Wednesday, August 13, 2014

பக்ரீனா...சார்ஜாவா...அபிதாயியா..

சென்ற மாதம் விடுமுறைக்காக பஹ்ரைனிலிருந்து நான் சென்னை வந்திருந்தது தெரிந்ததே.. (ரொம்ப தினத்தந்தி படிச்சா இப்பிடித்தான்) ஆனால் அபுதாபி வழியாக மட்டும் இனி வரக்கூடாதென முடிவெடுத்துவிட்டோம். 

அபுதாபி நேரம் இரவு 9 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் ஒரு மணி நேரம் தாமதம். சரி.. கிளம்பி ஒரு அரை மணிக்குள் உட்கார்ந்து செட்டிலானவுடன் சாப்பாட்டுக்கடையை எப்போது திறப்பார்கள் என எதிர்பார்த்து காத்திருந்தோம். சரியான பசி வேறு. பஹ்ரைன் ஏர்போர்ட் லவுஞ்சில் மாலை 4 மணிக்கு சாப்பிட்டது.

விமானம் கிளம்பி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை குடிதண்ணீர்,குளிர் பானம், நீராவியில் வைக்கப்பட்ட கைக்குட்டை வகையராக்கள் விநியோகம் நடந்து முடிந்தபின் மெதுவாக சாராய வண்டியை தள்ளிக்கொண்டு பணிப்பெண் வந்தாள். ஒவ்வொருவரிடமும் நெருங்கி வந்து குனிந்து 'ஊத்திக்கிறியா?' என பவ்யமாக ஆங்கிலத்தில் கேட்டாள். பக்கத்தில் மனைவி இருந்ததால் தான் நான் 'வேணாம்.. நன்றி' என சொன்னதாக நினைக்க வேண்டாம். தனியாக பிரயாணம் செய்திருந்தாலும் அப்படித்தான் சொல்லியிருப்பேன். 'குடிக்க என்னென்னம்மா இருக்கு?' என கேட்டவர்களுக்கு முன் அவள் தரையில் மண்டியிட்டு அமர்ந்து அஷ்டோத்தரம் மாதிரி வரிசையாக சொல்ல ஆரம்பிக்க, அருள்வாக்கு கேட்பது போல சிலர் தலையை ஆட்டி தாகசாந்தி பெற்றுக்கொண்டார்கள்.

கண்ணாடி போத்தல் மூடியை அவள் அலட்சியமாக திருகி மதுவை சன்னமாக கோப்பையின் பக்கவாட்டுச்சுவற்றில் சரித்து, கிடுக்கியால் ஐஸ் கட்டியை மேலே மிதக்க விட்டு, பக்கத்தில் தொட்டுக்க ஒரு சின்ன கின்னத்தில் வறுத்த முந்திரி, கடலை, பிஸ்தா, பாதாம்..எல்லாம் வைக்க ...ஆஹா யாருக்குத்தான்
தண்ணியடிக்க ஆசை வராது!

அந்தபக்கம் விருத்தகிரி விஜய்காந்த் மாதிரி ஒருத்தர் தன் பெரிய வயிற்றுக்கு பின்னாடி உட்கார்ந்திருந்தார். சீட் பெல்ட் அவருக்கு போறாது. நெஞ்சுக்குத்தான் சீட் பெல்ட்டே போட்டிருந்தார். 'நீ சீக்கிரம் குடிச்சி முடிக்கலைன்னா அடுத்த ரவுண்டு உனக்கில்ல' என யாரோ அவருக்கு சொன்னமாதிரி ஒரு அவசரம். கோவில் தீர்த்த பிரசாதம் மாதிரி மடக் மடக்கென குடித்து, மீசையில் ஒட்டியிருந்த அந்நிய நாட்டுச்சாராயத்தை புறங்கையால் துடைத்துக்கொண்டே பிஸ்தாப்பருப்பை பற்களிடையே உள்ளே தள்ளினார். 'ஹையா..நான் குடிச்சே ஒழிஞ்சிடுவேனே...' என மகிழ்ச்சியுடன் சொல்லும் சிவந்த கண்கள். நமக்கு இன்னிக்கி புவ்வா அவ்வளவு தான் என நினைத்தேன்.

எனக்கு பக்கத்தில் ஒருத்தர் சின்ன பையனாட்டம்... அடடே..'ஜூன் போனா..ஜூலைக்காற்றே' பாடகர் க்ரிஷ். பகல் முழுவதும் பாரிசிலிருந்து அபுதாபி வரை பிரயாணம் செய்த களைப்பு அவருக்கு. படித்ததெல்லாம் அமெரிக்கா. திருச்சி கல்லுக்குழி பூர்விகமாம். விமானம் கிளம்பும் முன் எல்லா கணவன்மார்கள் போல அவரும் கைப்பேசியில் ' தோ..டேக் ஆஃப் ஆகப்போறதும்மா.. காலைல 6 மணிக்கு வந்தர்றேம்மா.. சரிம்மா..வச்சுடட்டுமாம்மா' என பயபக்தியுடன் அப்டேட் கொடுத்துவிட்டு, மதுவகை பட்டியல் அட்டையை 'பீர்'ராய்ந்தார். அமைதியாக மிகுந்த மரியாதையுடன் கொஞ்ச நேரம் என்னுடன் பேசிவிட்டு சாக்ஸை கழட்டி காலை நீட்டி சோம்பல் முறித்தார். 'அட.. சினிமாக்காரங்களும் நம்பள மாதிரியே எல்லாம் செய்றாங்களே' என வியந்து இந்தப்பக்கம் திரும்பினால்......தண்ணியடித்த கணவான்கள் சிலருக்கு முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர, வரிசையாக பாத்ரூம் போக நின்றார்கள்.

விமானம் சீரில்லா காற்றழுத்தத்தினால் கடகடவென அதிர பெங்களூர் மாரத்தஹள்ளி ரோட்டில் போவது போலிருந்தது. வழியை அடைத்துக்கொண்டு பாத்ரூம் போக நிற்பவர்களிடம் பணிப்பெண் 'வெளிய டர்புலன்ட் வெதர்.. இப்பசத்திக்கி அடக்கிட்டு அப்பறமேட்டுக்கு உச்சா போலாமே' என பணிவாக கெஞ்சியும், மேற்படி ஆட்கள் 'அடக்கு'முறைக்கு ஒப்புக்கொள்ளாமல் இருமாப்புடன் அங்கேயே கொஞ்சநேரம் நின்றுவிட்டுத்தான் பாத்ரூம்/மில் 'போனார்கள்'. விருத்தகிரியும் தான். வெளியே வரும்போது அவரை கவனித்தேன்.. பாண்ட்டிலேயே கொஞ்சம் போயிருந்தார்.விமானத்தின் அதிர்வு இல்லியா...

விமான ஓட்டிக்கு மிக அருகே முன்னால் மூன்றாவது வரிசையில் நாங்கள். எங்கள் பகுதிக்கு இரண்டு பணிப்பெண்கள். முதல் வரிசையில் ஒரு கைக்குழந்தைக்கு காது வலி போலும்..பாவம். வீர்..வீரென்று அது அலற, குழந்தையின் அம்மாவும், இடது கையில் மதுக்கோப்பையுடன் அப்பாவும் போராடினார்கள். யாருக்கும் புவ்வா இன்னும் கொடுக்கப்படவில்லை.

சாராய வண்டி மறுபடியும் ஊர்ந்து வர, அணையின் நீர்மட்டம் குறைந்த மக்களுக்கு இரண்டாவது சுற்று தண்ணீர்ப்பந்தல் ஆரம்பிக்க, நான் மெதுவாக பணிப்பெண்ணைக்கூப்பிட்டு 'ஏம்மா...தண்ணியடிக்காதவங்களுக்கு மட்டும் இப்ப சோறு கெடைக்குமா' வென கேட்டேன். அவள் உடனே குனிந்து தரையில் மண்டியிட்டு உட்கார்ந்து 'இப்பத்திக்கி இல்ல' என சொன்னாள் (இதை மண்டிபோடாமலேயே சொல்லலாமே!).

ஆஹா... ஒரு வழியாக அம்மணி வந்து எனக்கு முன் சாப்பாட்டுப்பலகையை சீட்டிலிருந்து வெளியே இழுத்து அதன்மேல் துண்டைப்போட்டாள். உணவுப்பட்டியல் அட்டையை காட்டி மரக்கறியா, மாமிசக்கறியா என முடிவு செய்ய வேண்டுமாம். அதற்குள் ஃபிலிப்பினோ பணிப்பெண் என்னிடம் வந்து மண்டிபோடாமல் சொன்னாள்.. 'நீங்க ஹிண்டு மீல் கேட்டு டிக்கெட் பதிவு பண்ணியிருக்கீங்க.. சரியா? அது கவுச்சாக்கும்..அதுல மாட்டுக்கறி உண்டாக்கும்.. பரவால்லியா' என கேட்க, எனக்கு ரத்தம் ஜிவ்வென்று தலைக்கு ஏறியது. ' சகோதரி... எங்க ஆபீஸ்காரங்க டிக்கெட் புக் பண்ணப்ப என்னை விஜாரிக்கல... ஹிண்டு மீல்னா காய்கறி இல்லியா? மாடு, பன்னியெல்லாமா? அப்ப மரக்கறிக்கு இன்னா ச்சூஸ் பண்ணனும்?' என கேட்டேன். அவள் 'அதுக்கு நீங்க ஏஷியன் ஹிண்டு மீல் னு கேக்கனும்' என பொழிப்புரை வழங்க, ஹிண்டு மீல் க்கும் ஏஷியன் ஹிண்டு மீல் லுக்கும் மாட்டுக்கறி தான் வித்தியாசமாவென வியந்தவன்னம் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன்..விடிகாலை வெளிச்சம் லேசாக தெரிந்தது.

ஒருவழியாக கெஞ்சி கூத்தாடி வெஜ்ஜி மீல் கெடச்சுது...துக்குனூன்டு தட்டில். திருச்சி ஆதிகுடி காபி க்ளப்பில் அதே அளவு சிறிய தட்டில் பஜ்ஜி...இங்கே வெஜ்ஜி. தட்டின் ஒருபக்கம் துணியால் சுற்றப்பட்ட கரண்டி, கத்தி, முள்கரண்டி, காபி கலக்கி (ஸ்டிர்ரர்)...பக்கத்தில் ஒரு கிண்ணத்தில் இலைதழைகள் மற்றும் ஆலிவ், மறு கிண்ணத்தில் கேக்..அப்புறம் தேநீர், தண்ணீர் குடிக்க 2 காலி கோப்பைகள், சாக்லேட், பல் குத்த குச்சி மற்றும் ஃப்ளாஸ், குட்டி சாஷேயில் பால், சீனி, வெண்ணெய், பன்...ஸ்ஸப்பாடா! இதெல்லாம் வைத்தது போக மீதியிருக்கும் இடத்தில் பிடிசோறு.. கொஞ்சம் பீன்ஸ் கலந்த குழம்பு மாதிரி ஒரு வஸ்து, இதெல்லாம் வயத்துக்கு எந்த மூலைக்கு என பத்தாமல் 'ப்ளடி மேரி' அடித்த பெருசுகள் 'ப்ளடி இடியட்ஸ்' என முனுமுனுத்தவாறே முன்னே எட்டி எட்டி பார்த்தார்கள்.. ஊஹும்... பணிப்பெண்கள் வரக்காணோம்..

சாப்பாட்டுத்தட்டில் துணியைத்திறந்து கத்தி, கரண்டிகளை வெளியே எடுக்கும்போது 'ணங்ங்' என ஆங்காங்கே சிலர் கீழே போட்டார்கள். காதுவலி பாப்பா அழுகையெல்லாம் நிறுத்தி சிரித்து விளையாடியபடியே ஸ்பூனை பக்கத்து சீட்டுக்காரர் மேல் விட்டெறிய, அதை தடுக்க முயன்ற அப்பா ஒரு டம்ளர் தண்ணீரை அப்படியே அவர் சீட்டில் கொட்டினார். இந்தாண்ட பாண்ட் ஜிப்பை போட மறந்து ஜாலியாக எலும்பை கடித்துக்கொண்டிருந்தார் விருத்தகிரி. ஒருவழியாக எச்சில் தட்டுக்களை அப்பெண்கள் வாங்கி வண்டியில் சொறுகிக்கொண்டு போனவுடன் ஒரு அரைமணி நேரம் தூங்கியிருப்போம்.

மணி காலை 3.30(இந்திய நேரம் 5 மணி). 'சீட்டை நேராக்கி உக்காருங்க..இறங்கப்போறோம்' என எழுப்பிவிட்டார்கள்.

எங்கள் பஹ்ரைன் ஸ்லோகா குரூப் நண்பர் Sampath Vijaykumarமற்றும் Anuradha Vijaykumar தம்பதிகளது பெண் Aishwarya Vijaykumarதிருமணத்திற்காக சென்னை வந்திறங்கினோம். அத்திருமணம் பற்றிய பதிவைத்தான் விபரமாக எழுதலாமென ஆரம்பித்து விமானப்பயண அனுபவத்திலேயே இருக்கிறேன்...கோலாகலமான திருமண வைபவம் பற்றி அடுத்த பதிவில்...

அம்மா விட்டுச்சென்ற பொக்கிஷம்

போன வருடம் அம்மா விட்டுச்சென்ற பொக்கிஷங்களில் ஒன்று இது (சிவசங்கரி தொடர்கதை)...
பழைய விகடன், குமுதம் கதைப்பக்கங்களை வாராவாரம் கிழித்து 31 வாரங்களில் தொடர்கதை முடிந்ததும் கோனி ஊசி, ட்வைன் நூலால் தைத்து வைத்திருக்கிறார்கள்.

பழைய அட்டைப்பெட்டியில் 50 வருடங்களுக்கு முன் வெளிவந்த சில புத்தகங்கள் கிடைத்தன. நிறைய கதைகளைக்காணோம். பழைய ராணிமுத்து, தினமணிக்கதிர், ராணி, கல்கண்டு ஒன்றையும் காணோம்.
'ஜலதீபம்', 'தேன் சிந்துதே வானம்', 'எதற்காக' 'ரத்த
ம் ஒரே நிறம்', 'கரையெல்லாம் செண்பகப்பூ 'கதைகளை கிழித்து வைத்திருந்தார்கள்.எங்கே போனது?

