பார்த்தவுடனே சட்டென பிடித்துப்போகும் முகம். முதல் சந்திப்பிலேயே வெகுநாள் பழகியது போல ஒரு வாத்சல்யம். பஹ்ரைனில் 94இ்ல் கிட்டத்தட்ட 34,35 வயதுகளில் நெதர்லாந்தைச் சேர்ந்த ABN Amro Bank எனும் பிரபல வங்கியின் பஹ்ரைன் கிளையில் மேலாளராக இருந்தான். (அதுக்குள்ளாற இப்ப இவனோட வயசு என்னவாயிருக்கும்னு கணக்கு பார்த்திருப்பீங்களே!)
பல்வேறு நாடுகளிலிருந்து உணவுப்பொருட்களை இறக்குமதி செய்யும் எங்கள் ட்ராஃப்கோ கம்பெனி, அதுசார்ந்த ஆவணங்களை இவர்களது வங்கி மூலமாக பெற்று சுங்க வரி செலுத்தி துறைமுகத்திலிருந்து சரக்குகளை வெளிக்கொணர்வோம். எல்லாம் தினசரி கப்பல்கள் என்பதால் இவனுடன் எனக்கு தொடர்பு இருந்துகொண்டேயிருக்கும். ‘கப்பல் வந்துருச்சு டாக்குமென்ட்ஸ் வரலையே சுரேஷ்!’ என நானும், ‘டாக்குமென்ட்ஸ் வந்துருச்சு கப்பல் வரக்காணோமே ஶ்ரீதர்!’ என இவனும், ‘ரெண்டும் வந்துருச்சு எனக்கும் அவசரமா வந்துருச்சு, திரும்ப போன் பண்றேன்’ போன்ற எங்களது சம்பாஷணைகள் அனுதினமும் உண்டு.
சின்னச்சின்ன உதவிகளுக்காக வளைந்து கொடுப்பதுடன், நேர்மையுடன் வங்கியின் சட்ட திட்டங்களை மதிப்பவன். நெருங்கிய நண்பர்களானோம். மதராஸ்காரன். இந்திய வங்கிகளில் பணியாற்றிய அனுபவத்துடன் அடுத்த 25 வருடங்கள் பஹ்ரைனில் பிரதான வங்கிகளில் வைஸ் பிரெசிடென்ட்டாக இருந்தவன்.
VSG எனும் எங்களது விஷ்ணு சகஸ்ரநாமம் க்ரூப்பில் முக்கிய அங்கத்தினன். இவனது வீட்டில் விமரிசையாக நடக்கும் சத்ய நாராயண பூஜையில் கலந்து கொள்வோம். வார இறுதிகளில் இவனுடன் மால்களுக்கு செல்வதும், சாய் குடிக்க வீட்டிற்கு வரப்போக, கௌரி கிருஷ்ணாவில் டிபன் என எங்களது நட்பு வளர்ந்த நிலையில், ஒருநாள் தனது உயர்பதவியை துறந்து, தின்பண்டங்கள் கொறிப்பதற்கெனவே உருவாக்கப்பட்ட ஜே பி நகர், ஜெயநகர் பகுதியில் குடியேறினான். சென்ற வருடம் மேலும் சில பஹ்ரைன் நண்பர்களுடன் நாங்களும் தாயகம் திரும்பி மறுபடியும் ஒன்றாக சேர்ந்து கும்மியடித்து வருகிறோம், வழக்கம் போல ஊரு சுற்றி உணவருந்த.
நிதி மற்றும் பங்குகள் சார்ந்த பொருளில் மணிக்கணக்காக பேசக்கூடியவன். வருமான வரி தாக்கல் குறித்த தகவல்கள் மற்றும் வரி ஏய்ப்பு செய்யாமல் சரியான முதலீட்டு திட்டமிடுதலுடன் வருமானத்தை பெருக்க ஆலோசனைகள், இன்ன வியாபாரம் தொடங்க இவ்வளவு முதலீடு தேவை, இவ்வளவு லாபம் கிடைக்கும் போன்ற பயனுள்ள தகவல்களும் பட் பட்டென எடுத்து விடுபவன்.
இவனுடன் சுற்றுலா பயணம் செய்வது ஒரு நல்ல அனுபவம். முறையாக திட்டமிடல், என்னென்ன ஊரில் எங்கே தங்கலாம், வண்டி எங்கே நிறுத்தினால் நல்ல டீ, காபி சாப்பாடு கிடைக்கும், எந்த டோல்கேட்டில் இளநீர் விற்பார்கள், எந்த ஹோட்டலில் அக்கி ரொட்டி கிடைக்கும், மாலை நாலு மணிக்கு மேல் ஓசூர்-கிருஷ்ணகிரிக்கு நடுவே கிருஷ்ணாஸ் இண் ஹோட்டலில் என்ன டிபன் கிடைக்கும், ஆரணி அருகே டார்லிங் பேக்கரியில் ஜப்பனீஸ் கேக் மற்றும் வெங்காய பக்கோடா சுவையாக இருக்கும், இன்ன பெட்ரோல் பங்கில் ‘சார்! ஜீரோ பாத்துக்கோங்க’ என சொல்லியே ஏமாற்றுவான், கனகபுரா ரோட்டில் காலை வேளை இன்ன ஹோட்டலில் சூப்பரான தட்டெ இட்லி சாப்பிட்டு அருகில் குருவாயூரப்பன் கோயிலுக்கு போகலாம், சூலூர் அருகே தக்ஷ்ன திருப்பதி கோயில் போகலாம்… இப்படி கணக்கில் அடங்கா தகவல்களை ்அள்ளி வீசுபவன்.
அமெரிக்காவில் இருக்கும் மகனுடனும் மகளுடன் அரட்டை அடிக்காத நாட்களில் சட்டென முடிவு செய்து பெங்களூரிலிருந்து கிளம்பி மைசூர் பக்கம் பண்டிப்பூர், அங்கிருந்து கபினி அணை, அப்படியே ஊட்டி, கோவை, பாலக்காடு, சொந்த ஊரான கல்பாத்தி எல்லாம் சுற்றி விட்டு சாவகாசமாக பெங்களூர் வருவான்.
மந்த்ராலயா, தர்மஸ்தாலா, சிக்மகளூர், மணிப்பால், உடுப்பி கொல்லூர், மைசூர், மடிகேரி, சாக்லேஷ்பூர், தார்வார், தலைக்காவேரி என கர்நாடகா மாநிலத்தில் இனி இவன் சுற்றிப்பார்க்க புதிய இடங்களே இல்லை எனலாம்.
நெடுஞ்சாலைகளில் காரில் பயணம் செய்யும்போது, நடுவே ஏதேனும் விபத்தை கண்டுவிட்டால் சடாரென பிரேக் அடித்து வண்டியை ஓரங்கட்டி விபத்து பகுதியை நோக்கி ஓடுபவன். ‘ஹலோ.. ஹலோ! அவருக்கு இரத்தம் கொட்டிக்கிட்டு இருக்கறச்சே அவரை தூக்கி உட்காத்தி வைக்கக்கூடாது, படுத்தவாக்கிலேயே இருக்கட்டும்’ என களத்தில் இறங்கி உதவி செய்பவன்.
சுரேஷ் மிகவும் சாந்தமானவன், பொறுமை சாலி, ஆர்ப்பாட்டம் இல்லாது அமைதியாக அரட்டையடிப்பவன். அண்ணாமலை போல மற்றவர்களை அண்ணா.. அண்ணா என அழைத்து மனம் கவர்பவன்.
No comments:
Post a Comment