Monday, March 16, 2020

வெனிஸ்...

Image may contain: outdoor
சுவிட்சர்லாந்திலிருந்து ரயில் மார்க்கமாக இத்தாலியின் வடகிழக்கு பகுதியில் வெனிஸ் நகரத்திற்கு பயணம் செய்தது ஒரு சுகானுபவம். ஜூரிச்சிலிருத்து அதிவிரைவு ரயிலில், மணிக்கு 250 கி.மீ என திரையில் காட்ட, இருபுறமும் பச்சை பசேலென தாவரங்கள், மலைகள், ஓடைகள் என ஐரோப்பிய அழகு கண்ணை பறிக்க, மிலான் வழியாக இரவு வெனிஸ் கடற்கரை ரயிலடிக்கு வந்து சேர்ந்தோம்.

‘வாட்டர் டாக்ஸி’ பதாகை காண்பித்த திசையில் ஓடிப்போய் காத்திருந்த படகுகளில் ஏறிக் கொண்டோம். ‘வழில நிக்காம நல்லா உள்ளே போய் உக்காருங்க தம்பி!’ என படகுக்காரன் அன்போடு கேட்டும் ‘அட போப்பா!அரைமணி நேரம் நின்னுகினே கொஞ்சம் இயற்கையை ரசிக்கலாமே’ என்று மனதுக்குள் நினைத்த அடுத்த நிமிடம் சடாரென படகு உறுமி, ஆக்ரோஷமான அலைகளை கிழித்துக் கொண்டு ஜிவ்வென பறக்க, நாங்கள் நிலைகுலைந்து வத்திக்குச்சி போல சிதறி தரையில் சரிந்தோம். விஷம புன்னகையுடன் படகோட்டி இளைஞன் சக்கரத்தை திருப்பி மேலும் விரைவாக படகை செலுத்த அடுத்த சில நிமிடங்களில் தூரத்தில் வண்ண விளக்குகளுடன் வெனிஸ் நகரம் தெரிந்தது. ராட்சத கற்களால் கட்டப்பட்ட படகுத்துறையில் அதி ஜாக்கிரதையாக காலை வெளியே தூக்கி வைத்து படகிலிருந்து இறங்கினோம். இடையே கீழே 20 அடி ஆழத்துக்கு கொந்தளிக்கும் ஜலம். என்ன ஊருய்யா இது வெனிஸ்! பீதியை கிளப்புது!
வெனிஸில் ரோடுகளே கிடையாது. நீர்வழிப்பாதைகள் தான். கால்வாய்களும் அவைகளை இணைக்கும் சிறு பாலங்களும் தான். நூற்றுக்கும் மேற்பட்ட தீவுகள். எங்கு பார்த்தாலும் அருங்காட்சியகங்களும் தேவாலயங்களும் தான். ஜனத்தொகை சுமார் இரண்டரை லட்சம் தான். 9ஆம் நூற்றாண்டில் புதிய கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்டு அக்காலத்திலேயே வர்த்தகம்,போக்குவரத்து அதிகமாம். சுற்றுலா தான் பிரதான வருவாயாம்.
தண்ணீருக்கு நடுவே பாறைகளின் மேல் அழகாக கட்டப்பட்ட வரிசையான ஓட்டு வீடுகள். வீட்டை அடுத்து கராஜ் போல படகு நிறுத்தம். வாசல் படிக்கட்டின் கீழ் தண்ணீர் தான். ‘இந்த வீட்ல எனக்கு என்ன மரியாதை இருக்கு! என மனைவியுடன் சண்டை போட்டு, சட்டையை மாட்டிக்கொண்டு கோபத்துடன் விருட்டென வாசல் கதவைத் திறந்து வெளியே வந்தால் தொபுக்கடீரென தண்ணீரில் தான் விழுந்து தொலைக்க வேண்டும்.
ஹிந்தி பேசும் பங்களாதேஷி இளைஞர்கள் ரோட்டில் கூவிக்கூவி விற்கிறார்கள். நண்பர் ஜெயராம் ரகுநாதன் சொல்லி அனுப்பிய விலாசத்தை விஜாரித்து புராதன விடுதி ஒன்றின் முன் நின்றோம். பிரம்மாண்டமான கதவுகள், அழைப்பு மணியை அழுத்த, கதவு திறந்து கொண்டது. மூன்று அடுக்குகள் கொண்ட ஆதிகால கட்டிடம், படியில் ஏறி மாளாது. லிப்டில் மேல் தளம் வந்தால் பிரமிப்பு. நவீன உள் கட்டமைப்பு, பற்பல வண்ணங்களில் சுன்னம் பூசப்பட்ட சுவர்கள்,அதில் இத்தாலிய ஓவியங்கள், வயதான மூதாட்டி, பாஸ்போர்ட் செக்கிங், மாறும் வெப்பநிலைகேற்ற அறைகள், புசுபுசு மெத்தை போன்ற வழக்கமான ஐரோப்பிய சமாச்சாரங்கள் இப்பதிவுக்கு தேவையில்லை. நண்பர் ஜெயார் சொன்ன மாதிரி நேராக மொட்டை மாடிக்குப் போய் அங்கிருந்து தூரத்தில் தெரிந்த லிடோ தீவு மற்றும் கீழே மிதக்கும் நகரமான வெனிசை ரசித்தோம்.
மறுநாள் காலை கண்டோலா படகுச்சவாரி. The Great Gambler படத்தில் அமிதாப்பச்சன்-ஜீனத் அமான் காதலுடன் பாடும் Do Lafzon Ke hai Dil பாடலை நினைவூட்டும்படியாக படகுச்சவாரி. தினமும் தண்டால் எடுக்கும் திடகார்த்த தேகத்துடன் இத்தாலிய படகோட்டி எங்களுக்கு பின்னால் நீண்ட கழியால் தண்ணீரை குத்தி மெல்ல படகை செலுத்தினான். கூட காசு கொடுத்தால் ‘லோ..லோ..லௌ...’ என வித்தியாசமான குரலில் பாட்டும் பாடுவானாம். ஒரே நேரத்தில் ஏழெட்டு படகுகள் சேர்ந்து போவதால் பக்கத்து படகின் ‘லோ..லோ.. லௌ’ பாட்டை இங்கிருந்தே பார்த்து 60 யூரோக்கள் மிச்சம் பிடித்தோம். (டேய்! நாங்க திருச்சிடா!) ஒரொரு குட்டி தீவுக்குள் நுழைந்து கட்டிடங்களையும் இயற்கை அழகையும் ரசித்தோம். குறுகலான தெருக்கள் போல நீர்வழிப்பாதைகள் எல்லாம் சுமார் 5 மீட்டர் ஆழமாம். கடல் கொந்தளிப்பு எப்போதும் இருப்பதால் நீர் வழிப்பாதைகளும் படகுகளை அலைக்கழிப்பது தெரிந்தது.
Vaporetto எனும் படகில் 30 நிமிட தூரத்தில் மற்றொரு தீவு சென்று செயின்ட் மார்க்ஸ் பாஸிலிகா எனப்படும் பிரம்மாண்டமான புனித தேவாலயம் சென்றோம். கிட்டத்தட்ட திருச்சி செயின்ட் ஜோசப்ஸ் சர்ச் போலத்தான் இருந்தது. San Marco square எனப்படும் இடத்தின் கட்டிடக்கலை அழகு, முழு வெனிஸ் நகரையும் பார்க்க Bell Towerஇன் மேல்தளம், Cafe-hopping செய்ய ஏராளமான காபி/வொய்ன் கடைகள்..புகழ் பெற்ற grand canal மற்றும் ரியால்டோ bridge மேலிருந்து செல்ஃபி போட்டோ... இவ்ளோ தான் வெனிஸ்..
மதியம் குறுகலான வளைந்து செல்லும் கடைவீதிகளில் நடந்தோம். வழக்கம்போல தொப்பி, கண்ணாடி, குடை, ஸ்வெட்டர், டிஷர்ட் என வாங்குவதற்கு ஒன்றும் விசேஷமாக இல்லை. எங்கு பார்த்தாலும் அழுக்கு ஹிப்பி இளைஞர்கள். கூடவே ஒட்டிக்கொண்டிருக்கும் அழுக்கான (ஆனால் அழகான) இளைஞிகள் சிகரெட்டை அழகாக அதரங்களில் கவ்வி ஊதித்தள்ளினர். ஏராளமான சீமைச்சாராய விடுதிகள். முட்டி மோதும் நெரிசல்.. ஜனங்கள் மதுவை அங்கங்கே அருந்த, ஹெனிகன், நாஸ்ட்ரோ அஸுரோ பில்ஸ்னர் போன்ற உலகப்பிரசித்தி பெற்ற இத்தாலிய பீர் வகைகள்..
மாலை St Mark’s Square பகுதியின் கார்னிவலுக்கு சென்றோம். மிகப்பெரிய மைதானம். மைதானத்தின் நடுவே மேடையில் பாண்டு இசை. நாற்புறமும் கட்டிடங்கள், கடைகள், உணவகங்கள். பப்களில் வாடிக்கையாளர்களை கவனித்து பீரை மக்கில் (mug) நிரப்பிக்கொடுக்கும் இளம் முண்டா பனியன் பெண்கள். வண்ண மயமான ஒளி வெள்ளம். சிகப்பு வொய்ன் கோப்பையுடன் முக்கா பேண்ட்டில் ஆண்கள், மற்றும் கிழிசல் நூல் தொங்கும் காலே அரைக்கால் பேண்ட்டில் ஸ்திரீகள். கோனியம்மன் திருவிழா போல கூட்டம் அம்மியது. மேடைப்பாடலுக்கு அங்கங்கே ஜோடிகள் பின்புறங்களை உருட்டி அசைத்து நடனம். அதிலும் கனிசமான முண்டா பனியன் பெண்டிர். இது வெனிசா அல்லது திருப்பூரா!
தலையை ரசித்து ஆட்ட வைக்கும் 50-70 களில் கோலோச்சிய பாப் பாடல்கள். Fugees இன் Killing me Softly பாடலை யுவதியொருத்தி மனமுருக ‘இசையால் வசமாகும் இதயமிது’ டிஎம்மெஸ் போல பாடி அசத்தினாள் கள்ளி. Carlos Santana வின் கிடார் இசையில் Maria.. Maria பாடலுக்கு ஆப்பிரிக்க கஞ்சா இளைஞர்கள் போல் இடுப்பொடியும் ஆட்டத்தை நாமும் ஆடினால் சுளுக்கு உத்தரவாதம் . இந்தப்பக்கம் நவீன Beyoncé Knowels பாடலுக்கு தாரை தப்பட்டை சவ ஊர்வல ஆட்டம் போல கும்பல் ஒன்று ஆடிக்கொண்டிருந்தது. சர்வம் சாராய மயம்! கூட்டத்தை கடந்து வெளியே வந்தால் அக்கார்டியன் வாத்தியத்துடன் ஸ்பானிஷ் இளைஞன் ஒருவன் Doris Day யின் que Sara que Sara பாடலை வாசிக்க மெய்மறந்து ரசித்தோம். அதே மெட்டில் ஆரவல்லி படத்திற்காக ராஜா-ஜிக்கியின் ‘சின்ன பெண்ணான போதிலே’ பாடலுக்கு ஜி.ராமநாதன் அசத்தலுடன் இசையமைத்திருப்பது அந்நேரம் (இரவு 2 மணி) நினைவுக்கு வந்தது .
உணவகங்களில் விதவிதமான வெரைட்டிகளில் பீட்சா கிடைத்தன. நமக்கு பிடித்த ச்சீஸ் ஜவ்வுடன் கூடிய பீட்சா மார்கரீட்டா எனும் தக்காளி பீட்சாவை கடித்து குதறி உண்டு வயிறை நிரப்பிக்கொண்டு விடுதி திரும்பினோம்.
மறுநாள் காலை ரயில் பிடித்து பிசா (Pisa) சாய் கோபுரம் பார்த்துவிட்டு ரோம் நகரத்திற்கு பயணம்.
