமாஸ்தா. ‘DA அரியர்ஸ் போட்ருவானா இந்த தடவை?’ போன்ற பேச்சுக்கள் அங்கங்கே பரவலாக கேட்கும்.
ஹாலில் சோஃபா கம்பெட், டயனோரா டிவி, வாசலில் மொபெட் (சுவேகா அல்லது லூனா) என நடுத்தர குடும்பத்தினருக்கான அடையாளங்கள். கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்டருக்கும் பையில் பால் பாக்கெட் காலை விழுந்தால் மேல் மாடிக்காரர் மேலே இழுத்துக்கொள்வார்.
அநேகமாக எல்லோரது வீட்டிலும் பொன்னருவியோ, KS ராஜாவின் இலங்கை திரை விருந்தோ (‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா’) பாடிக்கொண்டிருந்தது. சோனா மீனா, மாரிஸ், சிப்பி தியேட்டர்கள் வந்த புதிது. எல்லாமே நல்ல நல்ல படங்கள். தீபா, ஶ்ரீபிரியா, சத்யகலா, ராதா, அம்பிகா,மாதவி, சசிகலா போன்ற இளம் நடிகைகள் படங்கள் சக்கை போடு போட்டு இளையராஜா கொடிகட்டி பறந்து கொண்டிருந்தார்.
முகப்பருக்களுடன் கதாநாயகனாக வரும் மோகனை விட கதாநாயகி தான் முக்கியம் என நினைக்கும் பருவம் அது! தாசேட்டனின் ‘ராமனின் மோகனம்’, பாலுவின் ‘தேவதையிளம்தேவி உன்னைச்சுற்றும் ஆவி’ என முனுமுனுத்தபடி இளைஞர்கள் முக்கா கட்டு லுங்கியுடன் காலனிக்குள் திரிந்தனர்.
நெருக்கமான இரண்டடுக்கு கட்டிடங்களில் தலா ஆறு ஃப்ளாட்கள். அநேகமாக எல்லா வீடுகளிலும் கல்லூரி பெண்கள். நம் வீட்டு ஹாலில் இருந்து பார்த்தால் பின் ஃப்ளாட்டின் ஹாலோ பெட்ரூமோ தெரியும். ‘இது போதாதா வாலிப மாணவ மாணவியருக்கு’ என நினைப்பவர்கள் மன்னிக்க!
காதல் நமக்கு வந்தாலும் அந்த பக்கத்திலிருந்து வரனுமே! எப்படி வரும்? எப்போது எட்டிப்பார்த்தாலும் அந்தப்பக்கம் முண்டா பனியன் மற்றும் கையில் பேப்பருடனும் அவளது அப்பா தான் உட்கார்ந்திருப்பார். அதிலும் சிலர் வெங்காயம் நறுக்கிக்கொண்டு... மனைவிக்கு உதவியாம். அந்த பெண் ஈரத்தலையுடன் எப்போதாவது துணி உலர்த்த பால்கனி பக்கம் வரும்போது தான் கீழே தண்ணி லாரி வந்து தொலைக்கும். அப்பா கூட நாம் குடத்துடன் ஓடனும்.
எதிர் ஃப்ளாட் பெண் ஹோலி க்ராஸோ சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியோ. டவுன் பஸ்ஸில் நம் கூடத்தான் வருவாள் போவாள் . ஆனால் பேச மாட்டாள். மாலையில் அவங்கம்மாவுடன் நம் வீட்டுக்கு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலுக்கு போக வருவாள். அத்தோடு சரி. பேச்செல்லாம் கிடையாது. போதா குறைக்கு ‘இந்த தடவையும் இவனுக்கு ரிசல்ட்டுல போயிடுச்சு. ஹும்! சிஏ பரிட்சை கஷ்டம்னு சொன்னாலும் மத்த வீட்டு பசங்க பாஸ் பண்றாங்களே!’ போன்ற அம்மாவின் அங்கலாய்ப்புக்களுக்கு நடுவே காதல் எங்கிருந்து வரும்!. காதல் வர (நமக்கு) சான்சே இல்லாத இடமென்றால் அந்த காலனி தான்.
ஆனால் காதல் வந்ததே! யாருக்கு? எப்படி?
