Friday, September 5, 2014

பொளேர்... பொளேர்... (மீள் பதிவு.. புது நண்பர்களுக்காக.. சில மாற்றங்களுடன்)

இப்பவும் பனியன் போடும்போது முதுகுப்பக்கம் கொஞ்சம் லேசா வீங்கின மாதிரி ஒரு பிரமை எனக்கு…எல்லாம் ஸ்கூல் வாத்தியார் கிட்ட வாங்கின விழுப்புண்கள்.. திருச்சி புனித வளனார் (St Joseph's) பள்ளியில்  காலை உள்ளே நுழைந்ததும் மாலை வரை ஒரு தனி உற்சாகம்…வேறென்ன..வாத்தியார்களை ஓட்டுவதில் தான்..சக மாணவர்களும் என்னை உற்சாகப்படித்தி உசுப்பேற்றுவதில் கில்லாடிகள்..நடுவே அவர்களே நம்மை மாட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதுமுண்டு ..

"என்ன கெளவன்னு நெனைக்காதீங்கடா.. தொலைச்சுப்புடுவேன்" என்று தன்  சோடாபுட்டி கண்ணாடி வழியாக பார்த்து மிரட்டும் சவுரிராஜன் வாத்தியார் கிளாசில் நானும் தென்னூர் கவுன்சிலர் கிருஷ்ணனின் பையன் தனபாலும் அடி வாங்கிய நாட்கள் பல. 'where the mind is without fear' மற்றும் ‘palanquin bearers’ என்ற poemகளை மனப்பாடமாக சொல்லவில்லை என்றால் பிச்சுப்புடுவார். கிளாசின் நடுவே நான் காலை ஆட்டிக்கொண்டிருக்கும்போது தனபாலும் தனது கால்களால் என் கால்களை உதைத்து ஆட வைப்பதை ரசித்து நாங்கள் சிரித்துக்கொண்டிருக்கும்போது 'என்ன கிளாஸ்ல சத்தத்தையே காணோமே' என நிமிர்ந்து பார்த்தால் சவுரிராஜன் எதிரே நின்றுகொண்டு எங்களை பார்த்துக்கொண்டிருப்பார். அடுத்த நிமிடம் 'தொபேல்..தொபேல்' என அடி விழும். மனுஷன் படு ஒல்லி.. ஆனால் அடித்தால் அங்கங்கே நானாவிதமாக கன்னிப்போகும்.

முக்காவாசி கலாட்டா தமிழ் கிளாசில் தான். தமிழ் வாத்தியார் பரிமேலழகர்... "எல்லோரும் செய்யுள் படிங்கடா" என சொல்லிவிட்டு பாதி நேரம் சேரில் சாய்ந்தவன்னம் யோகநித்திரையில் இருப்பார். நாங்கள் ஒரே கலாட்டா செய்துகொண்டு நடுநடுவே அவரை 'அய்யா..அய்யா..இவன் அடிக்கிறாய்யா' என கூப்பிடுவோம்.. காதில் விழுந்தும் அவர் எழவில்லை என்றால் நடுவே 'அய்யா'வுக்கு பதில் 'யோவ்' என நாங்கள் கத்த "டேய்.. யார்ரா அவன் யோவ்னு கூப்புட்டது" என எழுந்துவிடுவார்.

எழுந்ததும் 'பரஞ்சோதி! எங்க..'பொங்கு பல சமயமெனும்'  செய்யுள் சொல்லு' என்றதும்,பரஞ்சோதி எழுந்து கை கட்டி 'பொங்ங்ங்ஙகு பல' என்று முதல் வார்த்தையை மட்டும் காட்டு கத்தலுடன் ஆரம்பித்து, பிறகு..$$.. ##..&&..@@..மண..மன.. லப..ளப... என்று மற்ற எல்லா வார்த்தைகளை வேண்டுமென்றே முழுங்கி... கடைசி வார்த்தை மட்டும் 'தேவ தேவே’  என்று சத்தம் போட்டு சடுதியில் முடித்து விஷமப்புன்னகையுடன் உட்காருவான். அவனை நாங்கள் பொறாமையுடன் பார்ப்போம், வெறும் மொதல் வார்த்தையும் கடைசி வார்த்த மட்டும் தெரிஞ்சிக்கிட்டு எப்பிடி சமாளிச்சிட்டான் பாரு' என்று. அந்த சாமர்த்தியம் இல்லாமல் செய்யுளை தப்பாகச்சொல்லி சத்தியசங்கல்பனாக மாட்டிக்கொண்ட எங்களுக்கு 'பொளேர்.. பொளேர்..' தான். திருச்சி வயலூர்/உய்யகொண்டான் திருமலை கிராமப்பகுதியில் இருந்து அந்த காலத்திலேயே தினம் டெரிகாட்டன் சட்டையுடன் வரும் பரஞ்சோதி 2011ல் ஜெயலலிதா அமைச்சரவையில் மந்திரியானான்(ர்).

சயென்ஸ் வாத்தியார் தாமஸ் வகுப்பில் convex லென்சு வழியாக பார்க்கும்போது objects தலைகீழாக தெரியும் என்று வாத்தியார் விளக்கும்போது, செந்தில் மாதிரி கட்டையாக முழங்கால் வேட்டியுடன் நம் வகுப்பிற்கு  வாசஞ்செய்யும் பியூன் அந்தோணியை காட்டி நாங்கள் 'சார்...அப்ப அந்தோனிய convex லென்சு வழியே தலைகீழா பார்த்தா வேட்டி கீழ எறங்கிடுமே' என்று எழுந்து கேட்டவுடன் கிளாஸே குபீரென சிரிக்கும். மறு நிமிடம் 'நரம்புப்பயலே.. வாடா இங்க' என வாத்தியார் கூப்பிட, அன்று எனக்கு முதுகு பழுத்து விடும்.  நாம் அடி வாங்கும்போது சக மாணவர்களுக்கு ஸ்கூலுக்கு வெளியே விற்கும் ஜிகர்தன்டா சர்பத் குடித்த மாதிரி திருப்தி.

'வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை' பாடலை நாங்கள் 'ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி ' மெட்டில் பாடிக்கொண்டிருக்கும்போது, பின்பக்கமாய் வந்து நின்று கொண்டு வாத்தியார் பார்த்துக்கொண்டிருப்பது தெரியாமல், மாட்டிக்கொள்வோம். பிறகென்ன? பொளேர்..பொளேர் தான்...

காலை ஸ்கூல் வாசலில் நிற்கும் ஹெட் மாஸ்டர் ஆரோக்யம் SJ அவர்களை எல்லா மாணவர்களும் 'ஸ்தோத்திரம் ஃபாதர்' ...'ஸ்தோத்திரம் ஃபாதர்'..என்று  சத்தம் போட்டு சேவிக்கும்போது  'தோச தின்றோம் ஃபாதர்' என்று நாங்கள் மட்டும் கூட்டத்தின் நடுவே கத்துவொம். கூட்டத்தில் அவர் மலையாள காதுக்கு சரியாக கேட்காது என்ற நம்பிக்கை…  

தமிழ் புத்தகம் முழுவதும் பேனாவால் பெயர்களை திருத்தி எழுதுவது ஒரு விளையாட்டு. 'உமறு புலவர்' என்பதை 'திமுறு புலவர்' என்றும், 'திரு.கோ. வில்வபதி' என்ற அழகான பெயரை 'திருக்கோவில் விபூதி' என்று மாற்றி சக மாணவர்களுக்கு காட்டி மகிழும்போது  யாராவது ஒருத்தன் வாத்தியாரிடம் போட்டுக்கொடுக்க, அவர் புத்தகத்தை பிடுங்கி சத்தமாக வாசித்து காட்டுவார். பிறகென்ன..'பொளேர்..பொளேர்' தான்.

சிங்கராயன் ஸார் கிளாஸ் நடக்கும்போது பக்கத்து வகுப்பில் இருந்து மாணவன் ஒருவன் வந்து 'ஸார் என் அண்ணன் மணியை பார்க்கணும்' என அழைப்பான். வெளியே வந்த மணியிடம் அவன் தன் வாயிலிருந்து எடுத்த பாதி சாப்பிட்ட நெல்லிக்காயை கொடுக்க, மணி லபக்கென்று வாயில் போட்டுக்கொண்டு உள்ளே வருவான்.  'எங்க அம்மா தான் ஆளுக்கு பாதின்னு சொன்னாங்க ஸார்' என விளக்கம் வேறு.

'k' லாங்கூவேஜ் அப்போது ரொம்ப பிரபலம். சீனி என்ற பெயரை      'க-சீ க-னீ 'என்று கற்றுக்கொண்டதும் முதல் வேலை சில கெட்ட வார்த்தைகளை 'k' லாங்குவெஜில் சொல்லிப்பார்ப்பது (வாத்தியார் பெயரையும் சேர்த்து தான்).

'கிளைவ்ஸ் ஹாஸ்டல்' போலீஸ் தடியடி சம்பவம் சமயத்தில் அடிக்கடி ஸ்கூல் ஸ்ட்ரைக் நடக்கும். வகுப்பு நடக்கும்போது ஸ்கூலுக்கு வெளியே மாணவர்கள் கத்தும் சத்தம் கேட்கும். அடுத்த சில நிமிடங்களில் ஹெட் மாஸ்டர் அறையிலிருந்து அவர் மைக்கை 'டொக்.டொக்' என்று தட்டுவது மேலே ஸ்பீக்கரில் கேட்டவுடனே கிளாஸ் முழுவதும் கடாமுடாவென  சத்தம்.. வேறென்ன மூட்டை கட்டுவோம். வாத்தியாரும் உள்ளுக்குள் சந்தோஷத்துடன் 'டேய்... இருங்கடா HM என்ன சொல்றாருன்னு கேப்போம்' என்று சொன்ன மறு நிமிடம் HM மெதுவாக 'மாணவர்களே!... இன்று..நம் பள்ளி..' என ஆரம்பித்தால் போதும், முழு வகுப்பும் 'ஹோ' வென கூச்சலோடு வீட்டிற்கு ஒடுவோம்..

PT கிளாஸ் என்றாலே எல்லோருக்கும் வயிற்றை கலக்கும். ஸ்ரீரங்கம் கிட்டப்பனும் கிராப்பட்டி ஜானும் எடுத்த எடுப்பிலேயே பளார் என்று அறைந்து நம்மை நிலைகுலையச்செய்பவர்கள். 'எவன்டா அது வரிசைய வுட்டு தனியா நிக்குறான்' என கிட்டப்பா சொல்லும்போதே  தெரிந்துவிடும் யாருக்கோ இன்னிக்கி செமத்தியா இருக்கு என. கிராப்பட்டி ஜான் தண்ணீர் விட்டு தலைமுடியை தூக்கி வாரியிருப்பார். ஸ்கூலுக்கு வந்தவுடன், பின் மண்டையிலிருந்து மெதுவாக அழுக்குத்தண்ணீர் கழுத்தில் வழிவது பார்க்க எங்களுக்கு அறுவறுப்பாக இருக்கும். கண்,காது,மூக்கு என இந்திரியங்கள் பார்க்காமல் அவர் நம்மை அறைந்தால் ஒரு சில வினாடிகள் காது கொய்ங்...கண் மங்கலாகத்தெரியும். எல்லோரும் கிளாசிலிருந்து கிளம்பி இரண்டிரண்டு பேராக வரிசையாக PT கிரவுண்டுக்கு போகும்போது யாரும் பேசக்கூடாது என்பது சட்டம். நாங்கள் கடைசி வரிசை.. பின்னால்  2 வாத்தியார்களும் சைக்கிளில் வருவது தெரியாமல் ஜாலியாக 'வாஸ்கோடகாமா... வென்ட் டு தி டிராமா... ஒப்பன்ட் ஹிஸ் பைஜாமா' என்று பாடிக்கொண்டே போகும்போது எங்களை பிடித்து  தனியாக முட்டி போட வைத்து லாடம் கட்டுவார்கள்.  

