Saturday, June 29, 2013

49.5 %...


திருச்சி புத்தூர் அக்ரஹாரம் ஸ்ரீனிவாசன் எனது தம்பி விஜயராகவனின் பள்ளித்தோழன் (நேஷனல் ஹை ஸ்கூல்).. பாதி நேரம் என் தம்பி புத்தூரில் தான் இருப்பான். புத்தூர் போஸ்ட் ஆபிசுக்கு அடுத்த திருப்பத்தில் உள்ளே போனால் சிறியதாக ஒரு ரோடு.. இருபுறம் சுமார் 50 குடித்தனங்கள். ஸ்ரீனிவாசன் வீடு இரண்டு பெரிய தின்னைகளுடன் கூடியது. 70 களில் என நினைக்கிறேன்...  காலை 6 மணிக்கு அவர்கள் வீட்டுக்கு  போனால் ஏராளமான சைக்கிள்கள். அவனது தாத்தா கிராம முன்சீப்பு என்று ஞாபகம்... ஜாதி சான்றிதழ்,   குடியிருக்கும் முகவரிச்சான்றிதழ் என்று அவர் தன் கைப்பட எழுதி கொடுப்பார். தினமும் கூட்டமாக ஜனங்கள் வீட்டு வாசலில் காத்திருப்பார்கள். சரியாக 7 மணிக்கு அவர் குளித்து முடித்து வெளியே வருவார். உதவியாளர் நம்மை ஒவ்வொருவராக அழைத்து வித்தியாசமான தமிழில்  எழுதிய சான்றிதழ் பெற்று நமக்கு கொடுப்பார். அதற்க்கு நாம் கொடுக்கும் சுமார் 1 ரூபாய் அல்லது 2 ரூபாய்க்கு அவரே ஸ்டாம்ப் கொடுத்து விடுவார். எக்ஸ்ட்ரா எதுவும் வெட்டவெண்டியதில்லை
அமைதியான இடம். ஆனால் ஒரே ஒரு தொந்திரவு மட்டும் அங்கே உண்டு. அந்த தெருவின் இரு புற சுவர்களிலும் எப்போதும் கரிய வண்ணத்தில் கிறுக்கல்கள்.அதுவும் குறிப்பிட்ட ஜாதியை குறி வைத்து..  " கடவுள் இல்லை.. இல்லவே இல்லை... கடவுளை நம்புகிறவன் முட்டாள்.. " போன்ற வாசகங்கள்.
ஸ்ரீனிவாசன் சொல்வான். 'பக்கத்துல உறையூர்ல இருந்து  7,8 பேர் கூட ஒருத்தன் வருவான். எப்ப வருவானுங்கன்னே தெரியாது. ராத்திரி 12 மணிக்கு நாம அசந்து தூங்கரச்சே.... இல்லன்னா காலைல 4 மணிக்கு முன்ன  வந்து கண்டத எழுதிட்டு ஒடீடுவானுங்க  நாம போய் தட்டி கேட்டா அடிக்க வருவான்"
'அவனுங்களுக்கு ஒரு நாள் வச்சிருக்கோம்' என்பான். ஒருநாள் வந்தது. திடகார்த்தமான ஆக்ராஹாரத்து இளைஞர்கள் 7,8 பேர் மொட்டை மாடியில் முதல் நாள் இரவு ஒளிந்து கொண்டார்கள். சிலர் திண்ணையை ஒட்டியுள்ள சந்தில் ஒளிந்து கொள்ள அன்று இரவு 2 மணிக்கு ஒரு கூட்டம் வந்து  மீண்டும்  சுவர்களில்  எழுத  ஆரம்பித்தார்கள்.  அடுத்த நிமிடம் மாடியில் இருந்து சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. கூட்டம் நிலை குலைந்தது. சந்தில்  ஒளிந்திருந்தவர்கள் வெளிய வந்து அவர்களை நையப்புடைத்தார்கள். கல்லடி பட்ட கூட்டம் அலறிக்கொண்டு ஓடியது..
