Friday, June 20, 2025

கடுகு தாளித்த கருவேப்பிலை மோர்…


ஆட்டோக்காரரை திருச்சி பெரிய மார்க்கெட் வளைவில் நிறுத்தச்சொல்லி இறங்கிக்கொண்டு மலைவாசல் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அவசர வேலை நிமித்தம் இரண்டு நாள் திருச்சி பயணம். வலதுபுறம் அப்பாய் மளிகை, சற்று தொலைவில் பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ். அப்புறம் லாலா மிட்டாய் கடையில் இப்போதும் குண்டு குண்டாய் பூந்தி மூங்கிற் கூடையில் கட்டித்தருகிறார்கள். இடதுபுறம் சமஸ்பிரான் தெருவில் இப்போதும் குழி தோண்டப்பட்டு.. ஆடிட்டர் குமாரராஜ் ஆபிஸ் மாடியில். யாரோ கிளையன்ட் எதிரே உட்கார்ந்திருக்க ‘வாங்க! என்ன வேணும்?’ என வரவேற்றார். ஆடிட்டருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. பக்கத்திலிருக்கும் கிளையன்ட் ஏதோ சொல்ல ஆரம்பிக்க, ஆடிட்டர் அவர் பக்கம் திரும்ப, நினைவலைகள் இந்தியன் நியூஸ் ரெவ்யூ வட்டம் போல 32 வருடங்கள் பின்னோக்கி…
1981இல் அங்கு தான் சி.ஏ படிக்க அப்ரென்டீஸாக சேர்ந்தேன். ஆடிட்டர் படு ஸ்மார்ட்டாக இருப்பார். தெலுங்கு நடிகர் போல தூக்கி வாரி பின்னால் விடப்பட்ட சுருள் கேசம். பெரிய பெல்பாட்டம் பேண்ட். பகலில் சி.ஏ பிராக்டிஸ், மாலை சோபன் பாபு போல கூலிங் கிளாஸ் அணிந்து, செஞ்சோசஃப்ஸ் மற்றும் உருமு தனலட்சுமி கல்லூரிகளில் பகுதிநேர வகுப்புகள் எடுப்பார். தெலுகுவாளு. ஹி..ஹி.. நமக்கும் தூரத்து உறவு.
சிறியதும் பெரியதுமாக நிறைய ஆடிட்டுகள் செய்வார். வருமான வரி விதிகள், ஷரத்துக்கள், முக்கிய தீர்ப்புகள் என எல்லாமே விரல் நுனியில். ஏராளமான நண்பர்கள் அவருக்கு. மோட்டா மணி பர்ஸ், இன் செய்த சட்டையின் மேல் பாக்கெட்டில் கற்றை நோட்டுக்கள் என நல்ல வருமானம். ட்ரையல் பாலன்ஸ் டேலி ஆகாமல் தலையை சொறிந்தபடி நாம் அவரிடம் சென்றால்,
‘என்ன டிஃபரன்ஸ் வருதுப்பா?’
‘90 சார்’
‘9ஆல டிவைட் ஆகுதில்லையா ? அப்ப எதாவது நம்பர் டிஜிட்டை மாத்தி எழுதியிருப்ப.. செக் பண்ணு!’ என்பார்.
அவர் சொன்னது போலவே 981 என்பதை 891 என எங்கோ எழுதி விட்டிருக்க, டிஃபரன்ஸ் 90 ஆக வந்து நிற்கும்.
அக்கவுண்டன்ஸி கணக்குகளின் ஸ்டெப்ஸ் எல்லாம் தலைகீழாக மனப்பாடமாக வைத்திருப்பார். கடைசி வரியை பார்த்த மாத்திரத்தில் ‘ இது தப்புங்க’ என சொன்ன கையோடு அவரது கண்கள் சட்டென சற்று மேலே பரவி, நடுவே எங்கோ நாம் செய்த தவறான ஸ்டெப்பை பேனாவால் சுழிப்பார். கில்லாடி!
நாம் தயாரித்து வைத்திருக்கும் இன்கம்டேக்ஸ் ரிட்டர்ன்களை அசால்ட்டாக புரட்டி, வருமானங்களை பார்வையிட்ட அடுத்த நொடியே ‘திருவெறும்பூர்ல பெல் (BHEL) காண்ட்ராக்ட்டுக்காக ஆன்சிலரி யூனிட் போட்டாங்களே! அந்த இன்கம் இதுல சேர்க்கலையா?’ எனக்கேட்பார். அதிர்ந்து விடுவோம். கழுகுக்கண்கள் அவருக்கு. மாடி பால்கனியில் இருந்து கீழே ஓட்டலை பார்த்து கை தட்டி ஆபிஸ் செலவில் ஆர்டர் செய்த கருவேப்பிலை கடுகு தாளித்த மோர் குடித்தபடியே வேலை செய்யும்போது நாம் செய்த தவறுகள் அவர் கண்களிலிருந்து தப்பாது.
