Friday, June 20, 2025

கோட்டிலிங்கேஷ்வர் ஆலயம், பங்காருபேட்…


காலை 8 மணிக்கு நடைபயிற்சிக்காக தயாராகிக்கொண்டிருக்கும்போது மனைவி ‘இன்னிக்கி நாம கோட்டி லிங்கேஷ்வர் கோயிலுக்கு போவோனும். ரொம்ப நாளா போகறதா இருந்தேன்’ என கேட்க, ‘பூட்ரா வண்டிய! கெளம்புடா!’ என உடனே தயாரானோம். உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் உள்ள இக்கோயிலின் முதன்மைக் கடவுள் சிவபெருமான்.
பெங்களூரிலிருந்து சுமார் 70 கிமீ தொலைவில் கோலார் நகர் தாண்டி பங்காருபேட் கம்மசந்த்ரா கிராமத்தில் உள்ளது அந்தக்கோவில். பங்காரு என்றால் தெலுங்கு/கன்னடாவில் தங்கம் என அர்த்தம், பக்கத்துல கோலார் தங்கச்சுரங்கம் இருப்பதால்.
காலை 9 மணிக்கு கிளம்பி பழைய மதராஸ் ரோடு பிடித்து பத்தே நிமிடத்தில் கிருஷ்ணராஜபுரம் தாண்டி விட்டோம். பசி எடுக்கவே, ஹூடி தாண்டியதும் நந்தி க்ராண்டில் வண்டியை நிறுத்தி உள்ளே சென்றோம். முல்பாகல் மசால் தோசையாம். தோசை மாவில் எக்ஸ்ட்ரா சோடா உப்பை தூவி விட்டிருப்பார்கள் போல, தோசையே புள்ளி புள்ளியாக, கைத்தறி வேட்டி போல போல சன்னமான ஓரங்கள் மேல் நோக்கி மடித்து விடப்பட்டு உள்ளே வெள்ளையாக வெறும் உ.கிழங்கு பல்லியா. தொட்டுக்க சாம்பாரெல்லாம் கிடையாது, கார சட்னி & தே.சட்னி மட்டும் தானாம். முல்பாகல் டவுன் கோலார் பக்கமாம், இந்த தோசை அங்கே ரொம்ப பிரசித்தமென்பதால் அந்தப்பெயர்.
காபியை குடித்து விட்டு வண்டியை விரட்டினோம். இது ஆந்திரா-சித்தூர் நெடுஞ்சாலை. போக்குவரத்து அதிகமில்லை. கிட்டத்தட்ட ஒன்னறை மணி நேரப்பயணம். அதற்குள் கோட்டி லிங்கேஸ்வரர் பற்றி..
முன்னொரு காலத்தில் சைவ இந்து பிராமணர் குடும்பத்தில் பிறந்த மஞ்சுநாத சர்மா என்பவர் கடவுள் நம்பிக்கையற்று சிவபெருமானை அவமதித்து வளர்ந்தாராம். ஆனால் திடீரென ஒரு நாள் சிவபெருமானின் தெய்வீகத்தை உணர்ந்து அவருடைய பக்தராகி கோயிலுக்குள் சென்றபோது, ​​கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து தூப விளக்குகளும் அனைந்து போக, இதற்கு மஞ்சுநாதா தான் காரணம் என மக்கள் குற்றம் சாட்டினர். பின்னர் மகாராஜா அம்பிகேஸ்வர வர்மா எனும் உள்ளூர் வைஸ்ராய் மஞ்சுநாதரை அணுகி அவருடன் சேர்ந்து சிவனைப்போற்றி பக்திப் பாடல்களைப் பாட, அனைத்து தீபங்களும் பிரகாசத்துடன் எரிந்தனவாம்.
கதை போரடிக்கிறதா? சென்னை நெடுஞ்சாலைக்கு வருவோம். சுமார் மூனறை மணி நேரத்தில் ராணிபேட்டை சென்றடையலாம். கோலார் வரை நிறைய உணவகங்கள். மற்றபடி ஹோசூர் சாலை போல இளநீர், தேநீர்க்கடைகள், பேக்கரிகள் இந்த நெடுஞ்சாலையில் அதிகம் இல்லை. ஆனால் வழி நெடுக கொய்யா, பப்பாளி, ஆரஞ்சு பழங்கள் விற்பனை செய்கிறார்கள். இளையராஜா, கிஷோர்குமார் பாடல்கள் ஒலிக்க விட்டு அரக்க பறக்க வாகனங்களை முந்தாமல் சீரான வேகத்தில் ஓட்டினால் இனிமையான பயணமாக இருக்கும்.
மீண்டும் கோவிலின் கதை.. மஞ்சுநாதா தனது வாழ்நாளில் குறைந்தது ஒரு கோடி முறையாவது சிவபெருமானை அவமதித்ததாக கருதி, கடந்தகால பாவங்களிலிருந்து விடுபட ஒரு கோடி சிவலிங்கங்களை உருவாக்க முடிவு செய்தார். அதன்பின் ஸ்வாமி சாம்பசிவ மூர்த்தி என்பவரால் 1980 இல் கட்டப்பட்ட இக்கோவிலில் 108 அடி உயர சிவலிங்கமும், எதிரே 35 அடி உயரம் கொண்ட பசவ சிலை (நந்தி)யும் எழுப்பப்பட்டது. 15 ஏக்கர் நிலம் முழுவதும் லட்சக்கணக்கான சிறிய லிங்கங்களால் சூழப்பட்ட இப்பகுதியில் தற்போது 90 லட்சத்திற்கும் மேல் சிவலிங்கங்கள். அடுத்த சில வருடங்களில் ஒரு கோடியைத்தொடுமாம்.