பி.கு: மூன்று மாதங்கள் முன்பு ஆக்ரோஷ அலைகளால் கடல் நீர் புகுந்து வெனிஸ் நகரமே ஆறடி வெள்ளத்தில் மூழ்கி, பிறகு குறைந்த அலைகளால் நீர்வழிப்பாதைகள் வற்றி, உள்ளூர் மக்கள் பலர் வீடுகளை காலி செய்து, அரசாங்கம் மில்லியன் கணக்கில் செலவு செய்து புணரமைப்பு வேலைகள்... போன்ற செய்திகளை கேள்விப்படும்போது... ச்சே! அழகான வெனிஸ் நகரம் திரும்ப கிடைக்குமா!
Image may contain: 1 person, smiling, drawingசுமார் 20 வருடங்களுக்கு முன் பஹ்ரைனில் ஒரு நாள் ஆருயிர் நண்பன் கணபதி Ganapathi Subramanian ஒரு இளைஞனை எனக்கு அறிமுகப்படுத்தினான். ‘ஸ்ரீதரா! இவன்தான் மணிகண்டன். பாம்பேல எங்க முலுண்டு அத்திம்பேர் வைத்தியநாதன் இருக்காரில்லியோ!அவரோட நெய்வேலி பிரதரோட பையன். துடிப்புமிக்க இளைஞனாக தெரிந்தான் மணி. ICWA முடித்து சில வருடங்களில் கணபதியின் கீழ் வேலைக்கு சேர்ந்தவன். முகத்தில் எந்நேரமும் புன்னகை, அளவான மற்றும் அடக்கமான பேச்சு.
அடுத்த சில நாட்களில் அவனது அசாத்திய திறமை, உழைப்பு என மணியை கணபதி வானளாவ புகழ, மணி எனக்கும் நெருக்கமானான். கணபதி கிட்ட பாராட்டு வாங்குவதென்பது மன்மோகன் சிங்கையும் நரசிம்ம ராவையும் சிரிக்க வெச்சு குத்தாட்டம் போட வைப்பது மாதிரி. அவன் கார் காம்பௌண்டுக்குள் நுழையும்போதே நம்மூர் மஜீத், மைக்கேல் போன்ற வாட்ச்மேன்கள் காரை நோக்கி ஓடுவார்கள். அவ்வளவு பயம். மன்சூர் அல் ஆலி கம்பௌண்டு கணபதியின் கம்பெனிக்கு சொந்தமானது. சுமார் 70,75 ஃப்ளாட்டுகள் கொண்ட அங்கே அமித் ஷா போல வலம் வருவான் கணபதி. கணபதி வீட்டு ஃப்ரிட்ஜில் லபான் (தயிர்) இல்லையென்றால் லேபர் குவார்ட்டர்ஸில் பாதி சிக்கன் பிரியாணியை விட்டுவிட்டு மஜீத், மைக்கேல் கோல்டு ஸ்டோர் (கடை) பக்கம் ஓடுவார்கள். பண்டிகை மற்றும் வெக்கேஷனுக்கு ஊருக்கு கிளம்புவது போன்ற விசேட நாட்களில் கணபதி முன் தலையை சொறிந்து கொண்டு நின்றால் அந்த மோட்டா மணி பர்ஸிலிருந்நு செம்மையாக தேரும் என்பது அவர்களுக்கு தெரியும். அதையும் எதிர்பார்க்காமல் உண்மையான ஊழியம் செய்பவர்கள்.
வெள்ளிக்கிழமை மதியம், எதாவது பண்டிகை, குழந்தைகள் பிறந்தநாள் என எல்லா விசேஷ தினங்களிலிலும் கணபதி வீட்டில் டைனிங் டேபிள் ஈயச்சட்டியிலிருந்து ரசம் விட்டுக்கொள்ளும் மணியை நான் தவறாமல் பார்ப்பதுண்டு. நண்பர் Mohan Gopal Krishnan அவர்களின் மகள் Shyamala Ram ன் பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு பத்திரிக்கை அடிக்க வேண்டி இருந்தது. விடுவானா கணபதி? ‘எதுக்கு செலவெல்லாம் செஞ்சுகிட்டு! நம்ப மணி கம்ப்யூட்டர்ல பண்ணி குடுப்பான் பாருங்க!’ என (மணியை கேட்காமலே) அறிவிக்க, அடுத்த நிமிடம் மணிக்கு போன் பறக்கும். எல்லா வேலையையும் அப்படியே போட்டு விட்டு தபதபவென ஓடி வந்து காரியத்தில் இறங்குவான் மணி. பவர் பாயின்ட், போட்டோ ஷாப் என எதுவும் பிரபலமாகாத நேரம் அது. மணி அற்புதமாக இரண்டு மூன்று டிசைனில் பத்திரிக்கை அடிப்பான். ஒத்தாசைக்கு நான், மனைவி Usharani Sridhar மற்றும் Durga Ganapathi . எல்லா கூத்தும் கணபதி வீட்டில் தான். அந்தப்பக்கம் டைனிங் டேபிள் சாப்பாடு, கூட்டு பொறியல், ஈயச்சட்டி ரசம் இத்யாதி...
‘அதுசரி.. உனக்கு வீடு, வாசல் ஆபிசெல்லாம் கிடையாதா! பொழுதன்னிக்கும் கணபதி வீடு தானா’ என கேட்பவர்கள் இரவு பதினோரு மணிக்கு மேல் ஹூரா பகுதியில் எங்கள் வீட்டுக்கு வந்தால் என்னை பார்க்கலாம். இரவு 9 மணிக்கு எனக்கு போன் போட்டு ‘வற்ரியாடா?’ எனக்கேட்டு போனை வைத்துவிட்டு திரும்பினால் எதிரே நிற்பேன். இந்த நாடே சென்னையில் பாதி சைஸ் தானே!
2002இல் பஹ்ரைனை விட்டு கணபதி கிளம்பியதும் ஓவென அழுது புரண்டவர்களில் மணியும் ஒருவன். அவனும் துபாய், அபுதாபி பக்கம் மற்றொரு ஜோலியில் செட்டிலானான். நண்பர் Saravanan Natarajan தணிக்கையாளராக இருந்த கல்வி நிறுவனமொன்றில் மணிகண்டன் சேர்ந்தான். ICWA க்கு பிறகு அதற்கு இணையான லண்டன் CIMA படிப்பையும் முடித்து அபுதாபியில் ஒரு சுகாதாரண நிறுவனத்தின் தலைமை நிதி மேலாளராக இருக்கும் மணியை நான் அங்கு போதெல்லாம் சந்திப்பதுண்டு. பெரிய பதவி, வில்லா, லாரி போன்ற நாலுசக்கர வண்டி (4WD) போன்ற வசதி வாய்ப்புகள் எதுவும் தலைக்குள் ஏறாமல், அடக்கத்துடன் எளிமையாகவே இருக்கும் மணியின் சுபாவம் அவனது அப்பாவிடமிருந்து பெற்றது. அப்பா Venkataraman Balasubramanian எனக்கு அண்ணா மாதிரி. என்னிடம் மிகுந்த பாசமும் உரிமையும் வைத்திருப்பவர். மணியை விட தோஸ்த் எனக்கு. மகனுடன் அபுதாபியில் நான் தங்கியிருக்கும் இடத்திற்கே வந்து என்னை வீட்டிற்கு அழைத்துச்செல்வார். அவசரமாக வேறு வேலை எனக்கு இருந்தும், சடாரென அவர்கள் வீட்டில் சாப்பிட முடிவு செய்து, அடுத்த அரை மணிக்குள் பூரிக்கு மாவு பிசைந்து ஸ்வீட்டுடன் விதவிதமான வகை இரவு உணவு தயாரிப்பார் மணியின் மனைவி லலிதா.
மணியின் குழந்தைகள் இரண்டும் படிப்பில் மட்டுமல்லாது ஓவியம், பேச்சுப்போட்டி, அறிவியல் ஆய்வு என மற்ற துறைகளிலும் பரிசு வாங்குபவர்கள்.
மூத்தவன் சாய் வருடம் தவறாமல் Pride of Abu Dhabi யின் Young Achiever விருது, Hidden Eco Hero விருது, ரேடியோ FM நேர்க்காணல் போன்று சாதனைகளை குவிக்கிறான். கடல் நீரிலிருக்கும் கழிவுப்பொருட்களை அகற்றி, நீரை சுத்திகரிக்கும் Marine Robot Cleaner எனும் கருவியை கண்டுபிடித்து அரசாங்கத்திடம் பாராட்டு பெற்று கலீஜ் டைம்ஸ் நாளிதழின் முதல் பக்கத்தில் இடம் பெற்றவன் சிறுவன் சாய். கணவன் மற்றும் குழந்தைகள் வெற்றிக்கு பின்னால், சொல்லவே வேண்டியதில்லை, லலிதா தான். தவிர குழந்தைகளை ஊக்குவித்து தாத்தா பாட்டியும் தார்மிக ஆதரவு கொடுக்கிறார்கள். அண்ணாவிற்கு உலகமே ஒரே மகன் மணி தான்.
நமக்கு நண்பர்கள் தான் வாழ்க்கையே!

அம்மா

Image may contain: Manjula Ramesh, drawing
திருச்சி சிங்காரத்தோப்பு சூப்பர் பஜார் பகுதி.. சிறியதும் பெரியதுமான கடைகளுக்கு நடுவே விஸ்வநாதன் ஆஸ்பத்திரி. .காரை விட்டிறங்கி அம்மா கை பிடித்து உள்ளே நுழைந்தேன். புறத்தே இருந்து பார்க்க ஏதோ சாதாரன மருந்தகம் போல இருந்தாலும், உள்ளே நுழைந்தால் மிக விசாலமான இடம். ஒவ்வொரு சிகிச்சை பிரிவுக்கும் தனித்தனியே வார்டுகள். குறுகலான வழிப்பாதைகளின் நடுவே குறுக்கும் நெடுக்குமாக நடமாடிக்கொண்டிருக்கும் ஆஸ்பத்திரி சிப்பந்திகள்.
பிளாஸ்டிக் வயர் கூடையில் காபி ஃப்ளாஸ்க், ஆப்பிள் பை, ஹார்லிக்ஸ் பாட்டில், துண்டு, சாமி ப்ரசாதம் சகிதம் மக்கள் நோயாளிகளை பார்க்க வந்தவன்னம் இருந்தனர். கோடியில் கதிர்வீச்சு பிரிவு பலகை. ரேடியேஷன் தெரபி கொடுக்குமிடம்.
சுமார் 10 அல்லது 15 பேர் இருக்கைகளில். நானும் அம்மாவும் அங்கே கடைசி வரிசையில் அமர்ந்தோம். நோயாளிகள் யார் மற்றும் கூட வந்த உறவினர்கள் யார் என்பது பார்க்கும்போதே தெரிந்தது. எல்லோரும் புற்று நோய்க்கு சிகிச்சை பெற வந்தவர்கள். அநேகம் பேர் தலையில் முடியில்லாமல், முடி உதிர்ந்த நிலையில் அல்லது பாதி முடி உதிர்ந்தது தெரியாமலிருக்க சிரம் மழித்து இருந்தனர். சிலர் சமயபுரம் மாரியம்மனுக்கு நேர்ந்துகொண்டு மொட்டை போட்டிருந்தனர். யாருடைய முகத்திலும் ஒரு சலனமோ கவலையோ இருப்பதாக தெரியவில்லை. மரணத்தின் வாயிலை நெருங்கி மறுபடியும் வாழ இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்காதா என ஏங்கி காத்திருப்பவர்கள்.