நினைவிருக்கிறதா?...
38ஆம் பக்க மூலை, ஆறு வித்தியாசங்கள், மல்யுத்த வீரர் மல்லப்பா, கவுன்சிலர் கனகசபை, அப்புசாமி-சீதாப்பாட்டி-பீமாராவ்-ரசகுண்டு, இரட்டை வால் இரண்டு, மதனின் ரெட்டைவால் ரெங்குடு, வாணி ஜோக்ஸ், மணியன் பயனக்கட்டுரை, பரனீதரன் கட்டுரை, துப்பறியும் குவாக் சுந்தரம், கருத்துப்படம் (கக்கன் மரணம்-தானு கார்ட்டூன்), குரங்கு குசலா, அன்புள்ள அல்லி, பாட்டி வைத்தியம், சமைத்துப்பார், அழகாபுரி அழகப்பன், கான்ஸ்டபிள் கந்தசாமி(ஏ.கே.பட்டுசாமி).,...
இன்னும் சில வருஷங்கள் முன் ஶ்ரீதர் கார்ட்டூன்கள், மெரினா கதைகள், மோகமுள், பர்மா ரமணி, தேவன் கதைகள், நைலான் கயிறு, SS66, இன்னொரு செறுப்பு எங்கே, சங்கர்லால் துப்பறிகிறார், இட்ஸ்பெக்டர் வகாப், பேயாழ்வார், சாவி, வாஷிங்டனில் திருமணம், அருணாசல மகிமை, அகிலன், கொத்தமங்கலம் சுப்பு கதைகள்(தி.மோ), ஆதிமூலம், மருதி, லதா,வர்ணம், மாயா, ஜி.கே.மூர்த்தி, ஸிம்ஹா, வினு, கோபுலு ஓவியங்கள்...

மேலும் எதாவது நினைவுக்கு வருகிறதா?

ரங்கநாதன் கோதண்டம்

'தொட்டால் குழையும் சோறு
தொட்டால் விறைக்கும் மனைவி
நொந்து போனது மனசு'

இந்தக்கவிதையை எழுதிய ranganathan Kothandam அவர்களை நேற்று காலை மாரத்தஹள்ளி அடையாறு ஆனந்த பவனில் சந்தித்தேன். 

காலை 8.30 மணியளவில்
சந்திப்பதாக முடிவு செய்திருந்தோம். 7.30 க்கு வீட்டை விட்டு நான் கிளம்பி பழைய ஏர்போர்ட் ரோட்டை பிடித்ததும் காரின் இரண்டு பக்கமும் உரசியபடி பைக் மற்றும் ஆட்டோக்கள்... 'கீக்...கீக்'கென ஒரே ஹார்ன் சப்தம். இஞ்ச் இஞ்ச்சாக நகர்ந்தது பெங்களூர் ட்ராஃபிக். முந்திச்சென்ற பைக்குகள் என்னை 'சாவு கிராக்கி'யென கன்னடத்தில் சபித்துச்சென்றது போலிருந்தது. கடைசியில் அ.ஆ.பவனுக்காக திரும்பவேண்டிய இடது பக்கத்தையும் (வலது பக்க driving வண்டி வேறு) கோட்டை விட்டு அடுத்த சிக்னல் போய் சுற்றி வர மேலும் அரை மணி நேரம் விரயம்.8.15இலிருந்து 9 மணி வரை பொறுமையாக ஹோட்டல் வாசலில் நின்றிருந்தார் ரங்கா.

உயரமான டேபிளின் முன் எதிரெதிரே நின்றுகொண்டே மற்ற பெங்களூர்க்காரர்கள் போல மினி டிபன் சாப்பிட்டுக்கொண்டே பேச ஆரம்பித்தோம். பெங்களூர்க்காரர்கள் முக்காவாசி நேரம் வண்டி ஒட்டிக்கொண்டே இருக்கிறார்கள். வண்டி ஒட்டாத நேரத்தில் ஏதாவது சாப்பிட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். குறிப்பாக பானிபூரி...

ரங்கா நல்ல உயரம். ஒடிசலான உருவம். இளநரை. கலைந்த தலைமுடி. நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர் மற்றும் சரியான அரட்டைப்பேர்வழி என முகத்திலேயே தெரிகிறது.
நாற்பத்தைந்தே வயதான ரங்காவின் ரசனை, விருப்பங்கள், ஆன்மிகத்தில் ஈடுபாடு, எழுத்தாற்றல், குழந்தைகள் நலன்களில் அக்கறை, தொண்டு செய்யும் ஆர்வம், வயதில் பெரியவர்களுக்கு மரியாதை,பணிவிடை செய்தல்....இவ்வளவு நற்குணங்களைக்கொண்டவரா இவர்! மலைப்பாக இருந்தது..

18 வயதிலிருந்து எழுதுகிறாராம். ஆரம்பத்தில் கையெழுத்துப்பிரதி தொடங்கி, பிறகு 300 ரூபாய் செலவில் 20 பிரதிகள் வீதம் அச்சிட்டு பத்திரிக்கை(1999), 'என் பார்வையில்' என்ற தலைப்பில் சினிமா விமரிசனங்கள் எழுதுதல், ப்ளாக் எழுதுதல், அதன்பின் யாஹூ க்ரூப்பில் பத்திரிக்கை நடத்தியவர்..பேச்சு சுவாரசியத்தில் தட்டிலிருந்த இட்லி, பொங்கல், வடை, சேசரி மற்றும் மசால்தோசை எங்கே போனதென்று தெரியவில்லை.

காஞ்சி மஹா பெரியவரின் மகிமைகளையும் எழுத்துக்களையும் நன்கு அறிந்தவர்.அதன்படி தன் கடமைகளை தவறாமல் செய்பவர்.திருமுருக. கிருபானந்த வாரியார் அவர்களின் பக்தர். வாரியாரவர்களைப்பற்றி நிறைய பேசிப்புகழ்ந்தார். வாரியாரின் கந்தர் அநுபூதி, கந்தர் அலங்கார விரிவுரைகளை நிறைய படித்திருக்கிறாரென்பதால் அதிலிருந்து நிறைய பாடல்களையும் மேற்கோள் காட்டினார்.

மினி டிபனோடு சேர்த்து காபி இல்லையாம். 2 காபி வாங்கிக்கொண்ட பின், குடும்பம், குழந்தைகள் மற்றும் அவர்களது படிப்பைப்பற்றியும் பேசினோம். காலை/மாலையில் தினமும் குழந்தைகள் தம் தாய் தந்தையரை பணிவுடன் சாஷ்டாங்கமாக நமஸ்கரிப்பதன் முக்கியத்துவத்தைப்பற்றியும் பேசினார். தற்போதைய தலைமுறை நமது மூதாதையர்களை மறந்தும் பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கர்மகாரியங்களை சரிவர செய்ய இயலாததையும் குறிப்பிட்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். 'சிந்தனையைத்தூண்டுகிற சின்னஞ்சிறு விஷயங்களையும் சுவாரசியமாகச்சொல்லும் கலை நண்பர் ரங்கநாதன் கோதண்டராமன்' என எஸ்ஸெஸ்பீ அவர்கள் சரியாகத்தான் குறிப்பிட்டிருக்கிறார். நேரமின்மை காரணமாக அடுத்தமுறையே குடும்ப சகிதம் சந்திப்பதாகவும் முடிவு செய்தோம்.

தான் எழுதிய பக்தி கஃபே (தனிச்சுற்றுப் பத்திரிக்கை) யின் முதல் பாகம், எஸ்ஸெஸ்பீ அவர்கள் தமிழ்ப்பாக்களில் வெளியிட்ட ஶ்ரீ ஹனுமான் சாலிசா மற்றும் அசோகமித்திரன் அவர்
களின் சிறுகதைத்தொகுப்பு (மாற்று நாணயம்)
ஒன்றையும் பரிசாக அளித்த ரங்கா போன்ற இனிய மனிதர்கள் எனக்கு முகநூல் நண்பர்களானதில் மிகுந்த பெருமையடைகிறேன்..

சுமார் 45 நிமிடங்களேயான எங்களது சந்திப்பை 9.45க்கு
முடித்து விடைபெற்றுக்கொண்டு அவர் வொயிட்ஃபீல்டு பக்கமும் நான் மல்லேஷ்பாலயா திசையிலும் கிளம்பினோம்.

'கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே! ஒழிவாய் ஒழிவாய்
மெய்வாய் விழி நாசியொடும் செவியாம்
ஐவாய் வழிசெல்லும் அவாவினையே'...
பாடலை வீடு திரும்பும்போது முனுமுனுக்க வைத்துவிட்டார் ரங்கா

ஜருகன்டி...ஜருகன்டி


வருடாந்திர விடுமுறையை சென்னையில் துவங்கப்போவதாக ஆருயிர் நண்பன் கணபதிக்கு சொன்னதும் இனம்புரியாத சந்தோஷம் அவனுக்கு. சென்னையில் ஶ்ரீதர் & சந்தானம் என்ற ஆடீட் ஃபெர்மில் இருக்கும் கணபதி கடந்த 3 மாதங்களாக நைரோபி(கென்யா)வில் ஒரு அரசு நிறுவனத்தில் ஐ.டி.இம்ப்ளிமென்ட்டேஷன் என ரொம்ப பிசியாக இருந்தான். கம்பெனி கெஸ்ட் ஹவுஸ் உ.பி. பையாவின் அருமையான சமையலை 10 நாட்கள் விட்டு விட்டு சென்னை வந்துவிட்டான்.

முதல் இரண்டு நாட்கள் வழக்கம்போல் கணபதியின் மயிலாப்பூர் வீடு, அலுவலகம் மற்றும் காலை 6 மணிக்கு மெரினா கடற்கரை நடைபயிற்சி...மெரினாவிலிருந்து நேராக அவர்களது பார்ட்னர் திரு.சந்தானம் அவர்களது வீடு சென்றோம். நேபாலிச்சிறுவன் அருமையான ஃபில்டர் காபி கலந்து கொடுத்தான்.

மூன்றாவது நாள் காலை 5.30க்கு நான் தங்கியிருந்த உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு வெளியே இன்னோவாவில் காத்திருந்தான் கணபதி. அம்மா, துர்கா கணபதி, மகன் ஹேரம்பா மற்றும் எங்கள் குடும்பத்தினர் எல்லோரும் திருப்பதி கிளம்பிப்போனோம்.

சீரான வேகத்தில் அருமையான கார் பயணம். பென் ட்ரைவில் ஶ்ரீவெங்கடேசா பாட்டு..டிரைவர் புகழேந்தி (பாலாஜி டிராவல்ஸ்) படு ஸ்மார்ட்.வேகத்தடைகளை பொறுமையாக தாண்டி, மற்ற ஊர்திகளையும் கவனமாக முந்தி காரைச்செலுத்தினார். மாதத்தில் 25 நாட்கள் திருப்பதி போய்வருகிறாராம். காலை 5 மணி வாக்கில் சென்னையிலிருந்து வாடிக்கையாளர்களை தினமும் கொண்டுசென்று தரிசனம் செய்வித்து சிற்றுண்டி, மதிய உணவு வாங்கிக்கொடுத்து மாலை 6 மணிக்குள் பத்திரமாக சென்னை கொண்டுபோய்ச்சேர்க்கிறார். திருப்பதி பற்றி அவர் புத்தகமே எழுதலாம். இன்ன நேரத்துக்கு இன்ன மாதிரியான சேவைகள், எத்தனை மணிக்கு போனால் சீக்ரதரிசனம் கிடைக்கும், கூட்டம் அதிகமான சமயங்களில் எப்படி தரிசனம் கிடைக்கும், சுப்ரபாத சேவை எத்தனை நாட்கள் போன்ற நிறைய தகவல்கள் அவரிடமிருந்து கிடைத்தன.

பொதுவாக டிரைவரிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டேயிருக்க வேண்டுமென்பது கணபதியின் தாயாரின் கருத்து. குறிப்பாக மதியம் சாப்பாட்டுக்குப்பிறகு மற்றும் இரவில் பயணம் செய்யும்போது டிரைவருக்கு தூக்கம் வராமலிருக்க நாம் அவரிடம் பேச்சுக்கொடுத்தல் அவசியமாம். 'பரவால்ல...ரொம்ப ஜாக்ரதையா ஓட்டறீங்களே! எத்தினி வருஷமா கார் ஓட்டறீங்க?' என டிரைவருக்கு பிடித்த விஷயங்களைப்பற்றி பேசுதல் அவரை உற்சாகப்படுத்துமாம்.
கணபதியின் பையன் ஹேரம்பா ஒருமுறை இரவில் காரில் பயணம் செய்யும்போது திடீரென இப்படி சொன்னானாம்.." அப்பா டிரைவர் தூங்கி விழறான்..மொதல்ல அவன் வாயில டீய வாங்கி ஊத்து... இல்லாட்டி நம்ம வாயில பால் ஊத்திருவான்"..

நேத்ரசேவா போவது சுகமான அனுபவமென புகழேந்தி குறிப்பிட்டார். அப்போது மட்டும் பெருமாள் உடம்பில் குறைவான ஆபரணங்கள் மற்றும் வஸ்திரங்கள்...அவரது கால்களை நாம் பார்க்க இயல பெருமாளும் கண்களைத்திறந்து நம்மை பார்த்தவாறு தரிசனம் கொடுப்பாராம். மற்ற தரிசனங்களில் நாம் தான் அவரைப்பார்ப்போம். உள்ளூரில் கொடிகட்டிப்பறக்கும் ஆடிட்டர் தேவராஜ் ரெட்டி ப்ரசாத சேவை நிறைய செய்வதாக கணபதி சொன்னான். CA சென்ட்ரல் கமிட்டி மெம்பரான அவர் சீக்கிரம் இன்ஸ்டிட்யூட் பிரெசிடுன்ட் ஆவது நிச்சயமாம். சந்திரபாபு நாயுடு உத்தரவின் பேரில் சமீபத்தில் பெருமாளுக்கு எதிரே அதிகம் பேர் நின்று தரிசனம் செய்ய 3 வரிசைகள் அமைத்திருக்கிறார்களாம்.

