Wednesday, August 13, 2014

நைனா...நைனா

அப்பாவின் பிறந்த நாளான இன்று அவரது நினைவுகளில் பல வருடங்கள் பின் நோக்கி...

நேர்மை, கூச்சம் மற்றும் பயந்த சுபாவம் இது மூன்றும் கலந்த உருவம் தான் ராமசாமி சீதாபதி என்கிற என் அப்பா.

ரிடையர் ஆகும் வரை நகைகளை அடகு வைத்து எங்களை படிக்க வைத்த மகான் அவர். பிறகு 20 வருடங்களாக நாங்கள் மாதாமாதம் அனுப்பும் பணம் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் மாத பென்ஷனை என்ன செய்வதென்று தெரியாமல் சேர்த்து வைத்து எங்களுக்கே திருப்பிக்கொடுப்பார். புற்று நோயால் வாடிய என் மூத்த சகோதரியின் மருத்துவ செலவுகளையும் அடுத்த 2 வருடங்களில் அவள் இறக்கும் வரை ஏற்றுக்கொண்டார். அவளது பெண்ணின் திருமண செலவுக்கும் சேர்த்து வைத்து விட்டு திருமணத்திற்கு 3 மாதங்களுக்கு முன் போய்ச்சேர்ந்தார்.

பஹ்ரைன் மற்றும் மஸ்கட்டுக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை வந்துவிடுவார். கடைசி ஐந்தாறு வருடங்கள் பார்கின்சன் நோயினால் அவதிப்பட்டார். பேச்சுக்குளறல்...வாயிலிருந்து சட்டை முழுக்க எச்சில் ஒழுகுதல்... நிற்பதற்கு balance இல்லாமல் (இல்லையென நினைத்துக்கொண்டு) பின் பக்கம் தடாலென அடிக்கடி விழுந்து மண்டையில் அங்கங்கே தையல். எண்ணையில் பொறித்த பலகாரங்கள் மிகுந்த இஷ்டம். 2010இல்அவரை மதராச பட்டினம் படம் பார்க்க கூட்டிச்சென்றபோது இடைவேளையில் ஆசையாக சமோசா வாங்கி சாப்பிட்டார். விமான நிலையத்தின் உள்ளே கடைகளில் கட்லெட் வாங்கித்தரச்சொல்வார். பஹ்ரைனில் ஹோட்டலுக்கு கூட்டிப்போய் ' என்ன சாப்பிடறீங்க' என கேட்டால் வெட்கத்துடன் குழைந்து தயக்கத்துடன் 'மசால் தோசை' என்பார்.

கோஆபரேடிவ் சப் ரிஜிஸ்ட்ராராக இருந்த அவர் பல கோ. வங்கிகளில் ஆடீட்டராக பணியாற்றும்போது ஊழல்களை கண்டு பயப்படாமல் ரிபோர்ட் செய்திருப்பதால் அடிக்கடி பல இடங்களுக்கு பந்தாடப்பட்டார். இரவு 10 மணிக்கு சில அரசியல்வாதிகள் எங்கள் வீட்டிற்கு அலுவல் விஷயமாக அப்பாவிடம் உதவி கேட்டு வரும்போது ' நாளை ஆபிஸில் வெச்சு பேசலாமே' என பணிவாக அவர்களை இவர் வெளியே அனுப்ப முனையும்போது சடாரென அவர்கள் நோட்டுக்கற்றையை இவர் சட்டையில் தினிக்க முயல், இவர் அதை தடுக்க, ஒரு சிறு போராட்டத்துடன் அவர்களை வெளியே அனுப்பியபின் பயத்தால் நடுங்கி படபடப்போடு சோபாவில் சரிந்துவிடுவார்.

