Friday, June 20, 2025

மருதம்

 ‘மதுரக்காரய்ங்க ரசனை உள்ளவிங்க’ என்று சொல்வது எவ்வளவு உண்மை! மகாபலிபுரத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் ‘மருதம்’ என்ற பெயரில் ஒரு அழகிய ரிசார்ட். அதன் ஸ்தாபகர் ஒரு மதுரைக்காரராம். மிகவும் ரசனைக்காரர் தான் அவர் என்பது அங்கு சென்று தங்கியவுடன் தெரிந்தது. நண்பன் Suresh Kv மற்றும் அவனது மனைவி லதாவும் எங்களுடன் சேர்ந்துகொள்ள சென்னையிலிருந்து பெங்களூர் திரும்பும் முன் கிளம்பினோம்.

மற்ற ரிசார்ட்டுகளில் இல்லாத விசேஷம் என்ன அங்கே? முற்றிலும் கிராம சூழ்நிலையை அங்கே அமைத்திருக்கிறார்கள். பல ஏக்கர் வயல்கள் நடுவே இரண்டு, மூன்று கிராமத்து தெருக்கள் போல வரிசையாக அமைத்து அடுத்தடுத்த வீடுகள் போல காட்டேஜ்கள். நாட்டு ஓடுகள், பெட்ரோமாக்ஸ் விளக்குகள், வாசலில் கோலம், வாசப்படி, விஸ்தாரமாக திண்ணை, உள்ளே முத்தம், மாட விளக்குகள், ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தண்ணீர் குழாய்கள், வீட்டின் மேற்புறம் கிராமத்து ஸ்டைலில் மொட்டை மாடி தடுப்பு சுவர், அய்யனார் உள்ளிட்ட கிராமத்து காவல் தெய்வங்கள். பார்த்தவுடன் மதுரைப்பக்கம் ஏதோ ஒரு கிராமத்தில் இருப்பது போன்ற உணர்வு.
மதியம் அங்கே சென்றடைந்ததும் கொலைப்பசி. சாம்பார் சாதம் அள்ளி அள்ளி சாப்பிட ஆசை. பீன்ஸ் சாம்பார், பொறியல், வத்தக்குழம்பு, கட்டித்தயிர் என ருசியான சாப்பாடு. ஏவ் என ஏப்பம் விட்டு சற்று இளைப்பாறிய பின் இடத்தை கொஞ்சம் சுற்றிப்பார்த்தோம்.
அந்தப்பக்கம் ஒரு கீத்துக்கொட்டாய். சுற்றிலும் மரங்கள். அதில் நாம் ஆயாசமாக படுத்து ஓய்வு எடுத்துக்கொள்ள கயிற்றுக்கட்டில்கள். சுரேஷின் மனைவி லதாவிற்கு எதாவது பஜனைப்பாடல் ரெக்கார்ட் செய்து அனுப்பும்படி தகவல் வர சட்டென நால்வரும் சேர்ந்து ‘ஜெகத்பதே ஹரி சாயிகோபாலா’ எனும் சாய்பஜன் ஒன்றைப்பாடி உடனே அனுப்பியது சிலிர்ப்பூட்டும் அனுபவம். ஆடு, நாய் எல்லாம் அங்கே விஜயம் செய்ய அவைகளுடன் சற்று நேரம் விளையாடியது சுகானுபவம். பக்கத்தில் விவேக் படத்தில் வரும் நாட்டாமை மேடையுடன் மிகப்பெரிய ஆலமரம்.
இந்தப்பக்கம் நாம் விளையாட மற்றொரு கொட்டாய். அதில் பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், தாயக்கட்டை, பரமபதம், பல்லாங்குழி, ஆடுபுலியாட்டம், பம்பரங்கள், குழந்தைகளுக்கு நடைபயில மரத்தினாலான 3 சக்கர நடைவண்டி. குழத்தைகள் போல விளையாடினோம். அதுக்காக ‘சாய்ஞ்சாடு குதிரை’ மேல் உட்கார்ந்து போட்டோ எடுப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.
பக்கத்தில் ஒரு மாட்டுத்தொழுவம். ஏகாம்பரம் என்ற இளைஞர் மாடுகளை பராமரிக்கிறார். காங்கயம், ஜெர்சி, மணப்பாறை என விதவிதமான பெரிய பெரிய காளைகள், பசுக்கள் மற்றும் கன்றுக்குட்டிகள். பசுவிடம் பால் கறக்க நமக்கு சொல்லிக்கொடுத்தார்கள். ஆடுகள், சேவல், கோழிகளையும் வளர்க்கிறார்கள். நாம் ஆசையாக மாடுகளை தடவிக்கொடுக்க அவைகளுக்கு சந்தோஷம் போலும்.
