பெங்களூர் ஏலஹங்க்கா பகுதியில் உள்ளே மேலும் ஐந்தாறு கி.மீ தள்ளி காட்டுப்பகுதியில் ‘தரவாடு மனே’ எனும் அழகிய ரிசார்ட்டில் கூட்ட நெரிசல் போன்ற வழக்கமாக சமாச்சாரங்கள் இல்லாது, பையன்/பெண்ணின் நண்பர்கள், மிக நெருங்கிய உறவினர்கள் என அளவான கூட்டத்துடன் திருமணம் இன்று.
நண்பர் Mathanagopal Nagarajan இரண்டு மாதங்களுக்கு முன்னரே தனது பெண்ணின் திருமணம் பற்றி எனக்கு தகவல் கொடுத்து தேதியை குறித்து வைத்துக்கொள்ளச்சொல்லி விட்டார். திருச்சி, சென்னை என முப்பது முப்பத்தைந்து வருடங்கள் BHELல் பணிபுரிந்த இஞ்சினீயர் அவர். கண்ணில் ஒற்றிக்கொள்ளும் அளவிற்கு, ஸ்டைலான, உயர் ரக, நீண்ட ஆங்கில குறுஞ்செய்திகள் அவ்வப்போது அனுப்புவார். மயிலாப்பூர்/மந்தைவெளியிலிருந்தோ அமெரிக்காவிலிருந்தோ வாட்சப்பில் குறைந்தது 40 நிமிடம் போனில் பேசும் இனிய நண்பர்.
நேற்று மாலை திருமண முன் தின கொண்டாட்டம் எனப்படும் pre wedding bash ஏலஹங்க்கா LYNQ Lounge எனப்படும் உணவகத்தில் மனைவி, அமெரிக்கா மகன், மூத்த மகள், இளையவள் (மணப்பெண்) மற்றும் மணமகன் என எல்லோரும் எங்களை வரவேற்க, ஆட்டம் பாட்டத்துடன் கேக் வெட்டி அலுவலக நண்பர்கள் சலிக்காமல் ஆடித்தீர்த்தார்கள். ரண்பீர் கபூர், ரண்வீர் சிங், விக்கி கௌஷல், ஷாருக் கான், தனுஷ், விஜய், அனிருத், யுவன், இமான் இவர்களெல்லாம் உருவாக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை மெட்லி (கலவை)யாக தொகுத்தளித்து ஆர்ப்பரித்து ஆடினார்கள் மக்கள். நண்பர் மதனகோபால் ஏற்பாடு செய்திருந்த சில்வர் ச்சைம்ஸ் ஸ்யீட்ஸ் என்ற விடுதியில் ஆடாமலே களைத்துப்போய் தூங்கிப்போனோம்.
காலை தரவாடு மனே ரிசார்ட்டுக்கு சென்றதும் சிரோட்டி, பாதாம் அல்வா, முறுகல் தோசை, இட்லி காபி எல்லாம் முடிந்து ரிசார்ட்டை சுற்றிப்பார்த்தோம். ஒரு ஓரத்தில் இளநீரை வெட்டிக்கொடுத்துக்கொண்டிருந்தார்கள். சுற்றிலும் தோட்டங்கள் சூழ, அழகிய அலங்காரங்களுடன் மணமேடை, அந்தப்பக்கம் மங்களூர் ஓட்டுடன் உணவுக்கூடம் சாப்பிட.. இந்தப்பக்கம் அந்தக்கால செட்டியார்கள் வீடு போல மர தூண்களுடன் அழகிய இல்லம் எல்லோரும் தங்குவதற்கு.. நடுவே ஊஞ்சல் போட்டு அந்தக்கால முற்றம்.. மேடைக்கு இடதுபுறம் ஏதோ ஒரு வீட்டு வாசல் திண்ணை போன்ற அமைப்பை உருவாக்கி அதில் தவில், நாதஸ்வரம், தபலா மற்றும் புல்லாங்குழலுடன் வாத்தியக்காரர்கள். ரம்மியமாக செய்யப்பட்டிருந்த அலங்காரங்களுடன் திருமணம் இனிதே நடந்தேரியது.
மணப்பெண் பிரியா மதன் சகலகலாவல்லி. IT துறையில் இருந்துகொண்டு சினிமாத்துறையிலும் கால் பதித்தவர். இயக்குநர் அட்லியுடன் சேர்ந்து ‘முகப்புத்தகம்’ எனும் குறும்படம் எடுத்தவர். பிரியாவின் ஜிகிரி தோஸ்த்தான QFR புகழ் Shivakumar Sridhar தனது பத்திரிக்கையாளர் மனைவியுடன் வந்திருந்தார்.
மதிய சாப்பாடு கன்னடம்/தமிழ்நாடு ஸ்டைல் கலந்த இளநீர் பாயசம், ஹோலிகே (போளி), வாழைப்பூ வடை, கர்நாடக ரசம் என வெரைட்டியுடன் அருமை. ஜக்கூர், ஹென்னூர் ரோடு பிடித்து தூக்கம் சொழட்ட வீடு வந்து சேர்ந்தோம். சோறு முக்கியமல்லவா!
நண்பர் மதனகோபால்-சுமதி தம்பதியருக்கு மிக்க நன்றி
No comments:
Post a Comment