Sunday, June 22, 2025

பால்ய நண்பனின் புதிய கார்..


ஒரு கார் வாங்கும் முன் முன்னெச்சரிக்கையாக என்னென்ன செய்ய வேண்டும்?
முதலில் NCAP எனப்படும் New Car Assessment Programs பாதுகாப்பு சோதனையின் முக்கிய அங்கமான வாகனத்தின் அதிகபட்ச (0விலிருந்து 5) பாதுகாப்பு மதிப்பீடு (Safety Rating) என்னவென்பதை பார்த்தல் அவசியம். அதற்காக 0,1,2 போன்ற ரேட்டிங் உள்ள கார்களை வாங்கக்கூடாதா? தாராளமாக வாங்கலாம், நீங்கள் மயிலை சிவசாமி சாமி சாலையிலிருந்து லஸ்ஸுக்கு கண்ணாடி ஃப்ரேம் மாற்றவோ, பெங்களூரிலிருந்து வரும் நண்பனுடன் நடைபயிற்சிக்காக மெரினா செல்வதற்கோ, அடுத்த தெரு ஏவிம் ராஜேஸ்வரி கல்யாணமண்டபம் தாண்டி துவாரகா காலனி நண்பர் வீட்டில் பக்கோடா சாப்பிட போன்ற உள்ளூர் உபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தவே என்றால் போதும்.
அடுத்து கார் வாங்க நமது பட்ஜெட் என்னவென்பதை முடிவு செய்ததால் வேலை இன்னும் சுலபம், நிறைய கார்களை சிறுபட்டியலிடலாம் (shortlist).
தற்போது எல்லா வகையான கார்களையும் நமது பட்ஜெட்டுக்கு தகுந்தமாதிரி புகுத்துலாம். அடிக்கடி டிரைவர் வைத்துக்கொண்டு தஞ்சாவூர் கணபதி அக்ரஹாரம், கும்மோணம் கோயில்களுக்கு செல்பவர்கள் பட்ஜெட்டை சற்று உயர்த்தி நல்ல ஸ்திரமான (strong body) மற்றும் இஞ்சின் திறன் CC (Cubic Capacity) உள்ள கார்களை வாங்குதல் நீண்ட பயணத்திற்கு உதவும். அதென்ன Cubic Capacity? ஒரு காரின் எஞ்சினில் உள்ள சிலிண்டர்கள் மூலம் தள்ளக்கூடிய காற்று மற்றும் எரிபொருளின் கன அளவை கன சென்டிமீட்டர்களில் (cc) குறிப்பது தான் மேற்சொன்னது. அதிக CC வண்டிகளில் ஒரே நாளில் 700, 800 கி.மீ நெடுந்தூரத்திற்கு பயணம் செய்யலாம்.
அடுத்த முக்கியமானது Airbag எனப்படும் காற்றுப்பை. நமது கார் மற்றொரு பொருளை ( வாகனமோ, சுவரோ ஏதோ ஒன்று) இடிப்பதற்கு சில மைக்ரோ வினாடிகளுக்கு முன்பு, காரில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார் ஆனது இரசாயன எதிர்வினை மூலம் நம் முன் உள்ள காற்றுப்பைகளை சட்டென விரிவடையச்செய்து நம்மை காப்பாற்றும். இவையனைத்தும் நாம் கண் சிமிட்டுவதை விட வேகமாக நடக்ககூடியவை. தற்போது காரின் முன் இருக்கைகளுக்கு இரண்டு காற்றுப்பைகள் பொருத்த அரசாங்கம் கட்டாயப்படுத்தியுள்ளது. காரின் விலை உயர உயர காற்றுப்பைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ‘நமக்கு கல்யாணமான புதுசுல.. ஞாபகமிருக்கா! பழனியில ஒருக்கா மொட்டைக்காக போயிருந்தப்ப உங்கப்பா சொன்னாரே…..’ என நாம் ஆரம்பிக்கும்போதே, நாம் என்ன சொல்ல வர்றோம் என்பதை கார் airbag விரிவடையும் அந்த மைக்ரோ வினாடிகளை விட துரிதமாக புரிந்துகொண்டு, ‘தெரியும்.. தெரியும்.. அவர் எதுக்கு சொன்னாருன்னா…’ என மனைவியர் டிஃபென்ஸ் கொடுக்கும் திறனை விட துரிதமாக செயல்படும் airbag இனி கண்டுபிடிக்கத்தான் வேண்டும்.
Ground Clearance எனப்படும் காரின் அடிப்பாகத்திற்கும் சாலைக்கும் இடையே உள்ள தூரம் முக்கியமானது. இல்லையென்றால் தில்லை கங்கா நகர் 22ஆம் தெருவில் வசிக்கும் நண்பர் வீட்டு கிரஹப்பிரவேசம் செல்ல திருநீர்மலை மண் சாலையிலிருந்து கிளம்பும்போது சாலையிலுள்ள பாறைகளில் காரின் கீழ்ப்பகுதி பெட்ரோல் டாங்க் மோதி, சேதமாகி பெரும் தீவிபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சிறு வாகனங்களுக்கெல்லாம் இந்த ground clearance சமாச்சாரங்கள் எல்லாம் சரிப்படாது. 150,160 மி.மீ போதும்.
