Monday, March 16, 2020

அம்மா

Image may contain: Manjula Ramesh, drawing
திருச்சி சிங்காரத்தோப்பு சூப்பர் பஜார் பகுதி.. சிறியதும் பெரியதுமான கடைகளுக்கு நடுவே விஸ்வநாதன் ஆஸ்பத்திரி. .காரை விட்டிறங்கி அம்மா கை பிடித்து உள்ளே நுழைந்தேன். புறத்தே இருந்து பார்க்க ஏதோ சாதாரன மருந்தகம் போல இருந்தாலும், உள்ளே நுழைந்தால் மிக விசாலமான இடம். ஒவ்வொரு சிகிச்சை பிரிவுக்கும் தனித்தனியே வார்டுகள். குறுகலான வழிப்பாதைகளின் நடுவே குறுக்கும் நெடுக்குமாக நடமாடிக்கொண்டிருக்கும் ஆஸ்பத்திரி சிப்பந்திகள்.
பிளாஸ்டிக் வயர் கூடையில் காபி ஃப்ளாஸ்க், ஆப்பிள் பை, ஹார்லிக்ஸ் பாட்டில், துண்டு, சாமி ப்ரசாதம் சகிதம் மக்கள் நோயாளிகளை பார்க்க வந்தவன்னம் இருந்தனர். கோடியில் கதிர்வீச்சு பிரிவு பலகை. ரேடியேஷன் தெரபி கொடுக்குமிடம்.
சுமார் 10 அல்லது 15 பேர் இருக்கைகளில். நானும் அம்மாவும் அங்கே கடைசி வரிசையில் அமர்ந்தோம். நோயாளிகள் யார் மற்றும் கூட வந்த உறவினர்கள் யார் என்பது பார்க்கும்போதே தெரிந்தது. எல்லோரும் புற்று நோய்க்கு சிகிச்சை பெற வந்தவர்கள். அநேகம் பேர் தலையில் முடியில்லாமல், முடி உதிர்ந்த நிலையில் அல்லது பாதி முடி உதிர்ந்தது தெரியாமலிருக்க சிரம் மழித்து இருந்தனர். சிலர் சமயபுரம் மாரியம்மனுக்கு நேர்ந்துகொண்டு மொட்டை போட்டிருந்தனர். யாருடைய முகத்திலும் ஒரு சலனமோ கவலையோ இருப்பதாக தெரியவில்லை. மரணத்தின் வாயிலை நெருங்கி மறுபடியும் வாழ இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்காதா என ஏங்கி காத்திருப்பவர்கள்.
இஸ்லாமிய பெண்மணியொருவர் தன மகளுடன் வந்திருந்தார். வந்த 5 நிமிடங்களில் தன் உடலை பக்க வாட்டில் சாய்த்து மகளின் மடியில் தலை வைத்து படுத்து விட்டார். தாயின் வலி மகளின் முகத்தில்... மொட்டையுடன் மற்றொரு இளம்பெண் கணவனுடன் வந்திருந்தார். அவருக்கு எங்கே புற்று நோய் என தெரியவில்லை. ஆனால் திடீரென்று கால்கள் இரண்டையும் தூக்கி முன் சீட்டில் நீட்டி வைத்து தலையை பின்னே சாய்த்து தன் சரீரத்தை மேலும் நீட்டி முறித்துக்கொண்டிருந்தார். அவருக்கு என்ன செய்கிறது என்று தெரியவில்லை. ஆனால் கடுமையாக ஸ்ரமப்படுகிறார் என்பது நிச்சயம். பார்க்க மிகவும் வேதனை..எனக்கு பக்கத்தில் கோவில் குருக்கள் ஒருவர் அமர்ந்திருந்தார். கழுத்துப்பகுதி முழுவதும் கருமை.. அவரது அதரங்களில் சமீபத்தில் விட்டொழித்த வெற்றிலை புகையிலை காவி இன்னும்.... அவருக்கு தொண்டையில் புற்று நோய். அறுவை சிகிச்சை செய்த அடையாளம் தெரிந்தது. எல்லோரும் நொடிக்கொருதரம் பையில் இருந்து பாட்டில் எடுத்து தண்ணீர் குடிக்கிறார்கள்.