இரண்டாம் தளத்து வீட்டுப்பையன் நாயுடு. சுருட்டை முடி. முகத்தில் பரு. ஐடிஐ படிப்பு முடித்து திருவெறும்பூர் பகுதியில் எங்கோ வேலை. காக்கி பாண்ட் வெள்ளை சட்டை யூனிபார்ம், டிபன் டப்பா, டி-ஸ்கொயர் ஸ்கேல் சகிதம் காஜாமியான் ஸ்டாப்பில் இறங்கி ஈபி வழியாக காலனி உள்ளே தலை குனிந்தபடி வருவான். கூச்ச சுபாவம். அவன் அப்பா காய்கறி-வொயர் கூடையுடன் வருவது போவது தவிர வேறென்ன செய்கிறார் தெரியாது. ஆனால் சரியாக இரவு 2 மணிக்கு எங்கோ நாய் ஊளையிடுவதை தொடர்ந்து அவர் கொல்..கொல்லென இருமுவது காலனி முழுவதும் கேட்கும். பையனுக்கு ஒரே தங்கை. காலேஜ் போகும் நேரம் தவிர அவளை யாரும் பார்க்கவே முடியாது. ‘ஒரேய்!’ என அடிக்கடி கூப்பிடும் அம்மா தெலுங்கில் சாதாரணமாக பேசினாலே இரண்டரை கட்டை உச்ச ஸ்தாயி. சண்டையென வந்து விட்டால் குரல் தாரை தப்பட்டை தான்.
பையனுக்கு பக்கத்து ஃப்ளாட்டில் சைவ பிள்ளைமார்கள். அப்பா, அம்மா, குட்டி தம்பியுடன் நெடுநெடு உயர பெண். அவள் குண்டா, ஒல்லியா என நாம் யூகிக்க முடியாதபடி ஆண்கள் போடும் முழுக்கை சட்டை மற்றும் பாவாடை. தாவணி பிடிக்காதாம். ஹாலில் மேலும் கீழும் நடந்துகொண்டே பொருளாதாரம் படிப்பவள். பாங்க் எக்ஸாம் எழுதிக்கொண்டிருந்தாள்.
பையன் ஃப்ளாட்டுக்கு நேர் எதிரே பால்கனியில் இரண்டு கல்லூரி மாணவர்கள் முகம் பார்க்கும் கண்ணாடியை எதிரே வைத்து பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். ‘டேய்! இதென்ன பொழுதன்னிக்கும் கண்ணாடில மூஞ்சை பாத்துக்கிட்டு!’ என அவர்கள் அம்மா கேட்டு விட்டு அந்தப்பக்கம் போய்விட பையன்கள் மறுபடியும் கண்ணாடியுடன்...
விஷயம் இது தான். கண்ணாடியில் பார்க்கும்போது அதில் அவர்களுக்கு பின்னால் தூரத்தில் காக்கி பாண்ட் பையன் தன் பெட்ரூம் ஜன்னல் அருகே நின்று கொண்டு ஏதோ சைகை காட்ட, அந்தப்பக்கம் ஆம்பளை சட்டைப்பெண் அவள் வீட்டு பெட்ரூமிலிருந்து பதிலுக்கு சைகை. காலனியில் சில இளைஞர்களுக்கு மட்டும் அந்த சைகைக்காதல் விளையாட்டு தெரியவர, விஷயம் வெளிவராமல் கப்சிப் தான்.
அடுத்த சில நாட்களில் மன்னார்புரம் EB ஆபிஸ் பின்புறம் மறைவாக கருவேல மர நிழலில் எப்போதும் அந்த ஜோடி பேசிக்கொண்டிருந்தது. அரசல் புரசலாக எல்லோருக்கும் தெரியவர, காலனியில் அந்த காதலுக்கு சப்போர்ட்.
திடீரென ஒருநாள் பையன் வீட்டு பால்கனியில் இருந்து லபோ லபோவென சத்தம். பையனும் பெண்ணும் திடீரென திருமணம் செய்துகொண்டு மாலையுடன் பெண் வீட்டில் தஞ்சமடைய, பையனின் நாயுடம்மா தன் பால்கனியிலிருந்து எதிரே பெண் வீட்டை பார்த்து வாயில் வந்தபடி திட்டிக்கொண்டிருக்க, காலனி பரபரப்பானது. வொயர் கூடை அப்பா கையில் புடலங்காயுடன் வழக்கம்போல மௌனம்.