புதிய திரைப்படங்கள் நகருக்கு வந்து ஓரிரு மாதங்களில் கழித்து புறநகர்ப்பகுதியான மன்னார்புரம் வரும்போது தான் குறைந்த செலவில் நாங்கள் படம் பார்க்கப்போவோம். மாத இறுதியில் அவர் கையில் பணம் வேறு இருக்காது. ' எப்ப காசு கேட்டாலும் இல்லன்னு சொல்றதே உங்களுக்கு வழக்கமாப்போச்சு' என நானும் என் தம்பியும் உச்ச ஸ்தாயியில் அவரைப்பார்த்து கத்தும்போது சட்டைப்பையில் இருக்கும் ஓரே ஒரு 10 ரூபா நோட்டையும் எங்களிடம் கொடுந்துவிடுவார்.

நானும் எனது சகோதரர்கள் இருவரும் சேர்ந்து அவரை கலாட்டா பண்ணாத நாளே கிடையாது. 6ஆங்கிளாஸ் படிக்கும்போது, நானும் தற்போது மஸ்கட்டில் இருக்கும் என் தம்பி ரவி( Jani Vijay Raghavan )யும் 'நைனா...நைனா...இந்த பென்சில கொஞ்சம் சீவிக்குடுங்க' என அவர் கையில் கொடுத்து விட்டு அவர் முகத்தை உற்றுப்பார்ப்போம். அடுத்து அவர் வாயை 'ஊ'வென்று வைத்துக்கொண்டு பென்சில் சீவுவதைப்பார்த்து 'ஏ... வாயப்பாரு' என்று கைகொட்டி விழுந்து விழுந்து சிரிப்போம். 'போங்கடா அந்தப்பக்கம்...அது அப்படித்தான் வரும்' என அவர்செல்லமாக எங்களை அதட்டுவார்.

செல்லமாக எங்களை வளர்த்தாலும் நைனா கண்டிப்பானவர்.திருச்சி தென்னூர் பென்ஷனர் காரத்தெருவில் நாங்கள் 70களில் வசிக்கும்போது வீட்டில் அடிக்கடி 'தொபேல்.. தொபேல்' என அடி வாங்கிக்கொண்டு நாங்கள் 'லேது...லேது'என சப்தமிடுவது பக்கத்து வீட்டிற்கு கேட்கும். சீப்பு, கயிறு என்று கையில் எது இருந்தாலும் அதைக்கொண்டு அடிப்பார். மறு நிமிடம் முட்டாய் வாங்க காசு கொடுப்பார்.

சென்னையிலிருந்து அடிக்கடி எங்கள் மாமா அந்தக்கால ஸ்டான்டர்டு காரை எடுத்துக்கொண்டு திருச்சி வந்து எங்களை விராலிமலை கூட்டிப்போவார். நைனா தான் முன்னால் உட்காருவார். காரில் போகும்போது ரோட்டில் தண்ணீர் தேங்கியிருந்தால் சட்டென காலைத்தூக்கிக்கொள்வார். 'ஹே... நைனா காலத்தூக்கிட்டார்' என நாங்கள் கத்தி சிரிப்போம்.

வழியில் செக்போஸ்ட் தடுப்புக்கட்டைக்கு கீழே கார் போனால் இவர் தலையை குனிந்துகொள்வதைப்பார்த்து குபீரென சிரிப்போம்.

'நைனா! இன்னிக்கி காலைல செல்வா கீழ விழுந்துட்டு 'ஆ.. வலிக்குதுன்னு கத்தினான்' என்று நாங்கள் செல்வா மாதிரி முகத்தை அஷ்டகோனலாக்கி காட்டும்போது அவருக்கும் முகம் கோனலாவது பார்த்து நாங்கள் விழுந்து விழுந்து சிரிப்போம். கோபித்துக்கொள்ளவே மாட்டார்.

இரவில் வீட்டிற்கு நடந்து வரும்போது திருச்சி தென்னூர் தெருக்களில் குடிகாரர்கள் நடமாட்டம் இருப்பதால் பயந்துகொண்டு அடுத்த தெருவெல்லாம் சுற்றி வீடு வந்து சேர்வார்.அப்படியும் குடிகாரன் ஒருவனிடம் மாட்டிக்கொள்வார். "யோவ் எங்கய்யா போற" என அவன் இவரை மிரட்ட " தோ.. அங்க தான் வீடு" என சைக்கிளில் இருந்து கீழே இறங்கி பயந்தவன்னம் பதில் சொல்லி ஓடி வருவார்.