திருமலை கோவிலின் ஆச்சார அனுஷ்டானங்கள் அனைத்தும் இராமானுஜ ஆச்சார்யரால் முறையாக்கப்பட்டனவாம்.மதுரை மீனாட்சியம்மன் கோவில், அரங்கநாதசுவாமி கோவில் ஆகியவை ஒருகாலத்தில் சூரையாடப்பட்டபோது தென்னிந்தியாவில் தப்பி இருந்த இடம் திருப்பதி மட்டும்தானாம். மேலும் ஸ்ரீரங்கத்தில் இருந்த அரங்கனின் திருஉருவச் சிலை திருப்பதிக்கு கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த நிகழ்வை குறிப்பதற்காக கட்டப்பட்ட ரங்கநாத மண்டபம் இன்றும் திருப்பதியில் இருக்கிறதாம்.

திருச்சானூர் நெருங்கும் முன் வடமாலப்பேட்டா என்ற ஊரில் இருந்து எங்களை திருமலையை பார்க்கச்சொன்னார் புகழேந்தி. குறிப்பாக ஏழு மலைகளில் ஒருமலையின் ஒரு பகுதி பெருமாள் சாய்ந்தவன்னம் நிற்பது போலத்தோற்றம்.தலைக்கிரீடம், உடல், கால்கள் என பாறையில் செதுக்கப்பட்டமாதிரியான உருவத்தை ஆச்சரியமுடன் பார்த்தோம்( படம் பார்க்க).

இன்னோவா திருச்சானூர் உள்ளே நுழைய வரிசையாக நிறைய கட்டிடங்கள்... அடுத்து எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சிலையைப்பார்த்தோம். சுற்றிலும் கடைகள், ஓட்டல்கள், பிரபு வணக்கத்துடன் கல்யான் ஜுவெல்லரி போர்டுகள், டீக்கடைகள், மருந்தகங்கள், அடகுக்கடைகள்,புரோட்டாக்கடைகள்,புடவைக்கடைகள், வங்கிகள், பெட்ரோல் பங்குகள், அங்கங்கே டூப்ளிகேட் சரவண பவன்கள்...

காலை சுமார் 9 மணிக்கே மலைக்கு கீழே சப்தகிரி போய்விட்டோம். மேலே போகும் முன் வாகன பரிசோதனையாம். சிகரெட், பீடி கொண்டுசெல்லமுடியாதாம். தனியாக அதற்கு வெட்டினால்.. 'ம்..ம்.. ஓகே'யாம். வரிசையாக வாகனங்கள் காத்திருக்க பின்பக்கமிருந்து கார்கள் பக்கவாட்டில் வந்து மூக்கை நுழைத்து நம்மைத்தாண்டிச்செல்வதை எங்களுடன் சேர்ந்து போலீஸ்காரரும் வேடிக்கை பார்த்தார்.

ஒருவழியாக அதை முடித்துக்கொண்டு கார் மலை மேல் போக ஆரம்பித்தது. சில இடங்களில் புகழேந்தி காரை நிறுத்தி அங்கிருந்து மலையைப்பார்க்கச்சொன்னார். ஆஹா.. மலையின் ஒரு பகுதியின் பாறை அப்படியே கருடாழ்வார் நிற்பதைப்போலிருந்தது(படம் பார்க்க)

300 ரூபாய் டிக்கட் வரிசையில் நம்மை நிற்க வைத்தார் புகழேந்தி. இருபுறமும் இரும்புக்குழாய்கள் பொறுத்தப்பட்ட வரிசைகள். வரிசையில் நிற்பவர்களுக்கு அங்கங்கே வெளியில் இருந்து இலவசமாக உப்புமா மற்றும் மோர் விநியோகம் செய்கிறார்கள். அங்கங்கே கழிவறைகள் இருந்தாலும் அவசரத்திற்கு மட்டுமே பிரயோகிப்பது நல்லது. இல்லையென்றால் தப்பித்தவறி போய்விடவேண்டாம் என்பது என் வேண்டுகோள்.

சுமார் ஒன்றரை மணி நேரம் வரிசையில் சில இடங்களில் மிக மெதுவாகவும், சில இடங்களில் தபதபவெனவும் ஓடினோம். 'ஏடு கொண்டலு வாடா.. வெங்கட்ராமா.. கோவிந்தா.. கோவிந்தா..' வென எல்லோரும் கோஷமிட்டோம். சின்னவனுக்கு நானும் கணபதியும் கோஷமிட்டதைப்பார்த்து ஒரே சிரிப்பு.

கடைசியாக கோவிலின் நடுப்பகுதி வந்தடைந்தோம். கூட்டம்... தள்ளு முள்ளு...கால்களுக்கு கீழே தண்ணீர் ஓடிக்கொண்டிருக்க இரண்டு மூன்று திருப்பங்கள்.. இதோ பெருமாள் சன்னதி வந்து விட்டது... அடடா இல்லியா! மறுபடியும் கொஞ்ச தூரம்... ஓரிடத்தில் வரிசைக்கு குறுக்கே கயிறு கொண்டு தடுத்து நிறுத்திவிட்டார்கள். தரிசனம் முடித்தவர்களை முதலில் வெளியே அனுப்பிவிட்டு பிறகு எங்களை உள்ளே அனுப்ப... ஆஹா.. இதோ பாலாஜி ஸ்வாமி தரிசனம் கிடைக்கப்போகிறது.....கூட்டம் பின்னாலிருந்து தள்ள மறுபடியும் இன்னொரு திருப்பம்.. திடீரென எதிரே ஶ்ரீ வெங்கடேசப்பெருமாள் காட்சியளித்தார். பெருமாளே! உலக நன்மைக்காக அவரை மானசீகமாக வேண்ட ஆரம்பிக்க...பின்னாலிருந்து 'ஜருகன்டி...ஜருகன்டி...' குரல்கள் ஒலிக்க...என்னென்ன நினைத்து வேண்டுவது அந்த அவசரத்தில் ! அந்த நேரம் பார்த்தா புகழேத்தி சொன்ன நேத்ரசேவா நினைவுக்கு வரும்(பெருமாளின் கால்களைப்பார்க்கலாமென சொன்னது) ? அன்றைக்கு நேத்ரசேவா இல்லையென்றாலும் என்னையறியாமல் பெருமாளின் கால்கள் தெரிகிறதாவென நான் கீழே பார்க்க.. பின்னாலிருந்து 'ஜருகன்டி'கள் எங்களைத்தள்ளியதில் ரங்கநாதர் முகத்தையே சரியாக பார்க்க முடியாமல் வெளியே வந்துவிட்டோம். " ச்சே... பார்த்த திருப்தி இல்லியே...ஒரு செக்கன்டு தானே பார்த்தோம்.. சரியா வேண்டக்கூட நேரமில்லியே...அப்பிடியே திரும்பவும் உள்ளாற போக விடுவாங்களா!.. " போன்ற கருத்துக்களை எப்போதும்போல பகிர்ந்து கொண்டு வெளியே வந்தோம்.

உண்டியல் பகுதியை நெருங்க அங்கேயும் முன்டியடிக்கும் கூட்டம். அதெப்படி சார் உண்டியலில் காசு போட பாண்ட் பாக்கெட்டில் கை விடும்போது மட்டும் கரெக்டாக சில்லரை மற்றும் சிறிய நோட்டுக்கள் வராமல் 100, 500 ரூபா நோட்டுக்களே வரும்? உள்ளுக்குள் பயம் வேறு...சாமியிடமே கணக்கு பார்க்கிறோமாவென..பயத்துடன் காணிக்கை செலுத்திவிட்டு வெளியே வந்தோம்.

கோவில் பிரகாரத்தை விட்டு வெளியே வரும்போது சிறிய தொண்ணையில் புளியோதரை கொடுத்தார்கள். ஒன்று வாங்கி சாப்பிட்ட பிறகும் இன்னொன்று வாங்கி சாப்பிட ஆசை. எல்லோருக்கும் இந்த ஆசை இருக்கும் போலும். எல்லோர் கையிலும் ரெண்டு தொண்ணைகள். மறுபடியும் வாங்கி சாப்பிட்டோம். நாம் கொடுக்கும் கட்டணம் லட்டுவிற்கும் சேர்த்து என்பதால் புகழேந்தி ஓடிப்போய் லட்டு வாங்கி வந்துவிட்டார்.

திருமலையில் இருந்து கிளம்பி அடுத்த ஒரு மணி நேரத்தில் கீழ் திருப்பதியில் பீமாஸ் ஓட்டலில் வயிறாற தாலி சாப்பாடு. பொருத்தமான பெயர் தான் ஓட்டலுக்கு..

மதியத்திற்கு மேல் அருமையான பத்மாவதித்தாயார் தரிசனம். அதற்கும் வரிசை... நல்ல கூட்டம்..தாயாரின் சன்னதி நெறுங்கும் முன் கணபதி சில 50,100 ரூபாய் நோட்டுக்களை கையில் தயாராக வைத்திருக்க அங்கங்கே நின்றிருந்த 'தாயார்கள்' நம்மை நன்றாக கவனித்து பிரசாதம், மாலைகள் வாங்கிக்கொடுத்தார்கள். எல்லா இடத்திலும் டப்பு இருந்தால் நல்ல மரியாதை என்பது வேதனை.

மாலை 6 மணி வாக்கில் பத்திரமாக சென்னை வந்து சேரந்தோம். அருமையான பயணம்..நல்ல தரிசனம்..சென்ற வருடம் பெரியவனுக்கு 3 மாதங்கள் திருப்பதி தேவஸ்தான ஆடிட் இருந்ததால் அவனுடைய உதவியால் எங்களுக்கு திருப்பதி செல்ல நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த வருட உபயம் நண்பன் கணபதி...

கலவச்சட்டி

2 நாட்களுக்கு முன் திருச்சியில் எங்கள் சுந்தர் நகர் வீட்டிற்கு போயிருந்தேன். முன்பு அம்மா அப்பா மாடி போர்ஷனில் குடியிருந்தார்கள். இருவரும் தற்போது இறந்துவிட்டதால் வீட்டை வாடகைக்குக்கொடுத்துவிட்டோம். 

சில மராமத்து வேலைகள் இருந்ததால் ஒரு மேஸ்திரி மற்றும் சித்தாள் வைத்து வேலைகளை காலை 9 மணிக்கு ஆரம்பித்தேன். சுமார் பதினொன்னரை மணியளவில் அவர்களுக்கு வடையும் டீயும் வாங்கிக்கொடுத்து விட்டு மெல்ல வீட்டைச்சுற்றிப்பார்த்தேன்.

பக்கத்து வீட்டுக்காரர்கள் தங்கள் அம்பாசடர் கார் நிறுத்த இடம் போறாததால் எங்கள் பகுதியிலிருந்து ஓரடியை தங்கள் நிலத்துடன் சேர்த்து வேலிக்கம்பி தடுப்பு சுவர் எடுத்ததை நான் 20 வருடங்களுக்கு முன் கண்டித்தபோது அப்பா "இருக்கட்டும்டா..பின்னால பாத்துக்கலாம்..அவங்க ஏமாத்தமாட்டாங்க"வென சொன்னார். இப்போதும் அந்த வேலிக்கம்பி சுவர் அப்படியே இருந்தது. ஆனால் அம்பாசடர் இருந்த இடத்தில் ஃபோர்டு ஃபிகா. தற்போது இரண்டடி இடம் மிச்சமாக அவர்கள் பக்கம்.

வருடமொரு முறை நாங்கள் லீவுக்கு வரும்போது முன்பு அம்மா ஒரு ஆளை வைத்து இளநீர், கொய்யா, சீதாப்பழம், மாங்காய் எல்லாம் எங்க வீட்டு மரங்களிலிருந்து பறித்து பேரன்களுக்கு கொடுப்பது நினைவுக்கு வந்தது. தற்போது தென்னைமரம் ஒன்றை காணோம். ஒருமுறை தங்கள் அம்பாசடர் கார் மேல் தென்னை ஓலை விழுந்ததால் மரத்தை பக்கத்து வீட்டுக்காரர்களே தரையோடு தரையாக வெட்டியிருந்தார்கள். அதற்கு முன் பதிவுத்தபாலில் இன்ன திகதிக்கு மரத்தை வெட்டப்போவதாக அறிவித்து எங்களுக்கு கடிதம் வேறு. மற்ற இரு தென்னைமரங்களை பூச்சியரித்து பாதி இளநீரைக்காணோம். மாங்காய் மற்றும் கொய்யா மரங்களும் பாதி மொட்டையாக இருந்தன. சீதா மரத்தையே காணோம். அம்மா இருந்தவரை 6 மாதங்களுக்கொருமுறை பூச்சிக்கொல்லி மருந்தடித்து உரம் போட்டு வளர்த்த மரங்கள் இன்று அம்மாவோடு போய்ச்சேர்ந்துவிட்டன.

"சார் பின்பக்க காம்பவுன்டு சுவத்த கொஞ்சம் கொத்திவுட்டு பூசனும். மேல ஏற ஏணி வேனும்" என மேஸ்திரி கேட்க வீட்டின் பக்கவாட்டு படிக்கட்டின் கீழே முன்பு அப்பா சாய்த்து வைத்திருந்த ஏணியைத்தேடினேன். அது முற்றிலும் உடைந்திருத்தது. "பரவால்ல சார்..கடைல எடுத்தரலாம்.. நாள் வாடக 50 ரூபா தானென மேஸ்திரி கடைக்கு ஓடினார். முன்பு மாதிரி சாப்பாட்டு தூக்கில் மதிய உணவெல்லாம் அவர்கள் கொண்டுவருவதில்லை. காசு வாங்கிக்கொண்டு ஹோட்டலுக்கு ஓடினார்.

