Wednesday, June 19, 2013

செம்பூர் ஸ்டேஷன்...


மெதுவாக காலை எழும்போது 7 மணி இருக்கும். பக்கத்தில் ஜன்னலுக்கு வெளியே பறவைகள் சத்தம். நல இதமான காற்று. பஸ், கார் சத்தமே கிடையாது. 27, 28 வயதுதான் என்பதினால் மனசுக்குள் எப்போதுமே ஒரு உற்சாகம், கற்பனைகள்.., அலுவலகத்தில் தினமும் நடக்கும்  சம்பவங்களை நினைத்து அசை போடும் நேரம்  எப்போதும் விடிகாலை தான்தூக்கம் விழித்த  பின்னும் மேலும் 20,30 நிமிடங்கள் அப்படியே படுத்து கிடப்பதிலே ஒரு சுகம் உண்டு. இதெல்லாம் பம்பாய் நகரில் என்றால் நம்ப முடிகிறதா? அங்கே ஏது நிசப்தமான இடம்? நாங்கள் 5,6 பிரம்மச்சாரிகள் சேர்ந்து செம்பூர் chedda  நகரில் ஒரு தனி ப்ளாட்டை   வாடகைக்கு எடுத்திருந்தோம். நேர் எதிரே செம்பூர்  முருகன் கோவில் உள்ளதுவீட்டில் நண்பர்கள்… எப்போதுமே கும்மாளம் தான். ஒருவன்  'மீண்டும் மீண்டும் வா' என சத்தமாக பாட்டு போட்டுக்கொண்டிருப்பான். ஒருவன் 'வரக்...வரக்... என்று ப்ரஷ் போட்டு ஜீன்ஸ் பாண்ட்டை துவைத்துக்கொண்டிருக்க, ஒருவன் அட்டகாசமாக  சமையல் (சாம்பார், நிறைய தேங்காய் துருவி போடு வெண்டிக்காய் கறி, கட்டித்தயிர்) செய்து கொண்டிருப்பான். நானும் ரங்குவும் ஆபீஸ் கதைகளை பேசிக்கொண்டிருப்போம்.

யார் இந்த ரங்கு? பாஷ்யம் ரங்கநாதன் என்கிற 'ரங்கு' என் ஆருயிர் நண்பன். திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் சமீபம் தான் அவன் வீடு. ஸ்ரீரங்கம்  அடையவளஞ்சான் தெரு, கீழ சித்திர வீதி என்று என் தாத்தா, அம்மா, மாமாக்கள் குடியிருந்தவர்கள். சுஜாதா, வாலி , பஞ்சாங்கம் புகழ்- குட்டி சாஸ்த்ரி வீட்டு பெண் நடிகை வனிதா இவர்கள் வீட்டுக்கதைகளை என் மாமாக்கள் மணிக்கணக்காக  சொல்ல கேட்டிருக்கிறோம் .   எனக்கு ரங்கு வீட்டில் தனி மரியாதை. ரங்குவின் அப்பா எனக்கு தனியாக கடிதம் எழுதுவார். 2 இன்லண்ட் லெட்டரில் எழுதும் சமாசாரத்தை ஒரே போஸ்ட் கார்டில் டைப்  செய்து  செய்து அனுப்புவார். உதவி .போஸ்ட் மாஸ்டர் ஜெனெரலாக  இருந்து ஓய்வு பெற்றவர்.