இஸ்லாமிய பெண்மணியொருவர் தன மகளுடன் வந்திருந்தார். வந்த 5 நிமிடங்களில் தன் உடலை பக்க வாட்டில் சாய்த்து மகளின் மடியில் தலை வைத்து படுத்து விட்டார். தாயின் வலி மகளின் முகத்தில்... மொட்டையுடன் மற்றொரு இளம்பெண் கணவனுடன் வந்திருந்தார். அவருக்கு எங்கே புற்று நோய் என தெரியவில்லை. ஆனால் திடீரென்று கால்கள் இரண்டையும் தூக்கி முன் சீட்டில் நீட்டி வைத்து தலையை பின்னே சாய்த்து தன் சரீரத்தை மேலும் நீட்டி முறித்துக்கொண்டிருந்தார். அவருக்கு என்ன செய்கிறது என்று தெரியவில்லை. ஆனால் கடுமையாக ஸ்ரமப்படுகிறார் என்பது நிச்சயம். பார்க்க மிகவும் வேதனை..எனக்கு பக்கத்தில் கோவில் குருக்கள் ஒருவர் அமர்ந்திருந்தார். கழுத்துப்பகுதி முழுவதும் கருமை.. அவரது அதரங்களில் சமீபத்தில் விட்டொழித்த வெற்றிலை புகையிலை காவி இன்னும்.... அவருக்கு தொண்டையில் புற்று நோய். அறுவை சிகிச்சை செய்த அடையாளம் தெரிந்தது. எல்லோரும் நொடிக்கொருதரம் பையில் இருந்து பாட்டில் எடுத்து தண்ணீர் குடிக்கிறார்கள்.
'புத்து நோய் தொத்து நோய் இல்ல கண்ணு' என்று 'நீலவானம்' படத்தில் தாய் தன் மகளுக்குச்சொல்லும் வசனம் நினைவுக்கு வந்ததால் நானும் தைரியமாக அவர்களுடன் அமர்ந்திருந்தேன். வயிற்றை என்னவோ செய்தது.
சரோஜினி.. என்று அழைத்ததும் அம்மா எழுந்து உள்ளே சென்றார்கள். அவர்கள் கொடுக்கும் உடைக்கு அம்மா மாறிக்கொண்டவுடன் சிறிய கட்டிலில் படுக்கச்சொல்கிறார்கள். கட்டிலுக்கு கீழே பளீரென வெளிச்சத்துடன் பல்ப். பிறகு வயிற்றுக்கு மேலே x -ரே போன்ற மெஷின் வைத்து சுவிட்சை ஆன் செய்து விட்டு பணியாளர்கள் மூவரும் ரூமை விட்டு வெளியே ஓடி வந்து விட, அம்மா மட்டும் தனியாக..சுமார் 10 நிமிடம் கழித்து புடவைக்கு மாற்றிக்கொண்டு சலனமில்லாமல் அதே மலர்ந்த முகத்துடன் வெளியே வரும் அம்மா..
'போற வழியில இளநீர் வாங்கிக்கனும் ஶ்ரீதர்..' தில்லைநகர் வழியாகப் போகும்போது அம்மா ரோட்டோரம் பார்த்துக்கொண்டே வந்தார்கள். நிறைய நீராகாரம் சாப்பிடனுமாம்.
'தல முடி உதிர்றது, தோல் கறுத்துப்போறது, அடிக்கடி வாந்தி.. இதெல்லாம் நெறைய இருக்குமாம். ஆனா chemo அல்லது ரேடியேஷன் தெரபி முடிஞ்சா மறுபடியும் பழைய நிலைக்கு வந்துடலாமாம்'. அம்மா சொல்லிக்கொண்டிருக்க ஓரக்கண்ணால் அவர்களைப்பார்த்தேன்.. முகத்தில் கவலை தெரிந்தாலும் குரலில் தைர்யம்.. நம்பிக்கை
கடந்த 3 மாதங்களாக ஆஸ்பத்திரி, டாக்டர்கள், ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை, ரேடியேஷன் தெரபி என்று அம்மா அலைந்துகொண்டிருந்தாலும் தன்னம்பிக்கை, தைர்யம், பாசிடிவ் மனப்பான்மை போன்றவைகளினால் மரணத்தை இன்னும் சில வருடங்கள் தள்ளி போட்டிருக்கிறார்கள். நோயாளியின் மனதிடம் இதற்கு மிக முக்கியமாம்.
கர்ப்பப்பை (82 வயதில்)அகற்ற அறுவை சிகிச்சை செய்த டாக்டர் பூங்கோதை, அவரது கணவர் டாக்டர் செந்தில்வேல் குமார், புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ரவி அய்யங்கார், anasthetist , radiologist சற்றும் முகம் சுளிக்காத செவிலியர்கள், நாங்கள் வெளி நாடுகளில் இருந்தாலும் மாமியாரை தாய் போல பார்த்துக்கொண்ட என் மைத்துனர் டாக்டர் மனோகர், முழுக்க முழுக்க உடனிருந்து இரவு பகல் பாராமல் தாயை பார்த்துக்கொண்ட என் சகோதரி லதா மனோகர் Hemalatha Manohar என்னுடன் மருத்துவ செலவனைத்தையும் பகிர்ந்து கொண்ட என் சகோதரர்கள் Vijay Raghavan (மஸ்கட்)மற்றும் Suresh Babu (பாம்பே), அம்மாவை பார்த்துக்கொள்ள நான் பதினைந்து நாட்கள் பஹ்ரைனிலிருந்து திருச்சி வந்துவிட்டதும் தனியாக பஹ்ரைனில் இருந்துகொண்டு எனக்கு ஊக்கமளித்து உறுதுணையாக இருந்த என் மனைவி Usharani Sridhar மற்றும் 'பாட்டி பொழைச்சிக்கிட்டாங்களா?' என விசாரிக்கும் அக்கம்பக்கத்து உறவினர்கள்..இவர்கள் அனைவரும் தெய்வத்திற்கு நிகரானவர்கள்...
5 வருடங்கள் முன்பு இதே புற்று நோயினால் தன் மூத்த மகளை (என் அக்கா) இழந்து, 2 வருடங்கள் முன்பு கணவனையும் (அப்பா) இழந்து, தற்போது மரணத்தை 'ஹாய்!' எனச்சொல்லி தொட்டுப்பார்த்த என் அன்னையை மீட்டவர்கள் தான் மேலே குறிப்பிட்டவர்கள். அடுத்த 10 நாட்களில் பூரண குணமடைந்து அம்மா பஹ்ரைன் வரவிருக்கிறார்கள்.
இதுவரை மேலே குறிப்பிட்டுள்ள வியாசம் 2013இல் எழுதியது. பிறகு அம்மா பஹ்ரைன் வந்து தன் பேத்தியின் (என் அக்கா மகள்) Srikamya Badrinath பிரசவம் முடியும் வரை சுமார் நான்கு மாதங்கள் இங்கிருந்தது, உடல்நிலை முற்றிலும் தேறி, இரண்டு மூன்று கிலோ எடையும் கூட்டியது, பத்து நாட்கள் கால் மசாஜ் செய்த வைத்யரத்னா கேரளப்பெண்கள் மற்றும் என் மனைவி உஷாவிற்கு தானே எம்பிராய்டரி செய்து கைப்பேசி பை (bag) பரிசளித்தது, பஹ்ரைன் இந்தியன் க்ளப்பில் இரண்டு மணிநேரம் அமர்ந்து நண்பர் Ganesan Ramamoorthy இன் மேடைப்பாடல்களை மிகவும் ரசித்தது, பழைய புத்துணர்ச்சியுடன் தனியாகவே விமானம் ஏறி கொழும்பில் வேறு விமானமும் மாறி திருச்சி திரும்பியது... எல்லாமே எங்களுக்கு கிடைத்த தற்காலிகமான சந்தோஷங்கள் என பிறகுதான் தெரிந்தது.
அடுத்த ஒரே வாரத்தில், பஹ்ரைனிலிருந்து கிளம்பி நான் இத்தாலி பயணம் செய்துகொண்டிருந்தபோது, அம்மா மறுபடியும் வயிற்று வலியால் துடித்ததும், அதுவரை எங்கோ ஒரு மூலையில் (lymph node) ஒளிந்திருந்த புற்று நோய் ஈரலுக்குள் புகுந்து, பரவி, பந்து போல இரத்தக்குழாய்களுடனான பெரிய கட்டியாகி (haemangioma), அக்கட்டி உடைந்து சுமார் அரை லிட்டர் குருதி உள்ளுக்குள் தெறித்துச்சிதறி, பெருஞ்சப்தமிட்டபடி வலியால் துடித்துக்கொண்டே என் சகோதரியின் மடியில் அம்மா இறந்தது பரிதாபத்திற்குறிய, மறக்க வேண்டிய, மறக்க இயலாத சம்பவங்கள்.
ஶ்ரீரங்கம் பெண்கள் மேநிலைப்பள்ளி மற்றும் திருச்சி ஹோலி க்ராஸ் பள்ளியில் அந்த காலத்தில் படித்த அம்மாவுக்கு நாம் ஆச்சரியப்படுமளவிற்கு தைரியமும் மனதிடமும்.
டீ.வி சமையல் நிகழ்ச்சியை பார்த்த மறுநிமிடம் அந்த புதிய ரிசிப்பீயை தன் டயரியில் குறித்து, உடனே சமைத்துப்பார்த்துவிடுவது, அந்தக்காலத்திலிருந்து குமுதம், விகடன் மற்றும் மங்கையர் மலர் படிப்பதல்லாமல் தொடர்கதைகளை சேர்த்து வைத்து, கிழித்து கோணி ஊசியால் தைத்து சாண்டில்யன் கதைகள், தேன் சிந்துதே வானம்(மணியன்), எதற்காக(சிவசங்கரி) என பழைய இருப்புப்பெட்டி முழுவதும் பொக்கிஷமாக வைத்திருப்பார்கள்.
எல்லா வகை கோலங்களும் தனி நோட்டுப்புத்தகத்தில்.. எட்டாம் வகுப்பு வரை பையன்கள், பொண்கள் என எங்கள் எல்லோருக்கும் சட்டை, நிக்கர், பாவாடை சட்டை, ப்ளௌஸ் எல்லாமே தன் தையல் மெஷினால் தைப்பது ( தீபாவளிக்கும் சேர்த்து).
அந்தக்கால தமிழ் மற்றும் தெலுங்குப்பாடல்கள் தனியாக ஒரு நோட்டுப்புத்தகத்தில் (P.லீலா, ஜமுனா, ஜிக்கி, பாலசரஸ்வதி, MLV..). திடீரென அவ்வப்போது வீட்டிலேயே பாட்டுக்கச்சேரி.. அப்பா கண்டசாலா பாடல்களை எடுத்துவிட ( சம்சாரம்.. சம்சாரம்.. சகல ஜன்மதாரம்.. சுக ஜீவன ஆதாரம்..) அம்மாவிடமிருந்து உடனே தெலுங்கு அல்லது தமிழ் பாடல் ( சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே சங்கீத வீணை எதுக்கம்மா..)
அம்மாவின் கதையும் கடைசியில் அவர் இரும்புப்பெட்டியில் சேர்த்து வைத்த தொடர்கதைப்புத்தகங்கள் போலவே கிழிக்கப்பட்டும் தைக்கப்பட்டும் பெட்டியில் அடங்கியது.
என்னுடன் முகநூலில் தொடர்புடைய அனைத்து சகோதரிகளுக்கும் ஒரு வேண்டுகோள்...!
1) நீங்கள் 40 வயதை கடந்தவரா? ஆம் எனில் வருடம் ஒரு முறை அவசியம் கர்ப்பப்பை சோதனை மற்றும் mammography போன்றவைகளை தவறாமல் செய்து விடுங்கள். மருத்துவர் அழகாக ஆலோசனை சொல்வார்.
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் 'அடுத்தவாட்டி இந்தியா போறச்ச மந்தவெளியில நம்ம ஶ்ரீவத்சன் கிட்ட செஞ்சுக்கலாம்.. இந்த ஊர்ல கொள்ளை..' என நாட்களை கடத்த வேண்டாம். (மந்தவெளியில் நிஜமாகவே ஶ்ரீவத்சன் என டாக்டர் இருந்தால் மன்னிக்கவும்). கணவருக்காக காத்திருக்காமல் தங்கை, மைத்துனி என்று யாரையாவது துணைக்கு அழைத்துக்கொண்டு சென்று வந்து விடுங்கள்.