வாசலில் மேல் போர்ஷனுக்குறிய எலெக்ட்ரிக் மீட்டரில் சிவப்புக்கலர் பெயின்ட்டில் கையால் எழுதிய 'சீதாபதி' பெயர் அப்படியே இருந்தது. எப்போதும்போல் மீட்டர் பெட்டியின் உள்ளேயிருந்து ஒரு பல்லி எட்டிப்பார்த்தது. அருகே முன்பு தொங்கிக்கொண்டிருந்த கொக்கி காணாமல் போயிருந்தது. அதில் மின்கட்டன பில்கள், வீட்டு வரி ரசீது, கேபிள் டீவி கார்டு அனைத்தையும் குத்தி மாட்டி வைத்திருப்போம். வாசல் கேட்டில் பால் பாக்கெட் மஞ்சப்பை மாட்டும் கொக்கியையும் காணோம்.

கேட்டுக்கு பக்கத்தில் தரையில் காவேரித்தண்ணீர் மீட்டர் பழுதடைந்திருந்தது. முன்பு அப்பா அந்த இடத்தில் சிறியதாக தொட்டி ஒன்றை கட்டி அதனுள் குழாய் வைத்திருப்பார். நல்ல தண்ணீர் வரும் அந்த இரண்டு மணி நேரம் குடத்தில் நீர் பிடித்து மேலே அண்டாவில் ரொப்புவது அவர் வேலை. தற்போது அதற்கு அவசியமில்லையாம். குடி தண்ணீருக்கு போன் செய்து விட்டால் பல்சர் பைக்கின் முன்புறம் வைத்து தண்ணீர் கேன் கொண்டுவந்து போட்டுவிடுவார்களாம்.

அந்த தொட்டி மூடப்பட்டு அங்கே தற்போது மோட்டர் பைக்.. முன்பு அப்பாவின் சைக்கிள் இருக்கும். நினைவுகள் மெல்ல பின் செல்ல...சைக்கிள் சீட்டின் அடியில் சொறுகப்பட்டிருக்கும் துணி, அந்த துணியை சக்கரங்களின் இடையே கொடுத்து ஸ்போக்ஸ் மற்றும் ரிம்மை சரட் சரட்டென்று அப்பா இழுத்து துடைப்பது, டைனமோவை அழுத்தி சக்கரத்தைச்சுற்றி முன்புறம் லைட் எறிகிறதாவென அவர் சரிபார்ப்பது, டைனமோ மோட்டார் டயரைத்தொட்டுக்கொண்டு சுற்றுவதால் டயர் தேயாமலிருக்க அதற்கும் ஒரு சிறிய ரப்பர் கவர், முன்புறம் டைனமோ லைட்டைச்சுற்றிக்கட்டப்பட்டிருக்கும் மஃப்ளர் மாதிரியான மஞ்சள் துணி (அர்விந்த் கேஜ்ரிவால்), சைக்கிள் செயின் கவர் இடுக்கில் உள்ள ஓட்டையில் எண்ணெய் விட ஒரு சிறிய ஆயில்கேன், பின் காரியரில் சுற்றப்பட்ட சைக்கிள் டியூப்(அரிசி மூட்டை, பழைய பேப்பர் கட்ட), "சார் பஞ்சர் இல்ல வால்டியூப் தான் போயிருருச்சு" போன்ற வசனங்கள்...

"சார் எக்ஸ்ட்ரா அரை மூட்ட சிமென்ட் வந்துருச்சு" என மறுபடியும் மேஸ்திரி கூப்பிட, சட்டென்று விழித்து வாசலுக்கு விரைந்தேன். மோட்டர் பொறுத்தப்பட்ட பெடல் வண்டியிலிருந்து சிமெண்ட் மூட்டை இறங்கியது. முன்பு மாட்டு வண்டியில் வந்திறங்கும். சிமென்ட் இறக்கி முடியும்வரை மாட்டின் மூக்கனாங்கயிறு சக்கரத்தில் கட்டப்பட்டிருக்கும்.

ஒருவழியாக மாலை 6 மணிக்கு வேலை முடிந்தது. வீட்டிற்கு வெளியே இருந்தபடியே குடித்தனக்காரர்களிடம் விடை பெற்றுக்கொண்டேன். வீட்டின் உள்ளே போயிருந்தால் நிச்சயம் கீழ் கண்டவை நினைவுக்கு வந்திருக்கும்:

1. அப்பாவின் பழைய மர்ஃபி ரேடியோ, அதன் பின்புறமிருந்து வயர் எடுத்து ஒரு கண்ணாடி கிளாசில் விடப்பட்டிருக்கும்(எர்த்திங்), ரேடியோவின் தலையில் இரண்டாக மடிக்கப்பட்ட துணி..
2. படுத்தவாறு நேஷனல் பானசானிக் டேப் ரெகார்டர்.கால்கள் போல 4 பட்டன்கள்.
3. TDK காஸெட்டுகள்.. பக்கத்தில் அரை பென்சில் (காஸெட் சுற்ற)
4. கேமலின் இங்க் பாட்டில்(blue black) மற்றும் இங்க் ஃபில்லர்.
5. இன்லாண்டு லெட்டர், போஸ்ட் கார்டு.
6. விராலிமலைக்கு பணம் அனுப்ப மணியார்டர் பாரம்.
7. அவசரத்திற்கு தந்தி பாரம்
8. கோபால் மற்றும் பயரியா பல்
பொடி.
9. ஃபோர்ஹான்ஸ் டூத் பேஸ்ட்
10. புலிமார்க் சீயக்காய் மற்றும் அறப்புத்தூள்
11. பொன் வண்டு சோப்பு.
12. மரச்சீப்பு (ஈறு, பேனெடுக்க)
(வேறு ஏதும் நினைவுக்கு வருகிறதா?)

என்னதான் பழமைவாதியாக இருந்தாலும் அப்பாவிற்கு புதிய வாட்சுகள், பெல்ட், பஹ்ரைனில் வாங்கிய சின்ன டிரான்சிஸ்டர், டி.வி.டி ப்ளேயர் (ரஜினி படம் பார்க்க) எல்லாம் பிடிக்கும்.

iPhone பிறப்பதற்கு முன் அப்பா இறந்துவிட்டார். இல்லையென்றால் இன்று காலை திருச்சி டி.வி.எஸ் டோல்கேட்டில் பஸ் ஏறியவுடன் ஆரம்பித்து காரைக்குடி இறங்கும்வரை இந்தப்பதிவை iPhone இல் தட்டச்சு செய்வதை பார்த்து ஆச்சரியப்பட்டிருப்பார்...

கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணய்யர் & சித்ரா கிருஷ்ணமூர்த்தி

ட்ராக் சூட் பாண்ட்..மேலே ஒரு டீ ஷர்ட்..அலட்சியமாக மடிக்காமல் விடப்பட்ட காலர்...உடலை கட்டுடன் வைத்திருப்பதில் மிகுந்த அக்கரை...தலைமுடி சீராக வாரி கண்ணாடியனிந்து, தொப்பையேதுமில்லாமல் பக்காவாக BMI மெயின்டெயின் செய்பவர், கார்பரேட் எக்ஸிக்யூடிவ்ஸ்டைலுடன் சரளமான ஆங்கிலம்.. நடுநடுவே நிறைய நகைச்சுவை..கலகலவென சிரிப்பு முகத்துடன் பேச்சு.. மற்றவர்களின் ப்ளஸ் பாயின்டுகளை தாராளமாக தயங்காமல் குறிப்பிட்டு புகழ்தல்.. அந்த ஒரு மணி நேரத்தில் இத்தனையும் கவனித்தேன் இவரிடம்.

'பெரியவா பாத்துப்பா' தொடரை தொடர்ந்து எழுதிக்கொண்டு காஞ்சி மகாப்பெரியவரின் மகிமையையும் புகழையும் பரப்பி தம் முகநூல் நண்பர்களுக்கு விருந்தளிப்பவர். ஶ்ரீமதி.ராஜலக்ஷ்மி விட்டல் மாமி அவர்களுடன் சேர்ந்து சண்டி ஹோமம், அம்பாள் திருக்கல்யாணம், அன்னை ஶ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரி சாம்ராஜ்ய பட்டாபிஷேகம்,கஜபூஜை போன்ற நிறைய ஆன.மிக நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருப்பவர். 'அழகிய மணவாளம்' தொடரை படு ஸ்வாரஸ்யமாக எழுதி பட்டையைக்கிளப்பியவர். 'டேய் மாதவா', 'கே.கே... சில குறிப்புகள்' என தன்னுடைய வித்தியாசமான ஸ்டைலில் நிறைய பதிவுகள் பதித்துக்கொண்டிருப்பவர்.

100 feet ரோடு வந்து அவர்களுக்கு போன் போட்டவுடன் கே.கே (Krishnamurthy Krishnaiyer) யும் அவரது மனைவி Chitra Krishnamurthyயும் போனில் மாறி மாறி வழி சொன்னார்கள்..'லெஃப்ட் எடுத்து கணபதி வந்து பஸ் ஸ்டாண்டைத்தாண்டி நேரா வந்து பி.எஸ்.என்.எல் கிட்ட ரைட் எடுத்து அந்த பேங்க் ஏ.டி.எம் தாண்டி உள்ள வந்து கடைசி லெஃப்ட் எடுத்து கொஞ்ச தூரம்..பாண்டியன் ஸ்டோர் இடது கைப்பக்கம் வந்தவுடன அங்க ரைட் எடுத்து நேரா வந்தா எங்க காம்பவுன்டு கேட் வரும்'....ஆஹா...வாசல் வரை வந்து என்ன ஒரு வரவேற்பு..

எங்கள் குடும்பத்தவர் அனைவரைப்பற்றியும் நான் சொல்ல சொல்ல பொறுமையாக கேட்டு தன் குடும்பத்தவர் பற்றியும் சொன்னார். கூட வந்திருந்த எனது மனைவி, மகன., என் சகோதரி, அவளது பெண் (பல் மருத்துவர்) என எல்லோரையும் அக்கரையுடன் விசாரித்தார். மற்ற முகநூல் நண்பர்களைப்பற்றியும் நிறைய பேசினோம். உட்லண்ட்ஸ் ஹோட்டல் முகநூல் நண்பர்கள் சந்திப்பை விட கோவை சந்திப்பு அருமை என நான் சொன்னால் கே.கே. சந்தோஷப்படுவார். ஆனால் சென்னை வழியாக நான் பத்திரமாக பஹ்ரைன் திரும்புவது சந்தேகம் தான்.

ஜிம்முக்கு போய்விட்டு படு ஹான்ட்ஸமாக வந்தார் இவர்களது கடைக்குட்டிப்பையன் நந்து. மெக்கெட்ரானிக்ஸ் படிக்கும் இன்ஜினியரிங் மாணவன்.. அப்பாவை கலாய்க்கிறார்..தயக்கமில்லாமல் எங்களுடன் கலந்துரையாடி போட்டோவெல்லாம் எடுத்தார் ஜூனியர் கே.கே.

சமையலறை அருகேயுள்ள பூஜையறை உள்ளே நிறைய ஸ்வாமி படங்கள், பெரியவா படங்கள், ஸ்ருங்கேரி ஸ்வாமிகள் படங்கள். அம்மாவிடம் நம்மை அறிமுகப்படுத்தினார் கே.கே. நான் அவருக்கு அளித்த காஞ்சி மகாமுனிவரின் படத்தையும் அம்மாவிடம் காட்டினார்.

விஸ்தாரமான வில்லா ..சுற்றிலும் மரம் செடிகொடிகள்..காலையில் வீட்டின் கேட் மேல் சிலசமயம் மயில் வந்து அமர்ந்து அகவுமாம்(முன்பு போட்டோ பார்த்திருக்கிறேன்) சின்ன குழந்தைகள் இல்லாத வீடு என பார்த்தவுடன் சொல்லும் அளவிற்கு பராமரிப்பு..ஏற்கனவே பெரிய ஹாலாக இருந்தாலும் அளவான மற்றும் தேவையான ஃபர்னிச்சர் மட்டுமே இருப்பதால் மிகவும் விசாலமான பட்டாசாலை..மற்றொரு அறையின் சுவற்றில் அவர்களது மருமகள் வரைந்த ஓவியம் மிக அருமை.
சிவதாண்டவமாடும் ஈசனின் ப்ரம்மாண்டமான ஓவியம் அந்த இல்லத்திற்கு கூடுதல் சிறப்பு... ஹாலின் ஒரு பகுதியில் மாடியிலிருந்து வளைந்து கீழே இறங்கும் படிகள். ஏகப்பட்ட பாசிடிவ் எனர்ஜி அங்கே உண்டு என்பது நிச்சயம்.

சித்ரா அவர்கள் எங்களை வாசல் வரை வந்து வரவேற்றதுமுதல் திரும்ப நாங்கள் கிளம்பும்போது கார் அருகே வந்து தன் கணவருடன் விடைகொடுக்கும் வரை அளவான பேச்சு.. ஆடம்பரம் மற்றும் ஆர்ப்பாட்டமில்லாத பணிவு..ஸ்வீட், மிக்சர், சமோசா, மசாலா தேநீர் என ஏக உபசரிப்பு எங்களுக்கு. ஏற்கனவே முன்பு Ananya Mahadevanனிடம் 'இன்னொரு டம்ளர் பாயசம் வேணுமா?' என பாசமாக கேட்டவர் என்பது எனக்குத்தெரியும்.
சித்ரா, என்னுடன் கூட வந்திருந்த என் சகோதரியின் ஜூனியராம் (Trichy SRC கல்லூரி). மற்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இவர்கள் இருவரும் ஜூனியர்ஸ் போன்ற உபரித்தகவல்களால் நாங்கள் கிளம்புவது இன்னும் அரை மணிநேரம் ஸ்வாரஸ்யமாக தள்ளிப்போனது.

கிளம்ப மனமேயில்லாமல் பேசிக்கொண்டிருந்தோம். எப்படியும் இரவு 12 மணிக்குள் திருச்சி போய்ச்சேரவேண்டுமென்பதால் அவர்களின் டின்னர் வேண்டுகோளை பணிவாக மறுத்து பாயசத்தை மிஸ் செய்தோம்.

குடும்பத்துடன் அவசியம் பஹ்ரைன் வந்து எங்ககளுடன் தங்கவேணுமாய் கேட்டுக்கொள்கிறேன் கே.கே.சார்..