அதற்குப்பின் அந்த சுவர்களில் எந்த இழிவு வாசகங்களும் இல்லாமல் வெறும் 'நாமிருவர்.. நமக்கு இருவர்'...'அளவான குடும்பம்.. வளமான வாழ்வு'.மட்டும் தான். 'இந்த ஆக்ரஹாரத்துல  எல்லோரும் ஏராளமான நிலம் வைத்திருப்பவர்கள். இந்த இளைஞர்கள் வயலில் இறங்கி 8 மணி நேரம் செய்ய முடியும். பயந்து கொண்டு இருந்தது எல்லாம் அந்தக்காலம்' என்று சொல்லும் ஸ்ரீனிவாசனின் முகத்தில் பெருமிதம்.     
நேஷனல் கல்லூரியில் தம்பி விஜயராகவனுடன் B.com முடித்தவுடன் ஸ்ரீனிவாசன் சிறிதுகாலம் வேலை தேடிக்கொண்டிருந்தான். தம்பி MBA முடித்து டாட்டா குழுமத்தில் சில வருடங்கள் இருந்து பின் மஸ்கட்டில் 14 வருடம், அதற்குப்பின் கடந்த 5 வருடங்களாக பஹ்ரைனில் வங்கியில் பணி. அவ்வப்போது ஸ்ரீனிவாசனைப்பற்றி பேசுவோம். வருடமொருமுறை அவன் திருச்சி போகும்போது ஸ்ரீனிவாசனை போய்ப்பார்ப்பான்.
2 வருடங்கள் முன்பு நானும் ஸ்ரீனிவாசனை பார்த்தேன். மத்திய அரசுப்பணி.  கண்டோன்மென்ட் அருகில் அகில இந்திய வானொலியில்   25 வருடங்களாக இருக்கிறான். மழிக்கப்படாத 2 நாள் தாடியுடன் அதே மலர்ந்த முகம். மாதம் சுமார் 75000 ரூபாய்க்கு மேல் சம்பளம். மத்தியக்கிழக்கு நாட்டில் அல்லாடிக்கொண்டிருக்கும் நமக்கு ஸ்ரீனிவாசனை பார்க்க பொறாமை தான். ஆருயிர் நண்பன் என்பதால் சந்தோசம் கூட. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு போகுமுன் ஸ்ரீநிவாசனுக்கு ஒரு போன் செய்து விட்டு போனால் போதும். அவனது சகோதரர் ரமேஷ் குருக்கள் நம்மை பெருமாள் கிட்டக்க தரிசனம் கிடைக்க வைப்பார். சாமிக்கு சார்த்திய பெரிய மாலை மற்றும் பிரசாதம் எல்லாம் கொடுத்து கூட இருந்து வழியனுப்பி வைப்பார்.     
இறந்து போன என் அப்பாவின் பேரிலிருந்து BSNL டெலிபோன் லைனை என் அம்மா பேருக்கு மாற்ற சென்ற வருடம் திருச்சியில் முயற்சி செய்தேன். BSNL  பெண் மேலாளர் ஒருவரை பார்த்தேன். கூட 81 வயது அம்மா. Legal heir certificate அது இது என்று ஒரு லிஸ்ட்டே கேட்டார். அப்பாவின் death certificate , PAN கார்டு  (81 வயசு பெண்மணிக்கு ) ரேஷன் கார்டு எல்லாம் காண்பித்தும் உடனே அட்டெஸ்ட் செய்து கொண்டுவரும்படி சொன்னார். மணி நாலு அப்போது. ஆபிஸ் மூடுமுன் உடனே எங்கே அட்டெஸ்ட் செய்வது?