2) பாஸ்தா, சீஸ், பீட்சா, எண்ணெயில் பொறித்த உணவு வகைகள், preservative மற்றும் கலரிங் ஏஜென்ட் கலந்த பதார்த்தங்கள்/பாணங்களை முடிந்தவரை ஒதுக்கி விடுவது நல்லது.
3) மாலை பஜ்ஜி சுட்ட அரைச்சட்டி எண்ணெயில் ராத்திரி அப்படியே சின்ன வெங்காயம் போட்டு வதக்கி வத்தக்குழம்பு வைப்பது அவசரமாக 'ஊருக்கு' போக எடுக்கும் தட்கால் டிக்கெட் மாதிரி.
3) துணி உலர்த்துவது, சப்பாத்தி இடுவது, வீட்டைச்சுத்தம் செய்வது போன்ற அன்றாட தருணங்களுக்கு நடுவே காயத்ரி ஜபம் ( மற்ற மதத்தினர் தங்கள் மதத்தின் ஜபம்) சொல்வது நல்ல பலனையும் மன நிம்மதியையும் கொடுக்கும்...
4) நேரம் கிடைத்தால் 'நீலவானம்' திரைப்படமும் பாருங்கள்...
இன்று 'உலக புற்றுநோய் தினம்' மற்றும் அம்மாவின் பிறந்த நாள்.

நாலு பேரன்களும் ஒரு தாத்தாவும்..



Image may contain: 4 people, people smiling
80 வயது பூர்த்தியாக இன்னும் 3 மாதங்கள் இருக்கையில் சட்டென இறந்து விட்டேன். அதுவும் தூக்கத்தில். பெங்களூரில் இளைய மகள் Vandhana Gokul வீட்டில். ஆம்புலன்ஸ் ஐஸ்பெட்டிக்குள் சொந்த ஊரான காரைக்குடி போய்க்கொண்டிருக்கிறேன். அங்கே தானே இறக்க ஆசைப்பட்டேன்! நன்றி குழந்தைகளே! ஆம்புலன்ஸை தொடர்ந்து சின்ன மாப்பிள்ளை Gokul Doraibabu மற்றும் மகள் வந்தனா, குழந்தைகளுடன் பின்தொடர, என் தலைமாட்டில் மனைவி Suryakumari மற்றும் மூத்த மகள் Usharani Sridhar டிரைவருக்கு பக்கத்தில் மூத்த மாப்பிள்ளை Sridhar Trafco
யப்பா! 110 கி.மீக்கு குறையாமல் ஆக்சிலேட்டர் மீது ஏறி நின்றுகொண்டே ஆம்புலென்ஸை ஓட்டினான் 22 வயது கன்னட இளைஞன். இனி என்னப்பா அவசரம்! என் பையன் Satish Raj துபாய்ல இருந்து வரனும். நாளைக்கி தானே என்னை எரிக்கப்போறீங்க! செக்போஸ்ட்களில் ராஜமரியாதை. ஃபாஸ்ட்டாக் திறந்துவிட்டு உடனே அனுப்பிவிட்டார்கள். நாமக்கல் அருகே வண்டியை நிறுத்தி டிரைவருக்கு மட்டும் டீ வாங்கி கொடுத்தார் மாப்பிள்ளை. என்னை கேட்கவில்லை. மனைவி நடுவில் வண்டியை விட்டு எங்குமே இறங்க மறுத்துவிட்டார். அவள் விரும்பாத என் கடைசி பயணம். யார் யாருக்கோ போன் போட்டுக்கொண்டிருந்தார்கள். நடுநடுவே அழுகை சத்தம். வண்டி குலுங்கியது. எனக்கு வலி எதுவும் தெரியவில்லை. எப்படி தெரியும்! திருச்சி தாண்டி புதுக்கோட்டை அருகே இருந்தோம். இன்னும் ஒரு மணி நேரத்தில் காரைக்குடி..
காலை 6 மணிக்கு எழுந்துவிடும் நான் வெறும் வயிற்றில் ஒன்னறை லிட்டர் தண்ணீர் குடித்து விட்டு மனைவியுடன் கிளம்பி அழகப்பா யுனிவெர்சிடி வரை ஒரு மணி நேரம் தினமும் நடக்க வேண்டும். பின் ஸ்நானஞ்செய்து 8.30 மணிக்கு இரண்டு வகை சட்னியுடன் இட்லி மற்றும் காபி குடித்து விட்டு மெ.மெ. வீதியில் கடையை திறப்பேன். தலைமுறை குடும்பத்தொழிலான நகை(வைர) வியாபாரத்திற்குப்பிறகு 80 வருடங்களுக்கு மேலாக அடகு வியாபாரம். அதே கடை இப்போதும். மதியம் 1 மணிக்கு கூட்டு பொறியல் என மூன்று வகை காய்களுடன் மதிய சாப்பாடு.. அதுவும் சுர்ரென காரத்துடன் (ஜீரனத்திற்கு நல்லது). மாலை காபி. டானென 8 மணிக்கு இரவு உணவு. பத்து மணிக்கு தூக்கம். இதில் சிறு மாற்றமும் இருப்பதை விரும்ப மாட்டேன். நடுவே நொறுக்குத்தீனி ஒருபோதும் கிடையாது. ஒரு வேளை செய்த அதே பண்டம் மறு வேளை சாப்பிடுவது கிடையாது. ஃப்ரிட்ஜில் வைத்த பண்டங்கள்.. ம்ஹூம். நாக்கு ஒத்து. சனியன்று அரிசி பூண்டு காய்ச்சிய எண்ணெய் குளியல். சிவில் இஞ்சினீயரிங் டிப்ளமோ படித்த நான் எப்பவும் கதர் சட்டை வேட்டி தான்.
இது தான் நான் கடைசி வரை கடைபிடித்த செட்டிநாட்டு வாழ்க்கை முறை. இதுவரை ஆசுபத்திரியே போனது கிடையாது. ஒரே முறை தான் போயிருக்கிறேன். அதுவும் சற்று முன் இறந்த உடலாக.. இறந்துவிட்டேன் என சர்டிபிகேட் வாங்கவாம். என்னை கேட்டிருந்தால் நானே இறந்துவிட்டதாக சொல்லியிருப்பேனே, உயிரோடு இருந்திருந்தால்! இது தான் வாழ்க்கை.
ஜோதிடம், ஜாதகம் கணிப்பது என் பொழுதுபோக்கு. அதன்படி பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு நல்ல நாள் நட்சத்திரம் நேரம் பார்த்து படிப்பு, வேலை என எல்லா முடிவுகளிலும் என் பங்கு இருக்கும். இனி இருக்காது.
‘வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும்.. மரணம் என்பது செலவாகும்’ எனப்பாடிய கண்ணதாசனுக்கு மரணம் ஞானத்தை கொடுத்தது. அதனால் தான் அவன் வாழ்ந்த காலத்திலேயே தனக்கு இரங்கற்பா பாடிக்கொண்டான். என் வீட்டிலிருந்து கூப்பிடுதூரத்தில் வசித்த கண்ணதாசன் கொள்கைகளின் தாக்கம் எனக்கு உண்டு.
19 டிசம்பர் 2018 உடன் எனது ஆயுள் முடிந்துவிடுமென நானே கணித்து ‘இப்ப போனஸ்ல ஓடிக் கிட்டிருக்கு’ என பிள்ளைகளிடம் இத்தனை நாளும் சொல்லிக்கொண்டிருந்தேன். ஒரு வருடம் போனஸ் காலம் முடிந்து, நேற்று மாலை டிவி சீரியல் பார்த்து, இரவு உணவை உண்டபின் பேரன் பேத்திகளுடன் அரட்டை அடித்துவிட்டு படுக்கப்போனவன் தான். காலை 6 மணிக்கு மனைவியும் மகள்களும் ‘நைனா..நைனா’ என கதறி, என்னை தட்டி எழுப்ப முயற்சி செய்த போது வேட்டி ஈரமாகி என் உடலும் சில்லிட்டு போயிருந்தது. பல் டாக்டர் பேரன் கண்ணில் டார்ச் அடித்து, நீல நிறமாகிப்போன என் விரல் நகங்களை பார்த்து சட்டென முடிவு செய்துவிட்டான், சமர்த்து! இருந்தும் அம்மாவை பயமுறுத்தாமல், ஆம்புலன்ஸை அழைக்க அவன் அப்பாவை விரட்ட, நான் எப்போதோ போய்விட்டிருந்தேன். பின் டாக்டர் வந்து நான் தூக்கத்தில் இறந்து சுமார் இரண்டு மணி நேரமானதாக அறிவித்து ‘காஸ் ஆஃப் டெத்’ சர்டிபிகேட்டை கையில் திணிக்க, சுற்றிலும் மரண ஓலம். ஹூம்..
இதோ ஜம்மென கிளம்பிவிட்டேன்.
சொந்த ஊரான காரைக்குடிக்கு என் உடல் போய்ச்சேரும்முன் என் மீது உயிரையே வைத்திருந்த நண்பர்கள் செய்திருந்த ஏற்பாடுகள் பிரமிக்கத்தக்கவை. பக்கத்து வீட்டு Malar Vel (சென்னை வேலம்மாள் கல்விக்குழுமம் இல்லத்து மருமகள்) மற்றும் அவரது சகோதரி Annalakshmi Ponrajan (திமுக முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் அவர்களது மருமகள்), மற்றொரு சகோதரி Umamaheswari Premkumar , அவரது கணவர் காண்டிராக்டர் Durairaja Premkumar, தம்பி Raja Manickam (Karaikudi Leaders Matriculation பள்ளி அதிபர்) இவர்கள் அனைவரும் காரைக்குடி விரைந்து வந்து வாசலில் பந்தல், தோரணம், விளக்கு, ஜஸ் பெட்டி என தயார் நிலையில் வைத்து, மறுநாள் ஈம காரியங்களுக்கான பொருட்கள் மற்றும் மாலைகளுக்கு ஆர்டர் செய்து என் கடைசி பயணத்திற்கான எல்லா ஏற்பாடுகளுகளையும் செய்து வைத்திருந்தார்கள். நன்றி குழத்தைகளே!
22 வயதில் 18 வயதான பெங்களூர் பெண்ணை கரம் பிடித்தவன். காரைக்குடியில் மிகப்பெரிய வீடுகளில் ஒன்றான ‘சிங்கம் வச்ச வீடு’ என்னுடையது. பூர்வீக சொத்து. சிமென்ட்டில் செய்த இரண்டு பெரிய சிங்கங்கள் வைத்த இரும்பு கேட்டில் இருந்து 15 படி மேலே ஏறினால் வாசல் கதவு. பிறகு மோப்பு(முற்றம்), ஹால், கல்யாண கொட்டகை. பின் கட்டில் 20 பிராமண குடித்தனங்கள் கொண்ட அக்ரஹாரத்தை (நாயக்கர் ஸ்டோர்) வாடகைக்கு விட்டிருந்தேன். வீட்டின் நடுவே கல்யாண கொட்டகையில் சைக்கிள் விட்ட என் மூன்று குழந்தைகள் தான் தற்போது பஹ்ரைன் துபாய் பெங்களூரில். லண்டன், பம்பாய், பெங்களூர், சென்னையிலிருந்து பறந்து வந்த பேரன் பேத்திகளை அம்மாக்களும் மனைவியும் கட்டிக்கொண்டு அழுவதை பார்க்கவா சட்டென இறந்தேன்!
‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு’ என பிரபந்தத்தையும் ஆழ்வார் பாசுரங்களையும் உரக்க ஓதி, சமய கிரியைகளை செய்து, ஏன் இதையெல்லாம் வர்ணாசிரம அடிப்படையில் செய்கிறோமென தெலுங்கில் விளக்கினார் ஶ்ரீரங்கத்திலிருந்து வந்து காரியம் பண்ணி வைக்கிற எங்கள் குடும்ப புரோகிதர்.