அடுத்து சில நாட்களில் தினமும் மாமியார் வீட்டிலிருந்து பையன் பெண்ணுடன் ஆபிஸ் கிளம்பும்போது, நாயுடம்மா அதே நேரத்திற்கு பால்கனியிலிருந்து ‘அடியே சிறுக்கி! எம்பையனை முந்தானைக்குள்ள வச்சிக்கிட்டு.. நீயெல்லாம் பொம்பளையா?’ என கத்த, மற்ற ஃப்ளாட்காரர்கள், காஸ் அடுப்பில் பால் பொங்குவதையும் விட்டுவிட்டு , அதை வேடிக்கை பார்க்க அலாரம் வைத்துக்கொண்டார்கள்.
அம்மா கடைசி வரை பையனை வீட்டிற்குள் சேர்க்க மறுத்ததால், அவன் மாமியார் வீட்டோடு இருந்தான். 9 மணி பால்கனி சத்தங்கள் தொடர்ந்தன. மற்ற வீட்டிலும் அலாரம் அடித்துக்கொண்டு தான் இருந்தது.
ஒரு நாள் காலை 9 மணிக்கு பால்கனியில் சத்தத்தையே காணோம். எல்லோரும் தத்தம் வீடுகளிலிருந்து எட்டிப்பார்த்தபோது வீட்டுக்குள்ளே இருந்தும் நாயுடம்மா வெளியே வரவில்லை.
அவர் சத்தம்போடுவதை ஏன் நிறுத்தினார் என எல்லோரும் யோசித்துக்கொண்டிருக்கும்போது அந்தப் பக்கம் ஒரு செட்டியாரம்மா வேறு ஒரு ஃப்ளாட் பால்கனியிலிருந்து நாயுடம்மா வீட்டை பார்த்து ‘அடியே சிறுக்கி!....’ என கத்திக்கொண்டிருந்தார்.
சட்டென வரைந்த ஓவியத்துடன்..
(சீதாபதி ஶ்ரீதர்)

திருச்சி கதைகள்-2


(சகோதரியின் பெண்ணுடன் திருச்சியில் அரட்டை அடிக்கும்போது மற்றொரு குட்டி கதைக்கான கரு கிடைக்க, பெயர்கள், ஊர், வீதிகள் மாற்றப்பட்டு சில பாத்திரங்கள் சேர்க்கப்பட்டு..... கதையை படித்த அவள் சொன்னது: பாதிக்கு மேல இதெல்லாம் நான் சொல்லவேயில்லியே..மாமா!..)
இனி கதை..
தென்னூர் பட்டாபிராம்பிள்ளை தெரு பெருமாள் கோவில் எதிரே குறுகலான சௌராஷ்ட்ரா தெரு. பட்டுநூல் காரத்தெரு என்றால் எல்லோருக்கும் தெரியும். சங்கர் பட செட்டிங் போல நெருக்கமான வீட்டு வாசல்களில் வேட்டியுடன் சௌராஷ்ட்ர இளைஞர்கள் சடசடவென ‘ஊசிபட்டாசு’ போல சதா பேசிக்கொண்டிருப்பார்கள். அடிதடி தப்புத்தண்டா என எதிலும் சேராத அமெரிக்கையான மக்கள்.
புத்தூர் சின்ன மைதானத்தில் கால் பந்தாட்டம் ஆடிவிட்டு சௌராஷ்ட்ரா தெரு வழியாக சைக்கிள் இளைஞர்கள் எத்தனை தடவை தேடித்தேடி சுத்தி வந்தாலும் கண்ணில் படாத இளம் பெண்கள். இரத்த சோகை மாதிரி வெள்ளை வெளேர் சருமம் மற்றும் பூனை விழிகள் கொண்ட பெண்கள் அநேகம் பேர் அந்த தெருவில். அதில் ஒரு பெண் தான் இப்பதிவின் நாயகி ரேணுகா.
கொஞ்சம் பூசின மாதிரி தேகம். பெரிய வட்ட முகம். அழகிய கண்கள். கீழ் தாடை கொஞ்சம் முன்னுக்கு தள்ளி, சட்டென ஜெயசித்ரா மாதிரி இருப்பாள் ரேணுகா. தைலா முதலியில் அரை மீட்டர் அதிகமெடுத்து தைத்த பாவாடை தாவணியில் காலை 9 மணிக்கு உருமு தனலட்சுமி கல்லூரிக்கு அவள் கிளம்பினால் அந்த தெருவில் பல இளைஞர்களுக்கு அன்று தூக்கம் கெடும்.
