Friday, June 20, 2025

ஆசுபத்திரிகள்

 நெருங்கிய உறவினர் ஆசுபத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பெங்களூரிலிருந்து அவசரமாக திருச்சி பயணம்! தென்னூர் நெடுஞ்சாலையில் பெரிய நாச்சியம்மன் கோயில் சமீபம் ஆசுபத்திரி. வழக்கமான டெட்டால், ஃபினய்ல் வாசனை இல்லை. பாம்… பாம் என ஹார்ன் ஒலியெழுப்பியபடி செல்லும் ஜங்ஷன் பஸ்கள்.. கிர்ர்ரென முந்தும் ஆட்டோக்கள்.. இருசக்கர வாகனங்கள். 70களில் நாம் பார்த்த தென்னூர் இன்னும் அப்படியே டிராஃபிக் நெரிசலுடன்.

சிதிலமடைந்த அந்த காலத்து கடைகள் ஆங்காங்கே இருப்பதை காண முடிந்தது. ஆசுபத்திரி விட்டு வெளியே வந்தேன், இளநீர் வாங்க. பக்கத்து கட்டிடத்தில்…ஆஹா! விஜயா சவுண்டு சர்வீஸ். 72இல் அந்த கடை நிறுவனர் கவுன்சிலர் தென்னூர் கிருஷ்ணன். கடைக்கு எதிரே வீடு. குமரி அனந்தன் அவர்களுடன் காங்கிரசில் இருந்து விலகி கா.கா.தே.காவில் சிறிது காலம் இருந்து விட்டு வந்தவர். எங்களுக்கு தூரத்து சொந்தம். ஈபி காரர்களுக்கு போன் போட்டு அவர்களை டியூப் லைட்களுடன் ஏதாவது தெருவிற்கு வரவழைத்து விளக்கு கம்பத்தில் மாட்டும் வரை ஏதாவது ஒரு வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்து வெத்திலை சீவலுடன் மேற்பார்வையிடுவார். அவரது மகன் தனபால் செஞ்சோசப்ஸில் என் கிளாஸ்மேட். கடைசி பெஞ்சில் நாங்கள் இருவரும் கால்களை முன்னும் பின்னும் ஆட்டி விளையாடும்போது குனிந்த தலையுடன் சிரித்துக்கொண்டு, எதற்கோ தலையை நிமிர்த்தி பார்த்தால் முழு வகுப்பும் எங்களை பார்த்துக்கொண்டிருக்க, எதிரே கோபத்துடன் பூகோள வாத்தியார் சிங்கராயன்! கையில் நீண்ட ரூலர். அந்த நீளத்தடியால் தான் நெப்போலியன் போனபார்ட் எங்கே ஒளிந்திருந்தான் என உலக வரைபடத்தில் காட்டுவார். அதே தடியால் என் மண்டையை லேசாக தட்ட விகடன் தாத்தா போல தலை புடைத்துப்போனது.
விஜயா சவுண்டு சர்வீசில் தான் மாலை வேளைகளில் தனபால் உட்கார்ந்திருப்பான். பாழடைந்த அந்த கடையில் பழைய சீரியல் விளக்குகள் பாம்பு போல ஒரு மூலையில் சுருண்டு கிடக்க, நாற்காலியில் உட்கார்ந்திருந்த இளைஞன் என்னை பார்த்தான்.
‘தம்பி இந்த கடையை தனபால்னு ஒருத்தர்…’
‘நீங்க?’
‘நா அவரோட ஃப்ரெண்டு. கிளாஸ்மேட்.
‘அப்டீங்களா! அவரு இல்லீங்களே! நா அவரோட தம்பி’
‘பேரு?’
‘மோகன்ங்க’
‘சந்தோசம். ஏழாங்கிளாஸ் படிக்கிறப்ப உங்க வீட்டு வாசல்ல தான் போகியன்னிக்கி குழி தோண்டி பழைய பாயை போட்டு எரிப்போம். நடுவுல கொஞ்சம் பெட்ரோலையும் விட்டு வேடிக்கை பாப்பம்’
‘அப்பிடீங்களா?!’
‘ஆமா தம்பி! அப்பல்லாம் நா உங்கள பாத்ததில்லியே!’
‘நா அப்ப பொறக்கவேயில்லியே! எனக்கும் அண்ணனுக்கும் 12,13 வயசுக்கு மேல வித்தியாசம்.’
‘சரிப்பா! பக்கத்துல இருந்த ஆஞ்சநேயர் கோவில காணமே!’
‘என்க்ரோச்மென்ட்ல அல்லாத்தயும் இடிச்சிட்டாங்க’
‘அடடே! மார்கழி மாசம் காலைல அஞ்சு மணிக்கி சக்கரபொங்கலுக்காக வரிசைல நிப்போம். சூடுங்கறதால பச்ச தண்ணில தொட்டு தொட்டு சூடான பொங்கல தட்டு ஓரத்துல இருந்து வழிச்சி வழிச்சி குடுப்பாங்க’
‘ ஆமா சார். இப்ப எங்க கட்டடத்தையும் இடிக்கப்போறாங்க. கோயில் எடமாம். ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டறாங்களாம். க்ரௌண்ட் ஃப்ளோர்ல எங்களுக்கு ஒரு கடை தருவாங்களாம்’