ஆசிரியர்களுக்கு விதவிதமான நாமகரணங்கள் சூட்டியிருக்கிறோம்:
'குட்டாரோக்யசாமி' ( கைக்குட்டையை முழங்கையில் கட்டியிருப்பார்),
'குண்டாரோக்யசாமி' ( விளக்கம் தேவையில்லை),
 'செங்கோல் வாத்தியார்' (கையில் மொத்தமான தடியுடன் வருவார்),
'வாத்தியான்'( யாருக்கும் இவரை பிடிக்காது),
'கரிபால்டி' (சரித்திர ஆசிரியர் ஒரு மாணவனிடம் கரிபால்டி (garibaldi) பற்றி கேள்வி கேட்டதற்கு அவன் 'உலகப்போர் முடிந்து இத்தாலியில் முன்னொருகாலத்தில் இவர் கரி விற்றார்,பால் விற்றார், டீ விற்றார்' என பதில் சொல்லி அலற அலற அடி வாங்கி அன்றிலிருந்து வாத்தியாருக்கே அந்தப்பெயர் வந்துவிட்டது)
இதெல்லாம் இல்லாமல் சீத்தலை சாத்தனார், உமறு புலவர், நாலடியார், நியான்டர்தால் மனிதன் என்றழைக்கப்படும் சில வாத்தியார்கள்.

ஆசிரியர் தினமான இன்று வாத்தியார்களை வைத்து நாங்கள் லூட்டியடித்தை நினைவுகூர்வதில் என்ன ஒரு மகிழ்ச்சி..

பி.கு: மேற்சொன்ன இத்தனை அட்டூழியங்களை மறக்காமல் எழுதத்தூண்டிய நம் வாத்தியார் சுஜாதாவை மறக்க முடியுமா?.. அவர் ஸ்ரீரங்கத்தில் படிக்கும்போது வகுப்பில் சிறிய பிளேடை டெஸ்க்கில் சொருகி ' டொய்ங்..டொய்ங்' என மாணவர்கள் சப்தம் எழுப்பும்போது 'என்னடா சத்தம்' என்று வாத்தியார் கேட்டால் 'வண்டு ஸார்'...என்பார்களாம்.

Monday, September 1, 2014

கத்தார் பெண் கல்யாண வைபோகமே....


சுமார் 16 வருடங்கள் முன் பஹ்ரைன் விமான நிலையம் கட்டிய மிகப்பெரிய கட்டுமான நிறுவனம் ஒன்றில் தனக்குக்கீழ் இவரை வேலைக்குச்சேர்த்தான் நண்பன் கணபதி.உடனே எங்கள் பஹ்ரைன் ஸ்லோகா க்ரூப்பிலும் சேர்த்து எனக்கு அறிமுகப்படுத்தினான். " யப்பா! படு கில்லாடிடா இவுரு... எதக்கொடுத்தாலும் வித்துடுவாரு மனுஷன்". கட்டப்படப்போகும் பெரிய கட்டிடத்தின் உரிமையாளர்களைப்பார்த்து தங்கள் பணிக்கு எழுத்துவடிவில் ஒப்புதல் பெற்ற சில மணி நேரங்களில் இவர் தன் ஆட்களுடன் சைட்டில் ஆஜராகி 'இக்கட்டிடத்தின் இன்னென்ன பணிகள் தமது கம்பெனிக்கு வழங்கப்பட்டிருக்கிறது' என பெரிய போர்டு எழுப்பி போட்டியாளர்களை பின்னுக்குத்தள்ளி கிடுகிடுவென மற்ற ஆர்டர்களை படிக்க ஓடுவார்..

எனது நண்பர் விஜய் மற்றும் ராதா  இல்லத் திருமணத்தைப்பற்றித்தான் இப்பதிவில் பேசுகிறோம். எந்த விஷயத்தைப்பற்றி பேசினாலும் உடனே அதைப்பற்றிய முழு விபரங்கள், அதன் பின்னனி,சம்மந்தப்பட்ட நபர்கள், அதிலுள்ள பிரச்னைகள், அரசியல், பணவிவகாரங்கள் என அடுக்கடுக்காக புள்ளிவிபரங்களை நம் முன் வைப்பார் விஜய். அது சினிமாவாகட்டும் அரசியலாகட்டும் உலகத்தலைவராகட்டும்..நடமாடும் என்சைக்ளோபீடியா தான் இவர். ஒரு நாளைக்கு 24 மணி நேரம் பத்தாது இவருக்கு. ' நாலு மணி நேரம் தூங்கினாவே போதுங்க' என முன்பு அவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. சில வருடங்களில் மற்றொரு நிறுவனம் இவரை கொத்திக்கொண்டு போய் புதிய தொழில் தொடங்க அந்த கம்பெனியையும் படுவேகத்தில் உயர்த்தினார்.

மற்றவர்களுக்கு சளைக்காமல் நிறைய உதவிகள் செய்வார்.ஆலோசனைகள் சொல்வார். வாராவாரம் வெள்ளியன்று பிரபந்தம் ஸத்ஸங்கில் கலந்து கொள்வார். வருடம் ஓரிருமுறை இவர் வீட்டில் சுந்தரகாண்டம் படிப்போம். சுந்தரகாண்டம் படிக்கும்போதே கிச்சனிலிருந்து ராதா சமைக்கும் பச்ச கற்பூரம் மணத்துடன் சக்கரைப்பொங்கல், வெண்பொங்கல் (தொட்டுக்க கத்தரிக்கா கொத்ஸு), புளியோதரை வாசனை நைவேத்தியத்திற்கு வந்துவிடும். ராதா நிறைய குழந்தைகளுக்கு பாட்டுசொல்லிக்கொடுக்கிறார். இவர்களது இரண்டு பெண்களும் (ப்ரியா & மீரா) பரதம் கற்று 'அலரிப்பூ'வில் ஆரம்பித்து 'அன்டங்காக்கா கொண்டைக்காரி' வரை எல்லா நடனங்களும் ஆடுபவர்கள். கத்தாரில் அவரது நிறுவனத்தின் புது கிளை ஆரம்பித்து 10 வருடங்களாக அங்கு பொது மேலாளராக கோலோச்சி வருகிறார் விஜய்.