அடுத்து சுவாமிநாதன் எனும் கிராமத்து பெரியவர் வந்து மாடுகளை வண்டியில் பூட்ட, நாங்கள் ஏறிக்கொண்டோம். அப்படியே பக்கத்து கிராமத்துப்பக்கம் மாட்டு வண்டியில் ஒரு ரவுண்டு. ‘என் பையன்களை கூட நம்பி நான் இல்லீங்க. இந்த மாடுங்க தான் சோறு போடுது எனக்கு’ என பெருமிதமாக சொல்லி ‘அய்.. தா’ என சுளீரென மாட்டை அடித்து ஓட்ட, ‘ஐயோ! சோறு போடற மாட்டை இப்பிடி அடிக்கலாமா! மாடு உங்களுக்கு சோறு போடறது சரி.. நீங்க அதுக்கு நல்லா சோறு போடறீங்களா?’ என சுரேஷ் கேட்க, ‘பின்ன! வைக்கோல், புண்ணாக்கு, பருத்திக்கொட்டை எல்லாம் போடறேன். அது போக மீதி தான் எங்களுக்கு’ என விளக்கமளித்தார். அருகருகே இரண்டு கோயில்கள். சுமார் 20 குழந்தைகளுக்கு கோயில் மண்டபத்தில் யாரோ டியூஷன் எடுத்துக்கொண்டிருந்தார்கள். பஞ்சாயத்து யுனியன் பெயர்ப்பலகை, தரமான சாலைகள், இருபுறமும் வெள்ளைக்கோடுகள். மின்சாரம், இன்டர்நெட் வசதியுடனான ஹைடெக் கிராமம்.
திரும்பி காட்டேஜ் வந்ததும் பஜ்ஜி, வெங்காய பக்கோடா, காபி, டீ என சுடச்சுட ஐட்டங்கள் வர, மழைக்கு அட்டகாசமாக இருந்தது. இரவு இட்லி, இடியாப்பம், வெங்காய ஊத்தப்பம் தேங்கா மற்றும் கார சட்னி என அருமையான சமையல். வஞ்சனையில்லாமல் வயிற்றை நிரப்பிக்கொண்டு, வீட்டுத்திண்ணையிலேயே அரட்டையடித்து தூங்கப்போனோம்.
காலை அழகர் என்ற இளைஞர் எங்களுடன் சேர்ந்துகொண்டார். முதலில் அம்சமான சர்க்கரை கலக்காத ஃபில்டர் காபி, கூடவே தனியாக கருப்பட்டி அல்லது சர்க்கரை. அது முடிந்து வெறும் காலில் நம்மை நடந்து வரச்சொன்னார், வயல் வரப்புகளுக்கு கூட்டிப்போக. பரந்து விரிந்த வயல்வெளி. வரப்புகளின் மேல் சர்வ ஜாக்கிரதையாக அவருடன் நடந்தோம். இரவு பெய்த மழையால் மெத்தை போன்ற வயலின் மீது நடந்தபோது ‘நீர் வயல் போல் நெஞ்சு நெகிழ்ந்திருக்க’ என்ற கண்ணதாசன்+ வாலி சேர்ந்தெழுதிய பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது.
பம்பு செட், பெரிய கிணறுகள், அதனுள்ளே இறங்க சுவற்றில் பதிக்கப்பட்ட கருங்கல் படிகள் பார்க்க மனசு லேசானது. வயலில் விளையும் நெற்பயிருக்கு முழுக்க முழுக்க அவர்களே தயாரிக்கும் உரங்களாம். எதிலும் ரசாயனம் கிடையாது. மூன்றுபோக சாகுபடி. அந்த அரிசியில் தான் நமக்கு சாப்பாடாம்.
பம்பு செட் தண்ணீர் சர்ரென நம் தலையிலும் முதுகிலும் அடிக்க மசாஜ் செய்வது போல இதமான குளியல். சித்தி படத்தின் ஜெமினி போல் ‘தண்ணீர் சுடுவதென்ன’ பாடல் பாடி தண்ணியில் கொட்டமடித்து குளித்து முடித்து, அவர்கள் செய்திருந்த சிறிய அருவியில் சற்று நேரம் குளித்தோம். பக்கத்தில் swimming poolஐ கிராமத்து கோயில் குளம் போல செந்தூர வர்ண தடுப்புச்சுவற்றுடன் அமைத்திருந்தார்கள்.
காலை உணவு! ராகி கஞ்சி, இட்லி, வடை, பூரி மசால், தோசை, உப்புமா வகையராக்கள், ப்ரெட், ஜாம், பழ வகைகள், காபி, டீ என பரவலான உணவு வகைகள்.
விசாலமான வீடுகள், நல்ல காற்றோட்டம், இயற்கையோடு இணைந்த அமைப்பு, வீண் செலவற்ற எளிமையான வாழ்க்கை, சீரான வாழ்வியல் முறை, இனிமையான மக்கள். இவை தான் கிராமங்களின் சிறப்பு. கிராமங்கள் மற்றும் ஏரிகளின் மீது கான்க்ரீட் ஜங்கிள்கள் வராமல் இருக்கச்செய்வது சத்தியமா? கஷ்டம் தான். அதனால் இது போன்ற கிராமப்புற பிண்ணனியில் உருவாக்கப்பட்ட உல்லாச ஸ்தலங்களுக்கு செல்வோம். கிராமங்களின் மகிமையை உணர்வோம்.
மழை லேசாக தூற ஆரம்பிக்க, பத்து மணிக்கு மேல் அங்கிருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பக்கம் குறுக்கு வழியாக காரை ஓட்டி சென்னை-பெங்களூர் சாலையை பிடித்து இரவு 8 மணிக்கு கான்க்ரீட் ஜங்கிள் (நம்ம வீடு தாங்க!) வந்து சேர்ந்தோம்.

No comments:

Post a Comment