Sunday, December 7, 2014

பாபு

இந்தப்பக்கம் நிற்பவன் மூத்தவன்..
பாபு..பாம்பேவாசி. அந்தப்பக்கம் தம்பி.. ரவி, ஒமான்(Jani Vijay Raghavan) வருடத்திற்கு இருமுறை ஊருக்குப்போனாலும் சகோதரர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக சந்திப்பது அபூர்வம். கடந்த 2,3 வருடங்களாகத்தான் அம்மா, அப்பாவின் மறைவினால் நாங்கள் அடிக்கடி சந்திக்கிறோம். 

பெரியவன் பாபு பரமசாது,கூச்ச சுபாவமுள்ளவன். கொஞ்சம் வெகுளி. சின்னவன் ரவி அப்படியல்ல. அவன் ஏவியெம் ராஜன் மாதிரியென்றால் இவன் ஆனந்தராஜ்.

சின்ன வயதில் பாபு ரொம்ப கண்டிப்பானவனா இருப்பான். எங்கள் இருவருக்கும் அவனிடத்தில் கொஞ்சம் பயம். ரெண்டு தடவை திட்டுவான். மூன்றாவது தடவை பளார் தான்.

70 களில் திருச்சி தென்னூர் ஜெனரல் பஜார் தெருவில் இருந்தோம். ஏதாவது கலியாணமென்றால் லௌட் ஸ்பீக்கரில் 'ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன் (மாணிக்கத்தொட்டில்)... கேட்டுக்கோடி உறுமி மேளம்..(ப.பா)... ' என பாடல்களும் முழு சினிமாப்பட வசனம் ஓடிக்கொண்டிருக்கும். படம் பார்க்காமலேயே வசனங்கள் எங்களுக்கு அத்துப்படி. அடிக்கடி சினிமாவும் போவோம். பேலஸ் தியேட்டரில் 'கோமாதா என் குலமாதா', அருணா தியேட்டரில் 'பாபி', ராமகிருஷ்ணாவில் 'சிரித்து வாழ வேண்டும்', பத்மாமணியில் 'தீபம்', ஜுபிடரில் 'நீதிக்குத்தலை வணங்கு'.. என எக்கச்சக்கமான படங்கள்.

ராக்ஸி வெலிங்டனில் பட்டிக்காடா பட்டனமா படத்துக்கு ஒரு நாள் எங்களை கூட்டிப்போனான் பாபு. சரியான கூட்டம். ஐம்பது பைசா டிக்கட் கியூவில் நாங்கள் முன்னால் நின்றாலும் கவுன்ட்டர் திறந்தவுடன் திடீரென வரிசை கடைசியிலிருப்பவர்கள் மேலே ஏறி நம் தலைக்கு மேல் இருக்கும் இரும்புக்கம்பியை பிடித்துக்கொண்டு பல்லி மாதிரி தலைகீழாய் ஊர்ந்து முன்னால் வர, "டாய்.. எறங்குடா.." வென கூச்சல். கசகசவென கூட்டம், பீடி நாற்றம் எல்லாம் சேர்ந்துகொள்ள பாபுவுக்கு திடீரென மூச்சு முட்டி கண்கள் சொறுகி.. மயக்கம் வர, "பாபு..பாபு.." என நானும் ரவியும் கத்தினோம். " டேய்.. இவனுக்கு மயக்கம்டா..அடுத்த நிமிடம் வரிசையிலிருந்து வெளியேற்றப்பட்டோம். 'ச்சே..படம் பார்க்க வந்த சமயத்திலயா இவனுக்கு மயக்கம் வந்துத்தொலையனும்?...சில நிமிடங்களில் அவனுக்கு குடிக்க தண்ணீரெல்லாம் கொடுத்ததும் எழுந்து உட்கார்ந்தான். 'அப்பாடா.. எந்திரிச்சுட்டான்..திரும்பவும் கியூவில் நிற்கலா'மென நாங்கள் நினைக்கும்போது ' வாங்கடா.. வீட்டுக்கு போலாம்' என எங்களை வெறுப்பேற்றி வீட்டுக்கு இழுத்துக்கொண்டு போனபோது ஈஸ்வரியின் 'ஓ..மை ஸ்வீட்டி.. ஓ குடுமி அங்கிள்..' பாட்டு மனதில் ஓடியது..

