Friday, August 23, 2013

பங்குச்சந்தை ..CT.சுப்ரமணியனுடன்

 
திருச்சி TVS டோல்கேட்டை தாண்டி புதுக்கோட்டை நோக்கி பஸ் போய்க்கொண்டிருந்தது. நானும் நண்பர்கள் ராஜஷேகர், நவீன், குமார்  எல்லோரும் பாதி தூங்கியவாறு போய்க்கொண்டிருந்தோம். எனக்கு பக்கத்தில்   C.T.சுப்ரமணியன். செட்டியார் சமூகத்தை சேர்ந்தவன்.அவனது  அண்ணனுக்கு வீராச்சிலை என்ற ஊரில் கல்யாணம். வீராச்சிலை  புதுக்கோட்டை பக்கம்.. திருமயம் தாண்டி போகவேண்டும்.  புதுக்கோட்டை தாண்டி கானாடுகாத்தான், செட்டிநாடு, பள்ளத்தூர், காரைக்குடி எல்லாமே 'நகரத்தார்என்று சொல்லப்படும் செட்டியார்கள் தான். அரண்மனை போன்ற பெரிய வீடுகள். ஏகப்பட்ட அறைகள் மற்றும் சன்னல்கள் கொண்ட வீடுகள்.   

C.T.சுப்ரமணியத்தை நாங்கள் அன்போடு CT என்றழைப்போம். மிகவும் சாது. நாங்கள் 5,6 பேர் சேர்ந்து CA final பரீட்சைக்கு படித்துக்கொண்டிருந்த நேரம் அது. CT அதி புத்திசாலி. வாயே திறக்க மாட்டான். மணி ரத்தினம் பட ஹீரொ போல் ம்ம்.. இல்ல.. சரி... போன்ற வார்த்தைகள் மட்டும் தான். அவனது அப்பா திருச்சி மலைவாசலில் இருந்து சுமார் 15 கடைகள் தள்ளி பாபு ரோடு சந்திக்கும் இடத்தில் சிறிய கடை மற்றும் ஆபீஸ் வைத்திருந்தார். ஹோல் ஸேல் பேப்பர் வியாபாரம். மொத்த வியாபாரம் என்பதால் நல்ல வருவாய். CTயை பாக்க நாங்கள் போகும்போதெல்லாம் நம்மை லேசாக முறைத்து பார்த்துவிட்டுத்தான் மகனை கூப்பிடுவார். இன்கம் டாக்ஸ் பேப்பரில் commissioner of Gift Tax Vs. N.S. கெட்டி செட்டியார் போன்ற பிரபலமான கேஸ் பற்றி விவாதிக்கும்போது செட்டியார்கள் பற்றி CT நிறைய சொல்வான்.   

பஸ் மெல்ல வீராச்சிலை வந்ததும் எல்லோரும் இறங்கி நடந்து பெரிய மாளிகை மாதிரி CT யின் தத்தா வீட்டின் முன் நின்றோம். வாசலுக்கே 20 படிகள்.பெரிய முத்தம், நிறைய அறைகள். ‘வாங்க’ என புன்சிரிப்போடு CTயின் அப்பா வரவேற்றபோது நாங்கள் திரும்பி பார்த்தோம், நம்மையா... அல்லது வேறு யாராவதா என்று மாலை மணி 7… களைப்பில் எல்லோரும் சட்டென்று சாப்பிட்டு தூங்கி விட்டோம். காலை 6 மணிக்கு பெரிய தம்ளரில் அவர்கள் கொடுத்த காப்பி குடித்த அடுத்த நிமிடம் எல்லோருக்கும் அவசரம். அவ்வளவு பெரிய வீட்டுக்கு மிக சிறிய சர்வீஸ் லெட்டிரின் தான். CT எல்லோரையும் பக்கத்தில் வயல்காட்டுக்கு அழைத்துப்போனான். 'என்னடா இது இங்கயா போறது' என்று கேட்க கூட நேரமில்லை.. எல்லோருக்கும் அவ்வளவு அவசரம்.. 5 சார்டர்ட் அக்கவுண்டன்ட்சும்    ஒட்டுக்'கக்கா' (மன்னிக்கவும்.. ஒட்டுக்கா) வயல்காட்டுக்கு நடுவே அங்கங்கே செடிகளுக்கு நடுவே அமர்ந்தோம்... இல்லை போனோம். அருகே உள்ள வாய்க்காலில் தான் கால் அலம்பவேண்டும் என்று CT சொன்னதும் எல்லோரும் அலறினோம்சிறு குழந்தை போல் தாத்தக்கா பித்தாக்காவென நடந்து வாய்க்காலை நோக்கி லேசாக தூக்கிய லுங்கியுடன் போனோம். சிலர் 'சிட்டுக்குருவி' படத்த்தில் சிவக்குமாரும் நாயகியும் 'என் கண்மணி' பாடலுக்கு 2வது சரணத்தில் பூங்காவில் குதித்தது போல் குதித்து நடந்தார்கள்.