சடாரென்று ஸ்ரீனிவாசன் நினைவு வந்தது. ஆனால் அவனது தொலைபேசி எண் இல்லை.. குறுஞ்செய்தி மூலம் பஹ்ரைனிலிருந்து தம்பி விஜயராகவன் நமது ஸ்ரீனிவாசனின்  கைப்பேசி எண்னை எனக்கு அனுப்ப, அடுத்த 15 நிமிடங்களில் நான் அம்மாவுடன் ஆட்டோவில் அகில இந்திய வானொலி வளாகம் போய் சேர்ந்தேன். அதே மலர்ந்த முகத்துடன் ஸ்ரீனிவாசன் நம்மை வரவேற்றான். மாடியில் நிலைய இயக்குனர் அலுவலகத்துக்கு போனோம். 'சார்... நான் சொன்னேனில்ல.. ' என்ற ஸ்ரீனிவாசனை பேச விடாமல் எல்லா தஸ்தாவெஜுக்களிலும் கையொப்பமிட்டார் நிலைய இயக்குனர். தலை முடியும் மீசையும் சென்ற வாரமிட்ட கருப்பு வர்ணம் லேசாக போய் நரை தெரிந்தது.  'தகுதி அடிப்படையா.. ஜாதி அடிப்படையா' என்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள  செல்ல வேண்டும் என்று அவசரமாக கிளம்பிக்கொண்டிருந்தார். ஸ்ரீநிவாசனுக்கு அங்கே நல்ல மரியாதை என்பது தெரிந்தது. அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வந்தோம். அடுத்த 10 நிமிடத்தில் மீண்டும் BSNL  அலுவலகம் போகும் அவசரம் எங்களுக்கு. இருந்தாலும் ஸ்ரீனிவாசனை உடனே விட்டுப்போக மனமில்லை.
வந்த வேலை சுருக்க முடிந்த திருப்தி எனக்கு. மிகவும் வேண்டிய நண்பர்களுடன் நான் பேசும்போது லேசாக எமோஷனல் ஆகி விடுவேன் அதன் வெளிப்பாடாக அவர்கள் தோளில் கை வைத்தோ, கைகளை பிடித்துக்கொண்டோ பேசுவேன்.
'விஜைய்ய கேட்டதா சொல்லுங்க ஸ்ரீதர்' என்ற ஸ்ரீனிவாசனிடம்  'ரொம்ப சந்தோஷம் ஸ்ரீனிவாசன்.. உங்க வேலை, உள்ளூரில் அலுவலகம் எல்லாம் பார்க்க சந்தோஷமா இருக்கு... இன்னம் அப்பிடியே இருக்கீங்க.. தலைல கூட ஜாஸ்தி நரை இல்ல' என்றேன்.. மிக அடக்கத்துடன் ஸ்ரீனிவாசன் முறுவலித்தான்.
 'ஞாபகம் இருக்கா? புத்தூர்ல உங்க அக்ரஹாரம் சுவத்தில கிறுக்கினவங்கள கல்லால் அடிச்சி விரட்டுனத பத்தி நீங்க சொன்னது இன்னம் அப்படியே ஞாபகம் இருக்கு' என்று சொல்லி சத்தமாக சிரித்தேன்.
ஸ்ரீனிவாசன் மிரட்சியுடன் இன்னும் கொஞ்சம் என் முகத்துக்கு மிக அருகில் வந்து   ' சத்தம் போடாதீங்க ஸ்ரீதர்..கல்லடி வாங்கிட்டு ஒடுனவர்(ன்) தான் அந்த ஸ்டேஷன் டைரக்டர்   செங் 'கல்' வராயன்என்றான்.