உயிருள்ளவரை உஷா படம் வந்த புதிதில் 'மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க' பாடலின் ஆரம்பத்தில் பல்லவிக்கு முன் 'தீம்தனகதீ...'தீம்தனகதீ' என நளினி முனகுவது கிட்டத்தட்ட 'சீதாபதி... சீதாபதி' என கேட்கும். இது போதாதா? சும்மா இருப்பமா? 'நைனா.. நைனா... T. ராஜேந்தர் உங்க பேர்ல 'சீதாபதி'ன்னு பாட்டெழுதியிருக்காரு' என்று நாங்கள் சொல்ல ஆசையாக அவர் அந்த பாட்டை கேட்டு விட்டு 'சும்மா இருங்கடா' என வெட்கத்துடன் வழிவார்.

ஸ்கூல், காலேஜ் எல்லாம் முடித்து வேலைக்குப்போகும்போது கூட நாங்கள் அவரை கலாய்ப்பதை நிறுத்தவில்லை. வெளியே கிளம்பும்போது வாசக்கதவை பூட்டிய பின் ஏழெட்டு முறை அவர் இழுத்துப்பார்ப்பது கண்டு நாங்கள் சிரிக்காத நாட்களே இல்லை. கிளம்பி பாதி தூரம் வந்தவுடன் 'ஶ்ரீதர்.. கேஸ் அடுப்பை ஆஃப் செஞ்சியா" என கேட்டு வெறுப்பேத்துவார்.

குளிருக்கு கால்கள் வெளியே தெரியாதவாறு அவர் பெட்சீட்டால் போர்த்திக்கொண்டு தூங்கும்போது நாங்கள் மெல்ல கிட்டப்போய் கால் பக்கம் பெட்சீட்டை எடுத்து தூக்கி விடுவோம். அவர் உடனே இரு கால்களையும் தூக்கி சைக்கிள் ஓட்டுவது போல் சுற்றுவதைப்பார்த்து நாங்கள் ஓஹோவென சிரித்து....அதற்குள் "டேய் ஏன்டா அவரை படுத்தறீங்க" என அம்மா அடிக்க வருவார்கள்.

கடைசி ஓரிரு வருடங்கள் பேச்சு வரவேயில்லை. அவரும் அதிகம் பேச மியற்சிக்காமல் மௌனமாக இருக்க ஆரம்பித்தார். டீவி பார்ப்தையும் குறைத்துக்கொண்டார். என் தம்பி, அவர் இறப்பதற்கு ஒரு மாதம் முன் ஒரு நாள் எங்கள் திருச்சி வீட்டில் அவருக்கு தன் கையால் சவரம் செய்து குளிப்பாட்டி புத்தாடை அணிவித்து சென்ட் அடித்து பேத்தியின் நிச்சயதார்த்தத்திற்கு கூட்டிப் போன போது வாய் குளறியபடியே 'தேங்க்ஸ்' சொல்லி அவனை நெகிழ்ச்சியடையச்செய்தார்.

பணம் இல்லாத போதும் சரி இருக்கும்போதும் சரி simple ஆக இருப்பதையே விரும்பினார். வாழ்க்கையில் நேர்மையைத்தவிர எதுவுமே தெரியாமல் கடைசி வரை 'பிழைக்கத்தெரியாத' மனிதராகவே இருந்துவிட்டுப்போனார் ராமசாமி சீதாபதி.அவரது ஆசிகள் எங்களுக்கு எப்போதும் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

பி.கு: இப்போதே பையன்கள் என்னை இமிடேட் செய்கிறார்கள். கலாய்க்கிறார்கள்.
முற்பகல் செயின்...

No comments:

Post a Comment