கார்த்திகேயன் மீனாக்ஷி சுந்தர் (கோவை)

கோவை RS புரம் போஸ்ட் ஆபிஸ் எதிரே இவரை சந்தித்து பக்கத்திலுள்ள காஃபி டேயில் அமர்ந்து பேசலாமென முடிவு செய்தோம்.
அந்த ஒரு மணி நேரம் வழக்கம்போல குடும்பத்தினரை ஏதாவது மால் அல்லது புடவைக்கடையில் விட்டுவிடலாமென முடிவு செய்து, புடவைக்கடையில் விட்டுவிட்டால் நமக்கு நிறைய நேரம்()கிடைக்குமென்பதால் PSR சில்க்ஸ் வாசலில் இறக்கிவிட்டு RS புரம் வந்தேன்.

போஸ்ட் ஆபிஸ் எதிரே நின்றிருந்த என்னை தன் காரிலிருந்தபடி அவர் கைப்பேசியில் கூப்பிட அடுத்த சில நிமிடங்களில் நாங்கள் ஒரு காஃபி டேயில் செட்டிலானோம்.

இவர் எனக்கு எப்படி முகநூல் நண்பரானார்?ஆரம்பத்தில் ஃப்ரென்ட் ரிக்வெஸ்ட் அனுப்பும் முன்னேயே என்னுடைய பதிவுகளுக்கு நிறைய லைக் போட்டவர். பிறகு நண்பரானார்.

இவரது ஆங்கிலப்புலமை, ஆங்கில எழுத்தாற்றல் என்னை மலைக்க வைத்தது. பதிவுகளின் நடுவே பிரெஞ்சு வாக்கியங்கள் அடிக்கடி எடுத்து விட்டு நம்மை அசத்துவார். டென்னிஸ் மற்றும் கால்பந்தாட்ட ரசிகர். இவான் லென்டில், பாட் காஷ், ஆன்ட்ரெ அகஸ்ஸி, மெக்கென்ரோ, ஸ்லோபதான் சிவோயினோவிக் போன்ற டென்னிஸ் வீர்ர்களின் ஸ்டைல் மற்றும் ரெகார்டுகள் அனைத்தும் இவருக்கு அத்துப்படி.

சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியை தினமும் தனது சுவற்றில் அலசினார். அவ்விளையாட்டின் நுனுக்கமான விபரங்களை எல்லோருடனும் பகிர்ந்துகொண்டார்.

தனது சொந்த கம்பெனி ஒன்றை நடத்துகிறார் அதன் CEOவான இவர். சில மருந்துப்பொருட்களை மற்ற கம்பெனி மூலம் தயாரித்து சுமார் 12 விற்பனையாளர்களை வைத்துக்கொண்டு விநியோகம் செய்கிறார். இந்தியாவின் பல பகுதிகளுக்கு அடிக்கடி பயணம் செய்து தனது தொழில் விருத்தியடைய உழைக்கிறார்.

பீகார், கல்கத்தா என நிறைய வட மாநிலங்களுக்கு விஜயம் செய்வதால் அதைப்பற்றி அழகாகவும் எழுதுகிறார். சினிமா பற்றி ஏகப்பட்ட சமாசாரங்கள் கைவசம் வைத்திருக்கிறார். சமீபத்தில் பாரதிராஜா அவர்களைப்பற்றி அவரது பிறந்தநாளன்று ஒரு பதிவும் இட்டிருந்தார்.

சுமார் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டருந்து விட்டு திருச்சிக்காரரான இவருடன் போட்டோ எடுத்துக்கொண்டேன். விடைபெறும் முன் ஒரு ஃபளாஷ் டிஸ்க்கை எனக்கு பரிசாக அளித்தார். கோவையில இருந்து திருச்சி திரும்பும்போது அவர் பரிசளித்த பென் ட்ரைவை காரில் ஓடவிட்டேன். ஆஹா...அந்த 3, 4 மணி நேரம்..என்ன ஒரு ஆடியோ வெரைட்டி....!
தண்டபாணி தேசிகரின் திருவாசகம்,
வேளுக்குடி கிருஷ்ணனின் 'விதூர நீதி' 25 பாகங்கள், சுகி சிவம்-பகவத்கீதை, நாராயணீயம், எம்.எல். வசந்தகுமாரியின் தாலாட்டுப்பாடல்கள், சிவனையும் அரங்கனையும் போற்றிப்பாடப்பட்ட எக்கச்சக்கமான பாடல்கள்...கிரிவலமகிமை, திருப்படையாட்சி, குலப்பத்து,அன்னாமலையார் அற்புதங்கள், திருச்சதகம் அனுபோகஸ்துதி....

எப்பிடி சார் எனக்கு ஃப்ரெண்டா கெடச்சீங்க Karthikeyan Meenakshi Sundar?

Caricaturist Sugumarje

Caricaturist Sugumarje அவர்களுடன் சுமார் ஒரு மணி நேர சந்திப்பு. முதல் சந்திப்பு அது. ஶ்ரீரங்கம் திருவானைக்காவலில் இருந்து கரூர் பைபாஸ் ரோடு வந்ததும் வண்டியை ஓரங்கட்டி அவருக்கு போன் செய்தபோது ' அடுத்த ஃபேஸ்புக் ஃபரெண்டா? அது யாரு?' என மனைவி கேட்டார். உடனை தன் ஆபிஸிலிருந்து வெளியே வந்து நின்றுகொண்டு தன் ஆபீசை ஆடைய வழி சொன்னார்.

பார்க்க கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் மிக அமைதியாக பேசுகிறார். குறைவாகவும் பேசுகிறார். அழகாக திருத்தப்பட்ட சால்ட் அன்ட் பெப்பர் தாடி..

'உங்கள் ஓவியங்கள் நன்றாக இருக்கிறது ஶ்ரீதர். ஆனா


ல் நீங்கள் human anotomy கொஞ்சம் படிப்பது அவசியம்' என அறிவுறுத்தினார். முகம் வரையும்போது கண்கள், தாடை போன்ற பகுதிகள் இன்னும் அழகாக வரைய இன்னென்ன செய்யவேண்டுமென நிறைய யோசனைகள் கொடுத்தார். விழிகள் வரையும்போது அதன் நடுவே எப்படி வெள்ளைப்புள்ளிகள் வைப்பதென்பதை அழகாக வரைத்தும் காட்டினார்.

ஓரிரு நிமிடங்களில் தான் காரிகேச்சர் வரையும் விதத்தையும் விளக்கினார். அதில்லாமல் ஓவியங்கள் வரையும்போது தான் பயன்படுத்தும் சில உத்திகளையும் தயங்காமல் சொல்லி என் மனதில் வெகுவாக உயர்ந்தார். Suresh cheenu வரையும்
ஓவியங்களையும் புகழ்ந்தார். அவர்கள் இருவரது ஓவியங்களுக்கும் உள்ள வித்தியாசங்களையும் அழகாக விளக்கினார்.

அடுத்து அவர் டிஜிட்டல் பேனா எடுத்து தான் எப்படி வரைகிறாரென்பதையும் செய்துகாட்டினார். ஏற்கனவே அவர் வரைந்த காரிகேச்சர்களையும் நமக்குக்காட்டினார். திடீரென 'நீங்க உட்காருங்க 2,3 நிமிஷத்துல நானே உங்கள வரையறேன்' என சொல்லி கிடுகிடுவென எங்கள் இருவரையும் வரைந்து காட்டி அசத்தினார். படம்
வரையும்போது தாடையில் ஆரம்பித்து தலைமுடியில் முடிக்கிறார்.

விடைபெற்றுக்கொண்டு அவர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தோம். வண்டியை எடுத்து தில்லைநகர் ஆர்ச் உள்ளே புகுந்து 1வது க்ராஸ் ஓரத்தில் இளநீர் குடிக்க நிறுத்தியவுடன் செல்போனை பார்த்தால் தான் வரைந்த எங்கள் படங்களை அடுத்த 5 நிமிடத்திலேயே பதிவு செய்திருந்தார்.

சுகுமார்ஜே சாருக்கு ஜே!!

எது இன்று உன்னுடையதோ...