அந்தத்தெருவில் நாங்கள் குடிபோன புதிதில் சின்ன சைக்கிள் ஒரு மணி நேரம் வாடகைக்கு எடுத்து விடுவான் பாபு. எண்ணைக்கடைக்கார வீட்டுப்பையன்கள் இவன் சைக்கிள் சக்கரத்துக்குள் குச்சியை விட தபாலென இவன் கீழே விழுந்து ' ஏன்டா.. சைக்கிள் வீல்ல குச்சியை விட்டா சைக்கிள் எப்பர்றா ஓடும்' என வெகுளியாக கேட்க 'ஆஹா... கண்டுபிடிச்சுட்டார்யா..கொலம்பஸ்..' என கலாய்த்து அன்றிலிருந்து இவன் பெயரையே 'கொலம்பஸ்' ஆக்கினார்கள்.

அந்த வெகுளித்தனம் அவனுக்கு கல்யாணம் ஆகியும் போகவில்லை. 90இல் (பம்பாய்-முலுன்டு) இவனது குழந்தையின் மூன்றாவது பிறந்த நாளன்று அக்கம்பக்கத்து சின்னக்குழந்தைகள் சப்பிட வரிசையாக தரையில் உட்கார்ந்ததும், அண்ணி 'ஏங்க.. குழந்தைங்களுக்கு இட்லி வைங்க' என சொன்னதுதான் தாமதம், மூன்று, நான்கே வயதான குழந்தைகள் எல்லோருடைய தட்டிலும் மூன்று மூன்று இட்லி மற்றும் பெரிய சாம்பார் கரண்டியால் சட்னியை ஊத்தி, எல்லா ஐட்டங்களையும் ஒரே பந்தியில் காலி செய்து மனைவியிடம் வாங்கிக்கட்டிக்கொண்டான்.

பாபு படிப்பில் மட்டும் எப்போதும் பயங்கர புலி. ஆனால் தீபாவளியன்று நானும் ரவியும் பாம்பு மாத்திரை விடும்போது இவன் மட்டும் புத்தகத்தை வைத்து படித்துக்கொண்டு எங்களை கடுப்பேத்துவான்.

கான்பூர் யுனிவர்சிட்டியில் இளங்கலை பாட்டனி மற்றும் எம்.ஏ படித்து குடும்ப சூழ்நிலையால் பாங்க் எக்ஸாம் எழுதி சீக்கிரம் வேலைக்குப்போனாலும், உடனே சென்னைக்கு மாற்றிக்கொண்டு வந்தவுடன், ராவ்ஸ் கோச்சிங் இன்ஸ்டிட்டியூட்டில் சேர்ந்து சிவில் சர்வீஸ் (IAS & IPS) தேர்வுக்கு கடுமையாக உழைத்து, ப்ரிலிமினரி மற்றும் மெயின் பரிட்சைகள் பாஸ் செய்து டெல்லி இன்டர்வியூ வரை போய், 961வது ராங்க் வாங்கி சுமார் 15 ராங்க்குகள் பின் தங்கியதால் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகும் அருமையான வாய்ப்பை இழந்தான்.

பின் பம்பாயில் ரிசர்வ் வங்கியில் வேலை செய்து கொண்டு ஒரே அட்டெம்ட்டில் ICWA ஃபைனல், பின் CFA போன்ற படிப்புகளை அசால்ட்டாக பாஸ் செய்து MBAவும் முடித்து பம்பாய் பங்கு மார்க்கெட்டுக்குத்தாவினான்..ஆனாலும் அதே வெகுளித்தனத்துடன்..

சென்ற மாதம் நாங்கள் மூவரும் திருச்சியில் எங்கள் ஒரே சகோதரி Hemalatha Manoharவீட்டில் கூடினோம். அம்மாவுக்கு முதல் வருட ஸ்ராத்தம்.. வழக்கம்போல வீட்டில் ஒரே அரட்டை..சின்ன வயசில் எவ்வளவு வெகுளியாக இருப்பாய் நீ என பாபுவை கேலி செய்துகொண்டிருந்தோம்.