ஒரு வழியாக அந்த வைபவம் முடிந்து குளித்து விட்டு காலை சிட்றூண்டிக்கு  அமர்ந்தோம். பெரிய வாழை இலை நிறைய இட்டிலி, கல் தோசை, கெட்டி சட்டினி ,கார குழம்புகோசுமல்லி, பரோட்டா, பால் பணியாரம் என விதவிதமான பலகாரங்கள். கடைசியில் மிகப்பெரிய குவளையில் பால். மிகவும் விமரிசையான திருமணம் முடிந்து மதியம் சாப்பாட்டுக்கு பிறகு திருச்சி திரும்பினோம்மறக்கமுடியாத பயணம் அது. 

CA முடித்தவுடன் ஒருநாள் இந்தியன் பாங்க் வேலை கிடைத்து CT பாண்டிச்சேரி பக்கம் போய் விட்டான். ஒரு வழியாக படித்து CA பாஸ் செய்தபின் சில வருடங்கள் பாம்பேயில் நிதி நிறுவன வேலையின் experience உடன் நான் ஃபோர்ட் எரியாவில் ஒரு பங்கு தரகு நிறுவனத்தில் வேலையில் இருந்தபோது CTயும் இந்தியன் பாங்க் மியுச்சுவல் பண்டில் சேர்ந்தான். செட்டியார் என்பதால் அவனுக்கு எப்போதும் பங்குகள் சம்மந்தப்பட்ட வேலையில் நாட்டம் அதிகம்.எனக்கு தினமும் ..ம்மா... கத்தரிக்கா, முருங்கக்கா... என்று காய்கறி விற்பது போல் பங்குகளை விற்கவேண்டும். அதாவது தொலைபேசியில் வெறும் institutional கஸ்டமர்சுகளான canbank MF, indbank MF, LIC MF போன்ற கம்பெனிகளுக்கு போன் செய்து அன்றைய பங்கு நிலவரத்தை கடகடவென ஒப்பிக்க வேண்டும். எல்லாம் ஒப்பித்த பிறகு அவர்கள் 'சாரி,, வி ஆர் நாட் இன் மார்கெட்' என்று பட்டென்று போனை வைத்தவுடன் வெளியே மற்ற ஆபீசுக்கு போய் மறுபடியும் அன்றைய விலைகளை ஒப்பித்து, அவர்களுடன் தேநீர் அருந்தி ஆர்டர்களை உடனே எக்சிகியூட் செய்ய வேண்டும். CT யும் அதே ஏரியாவில் பணியாற்றிக்கொண்டிருந்ததால் அவனது கம்பெனியுடன் நல்ல தொழில் உறவு இருந்தது. 1 தெரு தள்ளி (ஹோமி மோடி ஸ்ட்ரீட்) என் தம்பி மற்றொரு தரகு நிறுவனம்,2 தெரு தள்ளி என் அண்ணன் 'மணி மார்கெட்' என்று குடும்பமே 'எனக்கு லாபம்னா உனக்கு பேதி' என்ற பங்கு சந்தை விதியின்படி சம்பாதித்துக்கொண்டிருந்த நேரம். சம்பளத்துக்கு குறைச்சலில்லை. மதியம் சாப்பாடு வெளியே தான். CT யோ எனது தம்பியோ லஞ்சில் என்னோடு சேர்ந்து கொள்வார்கள். D.N.ரோடு, maadam கமா ரோடு என ஏதாவது உடுப்பி ஹோட்டலில் ஜில்லென சித்ராவுடன் புலாவ் (சித்ராவென்பது பார்லே கம்பெனியின் குளிர்பானம் என அறிக).  பலூடா, மாவா ஐஸ்க்ரீம், பூரி வித் ஸ்ரீக்கண்ட் , தோக்லா, இதெல்லாம் பத்தாதென்று ரோட்டோரத்தில் விற்கும் லஸ்ஸி, சாஸ்(மோர்), ப்லோரா ஃபௌன்டென் அருகே பழைய புத்தகங்கள் மற்றும் காஸ்ஸேட்டுகள் வாங்கி அதே மூலையில் சூடா வடாபாவ் என்று ஆசை தீர தின்பண்டங்களை புசித்த நேரங்கள் பல. நான் மட்டுமல்ல அழகான இளம் யுவதிகளும் துளி வெட்கமில்லாமல் ரோட்டில் சாப்பிடுவது சகஜம் தானே அங்கே . அருகே அக்பரல்லிஸ் போய் விதவிதமான 'வோக்' டை மற்றும் T-ஷர்ட்டுகள் என ஷாப்பிங்... தொடர்ந்து 3 முறை சனி மாலைகளில் எக்செல்சியர் சினிமாவில் பேட்ரிக் ஸ்வெஸின் 'dirty dancing' படம் வேறு. வீடு போகும் வழியில் சிலசமயம் தாதர்(மேற்கு) ஸ்டேஷனில் இறங்கி அருகே உள்ள 'மாமா' எனும் மராட்டி ஹோட்டலில் உசால்-பாவ், மிஸல், பாக்கர்வாடி,சாபுதானா வடா என்று வயிறு முட்ட சாப்பிட்டு சீக்கிரமா முலுன்டுக்கு டிரெயின் பிடித்து வீடு போய் சேருவேன் டின்னர் சாப்பிட.  ஞாயிறு அன்று செட்டிநாடு சாப்பாடு சாப்பிட அந்தெரி வெர்ஸோவா பகுதியில் உள்ள அடுக்கு மாடியில் பெரிய பிளாட்டில் குடியிருக்கும்  CT வீட்டிற்கு நான் என் புது மனைவியுடன் போவது வழக்கம். வாழ்க்கை மிக மெதுவாக சந்தோஷமாக போய்க்கொண்டிருந்தது… ஹர்ஷத் மேத்தா சிக்கிக்கொள்ளும் வரை.