வெளியூர் பாங்க் ஆடிட்டுகளுக்கு எங்களை அனுப்பும்போது கனிசமாக பணம் கொடுத்து ‘நல்ல ஹோட்டலா பாத்து நல்லா சாப்பிடுங்க’ என்பார். சக அப்ரன்டீஸான அருண்மொழி பர்மா பஜாரில் சிங்கப்பூர் ஜட்டி முதற்கொண்டு வாங்கிக்கொள்வான். காரைக்குடியில் ஸ்டேட் பாங்க் ஆடிட் 10 நாள் என்றால் தவறாமல் ‘தெய்வத்தின் தெய்வம்’, ராணி சம்யுக்தா’ போன்ற படங்கள் இரவுக்காட்சியில்.
‘சொல்லுங்க.. என்ன வேணும்?’ என ஆடிட்டர் கேட்க, சட்டென நிகழ்காலத்திற்கு வந்தேன்.
‘ஞாபகம் இருக்கா சார்? நான் உங்களோட முதல் ஆர்ட்டிகிள்ட் கிளார்க் ஶ்ரீதர்…’
‘ஓ… பம்பாய் பக்கம் போய் அங்கேர்ந்து ஏதோ கல்ஃப் வேலைக்கு போனீங்க. உங்கப்பா சப்-ரிஜிஸ்ட்ரார். நல்லா நினைவிருக்கு’
‘ஆமா சார்.. இப்ப இந்தியா வந்தாச்சு’
குடும்பம், குழந்தைகள் என விசாரித்த அவருக்கு இன்னும் அதே தீர்க்கமான கண்கள். ‘62 வயசாச்சுங்கறீங்க.. பசங்க ரெண்டு பேரும் சிஏ ஆயாச்சு. இனி சிஏ ப்ராக்டிஸ் எல்லாம் வேணாங்க.. கோயில் குளம்னு எஞ்சாய் பண்ணுங்க’ என்றார்.
இரண்டு சிஏ மாணவர்கள் எதிரே. இவர் தாங்க என் கிட்ட சீஏ சேர்ந்த முதல் அப்ரெட்டீஸ் என என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். பல வருடங்கள் முன்பு நான் செய்தது போலவே அந்த சீஏ மாணவன் கற்றை காகிதங்களை காட்ட, ஆசுபத்திரி் நடத்தும் யாரோ ஒரு டாக்டரின் வருமானவரி தாக்கலை பார்வையிட்டார். கண்ணாடியை கழட்டி விட்டு கண்ணுக்கு வெகு அருகாமையில் வைத்து எண்களை உற்று பார்த்தார். ‘எல்லா பாங்க் ஸ்டேட்மென்ட்டும் செக் பண்ணிட்டியா?’ என கேட்க பையன் தலையாட்டினான். ‘கிளையன்ட்டோட பான் நம்பரை போட்டு வருடாந்திர 26AS ஸ்டேட்மென்ட் டௌன்லோடு செஞ்சி பார்த்தியா?’ எனக்கேட்க பையன் சற்று அதிர்ந்து பின் வாங்கினான். ஒருகாலத்தில் கருவேப்பிலை மோர் குடித்த நானும் தான். ‘இதெல்லாம் பேஸிக் செக்கிங்ப்பா! மொதல்ல இதையெல்லாம் பார்க்கனும் ’ என சொல்லி விட்டு என் பக்கம் திரும்பினார்.
73 வயது, சற்று தளர்ந்து மெலிந்த தேகம் என்றாலும் சுறுசுறுப்பான மூளை, பார்த்த மாத்திரத்தில் எண்களை சரிபார்த்து அந்த சில நிமிடங்களிலேயே ஒரு மினி ஆடிட் செய்யும் யுக்தி இன்றும்! சட்டை மேல் பாக்கெட்டில் இப்பவும் கற்றை 500 ரூபா நோட்டுக்கள். ஆபிஸில் அவரது இருக்கைக்கு எதிரே ‘முயற்சிகள் தவறலாம். முயற்சி செய்யத்தவறலாமோ!’ என்ற வாசகம். அடுத்து ‘இக்கரைக்கு அக்கரை பச்சை, அக்கறையிருந்தால் எங்குமே பச்சை’ என்ற வாசகம் என்னை வெகுவாக கவர்ந்தது. (படம் பார்க்க!) 60 வயதிற்கு அப்புறம் பிஎச்டி செய்து டாக்டரேட் பட்டமும் வாங்கியவர்.
வாங்கி வந்த பழங்களை அவரிடம் சமர்ப்பித்து, கால்களை தொட்டு ஆசி வாங்கி, சட்டென அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டு விடைபெற்றுக்கொண்டேன். வெளியே வந்து மீண்டும் பெரிய கடைத்தெரு வந்து மலைவாசல் நோக்கி திரும்பும்போது வலதுபுறம் அதே ஹோட்டல்.. பார்க்க இன்னும் சிறியதாக, கொஞ்சம் நலிவடைந்து.. வாசலில் ‘கருவேப்பிலை நீர் மோர் ரெடி’ போர்டு.
அதே திருச்சி!

No comments:

Post a Comment