பூஜைக்கு நேரமாகவே புரோகிதர் 'மூத்தவர் வந்து மொத ஒக்காருங்க' என இவனைக்கூப்பிட்டு, 'சட்டைய கழட்டீட்டு இடுப்புல துண்டை சுத்துங்கோ' என சொன்னவுடன் 'அப்ப வேஷ்டி?' எனக்கேட்டு சாஸ்திரிகளையே கலங்கடித்தான்.

ராமசாமி தாத்தா…


'ரேய்.. ஸ்ரீதர்.. ரேப்பு தாத்த (தாத்தா) ஒஸ்தாரு... தெலுசுனா..' என நைனா கேட்டதும் எனக்கும் தம்பி ரவிக்கும்  ஒரே சந்தோஷம். தாத்தாவுடன் அரட்டை அடிப்பது, அவரை சத்தாய்ப்பது என்பது எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அந்த தெருவில் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோருக்கும் தாத்தாவைத்தெரியும்.
1973.. திருச்சி தென்னூர் பட்டாபிராம் பிள்ளைத்தெருவை ஒட்டிய ஜெனரல் பஜார் தெருவின் ஒரு பகுதியான சிறிய சந்து தான் பென்ஷனர்கார தெருவு. மொத்தமே 40 வீடுகள், எண்ணெய்க்கடைக்காரர்கள் வீட்டிலிருந்து வரும் 'ஞீஈஈ....' யென செக்கு சுற்றும் சப்தமும் நல்லெண்ணை வாசனையும், பள்ளிவாசலில் பாங்கு ஓதும் சத்தமும், அடுத்த தெரு மன்னான்பாய் வீட்டுக்கல்யாணத்திலிருந்து ஷைலேந்தரின் இனிமையான குரலில் "பாஹர்ஸெ கொய் அந்தர் நா ஆசக்கே.."யைத்தொடர்ந்து வரும் அக்கார்டியன் இசையும் ...ரம்மியமான சூழ்நிலை.
சூம்பிய போலியோ கால்களுக்கு இரு பக்கமும் கக்கத்தில் வைத்த கட்டைகளை ஊன்றியவாறு கார் ஹாரன் ரிப்பேர் செய்யும் பாஷா வீட்டு திண்ணையில் அன்று காலை கவுன்சிலர் கிருஷ்ணன் வெத்திலை சீவல் போட்டவாறு அரை மணி நேரம் பேசிவிட்டுப்போனால் அன்று மாலைக்குள் ஃப்யூஸ் போன பல்புகள் மாற்றப்பட்டு தெரு விளக்குகள் பளிச்சென்று எரியும்.
ஏழெட்டு வீடுகள் தள்ளி தர்கா..சந்து என்று தான் பேர்.. எப்போதும் ஆள் நடமாட்டம்…. விடியற்காலையில் ‘குடுகுடு’(ப்பைக்காரன்),.. "மா.. கத்தரிக்கா, முருங்கக்கா, வெண்டிக்கா.." சப்தங்கள்.. 8 மணிக்கு "புட்டு.. இடியாப்பேய்..." அடுத்து "முறுக்கு... அதிரச... சுண்டல் வடேய்...." பிறகு பரங்கிக்காய் தம்புராவை மீட்டியபடி நெற்றியில் நாமம், முண்டாசு கட்டி வரும் ஜோசியக்காரர்கள்.. நெற்றி நிறைய பொட்டுடன் வரும் குறி சொல்லும் பெண்கள்..மற்றும் 'பளய இரும்புக்கு பேரீச்சம்பளேய்ய்..'
தொன்னூறு ரூபாய் வாடகைக்கு ஓரளவு வசதியானது எங்கள் வீடு. மண்சுவற்றில் கட்டிய பழைய ஓட்டு வீடு. மாதாமாதம் பீமநகரில் இருந்து வாடகை வசூலிக்க வரும் வீட்டுக்காரம்மா சுலேகா பீவியிடம் 'மழ வந்துச்சுன்னா வீடு ஒழுகுதுங்க' என சொன்னால் உடனே ஓரிரண்டு ஓடுகளை மாற்றி சரி செய்து விடுவார்..