பழங்கால Gராமநாதன், SM  சுப்பையா நாயுடு,KV  மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா போன்றோர்  இசையில் எனக்கு மிகுந்த நாட்டம்…. நானும் ரங்குவும் தீவிர இளையராஜா ரசிகர்கள். 'பட்டுப்பூவே எட்டிபாரு' .. 'ஒரு மைனா  மைனா'..(உழைப்பாளி) போன்ற பாடல்களை அடிக்கடி முனுமுனுப்பான். ஆளை பார்த்தவுடனே ' டேய் நீ ஸ்ரீரங்கம் தானே?' என்று கேட்கத்தோன்றும்படியான முகம்….படிய வாரிய எண்ணெய் சொட்டும் சிகை. நீண்ட கூர்மையான நாசி. திக்கான மீசை. பெரிய கண்ணாடி, ப்ளீட் வைத்த  அதிக சுருக்கங்களுடன் baggi பான்ட். கொஞ்சம் கூச்சம், முகம் நிறைய சிரிப்பு. இதுதான் ரங்கு . வாங்கும் சம்பளத்தில் பாதியை உடைகளுக்கும், காசெட்டுகளுக்கும், காலனிகளுக்கும் செலவழிக்கும் என்னை ரங்கு மிகவும் ரசிப்பான். 'டேய் ரங்கு... நீ பாம்பே  காரன் மாதிரி இருந்தாத்தான் உனக்கு ஏதாவது மாட்டும்... இல்லன்னா  போயிட்டே இருப்பாளுங்க..' என்ற எனது அறிவுரையை பெருஞ்சிரிப்புடன் ரசிப்பான். (இப்படி சொன்ன எனக்கு ஒன்னும் மாட்டவில்லை என்பது வேறு விஷயம்).

ஒரு ஞாயிறு மதியம் ரங்குவை கட்டாயப்படுத்தி நாற்காலியில் உட்கார வைத்து அவன் தலை அலங்காரத்தை மாற்றுவதற்குள் போதும்போதுமென்றாகி  விட்டது. அவன் கதற கதற ஒரு காதிலிருந்து மற்றொரு காது வரை நீண்டிருந்த தலை முடியை கத்தரிக்கோலால் வெட்டி,இடது  வகிடை மாற்றி  நடு  வகிடாக்கி , மீசையை ட்ரிம் செய்ய வைத்து 'நடிகர் பிரஷாந்த் போல இருக்க பாரு' என்று கண்ணாடியை முகத்துக்கு நேரே காட்டியதும் ரங்கு புளகாங்கிதமடைந்தான். அடுத்து ஒரு சுபயோக தினத்தில் கொலாபா, பாந்திரா பகுதிகளுக்கு ரங்குவை கூட்டிப்போய் பைசன் T -ஷர்ட் ,ஜீன்ஸ் பான்ட், கொவாடிஸ் என ஷாப்பிங் spree செய்ய வைத்தேன்.  சிறிய சீப்பை பான்ட் பின் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு மணிக்கொருதரம் மயிரை சீவ வேண்டுமென்ற எனது கட்டளையை சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொண்டான்.  அடுத்த சில நாட்களில் ரங்கு ஏதோ ஒரு சிவந்த ஹிந்தி நடிகனைப்போல் மாறி விட்டான். அவ்வளவுதான்..  மற்ற room mates க்கு பொறுக்கவில்லை.. தக்கலை அக்ரஹாரத்தில்  இருந்து வந்த இஞ்சினீயர் பத்மநாபன் என்கிற Paddu, திருச்சி கம்பெனி செக்ரட்டரி- சந்துரு .. எல்லோரும் கிடுகிடுவென தாங்களை T-ஷர்ட்/ஜீன்சுக்குள் புகுத்திக்கொண்டார்கள். எல்லோருக்குமே எப்போதுமே ஏதோ கனவு மயம் தான். தலைக்கு எண்ணெய் தேய்ப்பது பெருங்குற்றம். எல்லோரும் பாண்ட்டில் சீப்பு சகிதம் நொடிக்கொருதரம்  தலையை சிலுப்பி ' ‘டேய் நாம திருந்த மாட்டோம் போல இருக்கே' என சிலாகித்தார்கள்.   'mene  pyar  kiya' படத்தில் பாக்யஸ்ரீ  ஒரு சீனில்  சல்மான் கானை நினைத்துக்கொண்டு .தானே தலையில் செல்லமாக அடித்துக்கொண்டு மெல்ல  சிரித்ததை நண்பன்  ரங்கு மிகவும் ரசித்தான் என்று சொல்ல, மறுநாள் அந்த சீனை பார்க்க நாங்கள் எல்லோருமே   தியேட்டரில் ஆஜர். வாழ்கை  இனிமையாக போனது..   