அந்த பதிவாளர் அலுவலகம் திருச்சி நகரிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. முன்கூட்டியே போனில் சொல்லி வைத்திருந்ததால் கம்பெனி பிரதிநிதி (க.பி) என்னையும் மனைவி Usharani Sridhar ஐயும் காலை எங்கள் வீட்டிலிருந்து தன் இன்டிகா காரில் ஏற்றிக்கொண்டார்.
நிலம் தொடர்பான பதிவு செய்ய நாங்கள் அங்கு சென்றதும் பத்திரம் எழுதும் கடை முன் கார் நிற்க, க.பி மட்டும் உள்ளே ஓடினார். "ஒன்னும் பெரிய வேலை இல்ல சார். அக்ரிமென்ட் கம்ப்யூட்டர்ல ரெடியா இருக்கு. ஆயிர்ருவாய்க்கு பத்திரத்தாள் வாங்கி அதுல ப்ரின்ட் எடுக்கனும்" என சொல்லி ஓடிய க.பி.க்கு சுமார் 25 வயது தான் இருக்கும். மாதத்தில் முக்காவாசி நாட்கள் தமிழ்நாட்டின் பல பாகங்களுக்கு வாடிக்கையாளர்களை கூட்டிச்சென்று அவர்கள் கம்பெனி மூலம் வாங்கிய நிலத்தை அந்தந்த மாவட்ட/ஊர் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொடுப்பது அவர் வேலை. அவரே 'செல்லர்' மற்றும் ‘கம்பெனி இயக்குநர்’ என கையொப்பமிடுவார்.
பதிவு செய்ய முன்கூட்டியே எல்லா செலவுகளுக்கும் சேர்த்து கனிசமான தொகையை நம்மிடமிருந்து வாங்கி விடுவார்கள். நமக்கு அதிகம் வேலையில்லை. இளநீர் சாப்பிட்டுக்கொண்டே (பைசா அவர் குடுத்துட்டார்) அவர்கள் கை காட்டுமிடத்தில் கையொப்பமிடவேண்டும். எல்லாம் முடிந்தபின் திருச்சி பஸ் ஸ்டாண்டில் பெரிய ஓட்டல் ஒன்றில் மதிய சாப்பாடு வாங்கிக்கொடுத்து வாழைப்பழம் பீடாவுடன் நம்மை வீட்டில் ட்ராப் செய்துவிடுவார்கள்.
"பதிவு செஞ்சவுடன ஒரு வில்லங்கம் எடுக்கனுமே" என தயங்கி கேட்கும் நம்மிடம் "இன்னும் 10 நாள்ல சிஸ்டத்துல ஏத்திடுவாங்க.. அப்பறமா நீங்க ஆன்லைன்ல போட்டு வில்லங்கம் எடுத்துறலாம்" என டக்கென பதில் வரும்.
"ஏம்ம்பா..நெலத்தை சுத்தி காம்பவுன்டு செவுரெடுத்து இரும்பு கேட் போட்டு கேட்டான்ட 'இந்த நிலம் இன்னாருக்கு சொந்தம்..மீறி உள்ளே வருபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்'னு போர்டு வைக்கனுமே என வெள்ளந்தியாக கேட்ட நம்மிடம் அவர் "சார் நான் ரிஜிஸ்ட்ரேஷன் டீம். அதெல்லாம் மார்க்கெட்டிங் டீம் பாத்துப்பாங்க" என சொல்லிவிட்டு '10 கிலோமீட்டருக்கு சுத்திலும் வெறும் நெலந்தான் இருக்கு.. கல்லு நட்டதே பெருசு.. இவுருக்கு காம்பவுன்டு செவுராம்" என அவர் முனுமுனுத்தது நம் காதில் லேசாக விழுந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் அந்த பக்கம் திரும்பிக்கொண்டோம் .
பக்கத்தில் இன்னொரு இளைஞர். அவரும் கஸ்டமராம். கத்தார் பார்ட்டி. சம்பிரதாயத்துக்கு அவரிடம் மெல்ல பேச்சுக்கொடுத்தேன் தமிழில். வெறும் ஆங்கிலத்தில் மட்டுமே பதில் சொன்ன அவர் பிசியாக தினமணி படித்துக்கொண்டிருந்தார். இதற்குள் பத்திரங்கள் ரெடி செய்து நம்மிடம் வந்தார்கள். எல்லா பக்கங்களிலும் கருப்பு மையில் கையொப்பமாம். போட்டோம்.
"சார்.. நீங்க கத்தார் பார்ட்டிக்கு சாட்சி கையெழுத்து போடுங்க.. அவுரு உங்களுக்கு சாட்சி கையெழுத்து போடுவார்" என இவர் சொன்னதும் எனக்கு சுள்ளென கோபம் வந்தது. "அதெப்பிடிப்பா? அவர இப்பத்தான் நா பாக்கறேன். எந்த நெலத்த எப்பிடி வாங்கறார்னு எனக்குத்தெரியாம நா எப்பிடி சாட்சிக்கையெழுத்த அவருக்கு போடமுடியும்" என எகிற, அவர் உடனே கூலாக "பரவால்ல சார்.. நம்ம டிரைவர் போடுவார்" என சொல்லவும் தயாராக காத்திருந்த டிரைவர் கிடுகிடுவென சாட்சி கையெழுத்து போட்டார்.
" என்னப்பா! மணி ஒன்ற.. எப்ப முடியும்?" பொறுமையிழந்து கேட்ட என்னிடம் அவர் "மொத்த டாக்குமென்ட்ட ரெடி பண்ணி மேடம் டேபிள்ள வெக்கனும். அவங்க வந்து சுறுக்க ரெண்டு , ரெண்ட்ரைக்குள்ளாற முடிச்சுடுவாங்க" என்றார். பதிவாளர் ஒரு பெண்ணாம்.
இரண்டு மணிக்கு மேடம் வந்ததும் அவர் மேசையைச்சுற்றி யார் யாரோ நின்று கொள்ள எங்களை வெளியே நிற்க வைத்தார்கள். துண்டு பேப்பர்கள் சொறுகி பல ரிஜிஸ்தர்களை அவர் முன் வைக்க அவர் ஏதோ கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்.
'இந்த அலுவலகம் கண்காணிப்பு கேமிராவுக்குட்படுத்தப்பட்டுள்ளது' என்ற போர்டை ஆச்சர்யத்துடன் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே "செல்வம் வாங்க சார்!" என குரல் கேட்டதும் கத்தார் பார்ட்டி உள்ளே ஒடினார். குனிந்தவாறு இருந்த பதிவாளர் பெண்மணியின் கண்கள் மட்டும் தன் மூக்குக்கண்ணாடிக்கு மேல் வெளியே வந்து தீர்க்கமாக அவரை பார்த்து ஏதோ கேட்க கத்தார் பார்ட்டி திருப்பதி லட்டு மாதிரி இருந்த தன் மோட்டா மணி பர்ஸிலிருந்து சுமார் 10 க்ரெடிட் கார்டுகளுக்கு நடுவே இருந்த பான் கார்டை வெளியே எடுத்துக்காட்ட கிஷ்ணமூர்த்தி என்ற குமாஸ்தா "இந்தாண்ட வாங்க சார்" என அவரை கூப்பிட்டார். வெள்ளை வேட்டி சட்டையணிந்த கருப்பான கிராமத்து முதியவர் கிஷ்ணமூர்த்தி. கி.ராஜநாராயணன் சாயல். முரட்டுத்தோற்றம்.
அடுத்து நாங்கள். "மேடம் உங்க பான் கார்டெங்க?" என என் மனைவியை கிஷ்ணமூர்த்தி கேட்க கூட வந்திருந்த க.பி. உடனே அவர் காதில் ஏதோ சொல்ல, என் பான் கார்டை மட்டும் பதிவாளர் பெண்மணி பரிசோதித்தார். மேலும் ஆறேழு சிப்பந்திகள் எதற்காக எங்களைச்சுற்றி நிற்கிறார்களென தெரியவில்லை. டொம் டொம் அந்த பிரதேசமே அதிர அவர்கள் சீல் அடிக்க நாங்கள் கோத்ரொஜ் பீரோவை ஒட்டி பவ்யமாக நின்றோம்.
"அங்க நேரா பாருங்க சார்"- கிஷ்ணமூர்த்தி கை காட்ட அந்த திசையில் உள்ள கவுன்டர் மேல் வைக்கப்பட்டிருந்த ஒரு வெப்கேமிரா நாகப்பாம்பு போல நம்மை படமெடுத்தது. திருப்தியுடன் நான் மனைவியை பார்க்க புடவையை சரி செய்துகொண்டு அவளும் போஸ் கொடுத்தாள்.
அடுத்து கட்டைவிரல் பதிவு. நம் கை கட்டை விரலை கிஷ்ண மூர்த்தி இறுக்க பிடித்து மையில் தொட்டு பத்திர தாளில் மாறி மாறி அழுத்த உயிர் போகும் வலி. ரிஜிஸ்ட்ரேஷன் கட்டன ரசீதையும் நம் படமெடுத்த காகிதத்தையும் வெளியே எடுத்து அதில் நாம் கையொப்பமிடவேண்டுமாம்.
பிரின்ட்டர் கக்கிய காகிதத்தை பார்த்தேன். இந்த போட்டோவுல இருக்கற ஆசாமிக்கு கிட்டத்தட்ட நம்ப மொக ஜாடை இருக்கே என நான் வியந்து மறுபடியும் போட்டோவை.. அடச்சீ! அது நம்முடைய போட்டோ தான்! கிட்டத்தட்ட ஒற்றைக்கண் சிவராசு மாதிரி ஆக்கிவிட்டார்கள் பாவிகள்..
அதற்குள் வேறு ஏதோ தவறு நடந்துவிட 'செல்வம்' என்று பிரின்ட் செய்யப்பட்டுள்ள ரசீதை என் முன் நீட்டினார்கள். ‘அய்யா! நா சீதாபதி ஶ்ரீதருங்க!’ என ஏவியெம் ராஜன் மாதிரி பரிதாபமாக சொல்ல ரசீதை கையால் அடித்து பேரை மாற்றி எழுதினார் கிஷ்ணமூர்த்தி. ‘சார்..,பேரு மாறி இருக்கே... அத கைல திருத்தலாமுங்களா? சிஸ்டத்துல மாத்த வேணாமுங்களா?‘ என்ற என்னிடம் "ரசீதுல பேரை விட நம்பரு தான் முக்கியம்...நாங்க பாத்துக்கிடுவம்" ... கிஷ்ணமூர்த்தி லேசாக உஷ்ணமூர்த்தியானார்.
அந்த வெப் கேமிரா, தம்ப் இம்ப்ரெஷன் பார்ட்டிகள் எல்லோரும் அரசாங்க ஊழியர்கள் கிடையாதாம். அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட சர்வீசாம் அது. அதற்கென்ற தனியாக சார்ஜ் கொடுக்கவேண்டுமென கிஷ்ணமூர்த்தி சொல்ல நம் க.பி. மறுபடியும் அவர் காதில் ஏதோ சொல்ல கிஷ்ணமூர்த்தி முகத்தில் மலர்ச்சி. "நீங்க வெளிய இருங்க சார் " என நம்மை அனுப்பிவிட்டார்கள்.
ஒருவழியாக முடிந்து வெளியே வந்தோம். எல்லாமே ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் அங்கு ஓடுகிறது. பதிவாளர் பெண் நம் அடையாள அட்டை, தஸ்தாவேஜுக்களை அலட்சியமாக பார்வையிடுகிறார். நம்பரை சரி பார்க்கிறார். உடனே கிடுகிடுவென கையொப்பமிடுகிறார். நடுவே பிஸ்லேரி அருந்துகிறார். எப்போதாவது ஏதோ கேள்வி கேட்க கிஷ்ணமூர்த்தி போன்றவர்கள் முன்னே பாய்ந்து உடனே பதில். தள்ளி நிற்கும் நமக்கு இனம்புரியாத பயம். தேவையில்லாமல் சுற்றிலும் கூட்டம். 'லீகல் சர்வீஸ் சார்ஜஸ்' என மொத்தமாக நம்மிடம் ஏற்கனவே வசூலித்த பணத்திற்கு விளக்கமெல்லாம் கிடையாது. கேட்டால் வெடுக்கென பதில்.
பதிவாளர் பெண் இருக்கையின் பின்புறம் லட்சுமி, சரஸ்வதி, பிள்ளையார் படங்கள். அந்தப்பக்கம் பெரிய கிருஷ்ணர் படம்... பக்கத்தில் கீதோபதேசம்..மெல்ல வாசித்தேன்...
"எது நடந்தோ அது நன்றாகவே நடந்தது" ( ஆஹா.. அப்ப நிலம் வாங்கியது நல்லது தான்)
அடுத்த சில வரிகளுக்குப்பின்...
" இன்று எது உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது" (ஐயோ! நாராயணா! விசு ஜோக் ஞாபகத்துக்கு வருதே!) 
No automatic alt text available.

ஆனந்த் ராகவ் & சுதாகர் கஸ்தூரி

இரண்டு பெரிய எழுத்தாளர்களை முதன்முதலில் நேரில் பார்க்கப்போகிறோம்... எப்படி நம்மிடம் அவர்கள் பேசுவார்கள்...என்னென்ன விஷயங்கள் நமக்கும் அவர்களுக்கும் பொதுவானது போன்ற கேள்விகளுடன் மல்லேஷ்பாளயாவிலிருந்து கிளம்பினேன். 

ஒருவர் ஆனந்த் ராகவ்.. ஷ்ரத்தா மேடை நாடக குழுவின் தலைவர், பிரபல பத்திரிக்கைகளில் சிறுகதை மற்றும் கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர், கலைஞர் டீவி நாளைய இயக்குநர் குறும்படங்கள் சிலவற்றின் கதாசிரியர், நாடக நடிகர், விரைவில் வெள்ளித்திரையில் நாம் காணப்போகும் சினிமா நடிகர், company secretary, ஒரு IT நிறுவனத்தின் Chief Financial Officer, குழந்தைகள் நலனில் அபரிதமான அக்கரையும் பாசமும் கொண்ட தந்தை ( ப்ளஸ் 2 படிக்கும் பையனின் நலன் கருதி டீவிக்கு தடை விதித்து தானும் டீவி பார்க்காமல் இருக்கிறார்).

மற்றொருவர் சுதாகர் கஸ்தூரி.. தமிழகத்தின் டான் ப்ரௌன்..விஞ்ஞானக்கதைகள் எழுதி எல்லோரையும் மலைக்க வைத்துக்கொண்டிருப்பவர். குறும்பு மற்றும் நகைச்சுவை இழையோடும் சிறு கதைகள், தமிழ் செய்யுள், இலக்கணம், கவிதைகள், தமிழ் இலக்கியத்திலிருந்து ஏராளமான மேற்கோள் காட்டி அதை திறம்பட தன் கதைகளின் கருவுக்குள் புகுத்தி அசத்தல் சிறுகதைகள் எழுதுபவர்..

இருவரும் படு ஸ்மார்ட்... ஸ்மார்ட் கேஷுவல் உடையணிந்து, குறுந்தாடியைச்சுற்றி ஓரிரு நாள் தாடியுடன் மௌனராகம் கார்த்திக் மற்றும் ரன்பீர் கபூரை நினைவுபடுத்தினார்கள். இருவரும் போட்டோவில் பார்த்தைவிட நேரில் மிக இளமையாக ஐந்தாறு வயது குறைவாகவே காணப்பட்டார்கள்.

சில்க்போர்டு சமீபம் ஒரு கஃபே காஃபி ஷாப்பில் மூவரும் சந்தித்தோம். பரஸ்பரம் குடும்பம், குழந்தைகள் சம்மந்தப்பட்ட விஷயங்கள், அலுவல், பஹ்ரைன் வாழ்க்கை பற்றிய நுணுக்கமான விபரங்கள் பற்றி நிறைய பேசினோம். க்ராய்சோ(ன்), பிக்கீஸ், டார்ஜிலிங் தேனீர், கருப்பு காபி சகிதம் மூவரும் சுமார். ஒரு மணி நேரம் பேச முடிந்தது. இருவருக்குமே பல நாடுகளுக்கு சென்று வந்த அனுபவங்கள் ஏராளம். இலக்கியம், அரசியல், சினிமா, உலக நடப்பு என எந்த துறை பற்றியும் விவாதிக்கக்கூடியவர்கள். ஏதோ பல வருடங்கள் அறிமுகமானார்கள் போல பேசிக்கொண்டிருந்தோம்.

திறமையான எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கு எத்தனை கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பது இவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது தெரிந்தது.

மணி ஐந்தரையானதும் சுதாகர் விடைபெற்றுக்கொண்டார். இதற்குள் ராஜ்ஜிடமிருந்து( Rajagopalan Trichy ) போன் வந்தது. அதன்படி ஆனந்த் என்னை தன் காரில் கூட்டிச்சென்று பன்னர்கட்டா ரோட்டில் ஒரு சிக்னலில் இறக்கிவிட அங்கே மற்றொரு காரில் ராஜ் எனக்காக காத்திருந்தார். ராஜகோபாலுடன் கழித்த அடுத்த 4 மணி நேரங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாது(தனி பதிவு)

முகநூல் மூலம் எனக்கு கிடைத்த இந்த இரு நண்பர்கள், அவர்களது ப்ரொஃபைல், இனிமையாக பழகும் விதம்.... அடடா...இந்த இரு படைப்பாளர்களும் மேலும. பிரபலமடைந்து அடுத்த சில மாதங்களில் புகழின் சிகரத்தில் அமர்வது உறுதி..

Queen (Hindi movie)

டெல்லி ரஜோரி பகுதியில் மிட்டாய் கடை வைத்திருக்கும் பஞ்சாபி குடும்பத்தாரின் பெண்ணான ராணிக்கு (கங்கனா ரனவத்) முகமெங்கும் பரவசம். இன்னும் ரெண்டே நாளில் கல்யாணம். மிகவும் கட்டுப்பாடான குடும்பம்.வீட்டைவிட்டு அதிகம் வெளியே போய்ப்பழக்கமில்லாத அவள் பஞ்சாபி உறவினர்களுடன் பாடி ஆடுகிறாள். மறுநாள் மாப்பிள்ளைப்பையன் விஜய் (ராஜ்குமார் ராவ்) அவளை காஃபி ஷாப்புக்கு கூப்பிட்டு இந்த கல்யாணத்தை நிறுத்திவிடலாமென சுறுக்கமாக சொல்ல.. 'ஏன்டா.. நீதானே என்னை சுத்தி சுத்தி வந்து காதலித்து பெண் கேட்டாய்.. இப்ப என்ன குடிமுழுகிப்போச்சு?' என அழுகையினூடே கேட்ட ராணிக்கு ஏதோ சால்சாப்பு செல்கிறான் அவன். நமக்கு ஒத்து வராது. நீ நிறைய மாற வேண்டுமே.. அது இதென்று சில காரணங்களைச்சொல்லி கழண்டுகொள்கிறான் அந்த அழகான இளைஞன்.

கல்யாணமும் நின்றுவிட, ஒருநாள் முழுவதும் கிடந்து அழுத பின் ஏற்கனவே தேனிலவுக்காக புக் செய்திருந்த பாரிஸ் டிக்கட்டை கேன்சல் செய்யாமல், பெற்றோர் வேண்டாமென சொல்லியும் அழுத மூஞ்சியுடன் விமானம் ஏறுகிறாள் சாதாரணமாகவே அழுமூஞ்சி மாதிரி இருக்கும் கங்கனா.

பாரிஸ் விடுதியில் பணிப்பெண்ணாக இருக்கும் விஜயலக்ஷ்மியின் நட்பு கிட்டுகிறது கங்கனாவுக்கு. விஜயலக்ஷ்மியாக வரும் லிசா ஹேடன் பாலிவுட் இறக்குமதி... பூர்வீகம் சென்னையாம். அவள் வரும் சீனில் தியேட்டரில் கர்சீப்பால் முகம் துடைத்துக்கொண்ட நிறையபேருக்கு தூக்கம் கெடுவது நிச்சயம். உலகமே தெரியாத அப்பாவி கங்கனாவுக்கு தைரியமூட்டுகிறாள். பெண்கள் எப்படி தனித்துப்போராட வேண்டுமென அறிவுறுத்துகிறாள். நடுவே ஏன் தண்ணியடிக்கவும் கற்றுக்கொடுக்கிறாள் எனத்தெரியவில்லை.