வாசலில் மூங்கில் தட்டிக்கதவு. அடுத்து முன்புறம் திண்ணை.. ஒரு ஆள் கால் நீட்டி படுக்கலாம். பக்கத்தில் அடுப்பெறிக்க கருவேலமர விறகுக்கட்டைகள்.. . அதற்கடுத்து ஒரு சின்ன ரூம், சாமி ரூம், பெரிய பட்டாசாலை மற்றும் பொய்க்காட(அடுப்படி). கொல்லைப்புறம் தொட்டியில் தண்ணீர் ரொப்பியிருக்கும். பக்கத்தில் துணி துவைக்கும் கல் மற்றும் விளக்குமாற்றுக்குச்சி குத்திய சன்லைட் சோப், பெண்களுக்கு மட்டும் குளியலறை.. தினமும் காலை கூடையில் சாம்பல் மற்றும் தகரம் சகிதம் மலம் அள்ளவரும் கக்கூஸ்காரி உள்ளே வர பின்பக்க கதவு.. ரோட்டின் இரு புறமும் மோரி (சாக்கடை)..
இளமைக்காலத்தில் அதிக வருடங்கள் நாங்கள் கழித்தது அந்த தெருவில் தான். "ம்மா... கஞ்சி!" என மூலைக்கொல்லைத்தெருவில் இருந்து தினமும் தன் ஆடுகளுக்கு ஊற்ற வீடு வீடாக கஞ்சி வாங்க வரும் ஜமாலி அம்மாவின் குரல் கேட்டால் மணி பதினொன்று என அர்த்தம். "கண்ணை நம்பாதே..உன்னை ஏமாற்றும்".. TMS குரல் டிரான்சிஸ்டரில் ஒலிக்க பாடலை கேட்டவாறு வீடுகளில் பெண்கள் பீடி சுற்றுவார்கள்.
வீட்டுக்குப்பின்னால் கோடை காலத்தில் மட்டும் சலசலவென நீரோடும் உய்யகொண்டான் வாய்க்கால்... 'சித்தி' ஜெமினி கணேசன் (வெற்றுடம்புடன் 'பொத்தக்'கென குதித்து 'தண்ணீர் சுடுவதென்ன' பாடுவாரே!) மாதிரி நாங்களும் தண்ணீரில் குதித்து ஆட்டம் போடுவோம்.
நாலைந்து வீடுகள் தள்ளி வசிக்கும் ஆட்டோ டிரைவர் பண்டரிநாதன் தெருமுனைகுழாயில் இரண்டு பக்கெட்டுகளில் தண்ணீர் பிடித்து அவசரமாக வீட்டுக்கு ஓடுவார். துருபிடித்த வாளியின் ஓரங்கள் காலில் சிராய்த்துவிடாமல் இருக்க கையை கொஞ்சம் அகட்டியவாறு பக்குவமாக தண்ணீர் கொண்டுபோகும் அவரை, வெள்ளை ஜிப்‌பா பெந்தகொஸ்தேக்காரர் வழி மறித்து ' பிரதர்... நாளை உலகம் அழியப்போகுது.. உங்களை சுவிசேஷப்பாதையில் அழைத்துச்செல்ல தேவன் இதோ வருகிறார்' என சொல்லும்போதே துருப்பிடித்த வாளியின் ஓரம் பண்டரிநாதன் காலை கிழிக்க, மண்டைவரை ஜிவ்வென்று ரத்தம் ஏறி அவர் 'நீ மொத போய்க்கோய்யா.. சுவிசேஷப்பாதைக்கு நாங்க அப்பறமா வர்றோம்' என காட்டுக்கத்தல் போடுவார்.
ஊரிலிருந்து தாத்தா வருவதாக சொன்னேன் இல்லையா? தாத்தாவை யாராவது உடுமலை பேட்டையில் பஸ் ஏற்றிவிட்டால் தனியாக திருச்சி பஸ் ஸ்டாண்ட் வந்து விடுவார்.
ராமசாமி தாத்தாவைப்பற்றி....
உடுமலை, தாராபுரம், ஈரோடு, கோவை பகுதிகளில் தெலுங்கர்கள் அதிகம். எங்களுக்கு அப்பகுதிகளில் நிறைய ஒரம்பரை. தாத்தா பல வருடங்கள் முன்பு உடுமையில் உரிமையியல் (ஸிவில்) வழக்குகள் நடக்கும் மாவட்ட முன்சீஃப் கோர்ட்டில் வக்கீல் குமாஸ்தாவாக இருந்தவர். பத்திரம் அருமையாக எழுதுவார். நல்ல வருமானம். விருப்ப ஆவணம் (உயில்), அதன் இணைப்புத்தாள்கள் (Codicil), இந்து வாரிசு உரிமைச் சட்டம், உயில் எழுதாமல் இறந்து போனவரின் (Intestate)வாரிசு உரிமை .. என எல்லா சட்ட விபரங்களும் அவருக்கு விரல் நுனியில். கிடைக்கும் வருமானத்தில் சிக்கனமாக இருப்பார். அப்பப்ப கொஞ்சம் வட்டிக்கும் கொடுப்பார். இன்டிக்கி பாடிகை லேது.. ஓத்திக்கு எடுப்பார்.
