Friday, June 20, 2025

ஶ்ரீனிவாசன் ரத்தினம்

 பஹ்ரைனில் திருச்சிக்காரர்கள் என்றாலே எனது இனிய நண்பர் குழாத்தில் அவசியம் இருப்பர். இவன் அந்த நெருங்கிய நண்பர்களில் ஒருவன். திருச்சி ஜீயபுரம், குளித்தலை பக்கம் இவனுக்கு சொந்த ஊர். சற்று நெருங்கிப்பார்த்தால் காவிரியில் புரண்டதால் மணல் துகள்கள் இவனது சட்டைப்பையில், தினமும் ஈஆர் மேநிலைப்பள்ளிக்கு பயணிக்கும் புகைவண்டியின் நிலக்கரி படிந்த தலை என இன்றும் திருச்சியின் மணத்துடன் தன் பள்ளிப்பிராய நாட்களை என்னுடன் சிலாகிப்பவன்.

பி.காம் முடித்து பட்டைய கணக்காளன் (CA) ஆனவன். அது போதாதென்று பெங்களூர் IIM இலும் படித்து CA+IIM எனும் தனித்துவமான தகுதி பெற்றவன். KPMG எனப்படும் உலகளவில் Big-4 களில் ஒன்றான ஆடிட் கம்பெனியின் பஹ்ரைன் மற்றும் கத்தார் நாடுகளில் பணிபுரிந்தவன். பஹ்ரைனின் மிகப்பெரிய வங்கிக்குழுமங்களில் ஒன்றான அஹ்லி யுனைடெட் வங்கியின் Group Head (Financial Control) எனும் CFOவிற்கு அடுத்த உயர்பதவியில் இருந்தவன். எங்கள் பஹ்ரைன் சீ.ஏ சாப்டரின் வருடாந்தர பன்னாட்டு கான்ஃபரன்ஸுக்கு இவனது வங்கியின் நிதி உதவி பல வருடங்கள் இவனது மூலம் கிடைத்துக்கொண்டிருந்தது.
எங்கள் விஷ்ணுசஹஸ்ரநாமம் க்ரூப்பில் முக்கிய அங்கத்தினன். வாராவார சத்சங்கம் இல்லாத மற்ற நாட்களிலும் அடிக்கடி சந்தித்து பேட்டைவாய்த்தலை, கம்பரசம்பேட்டை, பெருகமணி, முத்தரசநல்லூர் என திருச்சியை சூழ்ந்துள்ள கிராமங்களைப்பற்றியும், ஶ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களைப்பற்றியும் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருப்பவன்.
வங்கியில் CFO ஆவதற்கான பதவி உயர்வை புறந்தள்ளி தனியே ஆலோசனை நிறுவனம் ஒன்றை துவங்கியவன். விடுமுறைக்கு இந்தியா வரும்போது என்னுடன் சுற்றிலா செல்ல ஏதாவது திட்டத்துடன் வந்திறங்குபவன். இவனது மனைவி கவிதாவிற்கும் திருச்சி ஜீயபுரம் தான் பூர்வீகம். திருச்சி சீதாலட்சுமி ராமசாமி (SRC) கல்லூரியில் படித்தவர்.
டிசம்பர் 31 அன்றிரவு புதுவருட பார்ட்டியில் எங்களுடன் லூட்டியடித்து, விதவிதமான ஸ்டைல்களில் டான்ஸ் ஆடுபவன். அதிமுக்கியமான விஷயங்களில் சட்டென அவசர முடிவெடுக்காமல் தீர ஆலோசித்து, நன்மை தீமைகள் யாவையென பரிசீலித்து நிதானமாக முடிவெடுப்பவன். எப்போதும் மலர்ச்சியான முகத்துடன் அழகான புன்னகையணிந்து வலம் வரும் இனிமையானவன். பெயரில் இருக்கும் ரத்தினத்தை போன்றவன்.

No comments:

Post a Comment