பி.கு: சரியான தலைப்புடன் தான் இதை எழுதினேன் என நினைக்கிறேன்.

Wednesday, June 19, 2013

செம்பூர் ஸ்டேஷன்...


மெதுவாக காலை எழும்போது 7 மணி இருக்கும். பக்கத்தில் ஜன்னலுக்கு வெளியே பறவைகள் சத்தம். நல இதமான காற்று. பஸ், கார் சத்தமே கிடையாது. 27, 28 வயதுதான் என்பதினால் மனசுக்குள் எப்போதுமே ஒரு உற்சாகம், கற்பனைகள்.., அலுவலகத்தில் தினமும் நடக்கும்  சம்பவங்களை நினைத்து அசை போடும் நேரம்  எப்போதும் விடிகாலை தான்தூக்கம் விழித்த  பின்னும் மேலும் 20,30 நிமிடங்கள் அப்படியே படுத்து கிடப்பதிலே ஒரு சுகம் உண்டு. இதெல்லாம் பம்பாய் நகரில் என்றால் நம்ப முடிகிறதா? அங்கே ஏது நிசப்தமான இடம்? நாங்கள் 5,6 பிரம்மச்சாரிகள் சேர்ந்து செம்பூர் chedda  நகரில் ஒரு தனி ப்ளாட்டை   வாடகைக்கு எடுத்திருந்தோம். நேர் எதிரே செம்பூர்  முருகன் கோவில் உள்ளதுவீட்டில் நண்பர்கள்… எப்போதுமே கும்மாளம் தான். ஒருவன்  'மீண்டும் மீண்டும் வா' என சத்தமாக பாட்டு போட்டுக்கொண்டிருப்பான். ஒருவன் 'வரக்...வரக்... என்று ப்ரஷ் போட்டு ஜீன்ஸ் பாண்ட்டை துவைத்துக்கொண்டிருக்க, ஒருவன் அட்டகாசமாக  சமையல் (சாம்பார், நிறைய தேங்காய் துருவி போடு வெண்டிக்காய் கறி, கட்டித்தயிர்) செய்து கொண்டிருப்பான். நானும் ரங்குவும் ஆபீஸ் கதைகளை பேசிக்கொண்டிருப்போம்.

யார் இந்த ரங்கு? பாஷ்யம் ரங்கநாதன் என்கிற 'ரங்கு' என் ஆருயிர் நண்பன். திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் சமீபம் தான் அவன் வீடு. ஸ்ரீரங்கம்  அடையவளஞ்சான் தெரு, கீழ சித்திர வீதி என்று என் தாத்தா, அம்மா, மாமாக்கள் குடியிருந்தவர்கள். சுஜாதா, வாலி , பஞ்சாங்கம் புகழ்- குட்டி சாஸ்த்ரி வீட்டு பெண் நடிகை வனிதா இவர்கள் வீட்டுக்கதைகளை என் மாமாக்கள் மணிக்கணக்காக  சொல்ல கேட்டிருக்கிறோம் .   எனக்கு ரங்கு வீட்டில் தனி மரியாதை. ரங்குவின் அப்பா எனக்கு தனியாக கடிதம் எழுதுவார். 2 இன்லண்ட் லெட்டரில் எழுதும் சமாசாரத்தை ஒரே போஸ்ட் கார்டில் டைப்  செய்து  செய்து அனுப்புவார். உதவி .போஸ்ட் மாஸ்டர் ஜெனெரலாக  இருந்து ஓய்வு பெற்றவர்.

பழங்கால Gராமநாதன், SM  சுப்பையா நாயுடு,KV  மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா போன்றோர்  இசையில் எனக்கு மிகுந்த நாட்டம்…. நானும் ரங்குவும் தீவிர இளையராஜா ரசிகர்கள். 'பட்டுப்பூவே எட்டிபாரு' .. 'ஒரு மைனா  மைனா'..(உழைப்பாளி) போன்ற பாடல்களை அடிக்கடி முனுமுனுப்பான். ஆளை பார்த்தவுடனே ' டேய் நீ ஸ்ரீரங்கம் தானே?' என்று கேட்கத்தோன்றும்படியான முகம்….படிய வாரிய எண்ணெய் சொட்டும் சிகை. நீண்ட கூர்மையான நாசி. திக்கான மீசை. பெரிய கண்ணாடி, ப்ளீட் வைத்த  அதிக சுருக்கங்களுடன் baggi பான்ட். கொஞ்சம் கூச்சம், முகம் நிறைய சிரிப்பு. இதுதான் ரங்கு . வாங்கும் சம்பளத்தில் பாதியை உடைகளுக்கும், காசெட்டுகளுக்கும், காலனிகளுக்கும் செலவழிக்கும் என்னை ரங்கு மிகவும் ரசிப்பான். 'டேய் ரங்கு... நீ பாம்பே  காரன் மாதிரி இருந்தாத்தான் உனக்கு ஏதாவது மாட்டும்... இல்லன்னா  போயிட்டே இருப்பாளுங்க..' என்ற எனது அறிவுரையை பெருஞ்சிரிப்புடன் ரசிப்பான். (இப்படி சொன்ன எனக்கு ஒன்னும் மாட்டவில்லை என்பது வேறு விஷயம்).