அவருக்கு 4 பையன்கள். அவ்வா ஆண்டாளம்மாவுக்கு கடைசி பையனான எங்க நைனா மீது அலாதி பிரியமாம். சின்ன பையனான நைனா கையை பிடித்தவாறே புற்று நோயால் அவ்வா இறக்கும்போது கையை பிரிக்க முடியவில்லையாம். அப்போ நைனாவுக்கு கல்யாணமான புதிது. பெத்த கோடாளு (மூத்த மருமகள்கள்) நீலா, தனம் மற்றும் சேசு பெத்தம்மா தான் குடும்பத்தை நடத்தியவர்கள். கூட்டுக்குடும்பம். கடைசி மருமகளான என் அம்மா, வீட்டு வேலைக்கு அவர்களுக்கு உதவியாக இருந்தார்கள். தினமும் வடித்த சாப்பாட்டுக்கஞ்சியை கீழே கொட்டாமல் குளியலறையில் ஒரு வாளியில் கொட்டுவார்களாம். படுக்கும் முன் இரவில் ஆண்கள் எல்லோரும் தத்தம் அன்டர்வேரை அந்த கஞ்சியில் போட்டுவிட்டால் காலையில் துவைத்து உலர்த்துவது அம்மாவின் வேலை. பெரிதாக பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்தவர்கள்.
நைனா எஸ்செஸ்செல்சி வரை படித்து விட்டு சும்மா ஊர் சுற்றிக்கொண்டிருந்ததால், தாத்தா யாரையோ பிடித்து அதே கோர்ட்டில் பெஞ்சு கிளார்க் வேலை வாங்கிக்கொடுத்தார். மாஜிஸ்டிரேட்டுக்கு கீழே தனியாக யாரோ சின்ன பையன் உட்காந்திருக்கானே என எல்லோரும் நைனாவை ஆச்சரியத்துடன் பார்ப்பார்களாம்.
பையன் படு சுறுசுறுப்பு.. மாஜிஸ்டிரேட் பெட்டியை தூக்குவது, நீதி மன்றத்தின் தினப்படி அட்டவணைப்படி வழக்கு எண்களை தயாரிப்பது, கோர்ட்ஆவணங்கள், தஸ்தாவேஜுக்கள், கோர்ட் சீல் அனைத்தும் பெஞ்சுகிளார்க் வசம் தான். வக்கீல் மற்றும் சாட்சிக்காரர்கள் கூண்டில் ஏறியவுடன் சத்தியப்பிரமாணம் எடுக்க அவர்கள் முன் சின்ன பையனாக இவர் போய் நின்றால் 'ஒரேய்..எவரு ரா நுவ்வு.. சின்ன பின்னோடு' என முறைப்பார்களாம்.
வழக்குகளின் போது 'கோவிந்தராஜுலு…கோவிந்தராஜுலு…கோவிந்தராஜுலு’ என பெயர்களை மூன்று முறை சத்தமாக விளிக்கும் இவர், ஒரு நாள்'சீதாபதி..சீதாபதி..சீதாபதி' என தன் பேரையே உரக்க கூவி விட்டு மறுகணம் கூண்டில் ஏறி நின்று விட, யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. பிறகு தான் தெரிந்தது சைக்கிளில் விளக்கு இல்லாமல் போன மாதிரி ஏதோ ஒருசின்ன குற்றத்துக்கு இவர் மேலேயே வழக்கு பதிவாகியிருந்ததென்று. ஜட்ஜ் சிரித்துக்கொண்டே இவரை மன்னித்து விட்டாராம்.
ஆச்சு.. தாத்தா நாளை வர்றார்..