வைணவ முறைப்படி ஈமக்கிரியைகளுக்கு ஏற்பாடு செய்தது என் தங்கை மகனும் திருச்சி BG நாயுடு ஸ்வீட்ஸ் அதிபருமான Bg Balaji தமிழ்நாட்டில் எங்கிருந்தாலும் மாமா.. மாமா என மாதமொரு என்னை பார்க்க வந்துவிடுவதும், புதிய கிளைகள் திறக்கும்போது தவறாமல் என்னை அழைத்துச்செல்ல கார் அனுப்புவதையும் பாலாஜி தவறாமல் செய்வது வழக்கம். அவரது தங்கை, தம்பிகள் Badhri Nath , Amarnath Baktavatchalam , Ketharath Baktavatchalam , மனைவிகள் மற்றும் குழந்தைகள் எல்லோரும் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்தனர்.
எனது 85 வயது மூத்த சகோதரி, இளைய சகோதரி மற்றும் சகோதரனின் குழந்தைகள் அனைவரும் கதறி அழுது கடைசி மரியாதை செய்துவிட்டுப்போனது கண்டு நெகிழ்ச்சியடைந்தேன்.
துபாயிலிருந்து என் மகனுடன் 4 மணி நேரம் பறந்து வந்த மருமகள் Pramila S Raj பெங்களூரிலிருந்து 9 மணி நேர சாலைப்பயண களைப்பை பொருட்படுத்தாது உறக்கமேதுமின்றி எல்லா உறவினர்களையும் கவனித்து உணவு பரிமாறி எனக்கு அஞ்சல் செலுத்தினார்.
தாசரி (இடுகாடு) , சாங்க்கல வாரு (சலவை) மற்றும் மங்களவாரு (நாவிதர்) மூவர் உதவியுடன் எண்ணெய் சீயக்காய் நன்னீரில் என்னை குளிப்பாட்டி, நெற்றியில் திருநாமம் தரித்து, வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து ஜவ்வாது மணத்துடன் அலங்கரித்ததை பார்த்து பீறிட்டு அழுதார் மனைவி. யாருக்காக இனி எனக்கு இந்த அலங்காரம்! அறுபதாண்டு காலம் ஒரு குறையுமில்லாமல் என்னை பார்த்துக்கொண்டவர் மனைவி! எனக்கு எது பிடிக்குமென்பது என்னை விட என் மனைவிக்கு அதிகம் தெரியும். உறவினர்களும் கடைவீதி சக வியாபார நண்பர்களும் வரிசையாக அஞ்சலி செலுத்தி என் நெஞ்சில் மலர் மாலைகளை சார்த்த சார்த்த எப்போதோ போய்விட்டிருந்த மூச்சு மறுபடியும் முட்டியது.
‘தாத்தா.. தாத்ஸ்’ என என்னை சுற்றி வந்த இரு பேத்திகளும் கண்ணீருடன் வழியனுப்ப, நான் தூக்கி கொஞ்சி மகிழ்ந்த நான்கு பேரன்களும் இப்போது என்னை தூக்கிக்கொண்டு சங்கு வாத்தியம் முழங்க மயானம் நோக்கி நடந்தபோது பரவசமடைந்தேன். மின்தகன மையம் எதிரே கடைசி காரியங்கள் செய்த என் தனயன் மொட்டை வழித்து, நீரில் தோய்ந்து, தோளில் மண்பானைக் கும்பத்தில் கத்தி நுனியினால் துவாரமிட்டு மூன்று முறை சுற்றி வருவதை கடைசியாக பார்த்தேன். எனக்குப்பின் குடும்பத்தை வழிநடத்துபவன் இனி. என் கடமை அனைத்தையும் செவ்வனே யாருக்கும் குறை வைக்காமல் முடித்து அவனிடம் ஒப்படைத்துவிட்டு இதோ கிளம்பி விட்டேன்.
மாப்பிள்ளைகள், பேரன்கள் ஆண் உறவினர்கள் மயானத்தில் விடை கொடுக்க, வஸ்திரத்தால் மூடிய என் பூத உடலை இரும்பு பலகையின் மேல் மர உருளைக்கட்டைகளில் கிடத்தி அப்படியே எரியூட்டு சூளைக்குள் மெல்ல உருட்டி விட அக்கினியுடன் சங்கமித்தேன்.
சற்று நேரம் கழித்து பேரன்கள் யாரிடமோ விவாதிப்பது லேசாக கேட்டது. As per rule they should show us the body burning, to ensure that it is not illegally sold for dissection’ என பேசிக்கொண்டு அடுத்த சில நிமிடங்களில் எரியும் நிலையில் என்னை பார்க்க வலியுறுத்தியதும், மயான சிப்பந்தி ஒருவர் சற்ற்றென ஷட்டரை உயர்த்த, சூளையின் வெளியேயிருந்து நான்கு பேரன்களும் கடைசியாக இன்னொரு முறை புகை மூட்டத்தின் நடுவே இரு(ற)ந்த என்னை பார்த்து ‘Dude! there he is !’ என திருப்தியுடன் நகர, மெதுவாக சிதையத்தொடங்கினேன்.
ஹரி ஓம்..
(நாராயணசாமி)

கென்யா -2

Image may contain: 2 people, including Sridhar Trafco, people smiling, people standing, outdoor and natureகென்யா மசாய் மாரா காடுகளுக்கு நடுவே பழங்குடியினர் குடியிருப்பு பகுதி...
பிரம்மாண்டமான யானைகள் வசிக்கும் அடர்ந்த காடுகள் அங்கங்கே தென்பட்டாலும் பெரும்பாலும் திறந்தவெளி, புல்பூண்டுகள் நிறைந்த நிலம். ஏழெட்டு கிலோ மீட்டர் தூரம் துரத்தி ஓடி மான்களையும், எருதுகளையும் வேட்டையாடும் சிறுத்தைகள் நிறைந்த பகுதி. ஆங்காங்கே மரத்தடியில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் போல உட்கார்ந்தருக்கும் ஏழெட்டு சோம்பேறி சிங்கங்கள். அழகான பின்புறங்கள் கொண்ட ஏராளமான வரிக்குதிரைகள்,
அருவருப்பான முரட்டு தோற்றம் கொண்ட கழுதைப்புலிகள் (hyena), ஆயிரக்கணக்கில் கூட்டமாக ஆற்றை கடந்து செல்லும் காட்டெருமைகள், மான்கள், ஒட்டகச்சிவிங்கிகள், பாறாங்கல் போல தண்ணீரில் மூழ்கியிருக்கும் நீர் யானைகள், பக்கத்திலேயே அசையாமல் கிடக்கும் பெருமுதலைகள்.
இத்தனை விலங்குகளுக்கு நடுவே அந்த பழங்குடியினர் வசிக்கிறார்கள்.
ஆறரை அடிக்கு மேல் உயரம், மெலிந்த ஜிம் பாடி கொண்ட அந்த இளைஞன் பெயர் இவான். ஐம்பது அறுபது கிலோ எடையை சர்வசாதரணமாக தூக்கிவிடுவானாம். கீழே முழங்கால் வரை பழங்குடியினர் அணியும் சிகப்பு வண்ண உடை. வெற்றுடம்பிலும் கழுத்திலும் நிறைய அணிகலன்கள், பாசி மணிகள். கையில் ஈட்டி.
‘கொடிய மிருகங்களுக்கு மத்தியிலேயே வசிக்கிறீங்களே! பயம் கிடையாதா?’
‘சார்! இந்த காடுகளில் தான் பிறந்து, விளையாடி வளர்ந்தோம். கையில கூர்மையான ஈட்டி இருக்கே! எதுக்கு பயப்படனும்?’
‘அப்ப சிங்கம், புலி உங்களை தாக்கினா நீங்களும் சண்டை போடுவீங்களா?’
‘ஹலோ! எங்க வழக்கப்படி பையன்கள் ஒரு தடவையாவது சிங்கத்தை கொன்னிருந்தா தான் கலியாணமே.’
‘கல்யாணமா! அதுக்கு சிங்கத்து கிட்ட சாகறதே மேல்னு நீங்க நினைச்சதுண்டா? அந்த மாதிரி விஷப்பரிட்சை எங்க நாட்ல இல்லாம தான் நாங்கள்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்’
‘கல்யாணம் பண்ணிக்கனும்னு தீவிரமா எங்க இளைஞர்கள் நிறைய சிங்கங்களை அழிச்சிட்டாங்க. அதனால அரசாங்கம் இப்ப மிருகங்களை கொல்ல தடை விதிச்சாச்சு’
சுமார் 100 பழங்குடியினர் குடியிருக்கும் அந்த பகுதிக்குள் நுழைந்தோம். சுற்றிலும் அடர்த்தியான முள் வேலி.. முள் தட்டியாலான கேட்டை திறந்து உள்ளே போனால் நிறைய மண் குடிசைகள். குடிசைகள் கட்டுவது பெண்கள் தானாம். மண்ணையும், மாட்டு சாணத்தையும் குழைத்து மரக்கம்பங்கள் நட்டு கட்டப்படும் வீடுகள் சுலபமாக 70, 80 வருடங்கள் தாங்குமாம். ஒரு சொட்டு மழை நீர் உள்ளே வராதாம். வெளிச்சம் மற்றும் காற்று புக அங்கங்கே சிறிய ஓட்டைகள்.
பக்கத்தில் ஆடுமாடுகள் வசிக்க திறந்த கொட்டகை. இரவில் சிங்கங்கள் உள்ளே நுழைய முடியாத படி சுற்றிலும் முள் வேலி. ஏராளமான கோழிகள் வளர்க்கிறார்கள்.
‘வேலைக்கு போகாமெ எப்பிடி! சாப்பாட்டுக்கு ?’
‘ஹ...ஹ..ஹா. காலைல 5 மணிக்கு எழுந்து ஒரொரு இளைஞனும் 100 மாடுங்களோட சுமார் 15 கி.மீ தூரத்துக்கு மேய்க்க கிளம்பிடுவோம்.
‘காலை நாஷ்டா?’
‘அதோ அந்த மாட்டுத்தோல் குடுவை நிறைய எறுமைப்பால் குடிச்சிட்டு கிளம்புவோம்’
‘ தினமும் அதான் நாஷ்டாவா?’
‘ இல்ல.. பச்சை மாட்டு ரத்தமும் கூட’
‘என்னய்யா இது! பாயசம் குடிக்கற மாதிரி சொல்ற! அந்த மாடு சாவாதா?
‘இல்ல.. கூர்மையான மூங்கில் குச்சியை மாட்டோட கழுத்து பகுதியில் லேசா குத்தி ரத்தத்த தோல் குடுவையில வடிச்சி எடுத்துக்குவோம். மாட்டுக்கு ஒன்னும் ஆகாது. அதான் தினமும் புல் திங்கிதே! பாலும் ரத்தமும் ஒரே நாள்ல சுரந்துக்கும்’
‘சரி.. திரும்ப எப்ப வீடு வருவே. மதியம் கட்டு சாதமா? கூடவே தூக்குச்சட்டியில ரத்தமா?’
‘மதிய சாப்பாடா? ஸ்ட்ரெய்ட்டா இரவு சாப்பாடு தான். ஓடை அல்லது ஆத்துல பல் தேச்சு குளிச்சு மாடுங்கள நல்லா மேயவிட்டு, சாயரச்ச கிளம்புனாக்க இருட்டறதுக்குள்ள வீடு வந்து சேர்ந்துடுவோம்.
‘ராத்திரி என்ன சாப்பாடு? மளிகை, பருப்பு, எண்ணெய் எல்லாம் எப்பிடி?’
‘அதெல்லாம் உங்களுக்கு தான். வாரத்துக்கு ஒருக்கா மாடு அல்லது செம்மறி ஆடுங்கள வெட்டி மாமிசத்தை எல்லா குடும்பங்களோட பகிர்ந்துக்குவோம். பச்சை மாமிசமாகவே சாப்பிடுவோம். சோளம் பயிர் செய்றோம். சோள மாவில் செய்த ‘உகாலி’ (களி) எங்கள் தினசரி உணவு’
‘சமைக்காம சாப்பிட்டா உடம்புக்கு ஒன்னும் பண்ணாதா?’
