Friday, June 20, 2025

உலக மருத்துவர் தினம்

 பஹ்ரைன் மனாமாவிலிருந்து பத்து நிமிட தூரத்தில் புதையா பகுதி நுழைந்தால் ஹஸன் கார்டன், அஹமது கார்டன் போன்ற பெயர்களில் சுமார் ஐந்நூறுக்கும் மேல் வில்லா காம்பவுண்டுகள். ஓவ்வொரு காம்பௌண்டிலும் ஐம்பதுக்கும் மேல் வில்லாக்கள். குளிகுளுவென மரங்கள் அடர்ந்த பகுதி ரம்யமான சூழலில் வீடுகள்.

காம்பவுண்டின் கேட் அருகே வாட்ச்மேனுக்கு ஒரு சிறிய வீடு. முன்னறையில் சோபா மற்றும் நாலைந்து நாற்காலிகள். டிவியில் அம்பிகாபதி படம். உள்பக்கம் சிறிய அடுக்களை. உள்ளூர் கம்பெனி பர்ல் ஏசி மற்றும் சரக்கு வைக்க தோஷிபா பிரிட்ஜ்.சிறிய கழிவறை. வசதியான வீடு.
இரவில் காம்பவுண்டைச்சுற்றி மார்ல்ப்ரோ சிகெரெட்டுடன் இரண்டு மூன்று ரவுண்டு அடித்தல், செடிகளுக்கு தண்ணீர் விடுதல் போன்ற வேலைகள். காலை 11 மணிவாக்கில் அக்கம்பக்கத்து காம்பவுண்டில் இருந்து மற்ற வாட்ச்மேன்கள் அங்கு வந்து கூட, திருமா, டாக்டர் ராமதாஸ் கட்சி என அரசியல் சம்பாஷணைகள் உண்டு. மாலை 5 மணிக்கு மேல் காம்பவுண்டுக்கு வெளியே நிறைய கார்கள். எல்லாரும் அந்த வாட்ச்மேன் (50) வீடு நோக்கி போவார்கள்.
ஆம்! பகுதிநேர மருத்துவர் அவர்.
‘என்ன பண்ணுதுங்க’ என இவர் கேட்க, வந்திருப்பவர்: ‘ரெண்டு நாளா வயிறு உப்புசமாக இருக்குங்க’.
‘வெளிக்கி ஒழுங்கா போவுதா?’
‘ கொஞ்சம் கஷ்டப்பட்டு தான்’
‘அந்த உருண்டைல நாலு எடுத்துக் கொடுமா!’ என மருத்துவர் சொல்ல உள்ளே இருந்து சுடிதார் பெண்மணி டப்பியில் இருந்து கருப்பாக உருண்டைகளை எடுத்துக் கொடுப்பார்.
‘கையில தேமல் மாதிரி இருக்குங்க’
‘அந்த உருண்டைய கொஞ்சம் எடும்மா! இந்தாங்க இத மாவு மாதிரி பிசைஞ்சி கையில் தடவுங்க..சரியா போயிடும்’
எல்லா வியாதிக்கும் அந்த லேகிய உருண்டைகள் தான்.
அடுக்களையில் பிரம்மாண்டமான பிரியாணி பாத்திரத்தில் லேகியத்தை தயாரித்து சூடாக அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைத்து உருண்டைகளாக்குவார்கள்.
மருந்து கொடுக்கும் போது ‘பாத்துங்க..மருந்து உங்க கையில உள்ள மோதிரம், பிரேஸ்லெட் மேல படாம பார்த்துக்கிடுங்க! தங்கத்தை அது வெளுத்துறும். ஏன்னா அதுல mercuryன்னு சொல்வாங்களே! பாதரசம்! அது உண்டு’ என குண்டை போடுவார். அடப்பாவி! பாதரசத்தையா கலந்து மருந்தாக கொடுக்கிறார்! இரவு 11 மணி வரும் மக்கள் கையில் கடலை உருண்டை மாதிரி மருந்து.
சில மாதங்கள் கழித்து ஒரு நாள் எங்களது பஹ்ரைன் ஸ்லோகா க்ரூப் அங்கத்தினரும் (தற்போது சென்னையில் அப்போலோ) எனது நெருங்கிய டாக்டர் நண்பர், பஹ்ரைன் சல்மானியா ஆசுபத்திரியில் சிறுநீரக சிகிச்சை பிரிவில் நெஃப்ராலஜிஸ்ட், அவருடன் பேசிக்கொண்டிருந்த போது உயிருக்கு போராடியபடி வாட்ச்மேன் ஒருவர் தன்னிடம் சிகிச்சைக்கு கொண்டுவரப்பட்டதாக சொன்னார். விசாரித்ததில் அது மேற்படி நம்ம வாட்ச்மேன் என்பது தெரிந்தது.
காலை பதினோரு மணியளவில் அவரும் சுடிதார் மனைவியும் சேர்ந்து லேகியம் தயாரிக்க பாதரச கரைசலுடன் எதையோ போட்டு அடுப்பில் வைக்க, சட்டென பாதரச புகைமூட்டம் மேலே கிளம்பி அறை முழுவதும் பரவி, நுரையீரலுக்குள் புகுந்து படக்கென வாட்ச்மேன் மூர்ச்சையாகிப்போனாராம். நல்லவேளை அந்த பெண்மணி வெளியே ஓடிவந்துவிட்டாராம். நமது டாக்டர் நண்பர் இவருக்கு சிறுநீரகம் முற்றிலும் பழுதாகி விட்டதாக சொன்னார். அடுத்த சில நாட்களில் அந்த வாட்ச்மேன் இறந்து போனார் என்பது சோகம்.
கை, கால் கொடைச்சல், சுளுக்கு என நாம் இயற்கை வைத்தியர்களை தேடிப்போகும்போது கவனம் தேவை. சிலர் செயற்கையான இயற்கை வைத்தியர்களாக இருக்கக்கூடும்! வலியால் நாம் கத்தும்போது அடியாள் போன்ற அவரது அசிஸ்டன்ட் நம் காலை இறுக்கி பிடிக்க வலியே அதனால் தான் இருக்கும்.
உலக மருத்துவர்கள் தினத்தன்று எல்லா போலி மருத்துவர்களுக்கும் அரவிந்த் சாமி ஸ்டைலில் ஒரு வேண்டுகோள்:
‘விட்டுடனும்.. எல்லாத்தையும் விட்டுடனும்’

No comments:

Post a Comment