Friday, June 20, 2025

முத்துக்குமார் சுந்தரேசன்

 பஹ்ரைனில் 20 வருடங்களுக்கு மேலாக வசிக்கிறார். எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான இவர் மதுரைக்காரர். அரட்டை, சினிமா, ஊர் சுற்றுவது, நல்ல உணவகத்தில் மொஸ்க்குவது போன்ற இந்நான்கு விஷயங்களில் கருத்தொருமித்தவர்கள் இனிய நண்பர்களாக இருப்பர் என்பதில் ஐயமில்லை. அப்படியானவர்களில் ஒருவர் இவர்.

ஹைதராபாத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவர். பல வருடங்கள் முன்பு CFA (Chartered Financial Analyst) எனப்படும் நிதி சார்ந்த படிப்பை முதன்முதலில் இந்தியாவில் துவங்கிய கல்வி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து அப்படிப்பையும் முடித்தவர். அதே சமயம் இன்று உலகளவில் அமெரிக்க CFA பரவலாகி வங்கிகள், நிதி நிறுவனங்கள் என எல்லாவற்றிலும் CAக்களுக்கு இணையாக CFAக்கள் கோலோச்சி வருகின்றனர். கடினமான பாடத்திட்டங்களுடன் 3 தளங்களில் பரிட்சைகள் எழுதி இப்படிப்பை முடிக்க வேண்டும். கடந்த சில வருடங்களில் அரபு நாடுகளில் ஏராளமான அரேபியர்கள் இப்படிப்பை வெற்றிகரமாக முடித்து இந்திய CAக்களை அலற வைக்கின்றனர். ‘அதனால் என்ன இப்ப! நாமும் அதை முடிச்சிட்டாப்போச்சு’ என இந்திய CAக்களும் அந்த CFA படிப்பை பாஸ் செய்கின்றனர், என் பெரியவன் உட்பட.
இந்திய ICWA (Cost Accounting) மற்றும் இந்திய CFA படிப்பை முடித்த இவர் இந்த அமெரிக்கன் CFAவையும் வெற்றிகரமாக முடித்தவர். பஹ்ரைனில் ஒரு நிதி முதலீட்டுக்கம்பெனியின் COO ( Chief Operating Officer) எனும் உயர்பதவியில் உள்ளவர். மனைவி Shyamala Muthukumar மற்றும் இரு குழந்தைகள் என அழகிய ஜாலியான குடும்பம். திருமணமாகி பெண் அமெரிக்காவிலும், பையன் ஹாங்காங்கிலும் செட்டிலாகி விட்டனர்.
பொழுது போகமல் என்ன செய்யலாம் எனும் நிலை வந்தால் முதல் போன் இவருக்குத்தான் போடுவேன். அடுத்த 15 நிமிடத்தில் ‘நாங்க வந்துட்டோம்.. நீங்க எங்கேர்க்கீங்க?’ என இவரிடமிருந்து போன் வரும். கூடவே மனைவி ஷ்யாமளா. பஹ்ரைன் விமானநிலையம் பின்னால் அரேபியர்கள் அதிகம் வசிக்கும் ஹித் எனப்படும் ஏதோ ஒரு புறநகர் பகுதியில் நல்ல குளிர்காலத்தில், (நம்) மனைவியரே பார்த்து பொறாமைப்படும் 😂 அழகிய ஃபிலிப்பினோ பெண்கள் சேவை செய்யும் அரபிய உணவகத்தில் சாலை ஓரத்தில் போடப்பட்ட மேசையில் பீட்சா மற்றும் கடக் ச்சாயுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நால்வரும் அரட்டை அடிப்போம். ‘இன்னிக்கி அடுப்பை பத்தவைக்க வேணாம்மா’ என சென்னால் எந்த மனைவி ‘ஊஹூம்’ சொல்ல மாட்டாள்!
இன்னொரு நாள் வீட்டில் சினிமா பார்ப்பது, வெறுமனே ‘லாங் ட்ரைவ்’ என சித்தம் போக்கில் 20 கிமீ தொலைவில் உலக F1 Racing நிகழும் சக்கீர் எனப்படும் பகுதி, பக்கத்தில் எதாவது கடற்கரை அல்லது ஹமாத் டவுன் பகுதியில் லெபனீய ரொட்டி+ தொட்டுக்க foul madame (காபூலி சன்னாவின் தூரத்து உறவு) எனப்படும் வாயு உற்பத்தி வஸ்து, இனிப்பான சேமியாவில் முட்டை உடைத்துப்போட்டு புரட்டிய Balaleet எனும் விநோதமான இனிப்பு வகை என கண்டதை தின்பதில் கம்பெனி கொடுப்பவர்கள் இந்த தம்பதி.
3 வருடங்கள் முன்பு இவர்களுடன் 10 நாட்கள் கென்யா காடுகளில் சுற்றி, தினமும் விலங்குகளை பார்த்து வியப்பதிலும், நைரோபி நகர சுற்றுலாவிலும், வயிறு முட்ட குஜராத்தி தாலி உண்ட மயக்கத்திலும் குடும்பத்துடன் எங்களுக்கு துணை நின்றவர் இவர்.
நட்பு என்பது இருவர் இடையே ஏற்படும் ஒரு உன்னத உறவாகும். தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து இன்பத்திலும், துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளை பகிர்ந்து கொள்வர்களே நல்ல நண்பர்கள். இவரும் அப்படித்தான்!

No comments:

Post a Comment