இவரது பெரிய பெண் ப்ரியாவின் திருமணத்திற்கு ஒரு பஹ்ரைன் கூட்டமே சென்ற ஜூலை மாதம் சென்னையில் கூடினோம். திருமணத்தை விஜய் கார்ப்ரேட் ஸ்டைலில் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலை 6 மணிக்கு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது விஜய்யின் அண்ணன் மோகன் இன்னோவாவில் காத்திருந்தார். நேராக நங்கநல்லூர் நம்மாழ்வார் கெஸ்ட் ஹவுஸில் எங்களுக்கு போடப்பட்டிருந்த ரூமில் இறக்கிவிட்டார். யார் யாரை கெஸ்ட் ஹவுஸில் தங்க வைப்பது, அவர்கள் ஃப்ளைட் எத்தனை மணிக்கு, என்ன ரூம் நம்பர் என எக்ஸெல் ஷீட் லிஸ்ட் ரிசப்ஷனில் ரெடியாக இருக்க, டப்டப்பென கார் கதவுகள் மூட எங்களைப்போல் இன்னும் 20, 30 பேர் கசங்கிய உடைகளுடன் கையில் பிஸ்லேரி பாட்டில்களுடன் அவசரமாக வந்திறங்கினார்கள். இது போதாதென்று பக்கத்தில் சூர்யா கெஸ்ட் ஹவுஸில் சுமார் 35 அஞ்சான்கள், சத்திரம் அருகே ராகவேந்திராவில் மேலும் 15 பேர்.

இனி கல்யாணம்:
கல்யாணம் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் பக்கத்திலுள்ள ராம் மந்திரம் மண்டபத்தில். கல்யாணத்திற்கு முதல் நாள் காலை வ்ரதம்/ஜாதகாதி, மாலை ஜானவாசம், நிச்சயதார்த்தம், மறுநாள் காலை பிடி சுற்று, ஊஞ்சல் & மாலைமாற்றல், பாலிகை கரைத்தல், மையிடுதல், சம்பாவனை, கன்னிகாதானம், பாணிக்ரஹனம், அம்மி மிதித்தல், ஸப்தபதி, கிரகப்பிரவேசம், பால்பழம், நலங்கு, சம்மந்தி விருந்து, மறுநாள் கட்டுசாதம் இத்யாதி என பெரிய்ய்ய்ய்ய ஐடினரரியை விஜய் 6 மாதங்களுக்கு முன்னே தயாரித்து கனடா சம்மந்திக்கு அனுப்பி, முதல் நாள் அவர்களுடன் அமர்ந்து இருவீட்டார் பக்கமும் என்னன்ன சம்பிரதாயங்கள், யார்யார் முன் நின்று செய்வது, என்னென்ன அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என இவர் டிஸ்கஸ் செய்ய, ' என்னதிது.. எள்ளுன்னா எண்ணெயா அல்லாத்துக்குமே கைல லிஸ்ட்டோட நிக்கிறாரே இவர்!' என அவர்கள் பயந்து போய் 'நீங்க தான் ப்ரமாதமா ஹான்டில் பண்றீங்களே.. அதன்படியே இருக்கட்டும்' என ஒத்துக்கொண்டார்கள்.

கல்யாணத்தை நடத்திக்கொடுத்த வாத்யார் எக்ஸெலன்ட் ஆர்கனைசராம். 6 மாதங்கள் முன்னமே அவருக்கு வேண்டிய லிஸ்ட்டை கொடுத்து, முதல் நாளன்று லிஸ்ட்டின்படி எல்லா ஐட்டங்களையும் வாங்கி, ஒவ்வொரு சம்பிரதாயத்திற்கான சாமான்களை தனித்தனி டப்பாக்களில் போட்டு பேரெழுதி தனது சீடர்கள் இருவரையும் அதற்கென நியமித்து விட்டதால் குழப்பமேதுமின்றி எல்லாம் நல்லபடியாக நடந்தேறியது.

மாலைமாற்றல், பிடிசுற்று, ஊஞ்சல் நிகழ்ச்சிகளுக்கு யார் யார் பாடவேண்டும் என்ற லிஸ்ட்டை ஓரிரு மாதங்கள் முன் ராதாவே தயார் செய்து பாடுபவர்களுக்கு அனுப்பி ஸ்கைப்பில் ரிஹர்சல் செய்து, கல்யாணத்தன்று வெற்றிகரமாக அந்த சம்பிரதாயங்களை நடத்தியது மிகவும் பாராட்டுக்குரியது. தங்கள் குடும்பத்துக்கு உதவியவர்களையும் மிகவும் பிரியமானவர்கள் சிலரையும் அங்கீகரிக்கும் விதத்தில் அவர்களை வ்ரத பட்சணங்களை கொண்டுவரச்செய்து தனது நன்றியைக்காட்டினார் ராதா.

பஹ்ரைனில் இருந்து சென்னை வந்து செட்டிலான நண்பர்கள் மற்றும் 
ஹ்ரைனிலிருந்து வந்திருந்த நண்பர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து மண்டபத்தில் நல்ல அரட்டை. பஹ்ரைனை விட்டால் மீதி கத்தார்க்காரர்கள் தான் அதிகமாகத்தெரிந்தார்கள்.