ஒரு ஞாயிறு மதியம் ரங்குவை கட்டாயப்படுத்தி நாற்காலியில் உட்கார வைத்து அவன் தலை அலங்காரத்தை மாற்றுவதற்குள் போதும்போதுமென்றாகி  விட்டது. அவன் கதற கதற ஒரு காதிலிருந்து மற்றொரு காது வரை நீண்டிருந்த தலை முடியை கத்தரிக்கோலால் வெட்டி,இடது  வகிடை மாற்றி  நடு  வகிடாக்கி , மீசையை ட்ரிம் செய்ய வைத்து 'நடிகர் பிரஷாந்த் போல இருக்க பாரு' என்று கண்ணாடியை முகத்துக்கு நேரே காட்டியதும் ரங்கு புளகாங்கிதமடைந்தான். அடுத்து ஒரு சுபயோக தினத்தில் கொலாபா, பாந்திரா பகுதிகளுக்கு ரங்குவை கூட்டிப்போய் பைசன் T -ஷர்ட் ,ஜீன்ஸ் பான்ட், கொவாடிஸ் என ஷாப்பிங் spree செய்ய வைத்தேன்.  சிறிய சீப்பை பான்ட் பின் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு மணிக்கொருதரம் மயிரை சீவ வேண்டுமென்ற எனது கட்டளையை சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொண்டான்.  அடுத்த சில நாட்களில் ரங்கு ஏதோ ஒரு சிவந்த ஹிந்தி நடிகனைப்போல் மாறி விட்டான். அவ்வளவுதான்..  மற்ற room mates க்கு பொறுக்கவில்லை.. தக்கலை அக்ரஹாரத்தில்  இருந்து வந்த இஞ்சினீயர் பத்மநாபன் என்கிற Paddu, திருச்சி கம்பெனி செக்ரட்டரி- சந்துரு .. எல்லோரும் கிடுகிடுவென தாங்களை T-ஷர்ட்/ஜீன்சுக்குள் புகுத்திக்கொண்டார்கள். எல்லோருக்குமே எப்போதுமே ஏதோ கனவு மயம் தான். தலைக்கு எண்ணெய் தேய்ப்பது பெருங்குற்றம். எல்லோரும் பாண்ட்டில் சீப்பு சகிதம் நொடிக்கொருதரம்  தலையை சிலுப்பி ' ‘டேய் நாம திருந்த மாட்டோம் போல இருக்கே' என சிலாகித்தார்கள்.   'mene  pyar  kiya' படத்தில் பாக்யஸ்ரீ  ஒரு சீனில்  சல்மான் கானை நினைத்துக்கொண்டு .தானே தலையில் செல்லமாக அடித்துக்கொண்டு மெல்ல  சிரித்ததை நண்பன்  ரங்கு மிகவும் ரசித்தான் என்று சொல்ல, மறுநாள் அந்த சீனை பார்க்க நாங்கள் எல்லோருமே   தியேட்டரில் ஆஜர். வாழ்கை  இனிமையாக போனது..   

