Friday, June 20, 2025

கென்னடி

 பஹ்ரைன் ஹூரா பகுதி 90களில்…

அதிக போக்குவரத்து நடமாட்டம் இல்லாது ஆங்காங்கே ஷவர்மா கடைகளின் நெருப்பு ஜ்வாலைகள் காற்றில் பறக்க, முடிதிருத்த நிலையங்களுக்கு வெளியே டீஷர்ட்டுடன் தமிழர்கள் கும்பலாக நின்றுகொண்டு பேசிக்கொண்டிருக்க, சமோசா கடையில் மலையாளி சேட்டன் மைதா மாவை சன்னமாக பேப்பர் அளவிற்கு தேய்த்து அதில் சிக்கன், மட்டன், உ.கிழங்கு+வெங்காயம், சீஸ் என விதவிதமான கலவைகளை போட்டு எண்ணெய் தொட்டு முக்கோனமாக மடித்து ஃப்ரீசரில் போட்டு மூட, அந்தப்பக்கம் கவுன்டரில் உறைந்த சமோசாக்கள் அமோக விற்பனை.
வேலையிலிருந்து திரும்பிய பிரம்மச்சாரி இளைஞர்கள் முக்கா பேண்ட்டுடன் செய்தித்தாளில் மடித்த குப்பூஸ் (அரபிய ரொட்டி) உடன் திரும்பிக்கொண்டிருக்க, இஸ்திரி கடை உத்திர பிரதேச பையாக்கள் பான்பராக் மென்றபடி துணி தேய்த்துக்கொண்டிருக்க, லெபநீய பிட்சா கடைகளில் அம்மும் கூட்டம்.. நாற்காலியில் சரிந்தபடி சீஷா இழுத்து புகை விட்டுக்கொண்டு கால்பந்தாட்டம் ரசிக்கும் உள்ளூர் அரேபியர்கள் நிறைந்த காஃபி ஷாப்புகள். மனைவி, குழந்தை குட்டிகளை ஊரில் விட்டுவிட்டு கஷ்டப்பட்டு இங்கு உழைக்கும் ஆண்கள் மாலை வேளைகளில் சிறிலங்கன் சமர் வீடியோ கடையில் ‘பத்தாம்பசலி வந்திடுச்சா?’, ‘கையளவு மனசு 29-30 ஆம் பாகம் குடுங்க’ என கேட்பது ரோட்டில் கேட்கும். நடுத்தர வர்க்க இந்தியர்கள் அந்த ஏரியா முழுக்க. இரவு முழுக்க கடைகண்ணிகளுடன் சாலையெங்கும் ஒளி வெள்ளம்.
எல்லா வீடுகளிலும் ஏசி ஓடிக்கொண்டிருக்க, அதனால் சாலைகளில் உக்கிரமான வெட்பத்துடன் கொர்ரென சப்தம். குறுகலான சந்தில் பாகிஸ்தானிய போலிஸ்காரர்கள் பட்டான் உடையுடன் டீவி பார்த்துக் கொண்டிருக்க, எதிர் பக்கம் அந்த பழைய கட்டிடத்தின் அடித்தளத்தில் எங்க ஃப்ளாட். முதல் மாடியில் உதய குமார் மற்றும் ரகு என இரண்டு பிரம்மச்சாரிகள். பாதி நேரம் எங்கள் வீட்டில் தான் பெரியவன் ப்ரஷாந்தை கொஞ்ச வந்துவிடுவார்கள்.
அவர்களது நண்பர்களும் எங்களுக்கு பரிச்சயம். எல்லாம் இஞ்சிநீயரிங் அல்லது எம்.சீ.ஏ படித்த இளைஞர்கள். வயது 25லிருந்து 30,32க்குள், ஊரில் அப்பா அம்மா பெண் பார்த்துக்கொண்டிருப்பார்கள். வாரம் முழுவதும் அலுப்பான வேலை, வார இறுதிகளில் காலையில் மனாமா கிருஷ்ணர் கோயில், மதியம் நம்பூதிரி மெஸ்ஸில் சாப்பாடு, மாலையில் நண்பர்கள் புடைசூழ, ப்ளடி மேரி மற்றும் ஹெனிக்கன் பீருடன் டெக்கில் படம். அன்று மட்டும் அவர்களுடன் சேராமல் திருமணமானவன் என்கிற அந்தஸ்துடன் நான் காய்கறி வாங்க கிளம்பும் ஆசாமி.
