Monday, March 16, 2020

வெனிஸ்...

Image may contain: outdoor
சுவிட்சர்லாந்திலிருந்து ரயில் மார்க்கமாக இத்தாலியின் வடகிழக்கு பகுதியில் வெனிஸ் நகரத்திற்கு பயணம் செய்தது ஒரு சுகானுபவம். ஜூரிச்சிலிருத்து அதிவிரைவு ரயிலில், மணிக்கு 250 கி.மீ என திரையில் காட்ட, இருபுறமும் பச்சை பசேலென தாவரங்கள், மலைகள், ஓடைகள் என ஐரோப்பிய அழகு கண்ணை பறிக்க, மிலான் வழியாக இரவு வெனிஸ் கடற்கரை ரயிலடிக்கு வந்து சேர்ந்தோம்.

‘வாட்டர் டாக்ஸி’ பதாகை காண்பித்த திசையில் ஓடிப்போய் காத்திருந்த படகுகளில் ஏறிக் கொண்டோம். ‘வழில நிக்காம நல்லா உள்ளே போய் உக்காருங்க தம்பி!’ என படகுக்காரன் அன்போடு கேட்டும் ‘அட போப்பா!அரைமணி நேரம் நின்னுகினே கொஞ்சம் இயற்கையை ரசிக்கலாமே’ என்று மனதுக்குள் நினைத்த அடுத்த நிமிடம் சடாரென படகு உறுமி, ஆக்ரோஷமான அலைகளை கிழித்துக் கொண்டு ஜிவ்வென பறக்க, நாங்கள் நிலைகுலைந்து வத்திக்குச்சி போல சிதறி தரையில் சரிந்தோம். விஷம புன்னகையுடன் படகோட்டி இளைஞன் சக்கரத்தை திருப்பி மேலும் விரைவாக படகை செலுத்த அடுத்த சில நிமிடங்களில் தூரத்தில் வண்ண விளக்குகளுடன் வெனிஸ் நகரம் தெரிந்தது. ராட்சத கற்களால் கட்டப்பட்ட படகுத்துறையில் அதி ஜாக்கிரதையாக காலை வெளியே தூக்கி வைத்து படகிலிருந்து இறங்கினோம். இடையே கீழே 20 அடி ஆழத்துக்கு கொந்தளிக்கும் ஜலம். என்ன ஊருய்யா இது வெனிஸ்! பீதியை கிளப்புது!
வெனிஸில் ரோடுகளே கிடையாது. நீர்வழிப்பாதைகள் தான். கால்வாய்களும் அவைகளை இணைக்கும் சிறு பாலங்களும் தான். நூற்றுக்கும் மேற்பட்ட தீவுகள். எங்கு பார்த்தாலும் அருங்காட்சியகங்களும் தேவாலயங்களும் தான். ஜனத்தொகை சுமார் இரண்டரை லட்சம் தான். 9ஆம் நூற்றாண்டில் புதிய கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்டு அக்காலத்திலேயே வர்த்தகம்,போக்குவரத்து அதிகமாம். சுற்றுலா தான் பிரதான வருவாயாம்.
தண்ணீருக்கு நடுவே பாறைகளின் மேல் அழகாக கட்டப்பட்ட வரிசையான ஓட்டு வீடுகள். வீட்டை அடுத்து கராஜ் போல படகு நிறுத்தம். வாசல் படிக்கட்டின் கீழ் தண்ணீர் தான். ‘இந்த வீட்ல எனக்கு என்ன மரியாதை இருக்கு! என மனைவியுடன் சண்டை போட்டு, சட்டையை மாட்டிக்கொண்டு கோபத்துடன் விருட்டென வாசல் கதவைத் திறந்து வெளியே வந்தால் தொபுக்கடீரென தண்ணீரில் தான் விழுந்து தொலைக்க வேண்டும்.