டவுன் பஸ்ஸில் ஒரு ரூபாய் கொடுத்து 60 பைசா டிக்கெட் எடுக்கும்போது, 10 காசு இருக்கா என கண்டக்டர் கேட்டால் சட்டென மண்டையில் ஏறாமல் பேந்த பேந்த அவள் முழிப்பதே அழகு. அவசரப்படாமல் ஆற அமர ஐந்து வருடங்களில் அவள் பாட்டனி பட்டப்படிப்பு முடித்து சென்னையில் HCL நிறுவனத்தில் கார்டு பஞ்ச்சிங் வேலை. கம்ப்யூட்டர் வருவதற்கு முந்தைய காலம். வேலைக்குச்செல்லும் பெண்டிர் விடுதியில் ஜாகை. ஞாயிறன்று ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ பார்த்துவிட்டு அன்னபூர்னாவில் பரோட்டா விஜிடபிள் குருமா சாப்பிட்டு மேலும் ஓரிரண்டு கிலோ கூட்டியிருந்தாள்.
மீண்டும் திருச்சிக்கு வருவோம். சௌராஷ்ட்ரா தெரு கொஞ்சம் தாண்டி மூலைக்கொல்லை தெரு பகுதியில் ‘தட்டி போட்ட திருச்சி லோகநாதன் வீடு எங்கேங்க?’ போன்ற விசாரிப்புகளுக்கு அடுத்து அதிகம் கேட்கப்படுவது ‘ஆசாரி வீடு எங்கேங்க?’ தான்.
விசாலமான வீட்டுத்திண்ணையில் நகைபட்டறை. ஆறேழு இளைஞர்கள் அரிசி உமி கரியடுப்பு சகிதம் நகைகளை உருக்கி டன்டன் என சுத்தியலால் அடித்து கம்பியை நீட்டிக்கொண்டிருக்க (தங்க கம்பிங்க!) , பெரியவர் வேலாயுத ஆசாரி ஊதுகுழாயை நெருப்பில் ஊதி வளைவி செய்துகொண்டிருப்பார். அக்கம்பக்கத்தார் ‘திருகாணி, சங்கிலி அறுந்து போச்சுங்க’ என சின்னச்சின்ன வேலைகளுடன் அங்கே வருமுன் சங்கிலியின் குண்டுமணிகளை முன்கூட்டியே எண்ணிவைத்துக்கொண்டு கொடுப்பார்கள். அந்த வீட்டுப்பையன் சுப்பையா தான் இப்பதிவின் நாயகன்.
சுப்பையாவிற்கு அப்பாவின் பொற்கொல்லர் தொழில் இஷ்டமில்லை. தலைக்கு எண்ணெய் வைத்து படிய வாரி வெள்ளிக்கிழமை விரதம் சிவகுமார் மாதிரி டைட் பாண்ட்டில் இருப்பான். டோல்கேட் ராதாஸில் டிபன் பண்ணிக்கொண்டு, நடுவே பக்கத்தில் ஜமாலில் தலையை காண்பித்து பௌதிகம் படித்து, கல்லூரி ஆர்க்கெஸ்ட்ராவில் ட்ரிபிள் காங்கோ, டிரம்ஸ் வாசிப்பவன்.
அப்பாவின் நகை பட்டறை மற்றும் உடம்பிலிருந்த பூணுல் இரண்டையும் கடாசிவிட்டு சென்னையில் HCL நிறுவனத்தில் ரேணுகா வேலை செய்யும் அதே கார்டு பஞ்ச்சிங் பிரிவில் சூப்பர்வைசராக சேர்ந்து அவனும் ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ பார்த்து தொலைத்தான்.