அந்த உதயகுமார், ரகு மூலம் நமக்கு பரிச்சயமான பிரம்மச்சாரி இளைஞர்களில் ஒருவர் இவர். கானு, அல்மொயாத், ஜயானி என ஏதோ பிரபல கம்பெனி ஒன்றில் ஐ.டி துறையில் வேலை. ஒடிசலான் தேகம், நல்ல உயரம். அவ்வப்போது மேல் தள நண்பர்களை பார்க்க எங்க பில்டிங் வரும்போது நாங்கள் சந்திப்பதுண்டு. ஈதுப்பெருநாள் போன்ற பண்டிகைகளின் போது நாலு நாட்கள் தொடர்ந்து விடுமுறை வரும்போது இவர் நண்பர்களுடன் ஜலாக் பீச், பஹ்ரைன்-சவுதியை இணைக்கும் பிரம்மாண்டமான பாலம் (Causeway), விமானநிலையம் அருகில் பூங்கா (தரையில் இறங்கும் விமானங்களை வெகு அருகாமையில் கண்டுகளிக்க) என நண்பர்களுடன் உல்லாசமாக சுற்றிக்கொண்டிருந்த இளைஞர் இவர்.
அந்த பகுதியிலிருந்து ஒரு நாள் ஜாகையை மாற்றி பக்கத்தில் குதேபியா பகுதிக்கு நாங்கள் குடியேற, இவருடன் ஓரளவு தொடர்பற்றுப்போனது. உதயகுமார் சிங்கப்பூர் பக்கமும் ரகு அமெரிக்கா போய்விட, இவரை நான் அவ்வப்போது சந்திப்பது தொடர்ந்தது.
சில வருடங்களில் எங்கள் கம்பெனிக்காக கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் வாங்குவது தொடர்பாக கொட்டேஷன்கள் திரட்டும்போது தான் தெரிந்தது, இவர் சிறியதாக தன் சொந்த கம்ப்யூட்டர் நிறுவனம் துவங்கி விட்டார் என. திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள். இன்னும் அதே ஒடிசலான உருவத்துடன் இவர்.
ஒருநாள் ‘உங்க கம்பெனியில் உள்ள வன்பொருள், மென்பொருள் அனைத்திற்கும் எங்களது லெசென்ஸ் இருக்கா? அதை நாங்க ஆடிட் செய்யவேணும்’ என மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலிருந்து நோட்டீஸ் வர, எங்களது கம்பெனி ஐ.டி துறைக்காரர்கள் மைக்ரோசாஃப்ட் கம்பெனியுடன் தொடர்பு கொண்டு ஆக வேண்டியதை பார்த்துக்கொண்டிருக்க, மைக்ரோசாஃப்ட்டின் உள்ளூர் பார்ட்னர் என வேறொரு கம்பெனி ஆட்கள் அது விஷயமாக வந்திருந்தனர். பிறகு தான் தெரிந்தது அந்த கம்பெனியின் நிறுவனர் இவர் தான் என.
நாற்பது வயது கூட நிறம்பாத இந்த இளைஞரா மைக்ரோசாஃப்ட் பார்ட்னர் கம்பெனியின் முதலாளி என வியந்தேன். மேலும் எனது நண்பர் என்கிற பெருமிதம் எனக்கு. பிறகு தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்திற்கும் இவரது நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு அடுத்த ஏழெட்டு வருடங்கள் ஓடி விட்டன.
ஐம்பது வயது கூட நிரம்பாத அதே ஒடிசல் உருவ இளைஞர் இன்று பலபேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், பன்மடங்கு உயர்ந்த நிறுவனத்தின் ஸ்தாபகர். என் நீண்டநாள் (27 வருட) நண்பர் Kennedy Sel.

No comments:

Post a Comment