'புத்து நோய் தொத்து நோய் இல்ல கண்ணு' என்று 'நீலவானம்' படத்தில் தாய் தன் மகளுக்குச்சொல்லும் வசனம் நினைவுக்கு வந்ததால் நானும் தைரியமாக அவர்களுடன் அமர்ந்திருந்தேன். வயிற்றை என்னவோ செய்தது.
சரோஜினி.. என்று அழைத்ததும் அம்மா எழுந்து உள்ளே சென்றார்கள். அவர்கள் கொடுக்கும் உடைக்கு அம்மா மாறிக்கொண்டவுடன் சிறிய கட்டிலில் படுக்கச்சொல்கிறார்கள். கட்டிலுக்கு கீழே பளீரென வெளிச்சத்துடன் பல்ப். பிறகு வயிற்றுக்கு மேலே x -ரே போன்ற மெஷின் வைத்து சுவிட்சை ஆன் செய்து விட்டு பணியாளர்கள் மூவரும் ரூமை விட்டு வெளியே ஓடி வந்து விட, அம்மா மட்டும் தனியாக..சுமார் 10 நிமிடம் கழித்து புடவைக்கு மாற்றிக்கொண்டு சலனமில்லாமல் அதே மலர்ந்த முகத்துடன் வெளியே வரும் அம்மா..
'போற வழியில இளநீர் வாங்கிக்கனும் ஶ்ரீதர்..' தில்லைநகர் வழியாகப் போகும்போது அம்மா ரோட்டோரம் பார்த்துக்கொண்டே வந்தார்கள். நிறைய நீராகாரம் சாப்பிடனுமாம்.
'தல முடி உதிர்றது, தோல் கறுத்துப்போறது, அடிக்கடி வாந்தி.. இதெல்லாம் நெறைய இருக்குமாம். ஆனா chemo அல்லது ரேடியேஷன் தெரபி முடிஞ்சா மறுபடியும் பழைய நிலைக்கு வந்துடலாமாம்'. அம்மா சொல்லிக்கொண்டிருக்க ஓரக்கண்ணால் அவர்களைப்பார்த்தேன்.. முகத்தில் கவலை தெரிந்தாலும் குரலில் தைர்யம்.. நம்பிக்கை
கடந்த 3 மாதங்களாக ஆஸ்பத்திரி, டாக்டர்கள், ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை, ரேடியேஷன் தெரபி என்று அம்மா அலைந்துகொண்டிருந்தாலும் தன்னம்பிக்கை, தைர்யம், பாசிடிவ் மனப்பான்மை போன்றவைகளினால் மரணத்தை இன்னும் சில வருடங்கள் தள்ளி போட்டிருக்கிறார்கள். நோயாளியின் மனதிடம் இதற்கு மிக முக்கியமாம்.
கர்ப்பப்பை (82 வயதில்)அகற்ற அறுவை சிகிச்சை செய்த டாக்டர் பூங்கோதை, அவரது கணவர் டாக்டர் செந்தில்வேல் குமார், புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ரவி அய்யங்கார், anasthetist , radiologist சற்றும் முகம் சுளிக்காத செவிலியர்கள், நாங்கள் வெளி நாடுகளில் இருந்தாலும் மாமியாரை தாய் போல பார்த்துக்கொண்ட என் மைத்துனர் டாக்டர் மனோகர், முழுக்க முழுக்க உடனிருந்து இரவு பகல் பாராமல் தாயை பார்த்துக்கொண்ட என் சகோதரி லதா மனோகர் Hemalatha Manohar என்னுடன் மருத்துவ செலவனைத்தையும் பகிர்ந்து கொண்ட என் சகோதரர்கள் Vijay Raghavan (மஸ்கட்)மற்றும் Suresh Babu (பாம்பே), அம்மாவை பார்த்துக்கொள்ள நான் பதினைந்து நாட்கள் பஹ்ரைனிலிருந்து திருச்சி வந்துவிட்டதும் தனியாக பஹ்ரைனில் இருந்துகொண்டு எனக்கு ஊக்கமளித்து உறுதுணையாக இருந்த என் மனைவி Usharani Sridhar மற்றும் 'பாட்டி பொழைச்சிக்கிட்டாங்களா?' என விசாரிக்கும் அக்கம்பக்கத்து உறவினர்கள்..இவர்கள் அனைவரும் தெய்வத்திற்கு நிகரானவர்கள்...
