Thursday, September 5, 2013

பொளேர்,,, பொளேர்,,

இப்பவும் பனியன் போடும்போது முதுகுப்பக்கம் கொஞ்சம் லேசா வீங்கின மாதிரி ஒரு பிரமை எனக்கு…எல்லாம் ஸ்கூல் வாத்தியார் கிட்ட வாங்கின விழுப்புண்கள்.. திருச்சி புனித வளனார் பள்ளி (St Joseph's) காலை உள்ளே நுழைந்ததும் மாலை வரை ஒரு தனி உற்சாகம்…வாத்தியார்களை ஓட்டுவதில்..

"என்ன கெளவன்னு நெனைக்காதீங்க.. தொலைச்சுப்புடுவேன்" என்று தன்  சோடாபுட்டி கண்ணாடி வழியாக பார்த்து மிரட்டும் சவுரிராஜன் வாத்தியார் கிளாசில் நானும் தென்னூர் கவுன்சிலர் கிருஷ்ணனின் பையன் தனபாலும் 'where the mind is without fear' மற்றும் ‘palanquin bearers’ என்ற poemகளை மனப்பாடமாக சொல்லவில்லை என்று அடி வாங்கிய நாட்கள் பல.. 

முக்காவாசி கலாட்டா தமிழ் கிளாசில் தான். தமிழ் வாத்தியார் பரிமேலழகர் பாதி தூக்கத்தின் நடுவே .. 'பரஞ்சோதி! எங்க...'பொங்கு பல சமயமெனும்'  சொல்லு என்றதும், எழுந்து கை கட்டி 'பொங்கு பல' என்ற முதல் வார்த்தையை காட்டு கத்தலுடன் ஆரம்பித்து, பிறகு..$$.. ##..&&..@@..மண..மன.. லப..ளப... என்று மற்ற எல்லா வார்த்தைகளை முழுங்கி... கடைசியில்.. 'நீ அறியும் பூவே’  என்று அலறலுடன் முடித்து விஷமப்புன்னகையுடன் உட்காரும் பரஞ்சோதியை நாங்கள் பொறாமையுடன் பார்ப்போம். வெறும் மொத வார்த்தையும் கடைசி வார்த்த மட்டும் தெரிஞ்சிக்கிட்டு எப்பிடி சமாளிச்சிட்டான்' என்று வியந்த எங்களுக்கு. அந்த சாமர்த்தியம் இல்லாமல் முதுகு பழுத்தது தான் மிச்சம். வயலூர்/உய்யகொண்டான் திருமலை பகுதியில் இருந்து தினம் அந்த காலத்திலேயே டேரிகாட்டன் சட்டையுடன் வரும் பரஞ்சோதி 2011ல் ஜெயலலிதா அமைச்சரவையில் மந்திரியானான்(ர்). 

சயென்ஸ் வாத்தியார் தாமஸ் வகுப்பில் convex லென்சு வழியாக பார்க்கும்போது objects தலைகீழாக தெரியும் என்று வாத்தியார் விளக்கும்போதுசெந்தில் மாதிரி கட்டையாக சிறிய வேட்டியுடன் வகுப்பில் நுழையும் பியூன் அந்தோணியை காட்டி நாங்கள் 'அப்ப அந்தோனிய convex லென்சு வழியே தலைகீழா பார்த்தா வேட்டி கீழ எறங்கிடுமே ஸார்' என்று எழுந்து கேட்ட மறு நிமிடம் முதுகு பழுத்து விட்டது.  நாம் அடி வாங்கும்போது சக மாணவர்களுக்கு ஸ்கூலுக்கு வெளியே விற்கும் ஜிகர்தன்டா சர்பத் குடித்த திருப்தி.

'வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை' பாடலை நாங்கள் 'ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி ' மெட்டில் பாடிக்கொண்டிருக்கும்போது, பின்பக்கமாய் வந்து நின்று கொண்டு வாத்தியார் பார்ப்பது தெரியாமல், மாட்டிக்கொள்வோம். பிறகென்ன? பொளேர்..பொளேர் தான்...   

