சென்ற மாதம் திருச்சி/காரைக்குடி செல்ல பெங்களூரிலிருந்து கிளம்பும்போது உறவினர் ஒருவரிடமிருந்து போன். அவருக்கு திடீரென இரவில் சிறுநீர் கழிப்பது அதிகமானது, அதாவது நாலைந்து முறையாம். வெளியேறும் சிறுநீரின் அளவும் குறைவாக இருந்ததாம். சில சமயம் சிறுநீரை சற்று சிரமத்துடன் வெளியேற்ற வேண்டியதானதாம். பதறியடித்து பெங்களூர் ஜீவன்பீமா நகரில் சிறுநீரக மருத்துவர் (Urologist) டாக்டர் ஹெக்டே என்பவரை அணுக, அவர் இவரது மலத்துவாரத்தினுள் விரலைவிட்டு சன்னமான மலக்குடலுக்கு வெளியே சிறுநீர்க்குழாயைச் சுற்றி அமைந்துள்ள புரோஸ்டேட் எனும் சுரப்பியை தொட்டுணர்ந்து, அது வீக்கத்துடன் உள்ளதைக் கண்டறிந்தார்.
அடுத்த சில நாட்களில் இவருக்கு இரத்த பரிசோதனை செய்து PSA (Prostate Specific Antigen) எனும் சமாச்சாரத்தின் அளவை கண்ட டாக்டர் ‘4க்குள் இருக்க வேண்டிய இந்த அளவு உங்களுக்கு 7க்கு மேல் உள்ளது. மருந்து சாப்பிட்டு வீக்கத்தை குறைக்கனும், தவிர இழைய ஆய்வு (Biopsy) செய்து புராஸ்டேட்டின் துளியளவை வெட்டி புற்றுநோய் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும். இதெல்லாம் இல்லாமல் சிகிச்சை முடியும் வரை வடிகுழாய் எனப்படும் Catheterஐ கீழே சொறுகி சிறுநீர்ப்பை வரை செலுத்தி விட்டால் அந்த ட்யூப் வழியாக சுலபமாக சிறுநீர் கழிக்கலாம்’ என அறிவுறுத்த உறவினரின் குடும்பம் பயந்து போய் ஹல்சூர் முருகன், பானஸ்வாடி ஆஞ்சநேயர் என எல்லா தெய்வங்களையும் வேண்ட ஆரம்பித்தனர்.
‘அதென்ன டாக்டர் புராஸ்டேட் சுரப்பி! இத்தினி நாள் அப்படியொரு பாகம் நமக்கு இருக்காங்கறதே தெரீலயே!’ என உறவினர் கேட்க, ‘உங்க உடம்புக்குள்ள என்னென்ன பாகங்கள் இருக்கு, அதெல்லாம் எப்பிடி வேலை செய்யுதுன்னு மொதல்ல தெரிஞ்சுக்கோங்க, அத விட்டுட்டு ஜெயநகர் பக்கம் வித்யார்த்தி பவன்ல தோசை நல்லாருக்கும், மல்லேஸ்வரம் சிடிஆர்ல தட்டெ இட்லிக்கி ராத்திரி 9 மணிக்குள்ளாற போகனும்னு பேசிக்கிட்ருந்தா எப்பிடி!’ என்ற டாக்டர் ‘புரோஸ்டேட்டுங்கறது ஆண்களில் சிறுநீர்ப்பைக்குக் கீழே உள்ள ஒரு சிறிய சுரப்பி, அது தான் விந்து உற்பத்தி செய்கிறது’ என விளக்கினார்.
‘புரோஸ்டேட் உங்க சிறுநீர்க்குழாய் முழுசையும் சுத்தியுள்ள ஒரு தசையைப் போல. அந்த தசை பெருசாயிட்டா, அது சிறுநீர்க்குழாய்களை அழுத்தி சிறுநீர் கழிக்கறதை கஷ்டமாக்கிடும்’ என விளக்க ‘இவ்ளோ சமாச்சாரம் நடக்குதா!’ என உறவினர் வியந்தபடி தேவையான பரிசோதனைகளை செய்துகொள்ளத்துவங்கினார்.
அடுத்த சில நாட்களில் புற்று நோய் இல்லையென்பது உறுதியானது. மருந்தினால் புராஸ்டேட்டின் வீக்கம் ஓரளவு தான் குறைந்ததாலும், சிறுநீர் கழிப்பதிலும் சிரமம் தொடர்ந்ததால் புராஸ்டேட் அறுவை சிகிச்சை தான் ஒரே தீர்வு என டாக்டர் சொல்ல, ‘ஐய்ய்யோ டாக்டர்! வயித்தை அறுத்து ஆபரேஷனா?’ என உறவினர் கலவரத்துடன் கேட்க, அதையும் டாக்டர் ஹெக்டே விளக்கினார்.