‘பால், ரத்தம், மாமிசம் மூன்றையும் பச்சையா சாப்பிடுவது ரொம்ப நல்லது. இது வரைக்கும் எங்கள் குடும்பத்தில் யாருக்குமே இதயநோய் வந்தது கிடையாது? நேட்ஜியோ காரங்க அப்பப்ப வந்து படமெடுப்பான். அவன் சொல்லித்தான் எங்களுக்கே தெரியும் இருதயத்துல நோயெல்லாம் வரும்னு.’
அந்த சிறிய குடிசை ஒன்றில் நுழைந்தோம். 5 பேருக்கு மேல் உள்ளே செல்ல முடியாது. நுழைந்ததும் சிறிய அறையில் (தட்டி தடுப்பு தான்) வெறும் கன்றுக்குட்டிகள் தான். கன்றுக்குட்டிகளை மட்டும் இரவில் வெளியே தங்க விடுவதல்லையாம். சிங்கங்கள் லாலிபாப் மாதிரி சாப்பிட்டு விடுமாம்.
அடுத்து ஒரு பெரிய அடுப்பில் பால் பாத்திரம். அதில் கிடக்கும் ஏராளமான ஈக்களை ஃபூ என ஊதி பாலை குடிப்பவர்கள். அடுப்பிற்கு இரண்டு புறமும் ரயில்வே சைட் பெர்த் போல கட்டில் மற்றும் திரை.. மேலே போர்த்திக்க மாட்டுத்தோல். வீடே அவ்வளவு தான். நோ ஃபேன்.. நோ லைட்.. நோ கீசர்..
கட்டிலில் வயதான உருவம் சுருண்டு படுத்து நீண்ட கால்களுடன் தாயக்கட்டை மாதிரி கிடந்தது. அவங்க அப்பாவாம். வயது 111 என்றதும் அதிர்ந்தோம். எதையோ சொல்லி இரண்டு முறை இவான் ஒலியெழுப்ப ‘ம்ம்ம்’ என அவர் முனகல் சத்தம் கேட்டது. மொத்தம் 12 மனைவியாம் அவருக்கு. 48 குழந்தைகளில் அந்த இவானும் ஒருவனாம். இவனுக்கு 21 வயசு. இவங்கம்மாவுக்கு இப்ப 52ஆம். சட்டென 52-21=31 என மனசு கணக்கு போட்டது. ஆஆஆஆ என ஏக காலத்தில் எல்லோரும் அலறினோம். தெரியுமே..நீங்களும் அவங்கப்பா வயசுலர்ந்து 21ஐ கழிச்சி பார்ப்பீங்கன்னு.. இப்ப அப்பா எழுந்து நிக்க முடியாதாம். (எப்பிடிய்யா முடியும்! 🙅🏻‍♂️)
வீட்டுப்பெண்கள் பாசிமணி, இரும்பு, மரக்கட்டை கொண்டு நிறைய கைவினை பொருட்கள் செய்து காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விற்று சம்பாதிக்கிறார்கள். மாடு மேய்த்தாலும் ஆண்களும் பெண்களும் படித்தவர்களாம். தாய்மொழி ‘ஸ்வாஹிலி’யில் பேசினாலும் பிரிட்டிஷ் கென்யாவின் தாக்கத்தினால் அருமையாக ஆங்கிலம் பேசுகிறார்கள். சில இளைஞர்கள் அருகிலிருக்கும் விடுதிகளில் வேலை செய்து ஓரளவு சம்பாதிக்கிறார்கள்.
கென்ய பழங்குடி திருமணங்களில் வரதட்சனை உண்டாம். பையன் வீட்டுக்காரர்கள் தான் வரதட்சனை கொடுக்க வேண்டுமாம். சீர்.. செனத்தி? ம்.. எல்லாம் உண்டு. ரொக்க பணம், கட்டில் மெத்தையெல்லாம் கிடையாது 50,100 மாடுகள் அல்லது கொழுத்த பன்றிகள் தான் வரதட்சனையே. கூட்டமாக பெண் வீட்டிற்கு வந்து பையன் வீட்டார் மரக்கன்றுகளை நட்டால் நம்மூர் தட்டு மாற்றி நிச்சயம் செய்து கொள்வது போலவாம். ‘வாம்மா மின்னல்’ சமாச்சாரமெல்லாம் கிடையாது.
‘சரி தம்பி கிளம்பறோம். இப்பிடி காட்டுக்குள்ளேயே இருந்தா வெளி உலகத்துல நடக்கறது எல்லாம் உங்களுக்கு எப்பிடி தெரியும் இவான்?’
படாரென பாக்கெட்டிலிழுந்து கைப்பேசியை வெளியே எடுத்தான் இவான்.
‘வெளி உலகமா? டிவிட்டர், இன்ஸ்டாக்ராம், ஃபேஸ் புக் எல்லாத்துலயும் நாங்க இருக்கோம்’

கென்யா-1


ஹகூன மட்டாட்டா!
கொடிய விலங்குகள் வசிக்கும் கென்யா காடுகளில் 8 நாட்கள் நாம் தங்கியிருக்க முடியுமா? ‘ஒரு தபா போய்ப்பாருங்க.. அப்பறம் அடுத்த வருஷமும் போவீங்க!’ என நண்பர் ஒருவர் உசுப்பேத்த நாங்கள் 6 குடும்பங்கள் (15 பேர்) கிளம்பினோம்.
நண்பர் Muthukumaran தான் எங்கள் குழுத்தலைவர். உடனே அவர் நைரோபியில் 40 வருடங்களுக்கு மேல் வசிக்கும் திருமதி கீதா சத்யமூர்த்தி அவர்களை (டூர் ஆபரேட்டர்) தொடர்பு கொண்டு எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்.
ஒரு சுபயோக தினம் குறிப்பிட்ட நேரத்தில் நண்பர்கள் தத்தம் வீட்டில் மடிக்கணினியுடன் கான்ஃப்ரன்ஸ் கால் பேசிக்கொண்டே கென்யா-ஏர் விமான டிக்கெட் புக் செய்து ஆன்லைன் விசாவும் அப்ளை செய்தாயிற்று.
பகலில் 16 டிகிரி இரவில் 8 டிகிரி குளிர் என்பதால் தெர்மல் வேர், மஃப்ளர், ஸ்வெட்டர்கள், குளிர் கண்ணாடி, தொப்பி, காலணிகள், கென்யன் ஷில்லிங், இது தவிர வாந்தி, வயற்றுவலி, அலர்ஜி, அஜீரனம் போன்ற உபாதைகளுக்கு மாத்திரைகள் என எல்லாம் பேக் செய்தாயிற்று. முக்கியமாக yellow fever க்காக தடுப்பூசியும் போட்டுக்கொண்டோம். கென்ய கொசுக்கள் ஈக்கள் சைஸாம். முட்ட முட்ட ரத்தத்தை குடிக்குமாம்.
‘பயமா இருக்காதா! புலி நம்ம மேல பாஞ்சு வந்தா என்ன செய்றது’ என மனைவி Usharani Sridhar கேட்க, உடனே யூடியூபில் கென்யா பற்றிய வீடியோவை தேடினோம். நாலைந்து பேர் திறந்தவெளி ஜீப்பில் போகும்போது மூன்று நான்கு சிறுத்தைகள் மேற்கூரையில் தாவிக்குதிக்க,
அதிலொன்று சரட்டென உள்பக்கம் இறங்கி எல்லோரையும் உற்று பார்க்கிறது. வெள்ளைக்காரனுக்கு தெகிரியம் ஜாஸ்தி. சத்தம் எழுப்பாமல் அப்படியே காமெராவில் படமெடுக்க, சற்று நேரத்தில் சிறுத்தைகள் சட்டென ஜீப்பிலிருந்து வெளியே தாவிக்குதித்து ஓடிவிடுகின்றன. பயந்தால் நம் வியர்வை நாற்றம் அவைகளின் மூக்குக்கு சுலபமாக போய்ச்சேர்ந்து அதன் கோபம் அதிகமாகுமாம். ஹும்! நம் வீட்டில் உள்ளுக்குள்ளார பயப்படனும், ஆனா பயத்த காமிக்கக்கூடாதுங்கறது ஒவ்வொரு ஆம்பிளைக்கும் தெரியாதா என்ன!
துபாயிலிருந்து நான்கு மணி நேரத்தில் நைரோபியில் இறங்க, விமானதளத்தில் இரண்டு லேண்ட் க்ரூஸர்கள் தயாராக இருந்தன. பெரியவனும் சின்னவனும் பம்பாயிலிருந்து வந்திறங்கினார்கள். காலை உணவை திருமதி. கீதா 4 Points by Sheraton இல் ஏற்பாடு செய்திருந்தார்கள். கென்ய மாம்பழம் உலக பிரசித்தி பெற்றது. படு ருசி. எத்தனை வகை ஐரோப்பிய பதார்த்தங்கள் இருந்தாலும் காலை உணவுக்கு ஊத்தப்பம், பரோட்டா என இந்திய உணவை பார்த்தால் நம்மவர்கள் புலகாங்கிதமடைகிறார்கள்.
அடுத்து நான்கு மணி நேர சாலைப்பயணம். வழியெங்கும் சின்ன சின்ன ஊர்கள். நம்மூர் கிராமங்களை விட மோசம். பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கிறார்கள். சாலையின் இருபுறமும் சோளம், கோதுமை பயிர்கள். எல்லா கிராமங்களிலும், உபயோகப்படுத்திய பேண்ட், கோட், சட்டைகளை ஏராளமாக ரோட்டோரத்தில் விற்கிறார்கள்.
கென்ய மக்களைப்பற்றி.. ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து மீண்டு இத்தனை வருடங்கள் கழித்தும் கென்யர்கள் இன்னமும் அகதிகள் போலத்தான் வாழ்கிறார்கள். ஆரவாரமில்லாத அமைதியான பேச்சு, இனிமையாக பழகுவது, ரொம்ப submissiveஆக பணிந்து போவது. பழங்குடியினர் இன்னும் அதே வாழ்வாதாரத்தில். நல்ல கல்விச்சாலைகள் இல்லை, பாலங்கள், ஆசுபத்திரிகள், கட்டமைப்பு எதுவுமில்லாமல் இன்னும் பழைய நகரமாகவே உள்ளது தலைநகர் நைரோபி. காரணம், தங்கள் சுயலாபத்திற்காக நாட்டை முன்னேறவிடாமல் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் தான் என டிரைவர் சொன்னவுடன் நம்பியார் வசனம் ஞாபகத்திற்கு வந்தது ( டேய்! இவன் மிருகமா இருக்கற வரைக்கும் தான் நாம மனுஷனா இருக்க முடியும். இவன் மனுஷனாயிட்டா நாம மண்ணாயிடுவோம்!).
இதோ.. மசாய்மாரா வனப்பிரதேசம்... கரடுமுரடான கற்கள் நிறைந்த 1 மணி நேர சாலை பயணத்திற்கு பிறகு.
எதியோப்பியா, தென் சூடான், தன்சானியா, உகாண்டா, சோமாலியா நாடுகள் சூழ்ந்த கென்யாவில் 6 லட்சம் சதுர கி.மீ பரப்பளவுள்ள காடுகளின் ஏதோ ஒரு மூலையில் நாங்கள். காடுகளா! புற்கள் நிறைந்த savannah எனப்படும் வனாந்தரம் தான். அங்கங்கே கொஞ்சம் மரங்கள்.
மலைத்தொடர்களிலிருந்து நீரோடையாக கீழிறங்கும் தண்ணீர் நிலத்தடியில் சென்றடைந்து, அங்கங்கே அடர்ந்த புற்களுடன் பெரும் குளங்களாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் யானைகள் கொட்டமடிக்கின்றன. காட்டு யானைகள் ஒவ்வொன்றும் 15,16 அடி உயரம் இருக்கும். குடும்பத்தில் 15,20 யானைகளை வழிநடத்தி முன் நடந்து செல்வது பெண் யானைகளாம். ஆண் யானைகளுக்கு அதிகாரம் இல்லையாம். பொறுப்பும் கம்மியாம். அயிய்ய! அங்கயுமா!