பாட்டனியும் பௌதிகமும் சேர்ந்து வேதியியல் ஆனது. கார்டு பஞ்ச்சிங் வேலை காலதாமதமானது. அன்னபூர்னா பரோட்டா குருமா அமோக விற்பனையானது. பருவமே.. புதிய பாடல் பாடியது. சௌராஷ்ட்ரமும் ஆசாரியும் சேர்ந்த கதை நாடார் (ஷிவ்) வரை போனது. வார்னிங் மெமோக்கள் பறந்தன. வேலை போகவில்லை. வார/மாத இறுதியில் இருவரும் சேர்ந்து KPN புஷ்பேக் சீட்டில் திருச்சி பயணம்.. டெக்கில் அன்புள்ள ரஜினி காந்த். உளுந்தூர்பேட்டையில் ‘பஸ் பத்து நிமிசம் நிக்கும்’ என கண்டக்டர் சொல்லியும் பதினைந்து நிமிடம் மசாலாப்பால் சாப்பிட்டார்கள்.
ஆக, பஸ் திருச்சி போகும் முன் மேட்டர் போய்ச்சேர்ந்தது. அவ்ளதான்..பட்டுநூல் கார தெருவெங்கும் ஊசி பட்டாஸ் வெடி. மூலைக்கொல்லைத்தெரு முழுக்க ஊதுகுழாய் சத்தம். இரு வீட்டு பெரியவர்கள் கூடினார்கள். ஜாதி சங்கங்கள் கலந்து பேசின. கண்டனங்கள் பறந்தன. பாட்டனியும் பௌதிகமும் பாதர் செய்யவில்லை. அடுத்த எட்டு வருடமும் அன்னபூர்னா, KPN, உளுந்தூர்பேட்டை என காதல் கொடிகட்டி பறந்தது, ரேணுகாவின் மதுரை அத்தை ஒருவர் வந்து சேரும்வரை.
மதுரை அத்தை, சி.கே. சரஸ்வதிக்கே அத்தை. திருச்சி வந்து பூரா விபரங்களையும் தெரிந்து கொண்டார். விஷயம் முற்றிப்போனாலும், வெத்தலை சீவலை வாயின் ஒரு பக்கம் ஒதுக்கி, இதை வேறு மாதிரி கையாள வேண்டும், அவசரப்பட வேண்டாம் என கேட்டுக்கொண்டு சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் நன்னாரி சர்பத் குடித்து அண்ணா பேருந்தில் ஒரு முடிவோடு பஸ் ஏறினாள் மதுரை அத்தை.
அடுத்த வாரம் ஒரு நாள் ‘அம்மினி! கார்டு பஞ்சிங் போறும். அமெரிக்காவில் உனக்கு டிரெய்னிங்’ என ஆர்டர் வந்தது ரேணுகாவிற்கு. அவளுக்கு இஷ்டமில்லையெனினும் அமெரிக்கா போகச்சோல்லி சுப்பையா வற்புறுத்தினான். நம் எதிர்காலத்திற்கு இந்த டிரெய்னிங் முக்கியம் என சுப்பையா நம்பினான் பாவம்!.
‘சுப்பையா! நம்ம கல்யாணம் எப்பையா?’ என இவள் கேட்டுக்கோண்டே அமெரிக்கா கிளம்ப, அவன் பான் வாயேஜ் சொல்லி அனுப்பி வைக்க, அங்கே மதுரை அத்தை விஷமப்புன்னகையுடன் யாருக்கோ போன் போட்டு நன்றி சொல்லிக்கொண்டிருந்தாள்.
அடுத்த ஆறு மாதத்தில் அத்தையின் நெருங்கிய நண்பர் ஒருவரின் பிள்ளை அமெரிக்காவில் ரேணுகாவை சுற்றி சுற்றி வந்ததும், ரேணுகா அவனை தவிர்க்க முற்பட்டதும், அவன் தான் ரேணுகாவின் புதிய காதலன் என அத்தை மூலமாக சுப்பையாவிற்கு பொய்யான தகவல் தரப்பட்டதும், அதை உண்மையென நம்பி, சுப்பையா அவளுக்கு டார்ச்சர் கொடுத்ததும், தேவையில்லாத சந்தேகத்தினால் எட்டு வருட காதல் முறிந்ததும், சந்தேகப்படும் இவனைவிட அந்த அமெரிக்கா பையனே மேல் (male) என கல்யாணம் செய்துகொள்ள ரேணுகா சம்மதித்ததும், அதனால் தனக்கு ஒன்றும் பெரிய நஷ்டமில்லையென கோபாவேசத்துடன் தன் முறைப்பெண்ணையே சுப்பையா மணந்ததும்...
