Sunday, June 22, 2025

எந்த பட்ஜெட் வந்தாலும் சரி!


பணம்/சேமிப்பு கம்மியா இருக்கறவங்களும் ‘ரிஸ்க் எடுக்கறது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி’ ன்னு டயலாக் விடாதவங்களும், பல வருஷம் உழைச்சி சம்பாரிச்சி பையன் மேற்படிப்பு, பெண்ணை கட்டிக்கொடுக்கன்னு தனி அமௌன்ட்டை ஒதுக்கி வச்சு ஈசிச்சேர்ல ரிடையரானவங்களும் பாங்க் டெபாசிட்டைத்தான் நம்பித்தான் இருப்பாங்க, 8.1% வட்டில மேற்கொண்டு 20% க்கு மேல டாக்ஸ் போனாலும் (நியூ ரிஜிம்ல 80TTB டிடெக்‌ஷன்ஸ் எல்லாம் இல்லன்னாலும்) அசலாவது பத்திரமா இருக்கேன்னு பாங்க் டெபாசிட்ட நம்பித்தான் இருப்பாங்க! பாங்க் திவாலானா இன்ஷூரன்ஸ்ல அஞ்சு லட்சம் தான் மிஞ்சுமாம் நமக்குங்கறது தனி வயித்தெறிச்சல். அதைப்பத்தி பயப்படாம SBI, ICICI, IOB, Canara Bk, HDFC (பெரிய லிஸ்ட்டே இருக்கு) போன்ற பணக்கார பாங்க்குல போடுங்க. இங்கெல்லாம் என் ஃபேஸ்புக் ஃபரெண்ட்ஸ் இருக்காங்கறதால சொல்லல. சிடுமூஞ்சி ஸ்டாப், திராபையான சர்வீஸ் இதெல்லாம் இங்க இருந்தாலும் உங்க சேமிப்பு பத்திரமா இருக்கும். அரை பர்சன்ட் அதிக வட்டிக்காக வேறெடத்துல விலை போயிடாதீங்க. வட்டிய விட அசல் முக்கியம் ட்டேளா!
பங்குச்சந்தைல போடலாமா? ந்தோ வர்றேன்!
25% ரிட்டர்ன் ஷேர்/மியூச்சுவல் ஃபண்ட்ல எடுக்கனும்னா பொறுமையா காத்திருக்கோனும். டெய்லி மார்க்கெட்டை (காய்கறி மார்க்கெட் இல்ல.. ஷேர் மார்க்கெட்ட) ஃபாலோ அப் பண்ணனும். கண்ணாடிய தூக்கிட்டு ET Now டீவி ஸ்க்ரீன் கீழே பச்சையும் செவப்புமா ஓடற ஷேர் விலை(மகள்)களை உத்து உத்து பாக்கோணும், வேதாந்தா கம்பெனி எம்.டி ரவி அகர்வால் இன்டர்வ்யூவை கவனமா கேட்டுக்கனும், HDFC மியூச்சுவல் ஃபண்ட் CEO (ex-SBIMF) நவ்னீத் முனோட் (என் நெருங்கிய நண்பர்) போன்றவங்க வ்யூஸை அப்பப்ப டிவில கேக்கோனும்.
நெறைய பாலன்ஸ் ஷீட் அனாலிசிஸ் பண்ணனும், கடன் சம்மந்தப்பட்ட டெட் ஈக்விட்டி (Debt Equity), கம்பெனியோட ஒரு ஷேரினால் ஈட்டிய வருவாய் (EPS), பங்கு விலை- வருவாயின் விகிதம் (Price to Earning Ratio) கம்பெனியோட கேஷ் ஃப்ளோ (அவன்ட்ட ஆரம்பத்துல எவ்ளோ துட்டு இருந்தது, இப்ப எவ்ளோ இருக்கு? நடூல என்னென்ன செஞ்சான்?) ப்ராடக்ட்ஸ் மார்க்கெட் ஷேர் (லிரில் சோப்பா பொன்வண்டு சோப்பா), பிற்காலத்துல பண்ணப்போற காண்ட்ராக்ட் ஆர்டர்களின் இருப்பு, ஸ்வாட் அனாலிசிஸ் (மாஸ்டர் ஹெல்த் செக்கப் மாதிரியான ஒண்ணு), 52 வார உயர்/தாழ் விலைகள் (சில ஷேர்கள் ஜெயலலிதா, சரோஜாதேவி மாதிரி ஏறி இறங்குவதும் சிலதுகள் சௌகார் ஜானகி போல ஸ்ட்ராங்காக ஒரே இடத்தில் நிலைத்திருப்பதும் போல) மாதிரி இத்யாதியெல்லாம் செக் பண்ணனும்.