அவ்வளவு பெரிய அத்துவான காட்டின் நடுவே மாரா சிம்பா ஐந்து நட்சத்திர ஹோட்டல். ஓட்டலைச்சுற்றி மின் வேலிகள், இரவில் மிருகங்கள் நடமாட்டம் விடுதியைச்சுற்றி அதிகம் இருப்பதால். பெட்டியை போட்டுவிட்டு உடனே ஜீப்பில் ஏறி காட்டுப் பகுதிக்கு சென்றோம். சிறுத்தை புலியை பார்க்க போகிறோம் என்று டிரைவர் டிமோத்தி சொல்ல, கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. இரவில் நடமாடும் கொடிய விலங்கு. மற்ற விலங்குகளுடன் சேராமல் தனித்தே இருக்குமாம். பெரும்பாலும் மர கிளைகளின் உச்சியில் வசிப்பவை, வரிக்குதிரையோ காட்டெருமையோ அந்த பக்கம் வந்தால் வாயில் எச்சில் ஊற மரத்திலிருந்து கீழே ஒரே பாய்ச்சல் தான். வண்டியை ஒரு மரத்தின் அருகே நிறுத்த மரத்தடியில் 2 சிறுத்தை புலிகள். என்ன ஆச்சரியம் எங்களை பார்த்தும் முகத்தை திருப்பிக் கொண்டது. திறந்தவெளி ஜீப்பில் சீட்டின் மேல் ஏறி நின்றுகொண்டு மேற்கூரை வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். டிமோத்தி சென்னான்.. பொதுவாக அவை மனிதர்களை துன்புறுத்துவது இல்லையாம். ‘ஹகூன மட்டாட்டா’ என்றான். Lion King படத்தில் அடிக்கடி வரும் வசனம் ‘ஹகூன மட்டாட்டா’. அதாவது No worries என அர்த்தம். அதேசமயம் கொஞ்சம் கிட்ட போய் மிருகத்தை சீண்டினால் ‘லபக்’ தான். அதன் கண்களை நாம் நேருக்கு நேர் பார்ப்பதும் அதற்கு பிடிக்காதாம். இரு.. இரு.. தம்பி டிமோத்தி! நேருக்கு நேரா பாத்தா மத்தவங்களுக்கு கோபம் வரும்ங்கறது எல்லோர் வீட்டுலயும் நடக்கற சமாச்சாரமாச்சேய்யா.. வெள்ளந்தியா இருக்கியேப்பா!
வண்டி நகர நகர நூற்றுக்கணக்கில் வரிக்குதிரைகள், யானைகள், Gazel, இம்பாலா எனப்படும் மான்கள், குரங்குகள், காட்டுப்பன்றிகள், அழகான ஒட்டகச்சிவிங்கிகள் பார்த்து விட்டு விடுதிக்கு திரும்பினோம்.
இரவு 8 மணி. ஹோட்டலின் உணவகப்பகுதி. சுற்றிலும் ஏராளமான ஐரோப்பியர்களும் சீனர்களும் தென்னாப்பிரிக்க வெள்ளையர்களும். செம்பட்டை முடி பெண்கள், தோல் சுறுக்கங்களுடன் வயதான பெருசுகள், தொப்பி கால்சராய் அணிந்த நடுத்தர வயது தொப்பை ஃபெல்லோஸ், தலையில் மெழுகு ஜெல் தடவிய அழகான லெபனீய இளைஞர்கள்.. எல்லோர் கையிலும் ஆப்பிரிக்காவின் புகழ் பெற்ற டஸ்கர் பியர். குடி தண்ணீரை விட பியர் விலை குறைவாம். உயர் ரக கென்ய சாராய வகைகள் கொண்ட போத்தல் கார்க்குகள் ப்ளக்கென திறந்து கடகடவென கோப்பையில் கவிழ்க்கும் சத்தம், சுறுசுறுப்பாக இயங்கும் பதவிசான ஆப்பிரிக்க இளம் பெண்கள். Bob Marleyயின் Jamaican reggae பாடல் (no woman no cry) மனதிற்கு இதமாக தவழ்ந்து மயிலிறகு போல நம் காதுகளை வருட, சிவப்பு வொய்ன், ஃப்ளர்ட் வோட்கா, கேப்டன் மார்கன் ரம், டேகிலா (Tequila) எனப்படும் உள்ளூர் பட்டை சாராயம் என வயது வித்தியாசமில்லாமல் ஃபுல் ‘ஸ்பிரிட்’டுடன் எல்லோரும் ஆனந்தசாகரத்தில் மூழ்கியிருக்க, அவர்களுக்கு நடுவே நாங்கள் இரண்டு மேசைகளில் ‘காலைல பரோட்டா குருமா, பொஹா(அவல்) உப்புமா நல்லா இருந்துச்சில்ல!’ என சத்தமாக பேசிக்கொண்டிருந்தோம். திடீரென பழங்குடியினர் 10,15 பேர் ஈட்டிகளுடன் ஏ..ஊ.. ஆ என பாடியபடியே ஒவ்வொரு மேசைக்கும் வந்து பாடி மகிழ்வித்தார்கள். How are you என நாம் கேட்டவுடன் வந்த பதில் ‘ஹகூன மட்டாட்டா’. பொதுவாக கென்யர்கள் எதற்கும் அதிகமாக அலட்டிக்கொள்வதில்லை. கவலையே பட மாட்டார்களாம். நளைப்பொழுதை நினைத்து வருந்துவதை விட இன்றைய பொழுதை மகிழ்ச்சியாக கழிப்பவர்கள். அதனால் நொடிக்கொரு தடவை ‘ஹகூன மட்டாட்டா’ சொல்கிறார்கள்.
காலை 6 மணிக்கே பல்லை மட்டும் தேய்த்து வரக்காப்பி குடித்துவிட்டு கிளம்பினோம். பேசிக்கொண்டே வண்டி ஓட்டினாலும் டிரைவர் டிமோத்தி கண்களை காட்டுப்பகுதியில் மேயவிட்டு விலங்குகளை தேடினான். ஓரிடத்தில் சுமார் 20,30 வண்டிகள் நின்றிருக்க அருகே சென்றோம். இரண்டு மான்கள் தூரத்தில் புல் மேய்ந்துகொண்டிருக்க சிறுத்தையொன்று பாயத்தயாராக நின்றுகொண்டிருந்தது. சீமைக்காரர்கள் கேமராவை செட் செய்து தயாராக இருக்க, ஶ்ரீகாந்த் பிரமிளாவை பலாத்காரம் செய்வதை சிம்பாலிக்காக திரையில் காட்டப்படும் புலி மானை துறத்தும் காட்சி நினைவுக்கு வந்தது. கிட்டத்தட்ட 45 நிமிடம் காத்திருந்தோம். ம்ஹூம். நாலைந்து அடி முன்னே வைத்து விரட்டத்தயாராக சிறுத்தை இருக்க, எல்லோருக்கும் படபடப்பு. வீடியோ காமிரா தயாராக வைத்திருந்தோம். அடுத்த நிமிடம் சிறுத்தை மேலும் முன்னேற, ஆச்சு! இதோ வேட்டையாடப்போகிறது என மக்கள் ஆவலுடனிருக்க, மான்கள் திடீரென மின்னல் வேகத்தில் ஓட்டமெடுத்தன. என்னவொரு வேகம்! கூட்டம் ஆர்ப்பரித்தது. டிரைவர் ஹகூன மட்டாட்டா சொல்ல, கூட வந்திருந்த குஜராத்தி நண்பர்களுடன் சேர்ந்து ‘ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா!’ என கத்திக்கொண்டே விடுதிக்கு திரும்பினோம். Animal kill பார்க்க எல்லோருக்கும் வாய்ப்பது அரிது.
மதிய உணவிற்கு பிறகு மறுபடியும் game drive ஆரம்பம். பசியெடுத்தால் தான் சிங்கமோ சிறுத்தையோ வேட்டையாடுமாம். மற்ற நேரங்களில் மான்கள் சர்வ சாதாரணமாக சிறுத்தைக்கு மிக சமீபத்தில் புல் மேய்ந்துகொண்டிருக்குமாம்.
சட்டென வண்டியை நிறுத்தி அந்தப்பக்கம் கை காட்டினான். கெட்டிமேளம், முகூர்த்தம் முடிந்து நாதஸ்வரம் தவில் பார்ட்டி வட்டமாக உட்கார்ந்திருப்பதைப்போல நாலைந்து சோம்பேறி சிங்கங்கள் தரையில் உட்கார்ந்து இளைப்பாறிக்கொண்டிருந்தன. ‘ரெண்டு நாளா வயிறு கொஞ்சம் உப்புசமா இருக்கு சிங்க முத்து!. முந்தாநாள் டின்னர்க்கு கொஞ்சம் ஜாஸ்தியா எருமை சாப்ட்டுட்டேன்’ என அவை பேசிக்கொண்டிருக்கலாம். குறைந்தது 750 கிலோ எடையுள்ள சிங்கம் மிகவும் சக்திவாய்ந்தது. 4 மீட்டர் உயரத்தையும் 8 மீட்டர் அகல கால்வாயையும் எளிதில் தாவி கடக்கக்கூடியதாம். தூரத்தில் எந்த மிருகத்தையும் சுலபமாக பார்க்கக்கூடிய கூரிய வட்டமான கண்கள். மற்ற விலங்குகள் கூட்டமாக இருக்கும்போது தான் சிங்கம் பாய்ந்து தாக்குமாம். சுமார் 60 கிலோ மீட்டர் வேகத்துக்கு விரட்டி ஓடக்கூடியது. போஜனத்திற்கு பொதுவாக மாடு, வரிக்குதிரை போன்ற சதைப்பற்றுள்ள பெரிய விலங்குகளை தான் குறிவைக்குமாம். காரணம் மாமிசம் வெகு நேரம் வயிற்றில் தங்க வேண்டுமே. அதுவும் ஓரிரு நாட்கள் வரை. எந்த மிருகமானாலும் முதலில் அதன் கழுத்து மற்றும் குரல்வளையை தன் கூரிய பற்களால் கவ்வி ஒருசில நிமிடங்களில் மூச்சு திணறி இறக்க வைத்து, பின் சாவகாசமாக உண்ணுமாம். பத்து நிமிடங்கள் வண்டியிலிருந்தே சிங்கங்களை வேடிக்கை பார்த்துவிட்டு பசி வருவதற்குள்(அதற்கு) கிளம்பினோம். (சிங்கத்தின் ஓவியம் பார்க்க!)
வழியில் எங்கு பார்த்தாலும் Wilder beast எனப்படும் ஆப்பிரிக்க எருதுகள். லட்சக்கணக்கில் அவை இடம் பெயர்ந்து அண்டை நாடுகளுக்கு செல்லும் animal migration பார்ப்பது தான் பயணத்தின் விசேஷமே. ‘ந்தா வரேம்ப்பா..பக்கத்து ஊர்ல கொளுந்தியா கல்யாணம். போய்ட்டு வாரேன்’ என அவைகள் சாதாரணமாக கிளம்பி போவதில்லையாம். பக்கத்து நாட்டில் இன்ன காட்டில் நல்ல ருசியான பசுமையான புல் இன்ன மாதத்திலிருந்து விளையும் என்பது அவைகளுக்கு தெரியும். ஆனால் மாதக்கணக்கில் இந்த நடை பயணம் உண்டு என்பதால் கிளம்புவதற்கு சில மாதங்கள் முன்பே நல்ல போஷாக்கான உணவுகளை உண்டு தங்கள் உடலை பலப்படுத்தி தயாராகின்றன. ஒருநாள் கூட்டமாக... அதாவது ஆயிரக்கணக்கில் அல்ல... லட்சக்கணக்கில் கூட்டமாக கிளம்பிச்செல்கின்றன. நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அதை பார்க்க முடியும். குறிப்பாக ஆறுகளை அவை கடப்பதை பார்க்கத்தான் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆற்றை கடக்கும்போது சில கன்றுகள் ஆற்றிலிருக்கும் முதலைகளுக்கு பானிப்பூரியாகின்றன.