ஜானவாசம்:
மனுஷன் பிசினஸ் லைக்காச்சே.. ஜானவாசத்துக்கு குதிரை மற்றும் சாரியட் (ரதம்) இரண்டையும் சேர்த்து காண்ட்ராக்ட்டில் எடுத்தால் செலவு லட்சத்தை தாண்டுமென்பதால், குதிரைகள் சப்ளை செய்யப்படும் சோர்ஸான திருவல்லிக்கேணி ஏரியாவில் ஒருஆளைப்பிடித்து குதிரையையும், வேறிடத்திலிருந்து ரதத்தையும் தனித்தனியாக பிடித்து மொத்தம் முப்பதாயிரம் செலவில் சல்லிசாக முடித்துவிட்டார் கில்லாடி விஜய்.

அதுமட்டுமா.. கல்யாணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பாடு செய்திருந்த 'சங்கீத்' நிகழ்ச்சிக்கான மேடை அலங்கார டிசைன் வரைபடத்தை வாங்கி ஃப்ளாப்பி மற்றும் ஸ்கைப் மூலம் மற்றொருவருக்கு அனுப்பி அதே டிசைன் மற்றும் ஸ்டைலை சில திருத்தங்கள் செய்து ரிஸப்ஷன் மேடைக்கும் போட்டு குறைந்த செலவில் வேலையின் ஸ்கோப்பைக்கூட்டி அசத்தினார்.

நகருக்குள் யானை கொண்டுவர போலீஸ் ஒப்புதல் கிடைப்பது கஷ்டமென்பதால் யானை மேல் பவனி வரவேண்டுமென்ற மாப்பிள்ளையின் ஆசையை பெரிய ரதத்தில் முடித்து வைத்தார். ஆனாலும் ஜானவாசத்தில் அந்த பத்து பன்னிரண்டு பெண்கள் செம டான்ஸ்...பாண்டு வாத்தியக்காரர்களும் டெம்ப்போவைக்குறைப்பதாக இல்லை.
பாதியில் மணப்பெண்ணும் மணமகனுடன் சேர, ஊர்வலம் முடிந்து மண்டபத்திற்குள் நுழைந்ததும், ரிஸப்ஷன் மேடையை நெறுங்கும் முன் பார்வையாளர்கள் முன் பையனும் பெண்ணும் சூப்பராக ஒரு என்ட்ரி டான்ஸ் கொடுத்தது விழாவின் ஹைலைட். டீவி புகழ் சங்கரியின் கச்சேரி மற்றும் செய்தி அறிவிப்பாளர் ரங்கநாதனுடன் பாடல்கள் நிகழ்ச்சிகள் இருந்தன.

சங்கீத்:
மணப்பெண் ப்ரியாவின் தங்கை மீரா வழங்கிய வடநாட்டார் ஸ்டைலில் 'சங்கீத்' நிகழ்ச்சி ஆடல் பாடலுடன் அமர்க்களமானது. மாப்பிள்ளை ஶ்ரீவத்ஸனே ராப் பாடல் தயார் செய்து ஆடிப்பாடினார். மணப்பெண் ப்ரியா ஆடியவன்னம் பார்வையாளர்களைக்கடந்து மேடை ஏறி 'dhol baaje' பாடலுக்கு அற்புதமாக நடனமாடினார். ஹமாத் டவுன் டாக்டர் மாலா 'வா வாத்யாரே வூட்டான்டே' பாடலை அசத்தலாகப் பாடி எல்லோரையும் உசுப்பேற்றினார்.

சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு மற்றும் go green பற்றி சில வார்த்தைகள் விஜய் மேடையில் பேசினார். கூடியவரை பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தவில்லை. சணல், துணி மற்றும் காகிதப்பைகள் மட்டுமே. அனிருத் மற்றும் அரவிந்த் என்ற அவர்களது உறவுக்கார பையன்கள் இருவரும் வந்திருந்தவர்களுக்கு செம்பருத்தி, கீழாநெல்லி மற்றும் துளசிச்செடிக்கன்றுகள் வினியோகம் செய்தது பாராட்டப்படவேண்டியது. சர்க்கரை கலக்காமல் வெல்லத்தால் செய்த காஜு கத்லி, ரவா லாடு, பால் அல்வா, வெனிலா கேக், நுக்கல், முத்துசரிகை போன்ற பலகாரங்களை துணிப்பையில் வந்திருந்தவர்களுக்கு கொடுத்தார்களென்பதும் குறிப்பிடத்தக்கது.

கேட்டரிங் பட்டப்பா:
மூன்று நாள் சமையல் காண்ட்ராக்ட் தி.கேனி பட்டப்பா.. சுமார் 1600 பேரை வைத்து 15 வருடங்களாக இத்தொழிலை செய்கிறாராம். பிரமாதமான சாப்பாடு. ஒரு வருடம் முன்பே அவரை புக் செய்யவேண்டுமாம். வடநாட்டு உணவு வகைகளையும் மெனுவில் சேர்ப்பது அவரது சிறப்பு.. குறிப்பாக வளைகுடா இந்தியர்கள் இவரை அதிகம் புக் செய்கிறார்களாம்.

காசி அல்வா, அக்காரவடிசல், கோதுமை அல்வா, கேசரி, ஜாங்கிரி என எல்லோருக்கும் ஷுகர் எகிற மூன்று நாளும் இவ்வளவு இனிப்பு சாப்பிட்டா என்னாவது என வியந்தவன்னம் சாப்பிடும்போதே நம் முன் சிரோட்டி வைத்து அதன் தலையில் பாதாம் பாலைக் கொட்டி நம்மை மேலும் திக்குமுக்காடவைத்தார் பட்டப்பா. 'இது எனக்கு வேணாம்' என குட்டிப்பையன் பாயசத்தை ஒதுக்க, கூட இருந்த தாத்தா 'சாப்பாட்ட வேஸ்ட் பண்ணக்கூடாது தெரியுமோ'வென சொல்லி அந்த பாயசத்தை லவட்டி மடக்கென குடித்து காலி செய்ததை அவரது மனைவி முறைத்துப்பார்த்தார், 'சான்ஸு கெடச்சா சக்கரை பதார்த்தத்தை விடமாட்டீங்களே' என சொல்லியபடி.