அடுத்து Anti Lock braking (ABS) என்பது, நல்ல வேகத்தில் செல்லும்போது அவசரமாக ப்ரேக் போடும் சூழ்நிலைகளின் போது வாகனத்தின் கட்டுப்பாட்டைப் பராமரிக்க ஓட்டுநருக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது காரை நாம் பதட்டத்துடன் விரைவாக நிறுத்த வேண்டிய அவசியமில்லாது, ஈரமான, வழுக்கும் அல்லது வறண்ட சாலைகளில் கூட நிறுத்தும் தூரத்தை வெகுவாக குறைக்கும். கிருஷ்ணகிரி தாண்டி மாலை நாலு மணிக்கு டீ குடிக்க வேண்டும் போல இருக்கும்போது பக்கத்திலிருக்கும் மனைவி ‘அதோ அக்கட உந்தி!’ என திடீரென அலறி, ஐயங்கார் பேக்கரியை காட்டி, க்ரீச்சென சப்தத்துடன் படாரென ப்ரேக் மேலேறி நிற்காமல், ப்ரேக்கை நிதானமாகவும் அதே சமயம் ஸ்திரமாக அழுத்த, வண்டி ஆடாமல் அசையாமல், விஜிடபிள் பஃப்ஸ் சாப்பிட நிற்கும்.
மற்பபடி 5 இருக்கைகளுக்கு மேல் 7 Seater, பின்புற டிக்கியின் கொள்ளளவு (boot space), பெட்ரோலா டீசலா, பெட்ரோலை விட அதிக விலையில் டீசல் வண்டி வாங்கி எத்தனை வருடங்களில் அந்த எக்ஸ்ட்ரா பணத்தின் பயனை திரும்பப் பெறலாம், சன் ரூஃப், மூன் ரூஃப் (திறக்கும் காரின் மேற்கூரை), பவர் ஸ்டீயரிங் (விரலால் கூட இயக்கலாம்), பவர் ஜன்னல் போன்ற சமாச்சாரங்கள் எல்லாமே நம் விருப்பம் (குறிப்பாக மனைவியின்), மற்றும் நமது பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு.
சமீபத்தில் சென்னை அடை மழை வெள்ளத்தில் கார் முற்றிலும் செயலிழந்ததால், அலுவலகத்திற்கு செல்ல வாகனமின்றி அவதியுற்ற பால்ய நண்பனுக்கு உதவ களம் இறங்கினேன்.
என்ன வாகனம் வாங்கலாம், என்ன பட்ஜெட்டில் என்னென்ன பாதுகாப்பு அம்சங்கள், வெகு தொலைவிற்கும் வாகனமோட்டிசெல்லலாம், அதே சமயம் பக்கத்தில் அப்பர் சாமி கோவில் தெருவோரம் வாகனத்தை சுலபமாக நிறுத்தலாம், டிரைவர் போட்டுக்கொண்டு தீர்த்த ஸ்தலங்கள் செல்ல வசதி, நல்ல மைலேஜ், குறைந்த பராமரிப்பு செலவு, கொடுத்த பணத்திற்கான மதிப்பு, நியாயமான நீளம்(4மீ) போன்ற எல்லா அம்சங்களும் பொருந்தக்கூடிய நாலைந்து கார்களில் என்னைக்கவர்ந்த, ரேஞ்ச் ரோவர் போன்ற தோற்றத்துடன் கட்டமைக்கப்பட்ட, அதே சமயம் நண்பனுக்கும் பிடித்துப்போன வாகனம் ஒன்றை (Suzuki Brezza) பரிந்துரை செய்ய, சற்றும் யோசிக்காமல் நண்பன் வாகனம் வாங்கி விட்டான்.
பெங்களூர் பய்யப்பன்னஹள்ளியின் புதிய விஸ்வேஸ்வரய்யா இரயில் டெர்மினலில் ஏறி, சென்னை வந்தேபாரத் உப்புமா தின்று, மதியம் நண்பன் இல்லத்தில் அளவில்லாத முழு சாப்பாடு சாப்பிட்டு, அவனது புதிய வாகனத்தை ஆசையுடன் பார்த்துவிட்டு அன்றிரவே யஷ்வந்த்பூர் துரித ரயிலில் திரும்பி கிருஷ்ணராஜபுரத்தில் இறங்கி வீடு வந்த கையோடு இப்பதிவை தட்டச்சு செய்வதில் சுகமுண்டு!
ஜாதிய பிரச்னைகளை தவிர்க்கவும், டாக்டர் ஒருவரது கோபத்திற்கு ஆளாகாமலிருக்கவும் எந்த கார் வாங்கலாமென யோசித்த போது நண்பர் Tiruchendurai Ramamurthy Sankar அவர்களின் அறிவுரையின் படி டாட்டா Harrier (ஹரி ஐயர்) 😀 காரை மட்டும் வாங்க வேண்டாமென முடிவெடுத்தது கூடுதல் தகவல்.

No comments:

Post a Comment