மாரா ஆற்றின் கரையில் கொஞ்சம் நிறுத்தி பார்த்தோம். நிறைய முதலைகளும் நீர் யானைகளும் உரிமைக்குரல் எம்ஜியார்-லதா போல களிப்புடன் தண்ணீரில் கையை காலை ஆட்டி விளையாடிக்கொண்டிருந்தன. ஆனால் இந்த மிருகங்கள் ஈஷிக்கொண்டில்லாமல் தள்ளியே இருந்தன. 4 டன் எடையுள்ள நீர்யானை தரையில் வசிக்கும் மூன்றாவது பெரிய விலங்காகும். தண்ணீரில் மூழ்கி சுமார் மூன்று நான்கு நிமிடங்கள் மூச்சுப் பிடித்து வெளியே வந்து சாவகாசமாக சுவாசிக்கக் கூடியவை. பகல் முழுக்க சாப்பிடுவது, புணர்வது, குட்டி இடுவது எல்லாம் தண்ணீரில் தானாம். மாலையிலருந்து இரவு முழுவதும் வெளியே தான். (ஓ... ஆனா மனிதர்கள் இரவில் தண்ணீரில் இருப்பார்கள்!). சுமார் 60 கிலோ எடையுள்ள புல் பூண்டுகளை ஒரே இரவில் சாப்பிடுமாம். Ruminants எனப்படும் அசை போட்டு உண்ணக்கூடிய விலங்குகள் அவை. பலம் வாய்ந்த அதன் பற்கள் கூர்மை. பக்கத்தில் போவது ஆபத்து. லபக்கென நம் கையை கரும்பு போல கடித்து துப்பி விடுமாம்.
சுமார் 4 மணிநேர பிரயாணத்திற்கு பேர் நைவாஷா என்ற ஊருக்கு வந்து சேர்ந்தோம். நைவாஷா ஏரி பிரபலமானது. நாங்கள் 15 பேரும் சுமார் ஒரு மணிநேரம் படகு சவாரி பயணம் செய்தோம். சில நீர்யானைகள் மற்ற பெண் யானைகளின் மேல் தண்ணீரை பீச்சி அடித்து விளையாடிக்கொண்டிக்க, படகோட்டி அவைகளை நோக்கி துடுப்பை போட்டான். ‘ஐயா! அதுங்க கடலை போட்டுட்டிருக்கு. ஏற்கனவே அது நம்ம கையை கடிச்சி துப்பிடும்னு சொல்றாங்க! ரூட்ட மாத்து!’ என வேறு பக்கம் போய் விட்டோம். ஓட்டலுக்கு போய் இரவு உணவை முடித்து விட்டு குளிருக்கு இதமான Bon fire இல் ஒரு மணி நேர அரட்டைக்கு பிறகு ரூமுக்கு திரும்பினோம்.
மறுநாள் காலை மறுபடியும் மூன்றரை மணி நேர பிரயாணத்திற்குப்பிறகு அம்போசிலி எனும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். கென்யாவின் பிரபல செரினா லாட்ஜ் எனும் விடுதி. பால்கனியுடண் கூடிய தனித்தனி காட்டேஜ்கள். சுற்றிலும் காடுகள். Night Safari க்கு முன்பதிவு செய்யவேண்டுமாம். சரியாக இரவு 8 மணியளவில் 6 அடிக்கு மேல் உயரமுள்ள இளைஞன் காக்கி யூனிபார்மில் தொப்பி மற்றும் ஸ்டென்-கன்னுடன் வந்தான். துப்பாக்கி எல்லாம் எதுக்குங்க என கேட்டேன். ஹகூன மட்டாட்டா! எல்லாம் ஒரு தற்காப்பு தானே! நைட் சபாரி கொஞ்சம் ஆபத்து, காரணம் கார்ல கூட்டிகிட்டு மெயின் ரோட்டிலிருந்து பிரிஞ்சு அடர்ந்த காட்டுக்குள் போவோம். இரவில் நிறைய மிருகங்கள் வேட்டையாட ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் நேரம். பசியுடன் இருப்பதால் கொஞ்சம் ஆக்ரோஷமாகவே இருக்குமாம். Nocturnal animals என்று சொல்லப்படும் இரவில் நடமாடும் விலங்குகளை நிறைய காட்டிக் கொண்டே வந்தான். பெரிய ஆந்தை, வில்லச்சிரிப்பு சிரிக்கும் ஹைனாக்கள், காட்டெருமைகள், யானைகள். ஜன்னல் வழியாக கொஞ்சம் எட்டி கையை நீட்டினால் சிங்கத்தை தொடும் அளவுக்கு பக்கத்தில் போய் வண்டியை நிறுத்தி டார்ச் லைட்டை அதன் முகத்தில் அடித்தான். ‘அட போய்யா! சும்மா இருப்பியா!’ என்கிற பாணியில் சிங்கம் முகத்தை திருப்பி கொண்டது. டார்ச் வெளிச்சம் அதற்கு பிடிக்காதாம். பயமாம். அதே சமயம் ஓரிரண்டு தடவைக்கு மேல் டார்ச் அடித்தால் மறுநாள் நமக்கு பால் நிச்சயம்.
இரவு உணவை முடித்துவிட்டு காட்டேஜுக்கு திரும்பும் முன் காரிடாரில் உட்கார்ந்துகொண்டு ‘கரோக்கி’யில் கிஷோர் குமார் பாட்டு பாடிக்கொண்டிருந்தோம். மணி இரவு 11.30. செக்யூரிட்டி ஓடி வந்து ‘சிங்கம் பாக்கனுமா?’ என கேட்க அடிச்சு பிடுச்சு வெளியே ஓடி வந்தோம். விடுதியின் பின்புறம் காஃபி ஷாப் இருக்கைகளில் நாங்கள் அமர, சற்று தூரத்தில் ( 20 மீட்டர் தூரமே) மின் வேலிக்கு அந்தப்பக்கம் 4 பெண் சிங்கங்கள் ‘மகளிர் மட்டும்’ பானுப்ரியா, ஜோதிகா, ஊர்வசி, சரண்யா போல சேர்ந்து மெல்ல நடந்து போனதை டக்டக்கென க்ளிக்கி, வீடியோ எடுத்தோம். அமோகமாக டீ, காபி விற்பனை வேறு. மறக்க முடியாத அனுபவம்.
நாள் முழுக்க safari செய்த களைப்பில் எல்லோருக்கும் சட்டென தூக்கம். பால்கனி கதவு பூட்டை பலமுறை ஆட்டிப்பார்த்து தூங்கப்போனோம். இரவு முழுவதும் கழுதைப்புலி, காட்டு யானை, சிங்கங்களின் உருமல் சத்தம். மின் வேலி இருப்பதால் பயமில்லை என அந்த செக்யூரிட்டி சொன்னானே! ஆனா நம்மூர் மாதிரி இரவில் கரண்ட் போச்சுன்னா அவ்ளதான். 4 மீட்டர் உயரத்தை தாண்டக்கூடிய சிங்கத்திற்கு மிட்நைட்டில் பாவ்பாஜி கிடைத்த மாதிரி. பயந்துகொண்டே தூங்கினேன். கனவில் புலி ஒன்று என் காலை கவ்வி இழுக்க, நான் கத்த முயற்சி செய்தும், ம்.ம்..என தொண்டைக்கு மேல் சத்தம் வராமல்... ‘ஏமைந்தி?’ என மனைவி உஷா தட்டியெழுப்ப, வெடுக்கென பயந்து எழுந்து உட்கார்ந்தேன். கால் பக்கம் பெட்ஷீட்டை இழுத்தது நம்ம வீட்டுப்புலி தான்.
மறுநாள் மதிய உணவை முடித்துவிட்டு பெட்டி படுக்கைகளுடன் கிளம்பி நைரோபி நோக்கி பயணம். செல்லும் வழியில் பழங்குடியினரிடமிருந்து கைவினைப்பொருட்கள், கென்யா சென்றதன் நினைவாக souvenirகள் வாங்கிக்கொண்டு மாலை நைரோபிக்குள் நுழைந்தோம். உலகிலேயே அதிக டிராபிக் ஜாம் ஆகும் நாடுகளில் ஒன்று நைரோபியாம். மயிலாப்பூர்- நுங்கம்பாக்கம் தூரத்தை அங்கு கடக்க இரண்டரை மணி நேரம் ஆனது. 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நிறைய பொருட்களை டிராபிக் சிக்னலில் விற்கிறார்கள். தொப்பி, கைப்பைகள், பாத்திரங்கள், மொபைல் கவர், பெல்ட், ஜீன்ஸ் பேண்ட், பக்கெட், மளிகை, பழங்கள், புத்தகங்கள் என சகலமும் டிராபிக்கின் நடுவே விற்கிறார்கள். விட்டா கட்டில் மெத்தை பீரோ கூட விப்பான் போல என நாங்கள் விளையாட்டாக பேசிக்கொண்டிருக்க, நிசமாகவே பெரிய மர பீரோ தூக்கிக்கொண்டு வந்தான் ஒருவன். பேரம் பேசி அப்படியே வண்டிக்கு மேலே போட்டு விடுவானாம்.
மறுநாள் காலை David Sheldrik Baby elephant orphanage க்கு சென்றோம். காட்டில் வேட்டையாடப்பட்டு இறந்த யானைகளின் அனாதை குட்டிகளுக்கு ஆதரவளிக்குமிடம் அது. 2 மாதம் முதல் 1 வருட வயது குட்டி யானைகளை அங்கு வளர்த்து அன்பு செலுத்துகிறார்கள். சிலவைக்கு குளிர் தாங்க முடியாதென்பதால் திக்கான போர்வையால் போர்த்தி கூட்டி வருகிறார்கள். அந்தந்த யானைக்குட்டிகளின் பெயரை சொன்னதும் அவை முன்னே வர, மக்கள் ஆரவாரம் செய்து வரவேற்க, அது பெரிய்ய பாட்டிலில் பால் குடிக்கிறது. சின்ன குழந்தைகள் போல துறுதுறு. நம்மை பார்த்து துதிக்கை ஆட்டி, பக்கத்தில் செம்மண்ணில் புரண்டு மற்ற குட்டிகளின் மேல் குதிக்கிறது. சிலர் கண்களை துடைத்துக்கொண்டே படமெடுத்தார்கள். நாமும் தத்து எடுத்துக்கொண்டு பணம் கட்டிவிட்டால் நம் பெயரில் அதை வளர்க்கிறார்களாம். ஓரளவு பெரிய யானையாக வளர்ந்த பின் மறுபடியும் காட்டில் விட்டுவிடுகிறார்கள். அவ்வப்போது காட்டிற்கு போய் சத்தமாக அதன் பெயர் சொல்லி அழைத்தால் அழகாக வந்து பார்க்குமாம்.
பாலாஜி, சுவாமி நாராயன் மந்திர் கூட்டிப்போனார்கள். பிரம்மாண்டமான கோவில்கள். ஆசியானா உணவகத்தில் அருமையான குஜராத்தி தாலி. தால் கிச்சடி+கடி சூப்பர். அங்கு வசிக்கும் இந்தியர்களில் பெரும்பாலோர் குஜராத்திகள்.
மசாய் மாரா பயணத்திற்கு கூடுதலாக ஒரு வண்டி, முதல் நாள் காலை உணவு, கடைசி நாள் இரவு உணவு என நிறைய இலவசங்கள் மற்றும் விமானம் பிடிக்க கிளம்பும் முன் எல்லோருக்கும் பரிசு பொருட்கள் அளித்த கீதா சத்தியமூர்த்தி தம்பதிகளின் விருந்தோம்பல் மறக்க முடியாது.
ஹகூன மட்டாட்டா (no worries!)