ஹிந்தி பேசும் பங்களாதேஷி இளைஞர்கள் ரோட்டில் கூவிக்கூவி விற்கிறார்கள். நண்பர் ஜெயராம் ரகுநாதன் சொல்லி அனுப்பிய விலாசத்தை விஜாரித்து புராதன விடுதி ஒன்றின் முன் நின்றோம். பிரம்மாண்டமான கதவுகள், அழைப்பு மணியை அழுத்த, கதவு திறந்து கொண்டது. மூன்று அடுக்குகள் கொண்ட ஆதிகால கட்டிடம், படியில் ஏறி மாளாது. லிப்டில் மேல் தளம் வந்தால் பிரமிப்பு. நவீன உள் கட்டமைப்பு, பற்பல வண்ணங்களில் சுன்னம் பூசப்பட்ட சுவர்கள்,அதில் இத்தாலிய ஓவியங்கள், வயதான மூதாட்டி, பாஸ்போர்ட் செக்கிங், மாறும் வெப்பநிலைகேற்ற அறைகள், புசுபுசு மெத்தை போன்ற வழக்கமான ஐரோப்பிய சமாச்சாரங்கள் இப்பதிவுக்கு தேவையில்லை. நண்பர் ஜெயார் சொன்ன மாதிரி நேராக மொட்டை மாடிக்குப் போய் அங்கிருந்து தூரத்தில் தெரிந்த லிடோ தீவு மற்றும் கீழே மிதக்கும் நகரமான வெனிசை ரசித்தோம்.
மறுநாள் காலை கண்டோலா படகுச்சவாரி. The Great Gambler படத்தில் அமிதாப்பச்சன்-ஜீனத் அமான் காதலுடன் பாடும் Do Lafzon Ke hai Dil பாடலை நினைவூட்டும்படியாக படகுச்சவாரி. தினமும் தண்டால் எடுக்கும் திடகார்த்த தேகத்துடன் இத்தாலிய படகோட்டி எங்களுக்கு பின்னால் நீண்ட கழியால் தண்ணீரை குத்தி மெல்ல படகை செலுத்தினான். கூட காசு கொடுத்தால் ‘லோ..லோ..லௌ...’ என வித்தியாசமான குரலில் பாட்டும் பாடுவானாம். ஒரே நேரத்தில் ஏழெட்டு படகுகள் சேர்ந்து போவதால் பக்கத்து படகின் ‘லோ..லோ.. லௌ’ பாட்டை இங்கிருந்தே பார்த்து 60 யூரோக்கள் மிச்சம் பிடித்தோம். (டேய்! நாங்க திருச்சிடா!) ஒரொரு குட்டி தீவுக்குள் நுழைந்து கட்டிடங்களையும் இயற்கை அழகையும் ரசித்தோம். குறுகலான தெருக்கள் போல நீர்வழிப்பாதைகள் எல்லாம் சுமார் 5 மீட்டர் ஆழமாம். கடல் கொந்தளிப்பு எப்போதும் இருப்பதால் நீர் வழிப்பாதைகளும் படகுகளை அலைக்கழிப்பது தெரிந்தது.
Vaporetto எனும் படகில் 30 நிமிட தூரத்தில் மற்றொரு தீவு சென்று செயின்ட் மார்க்ஸ் பாஸிலிகா எனப்படும் பிரம்மாண்டமான புனித தேவாலயம் சென்றோம். கிட்டத்தட்ட திருச்சி செயின்ட் ஜோசப்ஸ் சர்ச் போலத்தான் இருந்தது. San Marco square எனப்படும் இடத்தின் கட்டிடக்கலை அழகு, முழு வெனிஸ் நகரையும் பார்க்க Bell Towerஇன் மேல்தளம், Cafe-hopping செய்ய ஏராளமான காபி/வொய்ன் கடைகள்..புகழ் பெற்ற grand canal மற்றும் ரியால்டோ bridge மேலிருந்து செல்ஃபி போட்டோ... இவ்ளோ தான் வெனிஸ்..
மதியம் குறுகலான வளைந்து செல்லும் கடைவீதிகளில் நடந்தோம். வழக்கம்போல தொப்பி, கண்ணாடி, குடை, ஸ்வெட்டர், டிஷர்ட் என வாங்குவதற்கு ஒன்றும் விசேஷமாக இல்லை. எங்கு பார்த்தாலும் அழுக்கு ஹிப்பி இளைஞர்கள். கூடவே ஒட்டிக்கொண்டிருக்கும் அழுக்கான (ஆனால் அழகான) இளைஞிகள் சிகரெட்டை அழகாக அதரங்களில் கவ்வி ஊதித்தள்ளினர். ஏராளமான சீமைச்சாராய விடுதிகள். முட்டி மோதும் நெரிசல்.. ஜனங்கள் மதுவை அங்கங்கே அருந்த, ஹெனிகன், நாஸ்ட்ரோ அஸுரோ பில்ஸ்னர் போன்ற உலகப்பிரசித்தி பெற்ற இத்தாலிய பீர் வகைகள்..