நான் C A .அவன் கம்பெனி செக்ரட்டரி…ACS. சம்பக்லால் இன்வெஸ்ட்மென்ட் என்ற மெர்சண்ட் பாங்கிங் நிறுவனத்தில் எங்களுக்கு வேலை.. நிறைய குஜராத்தி, கோவன், மற்றும் மங்கலூரிய இளம் பெண்கள் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் இடம். மதியம் லஞ்ச்சில் அவர்கள் உரிமையுடன் நம் தட்டில் இருந்து சப்பாத்தி கர்ரியை எடுத்து   'so pungent  yaar '  என்று சொன்ன அன்று மாலை நம் நண்பர்களுக்கு treat  தான்.. 'தேவையே இல்லாம இவளுங்க எதுக்குடா குறுக்கா நெடுக்க  போறாளுங்க?' என்ற ரங்குவின் கேள்விக்கு என்னுடைய பதில்... " அதுக்கு தாண்டா நம்ம இப்பிடியெல்லாம் ஸ்டைலா இருக்கணும்னு அடிச்சுக்கறேன்... இப்ப புருஞ்சுதா?' அதிலும் டக்....டக் என்ற கூர்மையான ஹை ஹீல்ஸ் சப்தத்துடன் மிக மிக அருகே வந்து மிகவும் விகல்பமாக நம் கண்களை நேரே  பார்த்து 'where  is  underwriting  file ? என்று அப்பெண்கள் கேட்கும்போது நமக்கு மூச்சு முட்டும். ரங்குவிற்கு மூச்சே நின்றுவிடும். அதற்கே  மதியம் ஐஸ் கிரீம் வாங்கி தருவான் (தர வைத்து விடுவேன்)   .  

ஆபீசுக்கு போகும்போதும்  branded   சட்டை, checkered  பாண்ட் , சனியன்று அரை நாள் என்பதால் T-ஷர்ட் ,காடுராய், டெனிம் பாண்ட்,மொக்காசினோ ஷூ, ரிம்லெஸ் கண்ணாடி என்று ரங்கு கலக்கினான். இதில் சிறப்பு என்னவென்றால் அவனது பெற்றோருக்கு ரங்கு இப்படி மாறியது ரொம்ப சந்தோஷம்.ஸ்ரீரங்கம் போனால் எனக்கு நல்ல வரவேற்பு.

அதுசரி  .. இதெல்லாம்  செய்து  ஏதாவது மார்வாடி, மராத்திய, குஜராத்தி பெண்ணின் மனதில் ரங்கு  இடம் பிடித்தானா என்று நீங்கள் கேட்கலாம். இல்லை.... ஆனால்  ஆச்சாரமான ஒரு தமிழ் பெண் இவன் மனதில் இடம் பிடித்தாள். அவளது அண்ணன்காரனும் நம்ம நண்பர்தான்.. நம்ம  ரங்குவுக்கு தான் பயமே  போய்டுச்சே! தைரியமாக  போய் பேசி மணம் முடித்தான். இரண்டு குழந்தைகள்தற்போது பாம்பேயில் இன்னும் மிகப்பெரிய MNC யில்  CFO வாக  இருக்கிறான்.    ரங்குவை சில வருடங்கள் முன்பு சந்தித்த போது, என்னை பார்த்தவுடனேயே விழுந்து விழுந்து சிரித்தான். 20 வருடங்களுக்கு  முன்பு அவன் தலை முடி ஸ்டைலை நான் மாற்றியதை நினைத்து...  அதே இளமை...அதே கடும் உழைப்பு.. VP (Finance ) & கம்பெனி செக்ரடரி..  நரிமன் பாய்ன்ட்  எக்ஸ்ப்ரஸ் டவர்ஸில் sea view  அலுவலகம்..


மிகவும் சந்தோஷமாக இருந்தது.. நடு வகிடு எடுத்து தலை சீவினா இவ்வளவு உயருவோமா?  

No comments:

Post a Comment