எல்லாமே சரஸ்வதி அத்தை சாமர்த்தியமாக நகர்த்திய காய்கள்..
அப்புறம் உளுந்தூர்பேட்டையில் KPN பஸ் பத்து நிமிடத்திற்கு மேல் நிற்பதில்லை.
சட்டென வரைந்த காதல் வாகனத்துடன்..
(சீதாபதி ஶ்ரீதர்)

திருச்சி கதைகள்-1


மனைவி Usharani Sridhar ன் மருத்துவ சிகிச்சைக்காக அவசரமாக பஹ்ரைனிலிருந்து கிளம்பி திருச்சி வந்து பத்து நாட்கள் ஓடியது தெரியவில்லை. ஆசுபத்திரி, அனஸ்தீசியா, ஐசியூ இத்யாதிகளுக்கு நடுவே உறவினர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது கிடைத்த சுவாரசியமான சில திருச்சி குட்டிக்கதைகள்..(நிற்க! மனைவி தற்போது நலமே!)
இடம்: நலம் மருத்துவமனை, சுப்ரமணியபுரம்.
கதை சொன்னவர்: நம் உறவினர் பார்த்தசாரதி பாவா (கீர்த்தி சுரேஷ் மாதிரி பாதி தெலுங்கு பாதி தமிழில் பேசுவார்)
‘மஞ்ச்சி ஃபாமிலி.. ஶ்ரீதர்!’
‘யாரு பாவா?’
‘தோ.. எதுத்த வார்டுல இருக்காங்களே! அந்தம்மா..’
‘அப்படியா?’
‘ ஆமா.. சுமாரான வசதி உள்ள குடும்பம். ஓரே பையன். அப்பா சீக்கிரம் எறந்துட்டாரு. மனவாளு! பையன் பிஷப் ஹீபர்ல தான் படிச்சான். ஓரளவு மார்க்கு வாங்கி காரைக்குடி கிட்ட ராயவரம் பாலிடெக்னிக்ல டிப்ளமோ படிச்சான்’
‘சரி..’
‘’தரவாத்த.. பசங்க நாலஞ்சு பேரை சேத்திக்கிட்டு பெல்லு (BHEL) கிட்ட ஒரு யூனிட் போட்டான். நெறைய பெல்லு சப்-கான்ட்ராக்ட் கெடச்சது. நல்லா சின்சியரா வேலய முடிச்சு கொடுப்பான். அதனால அவனுக்கு பெல்லுலயே வேல போட்டு கொடுத்தாங்க. யூனிட்ட மத்த பசங்களுக்கு வித்துட்டு வேலைல சேந்தான்’
‘சுவாரசியமா இருக்கே!’
‘வீடு சீரங்கத்துல தான். ஒத்திக்கி வீடெடுத்தான். அம்மாகாரி சமச்சி போட, பையன் திருவெறும்பூருக்கு தெனம் பைக்குல வேலக்கி போவான்’
‘சரி..’
‘வீட்டு ஓனரு மதுரக்காரங்க, மாடில உண்ட்டாரு. ரெண்டு பொண்ணு. இத்துருனி பெத்த பில்லலு. பெரியவள உள்ளூர்ல கட்டிக்கொடுத்து அவங்க புருசன் உறையூர்ல டீக்கடை. நல்ல வசதி’
‘டீக்கடைல அவ்ளோ காசா?’
‘மரி ஶ்ரீதர்! ஒரு கடை தொறந்து நல்ல காசு சேத்து, எம்பது லச்சத்துக்கு வீடு. புத்தூர்ல இன்னொரு கடையும் தொறந்தாங்க.. அத விடு. ரெண்டாவது பொண்ணு பக்கத்துல காலேஜ் போய்ட்ருந்தாப்டி.. கீழ் வீட்டுல ஒத்தக்கி இருந்த நம்ம பையன் ஆபிசுக்கு கெளம்பற சமயம் இவளும் காலேஜ்க்கு கெளம்புவா’
‘லவ்வா?’
‘அவ்னு! (கொஞ்சம் வெட்கத்துடன்).. வீளு தெலுங்கு..ஆ பில்ல அரவம்.. தேவர்வாளு.’
‘ரெண்டு வீட்லயும் ஒத்துக்கிட்டாங்களா!’