டிபனுக்கு தோசை, சப்பாத்தி, ஸ்டஃப் பரோட்டா, இட்லி, தேங்கா சேவை, பொங்கல், வடை,பூரி கிழங்கு, ரவா தோசை, போண்டா, கஞ்சிவரம் இட்லி என வெரைட்டி..அப்பாடா வயிறு ஃபுல்..போதும்.. கையலம்பலாம் என நினைக்கும்போதே அடுத்த ரவுண்டு சூடா ஊத்தப்பம் வந்து பசியைத்தூண்டியது. மூன்று நாட்களும் மதியம் இரவு சாப்பாட்டுக்கு பிசிபேளாபாத், புளியோதரை, மோர்குழம்பு, பகளாபாத், விதவிதமான கரமது கூட்டு கொத்ஸு பச்சடி சிப்ஸ் வகைகள், வாழக்கா பொடிமாஸ், பூந்தி ராய்தா, பால் பாயசம், பூரி பாயசம், ருமாலி ரோட்டி, சன்னா, பனீர்பட்டர் மசாலா, என மூன்று நாளும் வயிற்றுக்கு வஞ்சனையில்லாமல் சாப்பாடு...(சாப்பாட்டு லிஸ்ட் எழுதவே ஒரு தனி பதிவு தேவைப்படும்).

படிக்கட்டு வழியாக இறங்கி கீழ்த்தளத்துக்கு சாப்பிடப்போனவர்கள் சாப்பாட்டுக்கப்பறம் திரும்ப லிஃப்ட்டில் மேலே வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பந்திக்கும் கடைசி பந்திக்கும் சரி ஒரே மாதிரியான சூட்டில் உணவுவகைகள். கடைசி பந்திக்கு உட்கார்ந்தவர்களுக்கும் இலையில் எல்லா ஐட்டங்கள் இருந்தது. ஒரு ஐட்டம் பரிமாறும் அன்பர் வேறு ஐட்டம் தொடமாட்டார். இலையில் வைக்கப்படும் நான்காவது ஐட்டம் மாங்கா பச்சடியென்றால் அத்தனை 500, 600 இலையிலும் மா.பச்சடி தான் நான்காவது பண்டம் என்ற விதியை கடைபிடிக்கிறார்கள்.

சமையல்கட்டு பெரியதாக விசாலமாக இருந்தால்தான் அவ்வளவு பெரிய மெனுவுக்கு காண்ட்ராக்டே எடுப்பார் பட்டப்பா. சமையலுக்காக கொல்லைப்புறம் வண்டி நிறைய விறகுக்கட்டைகள் வந்திறங்குவது, கீத்துக்கொட்டகையில் சாக்குப்பை சுற்றிய தவலையில் சாதம் வடிப்பது, பெரிய கடாயில் அப்பளம் பொறிப்பதெல்லாம் அந்தக்காலம். பட்டப்பாவின் மகன் பாலாஜி பயன்படுத்துவது எல்லாமே நவீன சமையல் எந்திரங்கள்.

ஒரு ட்ரேயில் 48 இட்லி வீதம் 10 ட்ரேக்களில் எட்டே நிமிடங்களில் வார்த்த 480 இட்லிகள் பந்திக்கு வந்துவிடுகிறது. நாற்பத்தைந்தே நிமிடங்களில் 50 கிலோ அரிசி வேகவைக்கும் ராட்சஸ குக்கர் மெஷின். நடுவே எக்ஸாஸ்ட் சிஸ்டமோ ஏதோ வேலை செய்யாமல் போக பட்டப்பா உடனே ஜாகையை பக்கத்துத்தெருவில் வேறொரு ஹாலுக்கு மாற்றி சில மணி நேரங்களிலேயே லட்டு மற்றும் சில இனிப்பு வகைகள் செய்து கொண்டுவந்துவிட்டார். ஒரே நேரத்தில் 10 பேர் சேர்ந்து வட்டமாக அமர்ந்துகொண்டு இரண்டு கைகளிலும் இரண்டிரண்டு லட்டுக்களை உருட்டித்தள்ளுகிறார்கள்.

பட்டப்பாவின் பில் செட்டில் செய்துவிட்டு அநேகமாக நாமும் காசி யாத்திரை செல்லவேண்டியிருக்கும். ஆனால் விஜய்க்கு மிகவும் திருப்தி... எவ்வளவு அதிகம் கொடுத்தாலும் பட்டப்பா சமையலின் சிறப்பே தனியாம்.

நடுவுல கொஞ்சம் எங்கள காணோம்:
நடுநடுவே நாங்கள் நங்கநல்லூரையும் சுற்றிப்பார்க்கத்தவறவில்லை. கல்யாணத்திற்கு முதல் நாள் நிச்சயதார்த்தத்துக்கு நடுவே கீழே வந்து எதிரே ஆஞ்சநேயர் கோவில் போனோம்.ஆஹா..பிரம்மாண்டமான கோவில். பிரகாரத்தைச்சுற்றி வரும்போதே நெய்ப்பொங்கல் வாசனை. வாசலில் தொன்னையில் கொடுத்தார்கள். வெளியே வந்து ஆட்டோ பிடித்து நாலு தெரு தள்ளி டாக்டர் மாலாவின் புதிய வீட்டிற்குப்போனோம். வாசக்கதவு தாள்ப்பாளில் இருந்து வாட்டர் டேங்க் வரை பஹ்ரைன் தினார் வாசனை.

கல்யாண மண்டபத்தைச்சுற்றி பூக்கடை, இளநீர், பூஜை சாமான்கள், ஜெராக்ஸ், போலீஸ்பூத், ஹோட்டல்கள், போட்டோ ஃப்ரேம் கடை, சினிமா சீ.டி கடைகள், ஆட்டோ ஸ்டாண்டு, கால் டாக்ஸி... பிசியான அந்த இடமே ஜே..ஜேயென கூட்டம். நங்கநல்லூர் எங்கும் சீராக போடப்பட்ட புதிய ரோடுகள். கிட்டத்தட்ட மாம்பலம் மயிலாப்பூர் மாதிரியாகிவிட்டது ந.நல்லூர்.