5 வருடங்கள் முன்பு இதே புற்று நோயினால் தன் மூத்த மகளை (என் அக்கா) இழந்து, 2 வருடங்கள் முன்பு கணவனையும் (அப்பா) இழந்து, தற்போது மரணத்தை 'ஹாய்!' எனச்சொல்லி தொட்டுப்பார்த்த என் அன்னையை மீட்டவர்கள் தான் மேலே குறிப்பிட்டவர்கள். அடுத்த 10 நாட்களில் பூரண குணமடைந்து அம்மா பஹ்ரைன் வரவிருக்கிறார்கள்.
இதுவரை மேலே குறிப்பிட்டுள்ள வியாசம் 2013இல் எழுதியது. பிறகு அம்மா பஹ்ரைன் வந்து தன் பேத்தியின் (என் அக்கா மகள்) Srikamya Badrinath பிரசவம் முடியும் வரை சுமார் நான்கு மாதங்கள் இங்கிருந்தது, உடல்நிலை முற்றிலும் தேறி, இரண்டு மூன்று கிலோ எடையும் கூட்டியது, பத்து நாட்கள் கால் மசாஜ் செய்த வைத்யரத்னா கேரளப்பெண்கள் மற்றும் என் மனைவி உஷாவிற்கு தானே எம்பிராய்டரி செய்து கைப்பேசி பை (bag) பரிசளித்தது, பஹ்ரைன் இந்தியன் க்ளப்பில் இரண்டு மணிநேரம் அமர்ந்து நண்பர் Ganesan Ramamoorthy இன் மேடைப்பாடல்களை மிகவும் ரசித்தது, பழைய புத்துணர்ச்சியுடன் தனியாகவே விமானம் ஏறி கொழும்பில் வேறு விமானமும் மாறி திருச்சி திரும்பியது... எல்லாமே எங்களுக்கு கிடைத்த தற்காலிகமான சந்தோஷங்கள் என பிறகுதான் தெரிந்தது.
அடுத்த ஒரே வாரத்தில், பஹ்ரைனிலிருந்து கிளம்பி நான் இத்தாலி பயணம் செய்துகொண்டிருந்தபோது, அம்மா மறுபடியும் வயிற்று வலியால் துடித்ததும், அதுவரை எங்கோ ஒரு மூலையில் (lymph node) ஒளிந்திருந்த புற்று நோய் ஈரலுக்குள் புகுந்து, பரவி, பந்து போல இரத்தக்குழாய்களுடனான பெரிய கட்டியாகி (haemangioma), அக்கட்டி உடைந்து சுமார் அரை லிட்டர் குருதி உள்ளுக்குள் தெறித்துச்சிதறி, பெருஞ்சப்தமிட்டபடி வலியால் துடித்துக்கொண்டே என் சகோதரியின் மடியில் அம்மா இறந்தது பரிதாபத்திற்குறிய, மறக்க வேண்டிய, மறக்க இயலாத சம்பவங்கள்.
ஶ்ரீரங்கம் பெண்கள் மேநிலைப்பள்ளி மற்றும் திருச்சி ஹோலி க்ராஸ் பள்ளியில் அந்த காலத்தில் படித்த அம்மாவுக்கு நாம் ஆச்சரியப்படுமளவிற்கு தைரியமும் மனதிடமும்.
டீ.வி சமையல் நிகழ்ச்சியை பார்த்த மறுநிமிடம் அந்த புதிய ரிசிப்பீயை தன் டயரியில் குறித்து, உடனே சமைத்துப்பார்த்துவிடுவது, அந்தக்காலத்திலிருந்து குமுதம், விகடன் மற்றும் மங்கையர் மலர் படிப்பதல்லாமல் தொடர்கதைகளை சேர்த்து வைத்து, கிழித்து கோணி ஊசியால் தைத்து சாண்டில்யன் கதைகள், தேன் சிந்துதே வானம்(மணியன்), எதற்காக(சிவசங்கரி) என பழைய இருப்புப்பெட்டி முழுவதும் பொக்கிஷமாக வைத்திருப்பார்கள்.