நான் C A .அவன் கம்பெனி செக்ரட்டரி…ACS. சம்பக்லால் இன்வெஸ்ட்மென்ட் என்ற மெர்சண்ட் பாங்கிங் நிறுவனத்தில் எங்களுக்கு வேலை.. நிறைய குஜராத்தி, கோவன், மற்றும் மங்கலூரிய இளம் பெண்கள் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் இடம். மதியம் லஞ்ச்சில் அவர்கள் உரிமையுடன் நம் தட்டில் இருந்து சப்பாத்தி கர்ரியை எடுத்து   'so pungent  yaar '  என்று சொன்ன அன்று மாலை நம் நண்பர்களுக்கு treat  தான்.. 'தேவையே இல்லாம இவளுங்க எதுக்குடா குறுக்கா நெடுக்க  போறாளுங்க?' என்ற ரங்குவின் கேள்விக்கு என்னுடைய பதில்... " அதுக்கு தாண்டா நம்ம இப்பிடியெல்லாம் ஸ்டைலா இருக்கணும்னு அடிச்சுக்கறேன்... இப்ப புருஞ்சுதா?' அதிலும் டக்....டக் என்ற கூர்மையான ஹை ஹீல்ஸ் சப்தத்துடன் மிக மிக அருகே வந்து மிகவும் விகல்பமாக நம் கண்களை நேரே  பார்த்து 'where  is  underwriting  file ? என்று அப்பெண்கள் கேட்கும்போது நமக்கு மூச்சு முட்டும். ரங்குவிற்கு மூச்சே நின்றுவிடும். அதற்கே  மதியம் ஐஸ் கிரீம் வாங்கி தருவான் (தர வைத்து விடுவேன்)   .  

ஆபீசுக்கு போகும்போதும்  branded   சட்டை, checkered  பாண்ட் , சனியன்று அரை நாள் என்பதால் T-ஷர்ட் ,காடுராய், டெனிம் பாண்ட்,மொக்காசினோ ஷூ, ரிம்லெஸ் கண்ணாடி என்று ரங்கு கலக்கினான். இதில் சிறப்பு என்னவென்றால் அவனது பெற்றோருக்கு ரங்கு இப்படி மாறியது ரொம்ப சந்தோஷம்.ஸ்ரீரங்கம் போனால் எனக்கு நல்ல வரவேற்பு.

அதுசரி  .. இதெல்லாம்  செய்து  ஏதாவது மார்வாடி, மராத்திய, குஜராத்தி பெண்ணின் மனதில் ரங்கு  இடம் பிடித்தானா என்று நீங்கள் கேட்கலாம். இல்லை.... ஆனால்  ஆச்சாரமான ஒரு தமிழ் பெண் இவன் மனதில் இடம் பிடித்தாள். அவளது அண்ணன்காரனும் நம்ம நண்பர்தான்.. நம்ம  ரங்குவுக்கு தான் பயமே  போய்டுச்சே! தைரியமாக  போய் பேசி மணம் முடித்தான். இரண்டு குழந்தைகள்தற்போது பாம்பேயில் இன்னும் மிகப்பெரிய MNC யில்  CFO வாக  இருக்கிறான்.    ரங்குவை சில வருடங்கள் முன்பு சந்தித்த போது, என்னை பார்த்தவுடனேயே விழுந்து விழுந்து சிரித்தான். 20 வருடங்களுக்கு  முன்பு அவன் தலை முடி ஸ்டைலை நான் மாற்றியதை நினைத்து...  அதே இளமை...அதே கடும் உழைப்பு.. VP (Finance ) & கம்பெனி செக்ரடரி..  நரிமன் பாய்ன்ட்  எக்ஸ்ப்ரஸ் டவர்ஸில் sea view  அலுவலகம்..


மிகவும் சந்தோஷமாக இருந்தது.. நடு வகிடு எடுத்து தலை சீவினா இவ்வளவு உயருவோமா?  