நைனா திருச்சி பஸ் ஸ்டாண்ட் போய்ச்சேரும்போது எப்போதோ பஸ் வந்து சேர்ந்து தாத்தாவை யாரோ கீழே இறக்கி விட்டிருக்கிறார்கள். 80 வயசுக்கு மேல் இருக்கும் தாத்தாவை 'குர்ரம்பண்டி'யில் ஏற்றி பின்னாலேயே நைனா சைக்கிளில் வீடு வந்து சேர்ந்துவிட்டார்.
தாத்தா நல்ல சிவப்பு. வெள்ளைக்காரன் மாதிரி பச்சைக்கண்கள். (நைனாவுக்கும் தான்).. நரம்புத்தளர்ச்சியால் தலை எப்போதும் 'சரி.. சரி..' என சொல்வது போல் ஆடிக்கொண்டிருக்கும். நாங்களும் அவரிடம் பேசும்போது அவரை மாதிரியே தலையை ஆட்டி பேசுவது கண்டு ' அட்ரா.. பொட்டி மவனே' என செல்லமாய் அடிக்க வருவார். கன்னத்தில் 50 பைசா நாணய அளவு 'வில்லன் மனோகர்' மச்சம். வழுக்கையில்லாத வெள்ளை முடி… அத்வானி மாதிரி மேலுதட்டத்தின் நுனியில் ஓட்டிக்கொண்டிருக்கும் வெள்ளைப்பஞ்சு மீசை. காமராஜர் கணக்கா பெரிய சட்டை. உள்ளே பருத்தித்துணியால் தைத்த முண்டா பனியன் மற்றும் பை வைத்த கால்சராய்.
சட்டைப்பையில் சிறிய பொடி மட்டை மற்றும் ஒரு டப்பாவில் நாமக்கட்டி, சூரனம் மற்றும் வெள்ளிக்கம்பி… அவரது தோல் பையிலிருந்து நீலவட்ட வடிவ வெள்ளி தட்டு (சாப்பாட்டுக்கு), சிறிய நீலவட்ட தட்டு (தொட்டுக்கொள்ள) மற்றும் வெள்ளி தம்ளர் வெளியே எடுத்து அம்மாவிடம் கொடுப்பார். வயிற்று வலிக்கு கொஞ்சம் கடுக்காய்வைத்திருப்பார்.
முழு தினமும் அவருக்கு திண்ணையில் தான் வாசம். காலை 6 மணிக்கு எழுந்ததும் படுக்கையிலேயே சில நிமிடங்கள் ஏதோ ஸ்லோகம் சொல்வார். பின் வேடி நீளு (சுடுதண்ணி) குடித்து அடுத்த பத்தே நிமிடத்தில் காலைக்கடன்... 9 மணிக்கு எழுந்து ஸ்நானஞ்சேசி கோசியை (கோமணத்தை) அலசி காயப்போட்டபின் உள்ளே வந்து நாமக்கட்டியை குழைத்து நெற்றியில் பெரிய திருமண்னிட்டு, சில நிமிடங்கள் உட்கார்ந்தவாறே பெருமாளை சேவித்து சரியாக நாலே இட்டிலியுடன் முடித்துக்கொண்டு திண்ணைக்கு வந்துவிடுவார்..
வாசல் கதவு மூங்கில் தட்டியின் நிழல் தரையில் விழும் இடத்தை சாக்கட்டியில் குறித்து வைத்துக்கொண்டு, தினமும் கடிகாரமில்லாமல் 10,11,12 மணியென தெரிந்துகொண்டு டான்னென்று பகல் ஒரு மணிக்கு சாப்பிட எழுந்துவிடுவார்.
ஊரிலிருந்து வரும்போதே பத்திரம் எழுதும் வேலையை கொண்டு வந்துவிடுவார். பகலில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் மற்ற வழக்கறிஞர்களுக்காக உயில் போன்ற சாசனங்கள் எழுதுவார். “உயில் என்பது ஒருவர் இறப்பதற்கு முன்னர், தனது சொத்துக்களை தனது விருப்பப்படி, தனக்குப்பிடித்த நபருக்கு ஏற்படும் உரிமை குறித்து எழுதப்படும் ஆவணம்.. அந்த நபர் இறந்ததும் சொத்துக்கள் பிரிவினை தொடர்பாக , தாவாக்கள், வழக்குகள், சண்டைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக எழுதி வைக்கப்படுகிற ஆவணமாகும். வெறுமனே சொத்தைப் பிரிப்பதற்கும், பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் மட்டும் எழுதப்படும் ஆவணம் அல்ல. உயில் எழுதுபவரின் மனநிலை, ஆசை, விருப்பம், பிறரின் மேல் உள்ள அன்பு போன்ற உள்ளுணர்வுகளையும் விளக்கும் உணர்வுப்பூர்வமான சாதனம் அது” என எங்களுக்கு நீண்ட விளக்கமளிப்பார் தாத்தா.