அம்பானி, அதானிய திட்டக்கூடாது. அவங்க குடும்பத்துக்காக மட்டும் அவங்க சம்பாதிக்கல, நம்ம பொருளாதாரத்தோட ரத்த நாளங்கள்ள அவங்களும் ஒருத்தர் தெர்தா! ரயில் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட் -7 ஆ அல்லது தட்காலா ன்னு குழம்பிக்கிற மாதிரி இல்லாமெ (ஊருக்கு கெளம்பற வரைக்கும் அது WL-7 ல தான் இருக்கும்) க்விக்கா தைரியமா டெசிஷன் எடுத்து நம்ம போர்ட்ஃபோலியோவுல உள்ள நோயாளி பங்குகள ‘சாரிம்மா! நீ இப்பசத்திக்கி வேணாம்’னு அப்புறப்படுத்தனும். நாலஞ்சு வருஷத்துக்கு மேல கன்சிஸ்டென்ட் டிவிடென்ட்டுனு 50, 60% ரிட்டர்ன் கொடுத்த பங்குகள ‘போதும்மா! ஷேமமா என்னய வச்சிருந்தே (வேற அர்த்தம் எடுக்காதீங்க), தமன்னா பாட்டியா போல நல்லாவும் வளர்ந்துட்டே.. அதாவது அப்ரிஷியேட் ஆயிட்டே, ப்ராஃபிட் புக் பண்ணிட்டு அதிக விலைன்னாலும் முடிஞ்சா உன்னய திரும்ப வாங்கிக்கறேன் (டிவிடென்ட் ஈல்ட் கொறைஞ்சலும்), கெளம்பு நீ !’ ன்னு தயவுதாட்சண்யமில்லாம சில பங்குகள அழுதுகிட்டே ஆஃப்லோடு செஞ்சிடனும் (LTCG டாக்ஸ் கட்னாலும் பரவால்ல). சட்னு வந்துட்டு போற அமலா பாலும் நிலைச்சு நின்னு ஆடற த்ரிஷாவும் போலத்தான் பங்குச்சந்தை ஷேர்களும். நடுவுல வந்துட்டு போகும் நித்யா மேனன் மாதிரி ஷேர்கள் ஏதோ ஷார்ட் டெர்ம் காபிடல் கெய்ன் (STCG) பண்ண உதவும்.
போர்ட்ஃபோலியோவில ஷிஃப்ட்டிங் அப்பப்ப பண்ணோனும். மியூச்சுவல் ஃபண்ட்ல பணத்த போட்டா மட்டும் பத்தாது, ‘ஏன்டா! எங்காசை நீ எங்கெங்க வச்சிருக்க?’ ன்னு செந்தில் சொப்பன சுந்தரிய யார் வச்சிருக்கான்னு கேட்ட மாதிரி அன்டர்லையிங் இன்வெஸ்ட்மென்ட்டை தொறந்து பாக்கனும். டெட்டா ஈக்விட்டியாங்கறதையும் (Debt/Equity) சரியா ஆய்வு செஞ்சு போடலன்னா பாக்க அழகா மட்டும் சில மியூச்சுவல் ஃபண்ட்ஸ் பரந்தூர் ரயில்வே ஸ்டேஷன் மாதிரி (சுத்தமா இருக்கும், ஆனா கூட்டமே இல்லாம) இருக்கும்.