Monday, June 3, 2013

நீலவானம்…….
திருச்சி சிங்காரத்தோப்பு சூப்பர் பஜார் பகுதி.. சிறியதும் பெரியதுமான கடைகளுக்கு நடுவே விஸ்வநாதன் ஆஸ்பத்திரி. .காரை விட்டு இறங்கி அம்மாவுடன் உள்ளே நுழைந்தேன். புறத்தே  இருந்து பார்க்க ஏதோ மருந்தகம் போல இருந்தாலும், உள்ளே நுழைந்தால் மிக பிரம்மாண்டமான கட்டிடம். ஒவ்வொரு சிகிச்சை பிரிவுக்கும் தனித்தனியே வார்டுகள். குறுகலான வழிப்பாதைகளின் நடுவே குறுக்கும் நெடுக்குமாக ஆஸ்பத்திரி சிப்பந்திகள் நடமாடிக்கொண்டிருந்தார்கள்.
பிளாஸ்டிக் வயர் கூடையில் பிளாஸ்க்கில் காபி, சில பேர் ஆப்பிள் பை, சிலர் ஹார்லிக்ஸ் பாட்டில் என்று விதவிதமாக நோயாளிகளை பார்க்க வந்த வன்னம் இருந்தனர்
கடைசியில் கதிர்வீச்சு பிரிவு. ரேடியேஷன் தெரபி கொடுக்குமிடம். சுமார் 10 அல்லது 15 பேர் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். நானும் அம்மாவும் அங்கே போய் அமர்ந்தோம். நோயாளிகள் யார் மற்றும் கூட வந்த உறவினர்கள் யார் என்பது பார்க்கும்போதே தெரிந்தது. . எல்லோரும் புற்று நோய்க்கு சிகிச்சை பெற வந்தவர்கள். அநேகமாக பாதி பேர் தலையில் முடியில்லாமல் அல்லது முடி உதிர்ந்த நிலையில் அல்லது பாதி முடி உதிர்ந்தது தெரியாமலிருக்க சிரம் மழித்து இருந்தனர். சிலர் சமயபுரம் மாரியம்மனுக்கு வேண்டிக்கொண்டு மொட்டை போட்டிருந்தனர். யாருடைய முகத்திலும் ஒரு சலனமும் இல்லை.கவலையும் இருப்பதாக தெரியவில்லைமரணத்தின் வாயிலை நெருங்கி மறுபடியும் வாழ இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்காதா என ஏங்குபவர்கள்.   
இஸ்லாமிய பெண்மணியொருவர் தன மகளுடன் வந்திருந்தார். வந்த 5 நிமிடங்களில் தன உடலை பக்க வாட்டில் சாய்த்து மகளின் மடியில் தலை வைத்து படுத்து விட்டார். தாயின் வலி மகளின்    முகத்தில்...மொட்டையுடன் மற்றொரு இளம்பெண்  கணவனுடன் வந்திருந்தார். அவருக்கு எங்கே புற்று நோய் என தெரியவில்லை. ஆனால் திடீரென்று கால்கள் இரண்டையும் தூக்கி முன் சீட்டில் நீட்டி வைத்து தலையை பின்னே சாய்த்துக்கொண்டார். அவருக்கு என்ன செய்கிறது என்று தெரியவில்லை. ஆனால் மிகவும் ஸ்ரமப்படுகிறார் என்பது நிச்சயம்.   எனக்கு பக்கத்தில் கோவில் குருக்கள் ஒருவர் அமர்ந்திருந்தார். கழுத்துப்புறம்  கருமையாகவும் வாயில் சமீபத்தில் விட்டொழித்த  வெற்றிலை புகையிலை காவி.... அவருக்கு தொண்டையில் புற்று நோய் வந்திருக்கலாம். எல்லோரும் நொடிக்கொருதரம் பையில் இருந்து  பாட்டில் எடுத்து தண்ணீர் குடிக்கிறார்கள்.
'புத்து நோய் தொத்து நோய் இல்ல கண்ணு' என்ற 'நீலவானம்' பட வசனம் நினைவுக்கு வந்ததால் நானும் தைரியமாக அவர்களுடன்  அமர்ந்திருந்தேன்.