சொல்ல வந்த வாக்கியத்தை கடேசி வரை நீட்டி மூச்சுமுடியும் வரை சொல்ல எத்தனித்து கடைசி இரண்டு மூன்று வார்த்தைகளை கஷ்டப்பட்டு முடிப்பார். போதாதா எங்களுக்கு! நாங்களும் அவரை மாதிரியே'தாத்தா.. உள்ள சாப்பாடு வெச்சிருக்கு.. கைய கழுவிட்டுசா..ப்..பி..ட...வா..ங்..க..' என மூச்சு முட்டும் வரை பேசிஅவரை கலாய்ப்போம்.
இரவு உணவுக்குப்பின் அவர் படுக்கையை தின்னையில்விரித்து, மேலே மெத்தையை போட்டு, நான்கு பக்கமும்சுவற்றில் உள்ள ஆனியில் கொசுவலையை கட்டி, படுக்கையின் நான்கு பக்கங்களிலும் அடியில்கொசுவலையை சொருகி எல்லாம் தயார் செய்யும் வரை நாங்களிருவரும் பொறுமையாக படித்துக்கொண்டிருப்பது போல பாவ்லாகாட்டுவோம். அவர் மெல்ல எழுந்து புழக்கடைப்பக்கம் பாத்ரூம் போனவுடன் நாங்கள் சடாரென குதித்தெழுந்து ஓடி வந்து கடகடவென கொசுவலையை ஆனியிலிருந்து பிடுங்கி மடித்து, மெத்தை மற்றும் பாயை பழையபடி சுருட்டி உள்ளே அறையில் போட்டு விட்டு மீன்டும் படித்துக்கொண்டிருப்பது போல பாசாங்கு செய்யும்போது தாத்தா திரும்பி வருவார். வெற்றிடத்தைப்பார்த்து ' படுக்கையை இப்பத்தான் விரிச்சுட்டுப்போனோமா.. இல்ல..நேத்து விரிச்ச மாதிரி ஞாபகமா' வென அவர் குழம்பி மெதுவாக திரும்பி எங்களை பார்ப்பார். சிரிப்பை அடக்க முடியாமல் ஹே.. வென பெருங்கூச்சலிட்டு சிரிப்போம். நைனா தாத்தாவிடம் அதிகம் பேச மாட்டார். ஆனாலும் நாங்கள் தாத்தாவை கலாட்டா செய்வது கண்டு ரசிப்பார்.
உயில் மற்றும் பத்திரங்கள் எழுத சில சமயம் எங்களையும் துணைக்கழைப்பார் தாத்தா. கை அவருக்கு நடுங்குவதால் அவர் சொல்ல சொல்ல நாங்கள் எழுதுவோம். “U.R. நாதமுனி நாயுடுவின் புதல்வனான N.சாரங்கபாணி நாயுடு ஆகிய நான் என்னுடைய சுய புத்தியுடனும், பூரண ஞாபக சக்தியுடனும், யாருடைய தூண்டுதலுமின்றி எழுதி வைக்கும் உயில் சாசனமாவது'' என அவர் சொல்ல ஆரம்பித்தால் கிட்டத்தட்ட ஓரிரண்டு மணி நேரங்கள் போகும்.
நடுநடுவே இந்தப்பக்கம் அந்தப்பக்கம் என பக்கவாட்டில் சாய்ந்து வயிற்றிலிருந்து வாயுவை பெருஞ்சத்தத்துடன் அவர் வெளியேற்றும் போது நாங்கள்'கெக்கெக்கே'வென விழுந்து விழுந்து சிரிப்பது கண்டு கோபித்துக்கொள்ள மாட்டார் . “ஆ காடுக்காயனி இக்கட கொன்ராப்‌பா..(அந்தகாடுக்காய இங்க கொண்டு வாப்பா!) சரியா வெளிக்கி போவலையாட்ருக்கு”.. "காலையில்இஞ்சி...நண்பகல் சுக்கு..மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண.. கோலை ஊன்றி குழைந்து நடந்தவர் கோலை வீசி குலாவி நடப்பரே..''- என்று சித்தமருத்துவப் பாடலை முனுமுனுத்தவாறே வாயில் காடுக்காய்த்தூளை போட்டுக்கொள்வார்.. சின்ன உபாதையென்றாலும் உடனே அதற்கான இயற்கை மருந்தினை எடுத்துக்கொள்வார். மற்றபடி மருத்துவரிடம் போனதே கிடையாது.