பக்கத்தில் ஒரு டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து அந்த இடத்தை கொஞ்சநேரம் ரசித்துக்கொண்டிருந்தேன், கையில் பாய்லர் டீயும் கண்ணாடி பாட்டிலிலிருந்து எடுத்த பிஸ்கட்டுடன். கூட வந்திருந்த என் பையனுக்குப்பிடித்த பன்னீர் சோடாவும் கிடைத்தது...

மீன்டும் கல்யாண மண்டபம்..சில சுவாரஸ்யமான தகவல்கள்:

1. சுமார் 6 மாதங்கள் முன்பே ட்ரெஸ், சுடிதார் புடவை வகைகளை 'பாலம் சில்க்' கடையில் உட்கார்ந்தவாறே கத்தார் மற்றும் மற்ற இடங்களிலுள்ள நண்பர்கள்/உறவினர்களுக்கு வாட்ஸ்ஆப் மற்றும் ஸ்கைப்பில் அனுப்பி அவர்கள் விரும்பியபடி தேர்ந்தெடுத்தார்களாம்.

2. கத்தாரில் நூற்றுக்கும் மேல் மற்றும் பஹ்ரைனில் 60, 70க்கும் மேல் குடும்பங்களுக்கு பத்திரிகை வைத்ததில் மொத்தம் 160 பேருக்கு மேல் வந்திருந்தார்கள். வரமுடியாதவர்களின் வயதான பெற்றோர்கள் உள்ளூரிலிருந்து வந்திருந்து சிறப்பு.

3. விஜய்யின் சார்பாக சென்னையில் சரவணன் என்ற ஒரே நபர் எல்லா தொடர்புகள் மற்றும் உள்ளூர் வேலைகள் முழுவதும் மேற்பார்வை செய்து அவ்வப்போது விஜய்க்கு தகவல் அனுப்பி எல்லா வேலைகளையும் கச்சிதமாக முடித்ததில் இரண்டு லட்சத்துக்கு மேல் செலவு மிச்சமாம்.

4. கல்யாணத்துக்கு வேண்டிய பொருட்களின் லிஸ்ட், கிடைக்குமிடங்கள், பொறுப்பேற்ற நபர்கள், கைப்பேசி எண்கள், தேவையான பணம் அனைத்தையும் 4 மாதங்களுக்கு முன்பே தயார் செய்துவிட்டார் விஜய். ஃபாலோ-அப்புக்கு அவசியமே இல்லையாம்.

5. கல்யாணத்துக்கு 15 நாட்கள் முன்பிருந்து சுமார் 10 கார்கள் 16 மணி நேரம் புக் செய்யப்பட்டிருந்தனவாம். எல்லா டிரைவர்களுக்கும் புது துணிமணிகள் எடுத்திருந்தார் விஜய்.

6. அழைப்பிதழ் அனுப்பப்பட்டவர்கள் பெயர்ப்பட்டியலில் கணவன், மனைவி, குழந்தைகள், அவர்களுக்கான பரிசு பொருட்கள், வேட்டி, புடவை, கார் பிக்கப் என சகலமும்...

7. உள்ளூர் மற்றும் அமெரிக்கா, கனடா, அயர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து வந்திருந்த ராதா, விஜய்யின் சகோதரர்கள் குடும்பங்களிலிருந்து மொத்தம் 15 கசின்களை மீரா ஒன்று சேர்த்து, அறிமுகப்படுத்திக்கொண்டு எல்லோருடன் மண்டபத்திலேயே தங்கி எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர்களை பங்கு பெறச்செய்தது மிகப்பெரிய சாதனை.

8.மண்டப வாசலில் ஒரு அன்பர் மாதுளை, எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, கிரினிப்பழ வகைகளை மிக்ஸியில் பிழுந்து தள்ளி வெயிலுக்கு இதமாக நம் தொண்டையை நனைத்தார். காபிப்பிரியர்களுக்காக மண்டபத்தின் ஒரு ஓரத்தில் பில்டர் காபி...மண்டபத்தையே தூக்கியது.

9. பட்டப்பா அனுப்பிய ஒரு மாமி முதல் நாளே மண்டபம் வந்து எல்லா கோலங்கள் போட்டுவிட்டுப்போனாராம். BE படித்து ஆக்செஞ்ச்சரில் ட்ரெய்னிக்கு கிடைக்கும் முதல் சம்பளத்துக்கு சற்றே குறைவான தொகை அந்த மாமிக்கு கொடுக்கப்பட்டதாம். ஆனால் கோலம் படு க்ளாஸ்..வாத்யார் கேட்ட நேரத்துக்கு வந்து நேர்த்தியாக கோலம் போட்டுவிட்டுப்போனார்.

10. சாப்பாட்டு பந்தி டேபிளில் இலைக்குக்கீழே நீண்ட காகித ரோல் போடப்பட்டிருந்தது. எல்லோரும் சாப்பிட்டவுடன் பெரியவர் ஒருவர் வந்து பேப்பர் ரோலுடன் சாப்பிட்ட இலைகளை முக்கோணமாக சமோசா மடிப்பது மாதிரி மடித்துக்கொண்டே போய் கடைசியில் ஒரே ஒரு பொட்டலமாக வெளியே கொண்டு போனது அட்டகாசம். பெரிய வாளி கொண்டுவந்து சாப்பிட்ட இலைகளை இழுக்கும்போது சிந்தும் ரசம் மோர் பாயசம் போன்ற பிரச்னைகளில்லை.அதையும் நின்று கொஞ்சநேரம் வேடிக்கை பார்த்தோம்.