காலை ஸ்கூல் வாசலில் நிற்கும் ஹெட் மாஸ்டர் ஆரோக்யம் SJ அவர்களை 'ஸ்தோத்திரம் ஃபாதர்' என்று எல்லா மாணவர்களும் வணங்கும் போது நாங்கள் மட்டும் 'தோச தின்றோம் ஃபாதர்' என்று சொல்வோம். கூட்டத்தில் அவர் மலையாள காதுக்கு 'ஸ்தோத்திரம்’ என கேட்கும் என்ற நம்பிக்கை…    

தமிழ் புத்தகம் முழுவதும் பேனாவால் பெயர்களை திருத்தி எழுதுவது ஒரு விளையாட்டு. 'உமறு புலவர்' என்பதை 'திமுறு புலவர்' என்றும், 'திரு. கோ. வில்வபதி' என்ற அழகான பெயரை 'திருக்கோவில் விபூதி' என்று மாற்றி சக மாணவர்களுக்கு காட்டி மகிழும்போது  வாத்தியாரிடம் மாட்டிக்கொள்வோம். அவர் அதை பிடுங்கி சத்தமாக வாசித்து காட்டுவார். பிறகு 'பொளேர்' தான்.   

சிங்கராயன் ஸார் கிளாஸ் நடக்கும்போது பக்கத்து வகுப்பில் இருந்து மாணவன் ஒருவன் வந்து 'ஸார் என் அண்ணன் மணியை பார்க்கணும்' என அழைப்பான். வெளியே வந்த மணியிடம் அவன் தன் வாயிலிருந்து எடுத்த பாதி சாப்பிட்ட மீதி நெல்லிக்காயை கொடுப்பான். மணி லபக்கென்று வாயில் போட்டுக்கொள்வான். ' எங்க அம்மா தான் ஆளுக்கு பாதின்னு சொன்னாங்க ஸார்' என விளக்கம் வேறு.

'k' லாங்கூவேஜ் அப்போது ரொம்ப பிரபலம். சீனி என்ற பெயரை      '-சீ -னீ 'என்று கற்றுக்கொண்டதும் முதல் வேலை எல்லா கெட்ட வார்த்தைகளும் 'k' லாங்குவெஜில் சொல்லிப்பார்ப்பது (வாத்தியார் பெயரையும் சேர்த்து)

'கிளைவ்ஸ் ஹாஸ்டல்' போலீஸ் தடியடி சம்பவம் சமயத்தில் அடிக்கடி ஸ்கூல் ஸ்ட்ரைக் நடக்கும். வகுப்பு நடக்கும்போது வெளியே மாணவர்கள் சத்தம் கேட்கும். அடுத்த சில நிமிடங்களில் ஹெட் மாஸ்டர் அறையிலிருந்து அவர் மைக்கை 'டொக்.டொக்' என்று தட்டுவது மேலே ஸ்பீக்கரில் கேட்டவுடனே கிளாஸ் முழுவதும் கடாமுடாவென  சத்தம்.. வேறென்ன மூட்டை கட்டுவோம். உள்ளுக்குள் சந்தோஷத்துடன் வாத்தியார் 'டேய்... இருங்கடா HM என்ன சொல்றாருன்னு கேப்போம்' என்று சொன்ன மறு நிமிடம் 'மாணவர்களே!... இன்று..' என்று HM ஆரம்பித்தால் போதும். முழு வகுப்பும் 'ஹோ' வென கூச்சல்....

PT கிளாஸ் எல்லோருக்கும் வயிற்றை கலக்கும். ஸ்ரீரங்கத்தில் இருந்து வரும் கிட்டப்பனும் கிராப்பட்டியில் இருந்து வரும் ஜானும் எடுத்த எடுப்பிலேயே பளார் என்று அறைவார்கள். PT கிளாசுக்குஎல்லோரும் கிளாசிலிருந்து கிளம்பி வரிசையாக கிரவுண்டுக்கு போகும்போது யாரும் பேசக்கூடாது என்பது சட்டம். கடைசியில் 2 வாத்தியார்களும் சைக்கிளில் வருவது தெரியாமல் நாங்கள் ஜாலியாக  'வாஸ்கோடகாமா... வென்ட் டு தி டிராமா... ஒப்பன்ட் ஹிஸ் பைஜாமா' என்று பாடிக்கொண்டே போகும்போது எங்களை பிடித்து  தனியாக முட்டி போட வைத்து லாடம் காட்டுவார்கள்.    
ஆசிரியர் தினமான இன்று வாத்தியார்களை நினைவுகூறுவதில் என்ன ஒரு மகிழ்ச்சி.. 


பி.குமேற்சொன்ன இத்தனை அட்டூழியங்களை எழுதத்தூண்டிய நம் வாத்தியார் சுஜாதாவை (மறக்க முடியுமா?.. அவர் ஸ்ரீரங்கத்தில் படிக்கும்போது வகுப்பில் சிறிய பிளேடை டெஸ்க்கில் சொருகிடொய்ங்..டொய்ங்என சப்தம் எழுப்பும்போது 'என்னடா சத்தம்' என்று வாத்தியார் கேட்டால் 'வண்டு ஸார்'...என்று சொல்வார்களாம்.