.மே. ஊழலுக்குப்பிறகு திடீரென ஏற்பட்ட பங்குசரிவுக்கு பிறகு எல்லாமே உல்டாவானது. பங்கு வியாபாரம் படுத்ததால் எங்கள் டெல்லி தரகு நிறுவனம் பாம்பே கிளையை மூடி அடுத்த 6 மாத சம்பளத்துடன் எங்களை பொற்-கைக்குலுக்கலுடன் வெளியே அனுப்பினர்.  CT என்னவானான் என்று தெரியவில்லை. நிதி மற்றும் பங்கு நிறுவனங்களில் வேலை செய்த நாங்கள் எல்லோரும் உருவிய கோமனத்துடன் உறுதியாக ஓடினோம் வேறு வேலை தேடி. ஜில்லென அருந்திய சித்ரா காசுக்கு ஜிலேபி சாப்பிட்டோம்(காலை உணவுக்கு). லஸ்ஸியே லன்ச் ஆனது. லஞ்சுக்கு பிறகு பாலூடா சாப்பிடும் என் தம்பி லஞ்சுக்கே பக்கோடா சாப்பிட்டான் சொல்லிக்காமல் ரயில் பிடித்து சிவகாசியில் செட்டில் ஆனான் CT. பைனான்ஷியல் சர்வீஸுக்கு ஸ்கோப் அதிகம் என மாற்றிக்கொண்டு பாம்பே வந்த அவன் மறுபடியும் கார்ப்பரேட் ஃபைனான்ஸ் கேட்டு இந்தியன் வங்கிக்கே திரும்பிப்போனான்.

ஒன்றும் பெரிதாக குடி முழுகி விடவில்லை ஸார்.. படித்த CA படிப்பு வேறு வேலை கிடைக்க உதவியது. இரண்டு வருடங்கள் வேறு துறையில் இருந்துவிட்டு, 9 வருட பாம்பே அனுபவத்துடன் 1994 லில் பஹ்ரைன் வந்து சேர்ந்து FMCG துறையில் 19 வருடங்கள் ஓடியது தெரியவில்லை. CT என்ன செய்தான்? அவனும் அடுத்து ING வைஸ்யா என்ற நிறுவனத்தில் VP & சீஃப் டீலர் என்று forex மார்கெட்டில் கலக்கினான். தம்பி banker ஆகி பஹ்ரைன், மஸ்கட் என்று 18 வருடங்கள் ஒட்டிவிட்டான். அண்ணனும் ICWA, MBA,CFA என்று பாம்பேயில் செட்டில் ஆனான்


வருடாவருடம் பெங்களூர் போகும்போது அவ்வப்போது CTயை பார்ர்ப்பதுண்டு. CT பெங்களூரில் செட்டில் ஆகி 10 வருடங்களுக்கு மேலாகிறது. 2 நாட்களுக்கு முன் அவனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அதே மணிரத்னம் ஸ்டைலில் அளவான பேச்சு. 'வீராச்சிலை டிரிப் போலாமாடா ' என கேட்டதற்க்கு 'மறக்காம லுங்கி கொண்டுவாடா மாப்ள ..' என சிரித்தான்.    'போராடிக்குதுடா.. வேற வேலை தேட கூட நேரமில்ல..' என சலித்துக்கொண்டான். பங்கு சந்தை தொழிலை மட்டும் விரும்புவதாக இன்றும் சொல்கிறான் பெங்களூர் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் C.O.O ஆக இருக்கும் நம் அருமை நண்பன் CT.