Friday, June 20, 2025

ரகு ஐயர்

 ஆறடி உயர ஆஜானுபாகுவான சரீரத்துடன் முகத்தில் மலர்ந்த புன்னகை. பணிவாகவும், கலகலப்பாகவும் எப்பொழுதும் சுவாரசியமாக நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் பாங்கு இவரிடம்.

பக்கா மும்பைக்கர்+ பாலக்காட்டு தமிழர் வேறயா! போச்சு! தமிழ், மலையாளம், ஹிந்தி என கதம்பமாக கலந்து கட்டி பேசுபவர்கள். மராட்டி எழுத படிக்க தெரியும். 90 சதவிகித்தினர் மாடுங்கா SIESஇலும் சொச்சம் 10% முலுண்டு காலேஜ் ஆஃப் கமர்ஸிலும் படித்து மராட்டி, குஜராத்தி பெண்களை சைட் அடித்து கடைசியில் பாலக்காட்டு பெண்ணையே மணமுடித்தவர்களாக இருப்பர். 75க்கு பிறகு பிறந்தவர்களென்றால் கிமி கட்கரையும் பூனம் தில்லோனையும் ரசித்து அம்ரிதா சிங்கை வெறுப்பவர்கள். அதே சமயம் கிஷோர் குமார் பாடல்களை வெறித்தனமாக கேட்பவர்கள். தென்னிந்தியா பக்கம் ரஹ்மான் இசையை இவர்களுக்கு பிடிக்கும். இளையராஜா பாடல்கள்? ‘செலப்போ கேப்பேனாக்கும்’ என்பார்கள். எம்மெஸ்வி பாடல்கள்? ‘தெரியுமே.. கேட்ருக்கேன்.. அப்பா நெறய்ய கேப்பார்’ என்பார்கள். கேவி.மகாதேவன், சங்கர் கணேஷ், ஜி.ராமநாதன் இவர்களெல்லாம் ? எனக்கேட்டால் ‘அவாள்ளாம் யாரு ஶ்ரீதர்ஜி’ என்பார்கள். காலை பிசியாக ஐயப்பா பூஜையில் இருப்பார்கள். மாலை சடாரென கிளம்பி பானிபூரி சாப்பிட்டு விட்டு ஹிந்தி சினிமா பார்க்க பாப்கார்ன் பக்கெட்டுடன் கிளம்பி விடுவார்கள்.
மேற்சொன்ன எல்லா குணநலன்களும் பொருந்தியவர் இவர். பஹ்ரைனில் எனக்கு மிக நெருக்கமான நண்பர். பஹ்ரைனில் விமரிசையாக நடக்கும் பூஜைகளில் இவரை பல வருடங்கள் முன் சந்தித்து பிறகு எனது இனிய நண்பரானவர். மதியம் சரியாக ஒரு மணிக்கு போன் வந்தால் அது இவர் தான் என எனக்குத்தெரியும்.
சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்டான இவர் வங்கிகளுக்கான மென்பொருள் சார்ந்த சேவைகள் அளிக்கும் நிறுவனமொன்றின் பொது மேலாளர்.
ICAB (Indian CAs Bahrain) Toastmasters க்ளப்பின் மாதாந்திர அங்கத்தினர் சந்திப்பில் நாங்கள் உரையாற்றியது வாழ்க்கையின் இனிமையான தருணங்களில் ஒன்று. CTM (Competent Toastmaster) எனும் பதவி பெற விதவிதமான 10 தலைப்புகளில் பேச வேண்டும். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகும். அற்புதமாகவும் நகைச்சுவையாகவும் உரையாற்றக்கூடிய இவர் க்ளப்பின் தலைவராகவும் எனக்கடுத்து பொறுப்பேற்றார். அடுத்து CL (Competent Leader) மற்றும் ATM (Advanced Toastmaster) போன்ற பதவிகளுக்குப்பின் பஹ்ரைனில் DTM (Distinguished Toastmasters) எனும் உயர்ந்த பதவியை அடைந்த மிகச்சிலரில் இவரும் ஒருவர்.
அடுத்து என்னுடன் பஹ்ரைன் CA Chapter இலும் சேர்ந்து செயலாளர், பொருளாளர் போன்ற பதவிகளில் பணியாற்றியவர்.
பெங்களூர் வாசியான இவரது மனைவி Shanti Shekarம் பாலக்காடு தான். கமல்-ஊர்வசி போல வீடே மைக்கேல் மதனகாமராஜன் போலத்தான் இருக்கும். பஹ்ரைன் விட்டுக்கிளம்பும்போது இவர்கள் இல்லத்தில் எங்களுக்கு அளித்த டின்னர்+ கெர்யோக்கி ஃபேர்வெல் பார்ட்டி வாழ்க்கையில் மறக்க முடியாதது.

No comments:

Post a Comment