கோவில் எதிரே பெரிய பந்தலில் நிறைய ஊட்டா அங்கிடிகள் (உணவகங்கள்). கன்னடிகர்கள் மசாலா பூரி விரும்பி சாப்பிடுகிறார்கள். பானி பூரியை கையால் பொடித்துப்போட்டு, அடுப்பில் வெந்துகொண்டிருக்கும் பச்சை பட்டானியை தண்ணீரோடு இரண்டு கரண்டி, இனிப்பு புளித்தண்ணீர், இன்னபிற வஸ்துக்களை கரமுரவென நொறுக்கிப்போட்டு, நறுக்கிய வெங்காயம், மசாலா பொடி வகையறாக்களை தூவி தொன்னையில் தளும்பத்தளும்ப கொடுக்கிறார்கள். அபார சுவை. அதுவும் கடைசியில் தொன்னையில் மிஞ்சும் அந்த மசாலா தண்ணீரை வாயில் கவிழ்க்கும்போது கடைக்காரனுக்கு சொத்தையே எழுதி வைக்கத்தோன்றும். ‘அது சரி, நீ கோட்டி விங்கேஷ்வர் கோயிலுக்கு மசாலா பூரி சாப்பிடவா போனே!’ என கேட்பவர்கள் மன்னிக்க.. அடுத்த பாரா போகவும்.
இலவசமோ சிறப்புக்கட்டணமோ கிடையாது. 20 ரூபாய் கட்டணத்தில் சுமார் ஒரு மணி நேர வரிசையில் நின்று உள்ளே நுழைந்தால் நான்கு புறமும் எங்கு பார்த்தாலும் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை சிவலிங்கங்கள். மக்கள் அந்த சிவலிங்கங்களின் ஊடே புகுந்து செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள். நடுவே சிறிய கோவிலினுள் மீசையுடன் சிவனின் முகம் லிங்கத்தில். ‘அவசரப்படாம நீங்க கேக்கறத மனசார வேண்டிக்கோங்க!’ என தெலுங்கிலும் கன்னடத்திலும் மாறி மாறி குருக்கள் அறிவிக்க, கூட்டம் மெதுவாகவே நகர்ந்தது. அரங்கின் உள்ளே சிவன், பிரம்மா & விஷ்ணு உள்ள சிறிய கோவிலும், கருமாரி அம்மன், அன்னபூரணி, பாண்டுரங்க சுவாமி, வெங்கடேச பெருமாள், பஞ்சமுக கணபதி, ராம, சீதை, லட்சுமணர், கன்னிகா பரமேஷ்வரி, ஷிரிடி சாய்பாபா கோயில்களும் தனித்தனியே உள்ளன. உலகிலேயே உயரமான சிவலிங்கம் பார்க்க பிரம்மாண்டமாக இருந்தது.
சுமார் ஆறாயிரம் ரூபா செலவில் நாமும் அங்கே லிங்கம் பிரதிஷ்டை செய்விக்கலாமாம். இந்த இடத்தின் பூஜைகள், உட்புற பசுமை மற்றும் அழகு ஆகியவற்றை ஆராய ஆயிரக்கணக்கான பக்தர்களை கோட்டிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்தவன்னம் இருக்கிறார்கள்.
தரிசணம் முடிந்து கோவிலை விட்டு வெளியே வந்தால் அடுத்து சாப்பாடு தானே! கூகிள் மேப் துணையுடன் குறுக்குச்சாலைகளில் கிராமங்களைக்கடந்து மறுபடியும் பெங்களூர் நெடுஞ்சாலையை பிடித்து ஆராத்யா கிராண்ட் உணவகம் வந்தடைந்தோம். அப்பகுதியில் ருசியான உணவுக்கு பெயர் போன ஹோட்டல். விதவிதமான மதிய உணவு வகைகள், நீர் தோசா, முல்பாகல் தோசை, அக்கி ரோட்டி மற்றும் கன்னட உணவு வகைகள். திருப்பதி செல்பவர்கள் அங்கேயே இரவு தங்க குறைந்த வாடகையில் சுத்தமான அறைகள். பெங்களூர் சென்னை செல்பவர்கள் இந்த உணவகத்திற்கு தவறாமல் செல்லவும். அற்புதமான ஃபில்டர் காபி.
கோலார் அருகே சாலை ஓரத்தில் பெரிய காய்கறி சந்தையில் நிறுத்தினோம். கீரை, பழ வகைகள் சல்லிசான விலையில். தோலுடன் நிலக்கடலை, தழையுடன் கேரட், காலிஃப்ளவர் என விதவிதமான காய்கறி வகைகள்.
மாலை நாலு மணி வாக்கில் சி.வி ராமன் நகர் ஐயங்கார் பேக்கரியில் வெஜ் பஃப்ஸ் வாங்கிக்கொண்டு சகலை வீட்டிற்கு டீ சாப்பிட விரைந்ததுடன் இன்றைய நாள் இனிதே நிறைந்தது.

No comments:

Post a Comment