11.மணமக்கள் அமர்ந்து செய்யும் நலங்கு நிகழ்ச்சிக்கான பட்டுப்பாய் பாரிஸ் கார்னர் 'கரீம் பாய்ஸ்' இடம் வாங்கியதாம். ரொம்ப ஆவி வந்த கடையென சொல்லும் அளவிற்கு அவ்வளவு ராசியாம்.. அருமையான குடும்பத்தவர்களாம். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பாரப்பரியமிக்க பட்டுப்பாய்களை கும்பகோணத்தில் தயாரிக்கிறார்கள். இரு குத்துவிளக்குகள், நடுவே மயில், மற்றும் மணமக்கள் பெயர்களுடன் நெய்த பட்டுப்பாய்க்கு 40 நாட்கள் முன்பே ஆர்டர் கொடுக்கப்படவேண்டுமாம். 'கரீம் பாய்'- பட்டுப்பாய்... நல்ல மாட்ச்..

12. கல்யாணத்திற்கான மனைப்பலகை,உலோகமில்லாமல் முழுவதும் மரத்தால் (ரோஸ் வுட்) செய்யப்பட்டது பாரிஸ் மின்ட் ஸ்ட்ரீட்டில் வாங்கியதாம்.

13. விஜய் குடும்பத்தில், ப்ரியா 75 வருடங்கள் கழித்து பிறந்த முதல் பெண் குழந்தை என்பதால் இந்த நூறு ஆண்டுகளில் முதல் கண்ணிகாதானம் இது என்பது கவனிக்கத்தக்கது..பெரியவர்களின் ஆசிர்வாதமும் பூர்வஜென்ம புண்ணியம் தான் இது.

இந்த திருமணத்தில் கவனிக்கப்படவேண்டிய ஒன்று..யாருடைய முகத்
திலும் (குறிப்பாக ராதா, விஜய்) ஒரு பதற்றமோ, ஆங்ஸைட்டி எதுவுமில்லாமல், 'அதைக்காணோமே.. இங்குதான் வெச்சேன்.. போன் போட்டுக்கேளேன்' போன்ற வசனங்கள்.. ம்ஹும். சிரித்த முகத்துடனே எல்லோரையும் உபசரித்துக்கொண்டும், அவ்வப்போது 'சாப்டீங்களா... எல்லாம் நல்லா படியா இருக்கா' என ராதா விசாரித்துக்கொண்டிருந்தார். விஜய் வெளி வேலைகள் பார்த்துக்கொண்டதுபோல் ராதாவும் தன் பங்குக்கு நிறைய contribute செய்திருக்கிறார். வாழ்த்துக்கள் ராதா..

ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகள் திருமணத்தின் எல்லா வேலைகளிலும் பங்குகொண்டு முன்னின்று நடத்தும் அலாதியே தனி என நினைக்கிறார் விஜய். அதில் கிடைக்கும் மகிழ்ச்சி, திருப்தி, stress buster மற்றும் மன நிம்மதிக்கு ஈடு இணையே கிடையாதாம். மேலும் நமக்காக நம் பெற்றோர் இவ்வளவு செய்திருக்கிறார்களே என்ற நன்றி/கடமை உணர்வும் குழந்தைகளுக்கு ஏற்படும்... அந்த உணர்வு அடுத்த தலைமுறையினருக்கும் செல்ல வேண்டுமென்பது விஜய் ராதா இருவரின் விருப்பமாம். இப்பதிவைப்படிக்கும் எல்லா பெற்றோரும் இதை முழுமனதுடன் ஆமோதிப்பார்கள் விஜய்.

சுபம்:
வேதங்களே ஆதாரமான நமது ஸனாதன தர்மத்தை மனதில் கொண்டு, கூடியமான வரையில் எந்த கர்மாவையும் விடாமல் விஜய் ராதா தம்பதியினர் இக்கல்யாணத்தை நான்கு நாட்கள் விஸ்தாரமாக நடத்தியது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. முக்கியமாக இந்த விவாஹத்தில் வைதிக விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து நன்கு செலவழித்து வேதோக்தமான இந்நிகழ்ச்சியை யதோக்தமாக நடத்தி, வேத ப்ராஹ்மணர்களிடம் ஆசீர்வாதம் பல கட்டங்களில் வாங்கிக் கொண்டும், வேத மந்திரங்களுக்கும் ப்ரயோகங்களுக்கும் முதலிடம் தந்து எல்லோரும் எல்லா ச்ரேயசும் அடைய வேண்டியும், முக்கியமாக வந்திருந்தவர்களுக்கு நேராநேரத்திற்கு விதவிதமான பதார்த்தங்களால் விருந்தளித்து நடத்தப்பட்ட அமோகமான விவாஹம் இது. பாராட்டுக்கள் விஜய், ராதா & மீரா..

“வேத மார்க்கத்தில் வாழ்க்கையை நடத்துவதற்கும், வம்ச வ்ருத்தியின் பொருட்டும், அக்னி சாக்ஷியாக உன்னை கைப்பிடிக்கின்றேன்; எந்த கோபதாபங்கள் அல்லது சிரமங்கள் ஏற்பட்டாலும் உன்னை அவமானப்படுத்தமாட்டேன்; கைவிட மாட்டேன்; நமக்கு எல்லா தேவதைகளும் அருள் புரியட்டும்” என்று மந்த்ர பூர்வமாக, தனது வலது கரத்தினால் ப்ரியாவின் வலது கரத்தை பிடித்து ஶ்ரீவத்சன் (வாத்யார் சொல்லிக்கொடுக்க) சொன்ன 'பாணிக்ரஹனம்' நிகழ்ச்சியை அசைபோட்டவன்னம் தலா 2 கிலோ உடல் எடையைக்கூட்டிக்கொண்டு நாங்கள் மூட்டை முடிச்சுக்களுடன் கால் டாக்ஸி பிடித்து மயிலாப்பூர் உட்லண்ட்ஸுக்கு திரும்பினோம்