கங்கனா அடுத்து ஆம்ஸ்டர்டாம் போய் இறங்குகிறாள். ஹாஸ்டல் ஒன்றில் 3 ஆண்களுடன் தங்க அவளுக்கு இஷ்டமில்லையென்றாலும், அவர்கள் மிக அன்பாகப்பழகி நல்ல நண்பர்களாகிறார்கள். ஒரு உணவகத்தின் முதலாளியுடன் சேர்ந்து இந்திய உணவெல்லாம் தயாரித்து கொஞ்சம் பணமும் சம்பாதிக்க, அவளுக்கு மனதிடமும் தைரியமும் கூடி வாழ்க்கையில் மறுபடியும் சந்தோஷ தருணங்களை எதிர்கொள்ளும்போது, பழைய காதலன் விஜய் அவளைத்தேடி அங்கே வருகிறான். பழசையெல்லாம் மறந்து மறுபடியும் திருமணம் செய்துகொள்ள அவளை வற்புறுத்துகிறான்.

திரும்பவும் கங்கனா மனம் மாறியதா? என்ன முடிவு செய்கிறாள்? கல்யாணம் மறுபடியும் நடந்ததா என்றெல்லாம் நம்மை ரொம்ப மண்டையைப்போட்டு குழப்பிக்கொள்ளவிடாமல், நம்மூர் பாரதிராஜா, பாக்யராஜ் மாதிரி டன்...டன்..என உடுக்கையெல்லாம் அடித்து நீண்ட க்ளைமாக்ஸ் சீன், வசனங்கள் என இழுக்காமல் சட்டென்று படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர் விகாஸ் பெஹல்.

' உன்னோட நிம்மதியக் குலைச்சி, உன் புருஷனையே என் முந்தானைக்குள்ளாற முடிச்சி, உன் குடும்பத்த நடுத்தெருவுக்கு கொண்டு வரத்தயங்கமாட்டா இந்த சாவித்திரி' போன்ற சின்னத்திரை சீரியல் வசனங்களை பார்க்கும் மாலை வேளையில், வன்முறை மற்றும் சண்டைக்காட்சிகளில்லாத, நகைச்சுவை கூடிய இந்த ஹிந்திப்படத்தை நிம்மதியாக 3 மணிநேரம் பார்க்கலாம்..

G.K.R

ரிடையர் ஆன அன்று திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் வழியாக கோஷங்களுடன் பெரிய ஊர்வலம்.. யூனியன் தலைவர் GKR வாழ்க என சத்தம்..சரியான கூட்டம். நடுவே இவர் மாலையுடன்.... ரோட்டின் இருபுறங்களிலும் மக்கள் கூட்டம். கூட்டத்தின் நடுவே எங்கோ மூலையில் நான். எத்தனையோ வருடங்கள் இரயில்வேயில் இருந்து விட்டு இன்று பிரிகிறோமென சோகத்துடன் அவர் கண்களில் நீர் வழிந்தோட, நமக்கு இத்தனை பேர் நண்பர்களா என ஆனந்தகண்ணீருடன் நடந்து வருகிறார். ஊர்வலம் அவரது வீட்டை நோக்கி நகர்கிறது. அவ்வளவு பெரிய கூட்டத்திலும் அவர் என்னை பார்த்துவிட்டார். என்னைப்பார்த்து கையை தூக்கி ஆட்டி 'ஆத்துக்கு வந்துடுங்கோ' என சைகை செய்கிறார். அடுத்த அரை மணியில் அவரது வீட்டில் எல்லோருக்கும் இனிப்பு மற்றும் சிற்றுண்டி காபி...

இடுப்பிலிருந்து லேசாக அவிழும் வேட்டையை இழுத்து கட்டி, பெஞ்சில் கிடக்கும் துண்டை உதறி தோளில் போட்டு " உட்காருங்கோ.. அப்புறம் CA படிப்பெல்லாம் எப்பிடி போயின்டிருக்கு?" என கேட்டு லேசாக தலையை தூக்கி புகையிலை மணத்துடன் உதட்டோரம் தாம்பூலச்சிவப்புடன் எட்டிப்பார்க்கும் எச்சிலை உள்ளுக்குள் இழுத்துக்கொள்வார். பேச்சின் நடுநடுவே நாம் இதுவரை கேள்விப்பட்டிருக்காத ஆங்கில பழமொழிகளை எடுத்து விடுவார். வாழ்நாள் முழுக்க தனக்கென்று எதுவும் சேர்த்துக்கொள்ளாமல் பெரியவன் ரமணியின் BE (REC) படிப்பு, சின்னவன் கணபதியின் CA படிப்பு செலவுகளை சமாளித்து, 4 பெண்களான ராஜு, பத்மா, சந்திரா மற்றும் வாணி எல்லோரையும் நல்ல இடங்களில் கட்டிக்கொடுத்து அடுத்த 10 வருடங்களில் சட்டென்று இந்த லோகத்திலிருந்து விடை பெற்றுக்கொண்டார்.

மற்றவர்கள் செய்யும் தவறை அவர்கள் மனம் புண்படாவன்னம் முகத்துக்கு நேரே எடுத்துரைத்து..'அப்புறம் உங்க இஷ்டம்' என நாசூக்காக சொல்லிவிடுவார். தொழிலில் நேர்மை, பிறருக்கு உதவி, குடும்ப கடமைகள்... இதுதான் GKR என்கிற GK ராமமூர்த்தி அவர்கள். பயம் என்பது கொஞ்சம் கூட கிடையாது. காய்கறி வாங்கப்போனாரென்றால் கடைக்காரர் அரை கிலோ கொத்தவரங்காயை தராசில் நிறுத்தி அவர் பையில் போட்டபின்னும் கை நிறைய இன்னும் கொஞ்சம் அள்ளி பையில் போடும் அளவிற்கு அவ்வளவு மரியாதை.

தினமும் காலை உதவிகேட்டு யாராவது ஒருவர் இவரது வீட்டிற்கு வருவது வழக்கம். அதற்கென்றே வாசலில் பெஞ்சு போடப்பட்டிருக்கும். கல்யாணங்கள், சிலரின் பையனுக்கு ரயில்வே கலாசி வேலை, ஸ்கூல் அட்மிஷன், ரயில்வே கல்யாண மண்டபத்தில் சத்திர ஏற்பாடு என பொன்மலை ரயில்வே காலனியில் ஒரு MLA மாதிரி வலம் வந்தார். ஒரு சின்ன சதுர மரப்பலகையில் காவி வர்ணத்தில் சில நிமிடங்களில் அவர் வரைந்த காஞ்சிப்பெரியவர் ஓவியத்தை கண்டு மலைத்திருக்கிறேன்.

சின்னவனான கணபதி என் ஆருயிர் நண்பன்..குரு.. CAவில் சீனியர்.. திருச்சியில் இருந்த என்னை 20 வருடங்கள் முன் பஹ்ரைனில் உட்கார வைத்துவிட்டு சென்னை திரும்பியவன். "உன்னை அவருக்கு ரொம்ப புடிக்கும்டா... அடிக்கடி விசாரிப்பார்" என்பான்.

நைரோபியில் இருந்து நேற்று போனை வைக்க மனமில்லாமல் ஒரு மணி நேரம் கணபதி பேசிக் கொண்டுருந்தான். "அப்பறம் என்னடா ஶ்ரீதரா.. எதாவது சொல்றா....யார் மண்டையாவது போட்டு உருட்டேன்" என கேட்டுவிட்டுத்தான் போனை வைப்பான்.
ச்சே... இன்னிக்கி friendship dayயாகவும் இருக்கக்கூடாதா!..

தந்தையர் தினமான இன்று என் தந்தை மட்டுமல்லாது கணபதியின் தந்தையையும் நினைத்து அவர்களது ஆசி எப்போதும் எங்களுக்கு கிடைக்க தஞ்சை கணபதி அக்ரஹாரம் ஶ்ரீ மகா கணபதியை வேண்டுகிறேன்.

கோச்சடையான்....


கோட்டைப்பட்டினம் ராஜா ரிஷிகோடனின் (நாசர்) படைத்தளபதி தான் அப்பா ரஜினி, கோச்சடையான். நிறைய சண்டை போடுகிறார். எதிரி மன்னன் மகேந்திரன் (ஜாக்கி ஷ்ராஃப்) நாடான கலிங்கபுரி படைகளுடன் போர். வீரர்களையும் குதிரைகள் மற்றும் ராணுவத்தளவாடங்களையும் இழந்து நாடு திரும்புகிறார். அதனால் போர்க்குற்றம் சுமத்தப்பட்டு மன்னன் நாசரால் கொல்லப்படுகிறார். 

பிறகு மகன் ரஜினி (ராணா) தந்தையைக்கொன்ற நாசரை பழிவாங்கும் எண்ணத்துடன் தந்தையால் இழந்த படை வீர்ர்களை மீட்க கலிங்கபுரி போகிறார். அங்கும் சிறந்த வீரனாகிறார். மன்னர் ஜாக்கிக்கு ரஜினியின் புகழ் தெரிய வருகிறது. மன்னரின் மகன் வீர மகேந்திரன்(ஆதி.... ஓ.. நீயும் நடிக்கறயா?). ஜாக்கியின் நன்மதிப்பைப்பெற்று அந்நாட்டின் படைத்தளபதியாகி திரும்ப கோட்டைப்பட்டினம் மீதே படை எடுக்க சம்மதம் பெறுகிறார் ரஜினி. சிறைபட்டிருந்த (கோ.பட்டினத்தைச்சேர்ந்த) வீரர்களையே போருக்கு அனுப்பலாம் என அவர் கொடுக்கும் ஐடியாவையும் ஏற்றுக்கொண்டு மன்மோகன்சிங் மாதிரி எல்லாத்துக்கும் தலையாட்டுகிறார் அனிமேஷனில் ஜாக்கி ஷ்ராஃப் சாயலில்(!) இருக்கும் ஜாக்கி ஷ்ராஃப்..

போர் ஆரம்பம். போர் நாடுகளின் எல்லைக்கு வந்தவுடன் மகன் ரஜினி ராணா தன் வீரர்களிடம் 'நீங்கள் உங்கள் பழைய நாடான கோ.பட்டினத்துக்கே ஓடி விடுங்கள்' என அவர்களை விடுவித்தவுடன்தான் ஜாக்கிக்கும் அவரது மகன் வீர மகேந்திரனுக்கும் ரஜினியின் சூழ்ச்சி புரிகிறது. ('நமக்கும் தான்'னு சொல்லியிருந்தேன்னா அடி விழும்). படம் முழுக்க போர்..போர்..போர்..(மன்னிக்க.. bore... bore..bore)

ரஜினியும் தன் தாய் நாடான கோ.பட்டினத்துக்கே திரும்ப வந்து நாசரைக்கொல்ல முயன்று, நாசரால் சிறை பிடிக்கப்பட்டு, இளவரசி வதனா..அதாவது ரஜினியின் காதலியான தீப்பிக்கா(ரி) ரஜினியை விடுவிக்க முயல, பிக்காரியின் அண்ணன் செங்கோடனை (சரத்குமார்) ரஜினியின் தங்கை மணக்க...'ராஜ குடும்பத்தில் பிறந்து சாதாரண பெண்ணை மணந்ததால் உனக்கு அரியனை இல்லை' என நாசர் சொல்ல... அதனால் சரத் நாட்டை விட்டு வெளியேற....ஆஆஆவ்....பக்கத்தில் 'நாச்சோ' கொறித்துக்கொண்டிருந்த நண்பன் Anantha Narayanan க்கும் கொட்டாவி...

எங்க விட்டேன்?... ஆங்.. சொல்ல மறந்துட்டேனே! சின்ன வயசுலயே தொலைந்து போய்ட்டாராம் ரஜினியின் அண்ணன் சேணா... ( ஐயோ.. வேணா) அவரும் கடைசி சீன்ல வர்றாரு..அண்ணனும் தம்பியும் சேர்ந்து பழி வாங்கப்போறாங்க.... தொடரும்...னு ஸ்க்ரீன்ல போட்டவுடனே தியேட்டர்ல லைட் பளிச்சுன்னு எறிஞ்சுது.

'அப்பாடா..சரி.. உச்சா போய்ட்டு வந்து இன்டர்வல்லுக்கப்பறம் மீதி கருமத்த பாத்துத்தொலைக்கலாம்னா, 'ஹலோ..படமே முடிஞ்சிடுச்சு'ன்னு சொல்லி வயத்துல பால வர்த்தாங்க மக்கழே...ஆஆவ்..

'எதிரிகளை ஒழிக்க நெறைய வழி இருக்கு.. அதுல முக்கியமானது..மன்னிப்பு' போன்ற பஞ்ச் வசனங்கள்.

சோழிங்கநல்லூர் வழியா சுறுக்க சிறுசேரி போய்ட்டு சாயரச்சே திரும்ப வர்ற மாதிரி ரஜினி அடிக்கடி கோட்டைப்பட்டினம், கலிங்கபுரி கப்பல்ல போய்ட்டு போய்ட்டு வர்றார்.

படைவீரர்களுடன் நடுக்கடலில் திரும்பிக்கொண்டிருக்கும்போது எதிரிகளால் விஷம் கொடுக்கப்பட்டு தன் வீரர்கள் இன்னும் சில நிமிடங்களில்(?) இறந்துவிடுவார்கள் என மருத்துவர் ரஜினிடம் சொல்ல, அவர் ' பக்கத்துல எதாவது நிலம் இருக்கா? ஓ.. கலிங்கபுரியா? உடனே ரூட்ட மாத்து...' என இசபெல்லா ஆஸ்பத்திரிக்கு போற மாதிரி கப்பலை திருப்பும்போது....தூக்கம் கண்ணை சொறுகிடுச்சு...T.ஷர்ட்டெல்லாம் எச்சி...