முடங்கிக்கெடந்த சில ஷேர்கள் திடீர்னு முளைச்சு எழும், பத்து பன்னண்டு வருஷம் முந்தி முகமூடி படத்துல தலைய காண்பிச்சி காணாம போயி சமீபத்துல திடீர்னு விஜய் கூட நடிச்ச பூஜா ஹெக்டே போல. அந்த ஷேர்கள அவசரமா வாங்கிடாதீங்க. அது பின்னால எவனோ உக்காந்துட்டு வேல்யூஷன் அதுஇதுன்னு நாகாசு வேல செஞ்சு, ஷேர் விலைய ஏத்தி, நல்ல விலைக்கி கம்பெனிய வித்துட்டு ஓட, பெரிய்ய பாங்க் லோனோட கம்பெனி ஷேர் விலை இறங்கிடும். உதாரணத்துக்குன்னு அதுமாதிரியான சில பங்குகள் பேரைச்சொன்னா அரசியலாயிடும்.
‘என்ன ஷேர் வாங்கலாம் சார்?’ னு மத்தவங்க கிட்ட கேக்கக்கூடாது. முக்காவாசிப்பேர்ட்ட யதார்த்தமா நீங்க கேட்டாலும் பதார்த்தமா பதில் சொல்லாம நழுவிடுவாங்க. கல்யாண மண்டபத்தை நாம தான நேர்ல பாத்துட்டு அட்வான்ஸ் கொடுக்குறோம்! அப்பறம் அது பாடாவதியா இருந்ததா இல்லியாங்கறது வேற கத.
மேல சொன்னதெல்லாம் நம்மால முடியுமா? ரிசர்ச் செய்றது, கம்பெனி பத்தின தகவல்கள் சரிபாக்கறது எல்லாம் டெய்லி பண்றது சாத்தியமா? அட்லீஸ்ட் ரெண்டு, மூணு நாளக்கி ஒருக்கா பண்றது உத்தமம். குளிச்சிட்டு ஒரு மணி நேரம் பூஜ பண்ணி நாஷ்டா துண்ண உக்காருவோமில்ல அதப்போல காலை பதினோறு மணி வாக்குல அல்லது மத்யாணம் 2, 3 மணி நேரம் போல ஒதுக்கலாம் (நெட்ஃப்ளிக்ஸ் வீட்டுக்காரம்மா பாத்துக்கிடட்டும்). சாய்ங்காலம் கோயில் குளம் சுத்திட்டு வெளிய ஒரு டீய குடிச்சிட்டு (வீட்டுக்கு தெரியாம) வீட்டுக்கு வந்தாவுட்டு அர்னாப் கோஸ்வாமி, நாவிகா குமாருங்கள சீக்கிரம் முடிச்சிட்டு ஃபைனான்ஸ் பத்தின டீவி ஒரு மணி நேரம் பாக்கறது உசிதம். இதைல்லாம் ரிடையரானவங்க மனைவியோட பேசிக்கிட்டே வீட்லயே ஆராம்சா செய்யலாம். இந்த வருடாந்தர பட்ஜெட் எல்லாம் நம்ம முதலீட்டுப்பசி (Investment appetite) யை கொஞ்சம் இங்கங்க மாத்திக்கவும், நம்ம ஸ்ட்ராடஜியை மாத்திக்கவும் ரொம்ப உதவும். ஆனா ரொம்பல்லாம் இல்ல.
அதிகமா ஆசைப்படாம, நமக்கு தேவையான சேமிப்ப வச்சுக்கிட்டு, இதர சேமிப்பை மட்டும் தைரியமிருந்தா பங்குச்சந்தைல போடலாம். லாபம் வந்தா பீத்திக்கக் கூடாது. நஷ்டம் வந்தா ‘பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டேன்’ னு சமாளிச்சிடனும். லாபம் வந்தா ‘வாடா நல்ல Share’, நட்டம் வந்த ‘போடா Hair’!
எந்த பட்ஜெட் வந்தாலும் சரி. அசரக்கூடாது ஆமா!

No comments:

Post a Comment