ஆச்சு.. தாத்தா உடுமலைக்கு ஒரு நாள் திரும்பிப்போனார். அடுத்து சில நாட்களில் யாரையும் கேட்காமல் தான் சாம்பாரித்த வீடு, பணம் மற்றும் நிலங்களை பிள்ளைகளுக்கு பிரித்துக்கொடுத்து அதற்கான தஸ்தாவேஜுக்கள், பத்திரத்தாள் அனைத்தையும் தயாரித்து சட்டப்படி தன் வாரிசுகளுக்கு பாத்தியதை செய்து கொடுத்து விட்டார்.
' சொத்துக்களை பிரிக்காமே உயில மட்டும் எழுதறத உட்டுட்டு…இப்புடு ஏமி அவசரம் நாயனா?!' என சிலர் கேட்டே விட்டார்கள். கடைசி வரை தான் செய்தது சரியென்றே நம்பினார் தாத்தா.
அடுத்த ஓரிரு வருடங்களில் அவருக்கு வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஆரம்பமாகி 87 வருடங்கள் மருத்துவரிடம் போகாத அவரை ஆசுபத்திரியில் சேர்த்து சட்டென்று போய்ச்சேர்ந்து விட்டார்.
“இருப்பது கையளவு சொத்துதான் என்றாலும் எதிர்காலத்தில் யாரும் அதற்காகச்சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. உயில் என்பதே உறவுகளைச்சிதறவிடாமல் பார்த்துக்கொள்ளும் கவசம்தான். அதைச்சரியாக பயன்படுத்தியிருக்கும் குடும்பங்களில் எந்தச் சிக்கலும் வருவதில்லை. எனவே, முறையாக உயில் எழுதி வையுங்கள்” என அடிக்கடிசொல்லும் தாத்தா எதற்காக தான் மட்டும் உயில் எழுதாமல் இறப்பதற்கு முன் சொத்துக்களை பிரித்துக்கொடுத்தார் என்பது விளங்காத புதிர். ஒரு சமயம் உயில் மட்டும் எழுதிவைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் வருடம் உயிரோடிருந்திருப்பாரோ!
யாரிடமோ அவர் இப்படி சொல்லியிருந்ததாக சில நாட்கள் கழித்து எங்களுக்கு தெரிந்தது ' நா மரனாந்தரம் நா பில்லலு ஆஸ்தி கோசம் கோர்ட், கேஸ்ஸூன்னி போத்தாரா தெலிது.. நேனு மரனீஞ்சிலோப்பே ஆஸ்தினீ பஞ்சதம் சேசி வாளு ஆனந்தம்கா கலிசி உன்னாரன்டே நாக்கு சந்தோஷம் காதா?’(எனது மரணத்திற்குப்பிறகு சொத்துக்காக என் பிள்ளைகள் கோர்ட் வாசலை மிதிப்பார்களா தெரியாது.. அதனால் என் மரணத்திற்கு முன்பே ஆஸ்தியை பிரித்துக்கொடுத்து அவர்கள் ஒற்றுமையாக இருப்பதை பார்ப்பது எனக்கு சந்தோஷம் தானே?)
ராமசாமி தாத்தா இறந்தவுடன் அவரது பழைய தோல்ப்பையில் கண்டவை : வெள்ளி சாப்பாட்டுத்தட்டு, வெள்ளி தம்ளர், நாமக்கட்டி, மற்றும் சுடுகாட்டுச்செலவுக்கு கொஞ்சம் பணம்….
(ராமசாமி சீதாபதி ஶ்ரீதர்)