எல்லா வகை கோலங்களும் தனி நோட்டுப்புத்தகத்தில்.. எட்டாம் வகுப்பு வரை பையன்கள், பொண்கள் என எங்கள் எல்லோருக்கும் சட்டை, நிக்கர், பாவாடை சட்டை, ப்ளௌஸ் எல்லாமே தன் தையல் மெஷினால் தைப்பது ( தீபாவளிக்கும் சேர்த்து).
அந்தக்கால தமிழ் மற்றும் தெலுங்குப்பாடல்கள் தனியாக ஒரு நோட்டுப்புத்தகத்தில் (P.லீலா, ஜமுனா, ஜிக்கி, பாலசரஸ்வதி, MLV..). திடீரென அவ்வப்போது வீட்டிலேயே பாட்டுக்கச்சேரி.. அப்பா கண்டசாலா பாடல்களை எடுத்துவிட ( சம்சாரம்.. சம்சாரம்.. சகல ஜன்மதாரம்.. சுக ஜீவன ஆதாரம்..) அம்மாவிடமிருந்து உடனே தெலுங்கு அல்லது தமிழ் பாடல் ( சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே சங்கீத வீணை எதுக்கம்மா..)
அம்மாவின் கதையும் கடைசியில் அவர் இரும்புப்பெட்டியில் சேர்த்து வைத்த தொடர்கதைப்புத்தகங்கள் போலவே கிழிக்கப்பட்டும் தைக்கப்பட்டும் பெட்டியில் அடங்கியது.
என்னுடன் முகநூலில் தொடர்புடைய அனைத்து சகோதரிகளுக்கும் ஒரு வேண்டுகோள்...!
1) நீங்கள் 40 வயதை கடந்தவரா? ஆம் எனில் வருடம் ஒரு முறை அவசியம் கர்ப்பப்பை சோதனை மற்றும் mammography போன்றவைகளை தவறாமல் செய்து விடுங்கள். மருத்துவர் அழகாக ஆலோசனை சொல்வார்.
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் 'அடுத்தவாட்டி இந்தியா போறச்ச மந்தவெளியில நம்ம ஶ்ரீவத்சன் கிட்ட செஞ்சுக்கலாம்.. இந்த ஊர்ல கொள்ளை..' என நாட்களை கடத்த வேண்டாம். (மந்தவெளியில் நிஜமாகவே ஶ்ரீவத்சன் என டாக்டர் இருந்தால் மன்னிக்கவும்). கணவருக்காக காத்திருக்காமல் தங்கை, மைத்துனி என்று யாரையாவது துணைக்கு அழைத்துக்கொண்டு சென்று வந்து விடுங்கள்.
2) பாஸ்தா, சீஸ், பீட்சா, எண்ணெயில் பொறித்த உணவு வகைகள், preservative மற்றும் கலரிங் ஏஜென்ட் கலந்த பதார்த்தங்கள்/பாணங்களை முடிந்தவரை ஒதுக்கி விடுவது நல்லது.
3) மாலை பஜ்ஜி சுட்ட அரைச்சட்டி எண்ணெயில் ராத்திரி அப்படியே சின்ன வெங்காயம் போட்டு வதக்கி வத்தக்குழம்பு வைப்பது அவசரமாக 'ஊருக்கு' போக எடுக்கும் தட்கால் டிக்கெட் மாதிரி.
3) துணி உலர்த்துவது, சப்பாத்தி இடுவது, வீட்டைச்சுத்தம் செய்வது போன்ற அன்றாட தருணங்களுக்கு நடுவே காயத்ரி ஜபம் ( மற்ற மதத்தினர் தங்கள் மதத்தின் ஜபம்) சொல்வது நல்ல பலனையும் மன நிம்மதியையும் கொடுக்கும்...
4) நேரம் கிடைத்தால் 'நீலவானம்' திரைப்படமும் பாருங்கள்...
இன்று 'உலக புற்றுநோய் தினம்' மற்றும் அம்மாவின் பிறந்த நாள்.

1 comment:

  1. Very nice to read your malarum nenaivugal at Trichy- srirangam ramanan

    ReplyDelete