வெளிநாட்ல வேலை செய்ற மாப்ள வேணாம், வெளிநாட்டு வேலைக்கெல்லாம் போக மாட்டேன் என்று தன் பெண் சொன்னதை கண்டுக்காமல் அவங்கப்பா (அப்ப என் வுட்பி மாமனார்) 2 ஜாதகங்களையும் நன்றாக கணித்து (அவருக்கு ஜோதிடம் நன்றாக தெரியும்) கல்யாணத்தை முடித்து வைத்தார். இப்பசத்திக்கி பையன் பாம்பேல வேலைன்னாலும் இந்தியாவில் இருக்கவே மாட்டார் என அடித்து சொன்னவர்.
அடுத்த ஓரிரு வருடங்களில் கட்டிய புடவையுடன் (பின்னால் நாலு பெட்டிகளுடன்) என்னுடன் பஹ்ரைன் வந்துவிட்டார் மனைவி. கோவை அரசு பொறியியல் கல்லூரி (GCT) மற்றும் காரைக்குடி அழகப்பா இஞ்சினீயரிங் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக இருந்தவருக்கு பஹ்ரைனில் அந்நாட்டு பிரதம மந்திரிக்கு சொந்தமான யுனிவர்சிட்டியில் உதவி பேராசிரியராக வேலை, அடுத்து பல வருடங்களாக.
ஆறு, ஆறரை அடி உயர அரபி பையன்களுக்கு வகுப்பெடுத்து சமாளிப்பது சுலபமல்ல என்றாலும் ஸ்ட்ரிக்டான மிஸ் ஆக இருந்தவர். எல்லா மாணவ மாணவியருக்கும் பிடித்த லெக்சரர் ஆனார். பஹ்ரைன் ஏர்போரட் இமிக்ரேஷன் கௌண்ட்டர்கள் முன் நாங்கள் வரிசையில் நிற்கும்போது ஸ்டாம்ப் அடித்து பாஸ்போர்ட்டை திருப்பி கொடுக்கும் ஆபிசர் ‘ஹல்லோ மிஸ்! நினைவிருக்கிறதா, நான் உங்க கம்ப்யூட்டர் சைன்ஸ் ஸ்டூடன்ட்!’ எனும்போது ‘ஓ! அப்படியா? சந்தோஷம்!’ என சுறுக்க பேசி கடக்கும் அளவிற்கு அடக்கம்.
அப்பப்ப மாமனாரிடம் ‘நமக்கு நேரம் எப்பிடி இருக்கு மாமா? நல்ல வேலைல தானே இருப்பேன்? இந்தியா எப்ப திரும்புவோம்?’ என கேட்டால் இப்போதைக்கி இல்ல, வற்ர ஜூலை வரைக்கும் உடம்ப மட்டும் ஜாக்ரதையா பாத்துக்கோங்க’ என எச்சரிப்பார். பையன்கள் எப்போது பிறப்பார்கள் என்பதைக்கூட ஜோசியம் பார்த்து அவர் சொன்னது எனக்கும் வசதியாக இருந்தது.
பையன்களுக்கு படிப்பு சொல்லித்தருவது, சின்மயா மிஷன் பால விஹாரில் சேர்த்து பகவத் கீதா மற்றும் ஸ்லோகங்கள் கற்றுக்கொள்ள வைப்பது, ஸ்லோகா ச்சேன்ட்டிங் காம்படிஷனில் முதல் மூன்று இடங்களுக்குள் பையன்களை வரவைப்பது, செஸ் கோச்சிங், தபலா க்ளாஸுக்கு அனுப்புவது, Model United Nations எனும் educational simulationக்கு பையன்களை அனுப்புவது, ப்ளஸ் 2 டியூஷனுக்கு பையன்களை காரில் ட்ராப் செய்து பிக்கப் செய்வது, எகனாமிக்ஸ் சப்ஜெட்டுக்கு ஸ்பெஷல் டியூஷனுக்கு அனுப்புவது என சகலத்தையும் இவரே பார்த்துக்கொள்ள, ‘நீ என்னதான் செய்தாய்?’ என என்னிடம் கேட்பவர்களுக்கு ‘நாக்கு தெலியது’ என்ற ஒரே பதில் தான், ட்ராஃப்கோ கம்பெனியை கட்டிக்கொண்டு அழுததைத்தவிர.
பையன்கள் என்ன படிப்பு படிப்பார்கள் என்பதை வழக்கம்போல நவாம்சம், ராசிக்கட்டம் இத்யாதிகளை மாமனார் போட்டு, இருவரும் சீஏ தான் படிப்பார்கள் என இன்டிகேட் பண்ண, இவரும் அதற்குத்தகுந்தாற்போல பையன்களை தயார் படுத்தி, ப்ளஸ்-2 வில் பெரியவன் காமர்ஸ் ஸ்ட்ரீம் ஸ்கூல் டாப்பர், சின்னவன் சப்ஜெக்ட் டாப்பர், இருவரையும் சீஏ பாஸ் செய்ய வைத்தது மட்டுமல்லாமல் பொதுஅறிவு க்விஸ், செஸ் டோர்னமென்ட்களில் கலந்து பையன்கள் கொண்டுவரும் ஏராளமான பரிசு கோப்பைகளையும் ட்ராஃபிகளையும் கார்பென்டர் வைத்து வரவேற்பறையில் டிஸ்ப்ளே செய்து மகிழ்ந்தவர். ‘இதற்கெல்லாம் உன்னுடைய பங்களிப்பு என்ன?’ என என்னிடம் யாராவது கேட்டால் ‘நாக்கு தெலியது’ தான் பதில்.
Toastmasters International எனப்படும் அமெரிக்காவைச்சேர்ந்த பேச்சு மன்றத்தின் பஹ்ரைன் கிளையில் பையன்களை சேர்த்து extempore speech மற்றும் table topics எனப்படும் கொடுக்கப்பட்ட பொருளில் ஆயத்தமின்றி குறைந்தது மூன்று நிமிடங்களாவது திக்கித்திணறாமல் பேசும் திறன்களை வளர்க்க பையன்களுக்கு உதவி, அதற்கான பயிற்சிகளை கொடுத்து, பரிசுகள் வாங்க வைத்து பெண்டெடுத்தவர் இவர். ‘அது சரி! நீ என்ன பண்ணாய்?’ என என்னை யாராவது..! ‘நாக்கு தெலியது’.
தான் இஞ்சினீயரிங்கில் கம்ப்யூட்டர் சயன்ஸ் மற்றும் முதுகலை IT படித்திருந்ததால் பெரியவனின் சிஏ ஃபைனலில் கூட கடினமான IT பேப்பரில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வைத்தவர் இவர். ‘அது சரி.. நீயும் சீஏ தானே படித்திருக்கிறாய்? பையனுக்கு அக்கவுண்ட்ஸ், டாக்ஸேஷன் என ஏதாவது சொல்லிக்கொடுத்தாயா?’ என என்னை யாரும்… வேணாம் வுட்ருங்க!
வாழ்க்கை முழுவதையும் கணவர் மற்றும் குழந்தைகளுக்காக அற்பணித்து அவர்களது நலனே பிரதானம் என வாழும் மனைவியின் பிறந்தநாளுக்கு வெறும் நான்கு மணி நேர பென்சில் ஓவியத்துடன் வாழ்த்து சொல்வது போறாதென்பதால் ‘நாக்கு தெலியது’ என சால்ஜாப்பு சொல்லாமல் நாக்கு தெலிசந்தி மேற்படி பதிவு மட்டுமே!
No comments:
Post a Comment