‘அவ்னு. அவங்களுக்கு பையன ரொம்ப பிடிக்கும். இருவத்தெட்டு வயசுல பின்னோடு ச்சால பொடுவு (பையன் நல்ல உயரம்) ஓரளவு நல்ல வேலை. ஒத்திக்கு கொடுத்த வீட்டை இவங்க விக்கலாம்னு இருக்கறப்ப பையனே வெலைக்கி வாங்க ரெடின்ட்டான். ஒத்திக்கி மேல கொஞ்சம் பணத்த லோனு போட்டு கட்டி வாங்குனான். அஞ்சு பத்து பாக்கி இருந்து லவ்வு வேற வந்துடுச்சா! கல்யாணத்த பண்ணி வச்சுட்டா அம்மாகாரி. பெல்லி பாக சேஸினாரு ஶ்ரீதர்!’
‘பரவால்லியே. சாதி பிரச்சனை ஒன்னுமில்லியே?’
‘அதி சினிமா, பாலிடிக்ஸ்லோ தா பா!’
‘ரொம்ப சந்தோஷம்’
‘பையன் காலைல ஆபிஸ் போயிடுவான். பொண்ணு தில்லைநகர்ல எதோ டிராவல்சுல வேல’
‘சரி..’
‘அம்மாகாரி அப்பப்ப பஸ் புடிச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயிலுக்கு போய்டுவா. கெட்டிக்கார பொம்பள. வாராவாரம் அவங்களுக்கு மைக்கேல்ல ஐஸ்கிரீமும் சிரப்பும் சாப்புடனும். அப்படியே சினிமா போயினுவா. வர்றப்ப சாஸ்திரி ரோடு அடயார் ஆனந்தபவன்ல சாப்ட்டு பையனுக்கும் கோடாலுக்குனி (மருமகளுக்கும்) பார்சல் வாங்கிட்டு வந்துடுவா. நேரங்கெடச்சா ஜங்ஷன் பக்கம் பையனுக்கு இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டறது, லோனு இம்மய் அது இதுன்னு அலைவா பாவம். நல்லா தெம்பா இருப்பா. எளநீ, பாலக்கரை பிரம்மானந்தால சர்பத், ஜிகர்தண்டா வாங்கி குடிக்கும்’
‘சரி அப்பறம்..’
‘பையன் ஒருநா காட்டூர்ல இருந்து இந்தப்பக்கம் வர்றான். அரியமங்கலம் மேம்பாலத்துல ஏறுனான். சீரங்கம் தானே! பைப்பாஸ் ரோட்ட புடிச்சான்’
‘அப்பறம்?’ (பைக்னு சொன்னப்பவே பக்குன்னு எதோ ஒரு பயம் எனக்கு)
‘டிரைய்லர் பின்னாடி ஒழுங்காத்தான் வந்துட்ருந்தான் பைக்குல. டிரெய்லர் என்ன தலதெறிக்கவா ஓட்டுவான்?’
‘சரி.. விசயத்துக்கு வாங்க பாவா’
‘அவசரம்.. சைட்ல ஓவர்டேக் பண்ண பாத்தான் பையன்’
‘ஓவர்டேக் பண்ணானா?’
‘லேது.. எதுத்தாப்ல மெட்ராஸ் பஸ் ஒஸ்துந்தி கதா! பையன் சுதாரிச்சு ஸ்பீடை கொறச்சு டிரைய்லர் பின்னாடி திரும்ப வரலாம்னு...’
‘ஐய்யய்யோ.. ஒன்னும் ஆகலயே!’
‘பின்னாடி அவனால வர முடியல. ஏதோ ஒன்னு அவன இழுத்துச்சு. எதுத்தாப்ல பஸ் கிட்ட வந்துடுச்சு’
‘என்னாச்சு.. சட்னு சொல்லுங்க பாவா’
‘டிரெய்லரோட சைடு பக்கம் கயிறு சுத்திக்கட்ட இரும்பு கொக்கி இருக்குமே! அதுல பையன் சட்டையோ காலரோ மாட்டி பைக்கோட உள்ளாற போய்ட்டான்’
‘ஐயோ! ஒன்னும் ஆபத்தில்லே!’