கலைஞர் கருணாநிதி காப்புறுதி திட்டம் என போர்டு வைக்கபட்டிருந்தது. ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு  அவர்களே பாரத்தை பூர்த்தி செய்து  அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்து பணம் கிடைக்க உதவுகிறார்கள்.  ஒரு மட்டும் தெரிகிறது. அது பணத்திற்காக நடத்தப்படும் மருத்துவமனை அல்லமிகவும் தரம் வாய்ந்த மெஷின்களை வரவழைத்து முறையான சிகிச்சை அளிக்கிறார்கள்.  பணியாளர் ஒருவர் கூட வெட்டியாக கதையளந்துகொண்டு  அங்கங்கே நிற்கவில்லை. ஏதோ ஒரு அவசர வேலை நிமித்தம் ஓடிகொண்டே இருக்கிறார்கள்.
சரோஜினி.. என்று அழைத்ததும் அம்மா எழுந்து உள்ளே சென்றார்கள். அவர்கள் கொடுக்கும் உடைக்கு மாறிக்கொண்டு சிறிய கட்டிலில் படுக்கசொல்கிறார்கள். கட்டிலுக்கு கீழே வெளிச்சமான பல்ப். பிறகு வயிற்றுக்கு  மேலே x -ரே போன்ற மெஷின் வைத்து சுவிட்சை ஆன் செய்து விட்டு பணியாளர்கள் மூவரும் ரூமை விட்டு வெளியே ஓடி வந்து விடுகிறார்கள். சும்மார் 10 நிமிடம் கழித்து புடவைக்கு மாற்றிக்கொண்டு அதே மலர்ந்த முகத்துடன் அம்மா வெளியே வருகிறார்கள்.
காரில் போகும் வழியில் அவசியம் இளநீர் அருந்த வேண்டுமாம். நிறைய நீராகாரம் சாப்பிட வேண்டுமாம்.  தலை முடி உதிர்தல், தோல் கறுத்துப்போதல், வாந்தி போன்ற நிறைய side  effects  இருந்தாலும் chemo  தெரபி  மற்றும்  ரேடியேஷன் தெரபி  முடிந்தபின் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடலாம்  .
 கடந்த 3 மாதங்களாக ஆஸ்பத்திரி, டாக்டர்கள், ஸ்கேன், ultra  சவுண்ட், கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை, ரேடியேஷன் தெரபி என்று  அம்மா அலைந்துகொண்டிருந்தாலும் தன்னம்பிக்கை, தைர்யம், பாசிடிவ் மனப்பான்மை போன்றவைகளினால் மரணத்தை  இன்னும் சில வருடங்கள் தள்ளி போட்டிருக்கிறார்கள்.
கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்த டாக்டர் பூங்கோதை, அவரது கணவர் டாக்டர் செந்தில், டாக்டர் ரவி அய்யங்கார், anasthetist , radiologist   சற்றும் முகம் சுளிக்காத செவிலியர்கள், நாங்கள் வெளி நாடுகளில் இருந்தாலும் மாமியாரை (தாய் போல பார்த்துக்கொண்ட) என் மைத்துனர் டாக்டர் மனோகர், முழுக்க  முழுக்க  உடனிருந்து இரவு பகல் பாராமல் தாயை பார்த்துக்கொண்ட என் சகோதரி லதா மனோகர்  என்னுடன் மருத்துவ செலவனைத்தையும் பகிர்ந்து கொண்ட என் சகோதரர்கள் ரவி (மஸ்கட்) மற்றும் பாபு (பாம்பே), எனக்கு உறுதுணையாக இருந்த என் மனைவி உஷா மற்றும் உறவினர்கள் இவர்கள் அனைவரும்  தெய்வத்திற்கு நிகரானவர்கள்... 5 வருடங்கள் முன்பு இதே புற்று நோயினால் தன் மூத்த மகளை (என் அக்கா) இழந்து, 2 வருடங்கள் முன்பு கணவனையும் இழந்து, மரணத்தை தொட்டுப்பார்த்த என் அன்னையை மீட்டவர்கள்... 
என்னுடன் முகநூல் தொடர்புடைய பெண்களுக்கு ஒரு வேண்டுகோள்...! நீங்கள் 40 வயதை கடந்தவரா? ஆம் எனில் வருடம் ஒரு முறை அவசியம்  pap  smear, biopsy, mammography  போன்ற சோதனைகளை செய்து விடுங்கள். கணவர் முகநூலில் பிஸியாக இருந்தால் தங்கை, மைத்துனி என்று யாரையாவது துணைக்கு அழைத்துக்கொள்ளவும். நேரம் கிடைத்தால் 'நீலவானம்' திரைப்படமும் பாருங்கள்...
அடுத்த 10 நாட்களில் பூரண குணமடைந்து அம்மா  (82 வயது ) பஹ்ரைன் வரவிருக்கிறார்கள்...