‘எதுர்க்க நாச்சியம்மன் கோயில் குளம் முழுக்க இப்பவும் தாமரை இலையா இருக்கே! முன்னயெல்லாம் அதுல திடீர்னு ஏதாவது பொம்பள பொணம் குப்புற கெடக்குமே!’
‘இப்பல்லாம் அது மாதிரி இல்ல. தெகிரியம்! புருஷனை அடிச்சி விரட்டிடுதுங்க’
அந்த பகுதி முழுவதும் புதிய புதிய கட்டிடங்கள்.
‘அந்த கந்த விலாஸ் ஓட்டல் வெங்காய தோசை நல்லா இருக்கும். வெங்கல தவலைல சாம்பார் காச்சுவாங்க. ஓனர் கிச்சன்ல தோசை சுடுவார். பாவாட சட்ட போட்ட பொண்ணு ஒன்னு இலைல இட்லி வைக்குமே!’
‘இப்ப அந்த பொண்ணு தான் சார் ஓனர்!’
‘பக்கத்துல செட்டியார் மளிகைக்கடை ஒன்னு இருந்துச்சே’
‘சின்ன வயசுல பாத்துருக்கேன். இப்ப கருத்தறிப்பு மையம் அங்க இருக்கு. எங்க வீட்டு எடத்துல இப்ப காவேரி மருத்துவமணை’
‘பட்டாபிராமன் பிள்ளை தெரு எதுத்தாப்ல ஏசி சலூன் ரொம்ப ஃபேமஸா இருந்துச்சே. அதுக்கடுத்து பிரகாஷ்பவன்ல தூள் பஜ்ஜி போடுவான். சின்ன பார்சல்ன்னாலும் இலைக்கு அடியில நெறையா சட்னி வப்பான்!’
‘அதனாலத்தான் மூடிட்டான். இப்ப அங்க சிவகண்ணு மருத்துவமணை’
‘நாங்க குடியிருந்த பாபு செட்டித்தெரு அடையாளமே தெரீலப்பா! சினிமா பேனர் வரைவாங்க பக்கத்து வீட்ல. எதுத்தாப்ல ஆசாரி வீடு’
‘இப்ப மெடிகல் ஷாப். சினிமா பேனர்லாம் போயி இப்ப இரத்த சேகரிப்பு நிலையம்’
‘நாசமாப்போச்சு. எங்க பாத்தாலும் ஆசுபத்திரி தானா?’
‘ஆமா சார். எங்க பார்த்தாலும் கேன்சர் ட்ரீட்மென்ட் தான் ஓடிக்கிட்டிருக்கு.’
‘அது சரி உங்கண்ணன் தனபால் எங்க, சாயங்காலம் வருவாப்டியா?’
‘அவர் 2018லயே போய்ட்டார் சார். அவருக்கும் கேன்சர். 3 பொண்ணையும் கட்டிக்குடுத்துட்டு தான் போனார்’
சட்டென இனம் புரியாத கோபம் எனக்கு. சுற்றிலும் ஆஸ்பத்திரி மயம்.
அந்தக்காலத்தில் நாங்கள் புத்தூர் பெரியாஸ்பத்திரி போவோம். காய்ச்சலுக்கு சிகப்பு கலர் மருந்து பாட்டிலில் வாங்கி குடிப்பதும், அவர்கள் கொடுக்கும் மாத்திரைகளும் போதும். தனியாக பல் டாக்டர்கள் கிளினிக்கெல்லாம் கிடையாது. எல்லாம் அரசு மருத்துவமணையில் தான். பட்டாபிராம பிள்ளைத்தெருவில் பழனியாண்டி டாக்டரிடம் எப்போதாவது போவதுண்டு.
தற்போது அதே ரோட்டில் பத்து பதினைந்து மருத்துவமணைகள். ஏகப்பட்ட மருந்தகங்கள். கூகிள் பேயில் பணம் வாங்க மாட்டார்களாம். ரொக்கம் மட்டும் தானாம். நோயாளியை கொண்டு போனவுடன் ‘அட்மிஷன் போடனும். ரூ.25000 அட்வான்ஸ் கட்டுங்க’ என்கிறார்கள். மணிக்கொருமுறை ‘கீழே ஃபார்மஸில பணம் கட்டி இந்த மருந்தை வாங்கிட்டு வாங்க’ என்கிறார்கள். ‘எல்லாத்தையும் நீங்களே சேர்த்துக்கிட்டு கடைசீல இன்வாய்ஸ் கொடுக்கலாமே. அட்வான்ஸ் கொஞ்சம் சேர்த்து வாங்கிக்கோங்க’ என்று கேட்டாலும் ஒப்புக்கொள்வதில்லை.
ஹோட்டல்களும் மளிகை கடைகளும் நூலகமும் பள்ளிகளும் இருந்த பகுதி முழுக்க இப்ப ஆசுபத்திரிகளும் மெடிகல் லேப், மெடிகல் ஷாப்புங்களும் தான். துரித உணவு வகைகளும், வாழ்க்கை முறைகளும் (life style), மன அழுத்தமும் (stress) சக அழுத்தமும் (peer pressure) நம்மை ஆட்கொண்டு விட்டன என்பது உண்மை.

No comments:

Post a Comment