“பையன் தொடைல பின்வீலு எக்கிந்தி. நெத்துரு (இரத்தம்) ஒக்கட்டி லேது. பையன் முழிச்சிக்கிட்டு தான் ரோட்ல கெடந்தான். படுத்த வாக்குலயே அம்மாகாரிக்கு போன் போட்டு ‘அம்மா! இட்டவேல அய்ப்பொய்ந்தி. பயம் லேது! நா ஆபிஸ் போன் சேசி ச்செப்பு’ன்னு சொல்லிட்டு மயக்கமாயிட்டான்”
‘கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்களேன் பாவா! பையன் பொழைச்சிக்கிட்டானா இல்லியா?’
‘ஆபிஸ் காரங்க ஸ்பாட்டுக்கு வர்றதுக்குள்ளாற பின்னாடி வந்த பெல்லுகாரங்க யாரோ அவன் யூனிஃப்ர்மை பாத்துட்டு வண்டிய நிறுத்தி போன் செஞ்சி ஆம்புலன்ஸ் வந்துடுச்சு’
‘ ஐயோ..’
‘ ஆசுபத்திரில சேத்து ரெண்டு நாள்ல போய்ட்டான்’
‘ஐயோ பாவம். பயங்கர அதிர்ச்சியா இருக்கே! கல்யாணம் ஆயி மூன்னாலு மாசந்தானே ஆச்சு!’
‘ சும்மா சொல்ல கூடாது ஶ்ரீதர்.. அம்ம கத்த போல்டு தா!. பையனுக்கும் நல்ல தைரியம். அந்த ரெண்டு நாள்ல அம்மாவையும் பொண்டாட்டியையும் பயப்பட வேண்டாம்னு சொன்னான். இன்ஷீரன்ஸ் உந்தி காதா! தான் இறந்துட்டா வீட்டு லோன் கட்டவேண்டியதில்லைனு முன்கூட்டியே சொல்றான் பாத்துக்க!’
‘அப்படியா! அவ்ளோ வெவரம் தெரிஞ்சவனா?’
‘அவ்னு! இன்டெலிஜென்ட் வாடு! ஷிஃப்ட்க்கு ஒரு மணி நேரம் முன்னயோ பின்னயோ, வேலை செய்ற எடத்துக்கு பதினஞ்சு கி.மீ சுத்தி எங்க ஆக்சிடென்ட்ல செத்தாலும், அது டூட்டில செத்த மாதிரி.. ஆபிஸ்ல பணம் முழுசும் கெடைக்கும்னு சொல்லிட்டு செத்துப்போனான். பசிவாடு.. பாப்பம்..சச்சியே பொய்னாடு!’
‘இதெல்லாம் நடந்து எத்தினி நாளாவுது?’
‘ஒக்கட்டினார சம்வச்சரம் (ஒன்னறை வருடம்) அய்ந்தி..’
‘சரி.. இப்ப அந்தம்மா எதுத்த வார்டுல எதுக்கு இருக்காங்க?’
‘ஆ அம்மக்கு இப்புடு ஹை ஃபீவர்.. ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ் சேஸ்தாரு.. நாலு மணிக்கு அவங்களோட மருமக தன் புருஷனோட டீ கொண்டாருவாங்க’
‘ என்ன! அந்த பொண்ணுக்கு கல்யாணமாயிடுச்சா?’
‘மரி! பையன் செத்த கொஞ்ச நாள்லயே தேனி பக்கத்துலர்ந்து நல்ல பையனா பாத்து அந்தம்மாவே கல்யாணம் செஞ்சி வச்சிருச்சு. அவனுக்கும் திருச்சியில தான் வேலை’
‘தேனியா? பையன் தேவரா.. தெலுங்கா?’
‘அதி மனக்கு எந்துக்கு இப்புடு? டீ சாப்டலாமா ஶ்ரீதர்?..இப்ப அதே வீட்ல நாலு பேரும் இருக்காங்கல்ல!’
‘நாலு பேரா?’
‘ஆமா.. பேரன் பொறந்துட்டான்ல! மொகுடு பென்லாம் பாக உண்ணாரு. மன செய்லோ ஒக்கட்டி லேது ஶ்ரீதர்.. தேவுடு தா சேஸ்தாடு காதா! ’
கதையை நீட்டி சொன்ன பார்த்தசாரதி பாவாவுக்கு நன்றி..
சட்டென வரைந்த பத்து நிமிட ஓவியத்துடன்...
(சீதாபதி ஶ்ரீதர்)