Friday, June 20, 2025

ரவி மெஹ்ரா

 1994 இல் ஒரு நாள் பஹ்ரைன் விமானம் ஏறிய போது எனது முதல் வெளிநாட்டுப்பயணம் என்ற குதூகலம். 51 டிகிரி வெயிலின் உக்ரம் விமானம் இறங்கும்போது கண்ணாடி வழியாக தெரியவில்லையென்றாலும், வெளியே வந்து காரில் ஏறும் முன் அனல் காற்று சுட்டெறித்தது. எனக்கு வேலை வாங்கித்தந்த பால்ய நண்பன் Ganapathi Subramanian ஐத்தவிர அங்கு வேறு யாரையும் அப்போது தெரியாது.

கணபதி வீட்டில் மதிய சாப்பாடு முடிந்து நேராக உம் அல் ஹாசம் பகுதியில் கம்பெனி ஏற்பாடு செய்திருந்த காப்பர் சிம்னி விடுதியில் இறக்கி விடப்பட்டேன். அடுத்த நாள் டிராஃப்கோ எனும் உணவு பொருட்கள் சார்ந்த கம்பெனியில் வேலையில் சேர்வதற்கான சம்பிரதாயங்கள் முடிந்த பின் எனது சிறிய அறைக்கு வந்து இருக்கையில் அமர்ந்த பின் என் எதிரே வந்து நின்ற முதல் மனிதர் இவர்.
‘என் பெயர் ரவி மெஹ்ரா. இங்கே ஆடிட் செய்ய வந்திருக்கேன். உங்க போஸ்ட் மூனு மாசம் காலியா இருந்து இன்னிக்கி தான் உங்கள பாக்கறேன். இந்த ஃபைல், ரிபோர்ட்டுகள், ஸ்கெட்யூல்கள் எல்லாம் வேணும். அதுவும் சாயங்காலத்துக்குள்ளாற!’ என அட்சர சுத்தமான தமிழில் இவர் பேச, எனக்கு ஒன்றும் புரியவில்லை. சின்ன பையன் 30 வயதுக்குள் தான் இருக்கும். வழவழவென மழித்த சிவந்த முகம். மெஹ்ரா என்கிறான். தமிழ் பேசுகிறான்.
‘ரவி! இந்த ரிப்போர்ட்டெல்லாம் எங்கேனு தேட இந்த கம்ப்யூட்டரை கூட இன்னம் ஆன் செய்யல நான். இன்னக்கி தான் முதல் நாள் எனக்கு. எங்க பாஸ் கூட இன்னும் ஆபிஸ் வரலை. அது சரி.. மெஹ்ரான்னு பேர் வச்சிக்கிட்டு வைரமுத்து மாதிரி சுத்தமான தமிழ் எப்பிடி உங்களுக்கு?’ என நான் இழுத்தேன். ‘ஹ..ஹ்ஹா..’ என முகம் நிறைய சிரித்த இவர் ‘எனக்கு ஊர் மெட்ராஸ் தான். சௌகார் பேட். பூர்விகம் பஞ்சாப் மாகானம்’ என விளக்கிய பின் நண்பர்கள் ஆனோம்.
‘மூன்று மாதங்களுக்கொரு முறை போர்ட் மீட்டிங் இங்க. ஃபைனான்சியல் ரிப்போர்ட்டெல்லாம் ரெவ்யூ செஞ்சாவுட்டு தான் போர்ட்ல அப்ரூவ் செய்வாங்க. டிடெய்ல்டா ஆடிட் செய்யறது டிசம்பர்க்கப்பறம் தான். இங்கெல்லாம் ஜனவரி-டிசம்பர் தான் கணக்கு வைப்பாண்டு என அவர் விளக்க வேலையின் முக்கியத்துவம் தெரிந்தது.
‘வளைகுடாவில் இன்கம் டாக்ஸ், கார்பரேட் டாக்ஸ், சேல்ஸ் டாக்ஸ் இதெல்லாம் ஒன்னும் கிடையாது. அதுக்காக வேலை சுளுவா இருக்கும்னு நினைக்காதீங்க ஶ்ரீதர்! அரேபியர்கள் நம்ம வடநாட்டு பனியா மாதிரி. உணவுப்பொருட்களோ மற்ற எந்த வர்த்தகமோ, வர்ற லாபத்தை அப்பிடியே பங்குகளில் முதலீடு செய்வாங்க. அல்லது பல்அடுக்கு கட்டிடம், வில்லா காம்பௌண்டுன்னு ரியல் எஸ்டேட்ல காசை போட்டு அதுலயும் நல்ல லாபம் பாப்பாங்க இந்த அரேபியர்கள். எல்லா கம்பெனி அக்கவுண்ட்ஸ் பார்க்கறது இந்தியர்கள் தான். வேலை பிடிச்சிருந்தா அள்ளி குடுப்பாங்க இந்த அரபிங்க. கொடி தூக்கறது, ஓபியடிக்கறது, பித்தலாட்டம் இதெல்லாம் இங்க பண்ணா தூக்கி உள்ளாற வச்சி, சாப்பிட ரொட்டியும் பெப்ஸியும் குடுத்து, ஆறு மாசம் கழிச்சி நேரா ஏர்போர்ட் இமிக்ரேஷன்ல ஒன்வே டிக்கெட்டோட இறக்கி உட்ருவாங்க. உண்மையும் நேர்மையும் இங்க அதிமுக்கியம்!’ என அரபு நாட்டு முதலாலிகளைப்பற்றி சுறுக்கமாக ரவி மெஹ்ரா பிரேம் சோப்ரா போல மிரட்டலுடன் விளக்கினார்.
ஒரொரு டேபிளா வந்து குட்மார்னிங் சொல்வாரு இந்த கம்பெனி சேர்மன் என ரவி சொன்னதும், பம்பாய் தாஜ் ஓட்டலில் வைத்து என்னை இன்டர்வியூ செய்த இந்த கம்பெனி சேர்மன் நினைவுக்கு வந்தார்.
வருடங்கள் போனதே தெரியவில்லை. நான் இதே கம்பெனியில் தொடர, ரவி வேலை மாறி வங்கியில் சேர்ந்தார். இன்றும் அதே இளமை. இவரது மனைவி Monika Ravi , சகோதரர் மஹேந்திரா, அவரது மனைவி Savera Mehra என பஹ்ரைனில் எங்களது இனிய நட்பு கடந்த 27 வருடங்களாக தொடர்கிறது.
அரபு நாடுகள் அனைத்திலும் இயங்கும் மிகப்பெரிய வங்கிக்குழுமம் ஒன்றின் Head of Compliance எனப்படும் உயர்பதவி வகிக்கும் Ravi Mehra விற்கு இன்று பிறந்தநாள்.

No comments:

Post a Comment