தியேட்டரில் இருந்த குட்டீஸ் பாவம்...எல்லோர் கையிலும் ஊதுவதற்கு விசில் இருந்தும் தாங்கள் எதிர்பார்த்து வந்த ரஜினி இல்லாத்தால் Usharani Sridhar பக்கத்தில் உட்கார்ந்திருந்த Jayasri Narayanan குழந்தைகள் பரிதாபமாக படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

"நானும் இருக்கேனே!".. யாருங்க அது? ஓ... தீபிகா படுகோனே.."அது சரி.. எனக்கென்ன வேலை? இது போர் சம்மந்தப்பட்ட படம் தானே! அப்பப்ப பாடல் காட்சியிலாவது 'புறமுதுகு'(ம்) காட்றேனே!" என்ற அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்கள் போலும். அனிமேஷனில் தீபிகா முகத்தை இன்னும் 2 முறை பார்த்தால் போதும். ரசிகர்கள் அவருக்கு சினிமா உலகிலிருந்து ஓய்வு கொடுத்துவிடுவார்கள். இந்த அனிமேஷன் ஐடியா தமிழ் சினிமாவுக்கும் வந்தால் கூடிய சீக்கிரம் சில நடிகைகளிடமிருந்து ரசிகர்களுக்கு விடிவுகாலம் கிட்டும்.

அனிமேஷன் முக, உதடு அசைவுகளுக்கு ஒத்து வராத ஒலி..குரல்... 70, 80 களில் தியேட்டர்களில் main படத்துக்கு முன் Indian news reviewவில் வரும் 'பீகாரில் வெள்ளம்'...மற்றும் விளம்பரப்படங்களான "தாதாஜி! பாட்மின்டன்"...ஞாபகம் வருகிறது.

பஹ்ரைனில் 400க்கும் மேல் டிக்கட்டுகளை முன்பதிவு செய்த நம் நண்பர்கள் Shyam Krishnan...மற்றும் அமீத் ஷா மாதிரி அவருக்கு உதவிய Karthik Gangaprakash பாராட்டுக்குறியவர்கள். படம் பார்க்கப்போன பெரியோர் சிறியோர் என எல்லோருக்கும் ரஜினி படம் போட்ட T.ஷர்ட்டுகள்...

முழுக்க முழுக்க குழந்தைகளுக்காகவே (3D கூட இல்ல) படத்தைப்பார்க்கப்போன நாம் " இது technology' க்காகவே பார்க்க வேண்டிய படம் என குழந்தைகளிடம் எப்படிச்சொல்வது?

நைனா...நைனா

அப்பாவின் பிறந்த நாளான இன்று அவரது நினைவுகளில் பல வருடங்கள் பின் நோக்கி...

நேர்மை, கூச்சம் மற்றும் பயந்த சுபாவம் இது மூன்றும் கலந்த உருவம் தான் ராமசாமி சீதாபதி என்கிற என் அப்பா.

ரிடையர் ஆகும் வரை நகைகளை அடகு வைத்து எங்களை படிக்க வைத்த மகான் அவர். பிறகு 20 வருடங்களாக நாங்கள் மாதாமாதம் அனுப்பும் பணம் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் மாத பென்ஷனை என்ன செய்வதென்று தெரியாமல் சேர்த்து வைத்து எங்களுக்கே திருப்பிக்கொடுப்பார். புற்று நோயால் வாடிய என் மூத்த சகோதரியின் மருத்துவ செலவுகளையும் அடுத்த 2 வருடங்களில் அவள் இறக்கும் வரை ஏற்றுக்கொண்டார். அவளது பெண்ணின் திருமண செலவுக்கும் சேர்த்து வைத்து விட்டு திருமணத்திற்கு 3 மாதங்களுக்கு முன் போய்ச்சேர்ந்தார்.

பஹ்ரைன் மற்றும் மஸ்கட்டுக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை வந்துவிடுவார். கடைசி ஐந்தாறு வருடங்கள் பார்கின்சன் நோயினால் அவதிப்பட்டார். பேச்சுக்குளறல்...வாயிலிருந்து சட்டை முழுக்க எச்சில் ஒழுகுதல்... நிற்பதற்கு balance இல்லாமல் (இல்லையென நினைத்துக்கொண்டு) பின் பக்கம் தடாலென அடிக்கடி விழுந்து மண்டையில் அங்கங்கே தையல். எண்ணையில் பொறித்த பலகாரங்கள் மிகுந்த இஷ்டம். 2010இல்அவரை மதராச பட்டினம் படம் பார்க்க கூட்டிச்சென்றபோது இடைவேளையில் ஆசையாக சமோசா வாங்கி சாப்பிட்டார். விமான நிலையத்தின் உள்ளே கடைகளில் கட்லெட் வாங்கித்தரச்சொல்வார். பஹ்ரைனில் ஹோட்டலுக்கு கூட்டிப்போய் ' என்ன சாப்பிடறீங்க' என கேட்டால் வெட்கத்துடன் குழைந்து தயக்கத்துடன் 'மசால் தோசை' என்பார்.

கோஆபரேடிவ் சப் ரிஜிஸ்ட்ராராக இருந்த அவர் பல கோ. வங்கிகளில் ஆடீட்டராக பணியாற்றும்போது ஊழல்களை கண்டு பயப்படாமல் ரிபோர்ட் செய்திருப்பதால் அடிக்கடி பல இடங்களுக்கு பந்தாடப்பட்டார். இரவு 10 மணிக்கு சில அரசியல்வாதிகள் எங்கள் வீட்டிற்கு அலுவல் விஷயமாக அப்பாவிடம் உதவி கேட்டு வரும்போது ' நாளை ஆபிஸில் வெச்சு பேசலாமே' என பணிவாக அவர்களை இவர் வெளியே அனுப்ப முனையும்போது சடாரென அவர்கள் நோட்டுக்கற்றையை இவர் சட்டையில் தினிக்க முயல், இவர் அதை தடுக்க, ஒரு சிறு போராட்டத்துடன் அவர்களை வெளியே அனுப்பியபின் பயத்தால் நடுங்கி படபடப்போடு சோபாவில் சரிந்துவிடுவார்.

புதிய திரைப்படங்கள் நகருக்கு வந்து ஓரிரு மாதங்களில் கழித்து புறநகர்ப்பகுதியான மன்னார்புரம் வரும்போது தான் குறைந்த செலவில் நாங்கள் படம் பார்க்கப்போவோம். மாத இறுதியில் அவர் கையில் பணம் வேறு இருக்காது. ' எப்ப காசு கேட்டாலும் இல்லன்னு சொல்றதே உங்களுக்கு வழக்கமாப்போச்சு' என நானும் என் தம்பியும் உச்ச ஸ்தாயியில் அவரைப்பார்த்து கத்தும்போது சட்டைப்பையில் இருக்கும் ஓரே ஒரு 10 ரூபா நோட்டையும் எங்களிடம் கொடுந்துவிடுவார்.

நானும் எனது சகோதரர்கள் இருவரும் சேர்ந்து அவரை கலாட்டா பண்ணாத நாளே கிடையாது. 6ஆங்கிளாஸ் படிக்கும்போது, நானும் தற்போது மஸ்கட்டில் இருக்கும் என் தம்பி ரவி( Jani Vijay Raghavan )யும் 'நைனா...நைனா...இந்த பென்சில கொஞ்சம் சீவிக்குடுங்க' என அவர் கையில் கொடுத்து விட்டு அவர் முகத்தை உற்றுப்பார்ப்போம். அடுத்து அவர் வாயை 'ஊ'வென்று வைத்துக்கொண்டு பென்சில் சீவுவதைப்பார்த்து 'ஏ... வாயப்பாரு' என்று கைகொட்டி விழுந்து விழுந்து சிரிப்போம். 'போங்கடா அந்தப்பக்கம்...அது அப்படித்தான் வரும்' என அவர்செல்லமாக எங்களை அதட்டுவார்.

செல்லமாக எங்களை வளர்த்தாலும் நைனா கண்டிப்பானவர்.திருச்சி தென்னூர் பென்ஷனர் காரத்தெருவில் நாங்கள் 70களில் வசிக்கும்போது வீட்டில் அடிக்கடி 'தொபேல்.. தொபேல்' என அடி வாங்கிக்கொண்டு நாங்கள் 'லேது...லேது'என சப்தமிடுவது பக்கத்து வீட்டிற்கு கேட்கும். சீப்பு, கயிறு என்று கையில் எது இருந்தாலும் அதைக்கொண்டு அடிப்பார். மறு நிமிடம் முட்டாய் வாங்க காசு கொடுப்பார்.

சென்னையிலிருந்து அடிக்கடி எங்கள் மாமா அந்தக்கால ஸ்டான்டர்டு காரை எடுத்துக்கொண்டு திருச்சி வந்து எங்களை விராலிமலை கூட்டிப்போவார். நைனா தான் முன்னால் உட்காருவார். காரில் போகும்போது ரோட்டில் தண்ணீர் தேங்கியிருந்தால் சட்டென காலைத்தூக்கிக்கொள்வார். 'ஹே... நைனா காலத்தூக்கிட்டார்' என நாங்கள் கத்தி சிரிப்போம்.

வழியில் செக்போஸ்ட் தடுப்புக்கட்டைக்கு கீழே கார் போனால் இவர் தலையை குனிந்துகொள்வதைப்பார்த்து குபீரென சிரிப்போம்.

'நைனா! இன்னிக்கி காலைல செல்வா கீழ விழுந்துட்டு 'ஆ.. வலிக்குதுன்னு கத்தினான்' என்று நாங்கள் செல்வா மாதிரி முகத்தை அஷ்டகோனலாக்கி காட்டும்போது அவருக்கும் முகம் கோனலாவது பார்த்து நாங்கள் விழுந்து விழுந்து சிரிப்போம். கோபித்துக்கொள்ளவே மாட்டார்.

இரவில் வீட்டிற்கு நடந்து வரும்போது திருச்சி தென்னூர் தெருக்களில் குடிகாரர்கள் நடமாட்டம் இருப்பதால் பயந்துகொண்டு அடுத்த தெருவெல்லாம் சுற்றி வீடு வந்து சேர்வார்.அப்படியும் குடிகாரன் ஒருவனிடம் மாட்டிக்கொள்வார். "யோவ் எங்கய்யா போற" என அவன் இவரை மிரட்ட " தோ.. அங்க தான் வீடு" என சைக்கிளில் இருந்து கீழே இறங்கி பயந்தவன்னம் பதில் சொல்லி ஓடி வருவார்.

உயிருள்ளவரை உஷா படம் வந்த புதிதில் 'மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க' பாடலின் ஆரம்பத்தில் பல்லவிக்கு முன் 'தீம்தனகதீ...'தீம்தனகதீ' என நளினி முனகுவது கிட்டத்தட்ட 'சீதாபதி... சீதாபதி' என கேட்கும். இது போதாதா? சும்மா இருப்பமா? 'நைனா.. நைனா... T. ராஜேந்தர் உங்க பேர்ல 'சீதாபதி'ன்னு பாட்டெழுதியிருக்காரு' என்று நாங்கள் சொல்ல ஆசையாக அவர் அந்த பாட்டை கேட்டு விட்டு 'சும்மா இருங்கடா' என வெட்கத்துடன் வழிவார்.

ஸ்கூல், காலேஜ் எல்லாம் முடித்து வேலைக்குப்போகும்போது கூட நாங்கள் அவரை கலாய்ப்பதை நிறுத்தவில்லை. வெளியே கிளம்பும்போது வாசக்கதவை பூட்டிய பின் ஏழெட்டு முறை அவர் இழுத்துப்பார்ப்பது கண்டு நாங்கள் சிரிக்காத நாட்களே இல்லை. கிளம்பி பாதி தூரம் வந்தவுடன் 'ஶ்ரீதர்.. கேஸ் அடுப்பை ஆஃப் செஞ்சியா" என கேட்டு வெறுப்பேத்துவார்.

குளிருக்கு கால்கள் வெளியே தெரியாதவாறு அவர் பெட்சீட்டால் போர்த்திக்கொண்டு தூங்கும்போது நாங்கள் மெல்ல கிட்டப்போய் கால் பக்கம் பெட்சீட்டை எடுத்து தூக்கி விடுவோம். அவர் உடனே இரு கால்களையும் தூக்கி சைக்கிள் ஓட்டுவது போல் சுற்றுவதைப்பார்த்து நாங்கள் ஓஹோவென சிரித்து....அதற்குள் "டேய் ஏன்டா அவரை படுத்தறீங்க" என அம்மா அடிக்க வருவார்கள்.

கடைசி ஓரிரு வருடங்கள் பேச்சு வரவேயில்லை. அவரும் அதிகம் பேச மியற்சிக்காமல் மௌனமாக இருக்க ஆரம்பித்தார். டீவி பார்ப்தையும் குறைத்துக்கொண்டார். என் தம்பி, அவர் இறப்பதற்கு ஒரு மாதம் முன் ஒரு நாள் எங்கள் திருச்சி வீட்டில் அவருக்கு தன் கையால் சவரம் செய்து குளிப்பாட்டி புத்தாடை அணிவித்து சென்ட் அடித்து பேத்தியின் நிச்சயதார்த்தத்திற்கு கூட்டிப் போன போது வாய் குளறியபடியே 'தேங்க்ஸ்' சொல்லி அவனை நெகிழ்ச்சியடையச்செய்தார்.

பணம் இல்லாத போதும் சரி இருக்கும்போதும் சரி simple ஆக இருப்பதையே விரும்பினார். வாழ்க்கையில் நேர்மையைத்தவிர எதுவுமே தெரியாமல் கடைசி வரை 'பிழைக்கத்தெரியாத' மனிதராகவே இருந்துவிட்டுப்போனார் ராமசாமி சீதாபதி.அவரது ஆசிகள் எங்களுக்கு எப்போதும் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

பி.கு: இப்போதே பையன்கள் என்னை இமிடேட் செய்கிறார்கள். கலாய்க்கிறார்கள்.
முற்பகல் செயின்...