TURP (Trans Urethral Resection of Prostate) எனும் எளிய அறுவை சிகிச்சை என்பது சிறுநீர்க்குழாய் வழியாக செருகப்பட்ட ஒரு கருவியின் (scopy) மூலம் புராஸ்டேட் தசையை லேசாக வெள்ளறிக்காய் போல சீவி (trimming) சிறுநீர் ஓட்டத்தைத் தடுக்கும் பகுதியையும் வெட்டி சரிசெய்தால் உங்க பிரச்னை எல்லாம், அதாவது சிறுநீர் கழித்த பிறகு சொட்டாக வடிதல், இரவில் அதிக சிறுநீர் போக்கு, சிறுநீர்ப்பை முழுமையடையாமல் காலியாக இருப்பது போன்ற உணர்வு, அல்லது பலவீனமான சிறுநீர் ஓட்டம் எல்லாம் சரியாகிடும் என டாக்டர் சொல்ல, உறவினர் அறுவை சிகிச்சைக்கு தயாரானார்.
திருச்சியில் என் டாக்டர் மைத்துனர் உதவியால் ஒரு ஆசுபத்திரியில் உறவினருக்கு எளிய அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. சிம்பிள் ப்ரொசீஜர்னு சொன்னாங்களே, ஆனால் வலியில துடிச்சி போயிட்டேன் என்றார் உறவினர். அந்த கத்தீட்டரை தூக்கி கடாசி எறியத்தோன்றுமளவிற்கு உட்கார, படுக்க முடியாமல் அவதி, கீழே ஸ்கோப்பி குழாயை சொறுகியதால் சிறுநீர்ப்பாதை (passage) முழுக்க பயங்கர வலியாம்.
ஒரு வழியாக உறவினர் பூரண குணமடைந்து எழுத்தாளர் சுஜாதா சொன்னது போல பொன் வண்ணத்தில் சிறுநீரை சீராக கழிக்கத்தொடங்கினார். என்னவொரு நிவாரணம்! இரத்த பரிசோதனையில் அந்த PSAவோ என்னவோ அதுவும் 4க்கு குறைவாக காட்டியது.
பெங்களூர் திரும்பியதும் யூராலஜிஸ்ட் டாக்டர் ஹெக்டேக்கு நன்றி தெரிவிக்கச்சென்ற உறவினரிடம், அவர் இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் double voiding என்பதை செய்தல் நல்லது என்றாராம். அதாவது இரட்டை சிறுநீர் கழித்தலாம். அவசரமாக சிறுநீர் கழித்தபின் உடனே பாத்ரூமை விட்டு வெளியேறாமல் சுமார் 20-30 நொடி உட்கார்ந்த வாக்கிலேயே (நின்னுகிட்டு போகவே கூடாதாம்) இருந்தால் மறுபடியும் கொஞ்சம் சிறுநீர் பிரியுமாம். சிறுநீரகப்பை மேலும் சுருங்கி முழு சிறுநீர் வெளியேறி UTI (uninery tract infection) போன்ற உபாதைகள் வராதாம். ப்ளாடரும் ஸ்ட்ராங்கா இருக்குமாம். ஆண்களில் 50 வயதுக்கப்புறம் வரும் உபாதையாம் இது. தற்போதுள்ள வாழ்க்கை முறைக்கு, போகப்போக 40 வயதிலும் வருமாம்.
மிதமான எடையைப் பராமரித்தல், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல் போன்ற இயற்கை வைத்தியங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் புரோஸ்டேட் வளர்ச்சியை குறைக்கலாம் அல்லது நிறுத்தலாம் என்கிறார் டாக்டர். ஹெக்டே. போதிய அளவு தண்ணீர் குடித்தல், க்ரீன் டீ பருகுதல் கூட ரொம்ப நல்லதாம்.
பி.கு: மேற்கூறியவை அனைத்தும் பெங்களூர் டாக்டர், என் உறவினர் மற்றும் என் திருச்சி டாக்டர் மைத்துனர் சொல்லக்கேட்டு, வலையில் சில ஆங்கில வார்த்தைகளின் தமிழாக்கத்தை தேடிப்பிடித்து எழுதிய பதிவே தவிர, மருத்துவம் பற்றி ஏதுமறியாத பட்டைய கணக்காளன் நான் என அறிக.
50 வயதைக்கடந்த, ‘ஒண்ணுக்கு’ள்ள ஒண்ணா பழகிய நண்பர்கள்/உறவினர்களுக்காக இந்த பதிவு!
No comments:
Post a Comment