மாலை St Mark’s Square பகுதியின் கார்னிவலுக்கு சென்றோம். மிகப்பெரிய மைதானம். மைதானத்தின் நடுவே மேடையில் பாண்டு இசை. நாற்புறமும் கட்டிடங்கள், கடைகள், உணவகங்கள். பப்களில் வாடிக்கையாளர்களை கவனித்து பீரை மக்கில் (mug) நிரப்பிக்கொடுக்கும் இளம் முண்டா பனியன் பெண்கள். வண்ண மயமான ஒளி வெள்ளம். சிகப்பு வொய்ன் கோப்பையுடன் முக்கா பேண்ட்டில் ஆண்கள், மற்றும் கிழிசல் நூல் தொங்கும் காலே அரைக்கால் பேண்ட்டில் ஸ்திரீகள். கோனியம்மன் திருவிழா போல கூட்டம் அம்மியது. மேடைப்பாடலுக்கு அங்கங்கே ஜோடிகள் பின்புறங்களை உருட்டி அசைத்து நடனம். அதிலும் கனிசமான முண்டா பனியன் பெண்டிர். இது வெனிசா அல்லது திருப்பூரா!
தலையை ரசித்து ஆட்ட வைக்கும் 50-70 களில் கோலோச்சிய பாப் பாடல்கள். Fugees இன் Killing me Softly பாடலை யுவதியொருத்தி மனமுருக ‘இசையால் வசமாகும் இதயமிது’ டிஎம்மெஸ் போல பாடி அசத்தினாள் கள்ளி. Carlos Santana வின் கிடார் இசையில் Maria.. Maria பாடலுக்கு ஆப்பிரிக்க கஞ்சா இளைஞர்கள் போல் இடுப்பொடியும் ஆட்டத்தை நாமும் ஆடினால் சுளுக்கு உத்தரவாதம் . இந்தப்பக்கம் நவீன Beyoncé Knowels பாடலுக்கு தாரை தப்பட்டை சவ ஊர்வல ஆட்டம் போல கும்பல் ஒன்று ஆடிக்கொண்டிருந்தது. சர்வம் சாராய மயம்! கூட்டத்தை கடந்து வெளியே வந்தால் அக்கார்டியன் வாத்தியத்துடன் ஸ்பானிஷ் இளைஞன் ஒருவன் Doris Day யின் que Sara que Sara பாடலை வாசிக்க மெய்மறந்து ரசித்தோம். அதே மெட்டில் ஆரவல்லி படத்திற்காக ராஜா-ஜிக்கியின் ‘சின்ன பெண்ணான போதிலே’ பாடலுக்கு ஜி.ராமநாதன் அசத்தலுடன் இசையமைத்திருப்பது அந்நேரம் (இரவு 2 மணி) நினைவுக்கு வந்தது .
உணவகங்களில் விதவிதமான வெரைட்டிகளில் பீட்சா கிடைத்தன. நமக்கு பிடித்த ச்சீஸ் ஜவ்வுடன் கூடிய பீட்சா மார்கரீட்டா எனும் தக்காளி பீட்சாவை கடித்து குதறி உண்டு வயிறை நிரப்பிக்கொண்டு விடுதி திரும்பினோம்.
மறுநாள் காலை ரயில் பிடித்து பிசா (Pisa) சாய் கோபுரம் பார்த்துவிட்டு ரோம் நகரத்திற்கு பயணம்.
பி.கு: மூன்று மாதங்கள் முன்பு ஆக்ரோஷ அலைகளால் கடல் நீர் புகுந்து வெனிஸ் நகரமே ஆறடி வெள்ளத்தில் மூழ்கி, பிறகு குறைந்த அலைகளால் நீர்வழிப்பாதைகள் வற்றி, உள்ளூர் மக்கள் பலர் வீடுகளை காலி செய்து, அரசாங்கம் மில்லியன் கணக்கில் செலவு செய்து புணரமைப்பு வேலைகள்... போன்ற செய்திகளை கேள்விப்படும்போது... ச்சே! அழகான வெனிஸ் நகரம் திரும்ப கிடைக்குமா!

No comments:

Post a Comment