அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி படிக்கும்போது கூட சி.ஏ என்றவொரு படிப்பு இருப்பதே தெரியாது. திருச்சி செஞ்சோஸஃப்ஸ் பி.யூ.சியில் வாங்கிய குறைவான மார்க்கில் REC இஞ்சினீயரிங் கிடைக்காமல் வட இந்தியா பக்கம் போய் டிகிரி முடித்து திரும்பினேன்.
மூத்த சகோதரன் Suresh Babu ‘நீ சீஏ படிப்பது நல்லது’ என பரிந்துரை செய்து என்னை உற்சாகப்படுத்த, உடனே அப்பா திருச்சி மலைவாசல் பெரிய கடை வீதியில் ஒரு ஆடிட்டரிடம் சீ.ஏ சேர்த்துவிட்டார், கண்ணில் பல கனவுகளுடன். ஆடிட்டருக்கு ரூ.3500 பிரிமியம் கட்ட அம்மா நகைகள். சட்டை தைக்க சமஸ்பிரான் தெரு ஆல்ஃபா டெய்லர், மார்கரெட் சலூனில் முடி திருத்தம், பாட்டா கோவார்டிஸ், சீகிங்ஸ் ஐஸ்க்ரீம் (மைக்கேல் ஐஸ்க்ரீம் மட்டம்!), நந்தி கோயில் தெரு ஐயங்கார் பேக்கரி, ப்ளாசா தியேட்டரில் 5 man army ஆங்கிலப்படம் என நண்பர்களுடன் உல்லாசமாக சுற்றிக்கொண்டு அவ்வப்போது சி.ஏ படித்துக்கொண்டு அப்பாவின் கனவில் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணை அள்ளிப்போட்டேன். அவரும் ரிடையர் ஆனார். சீனியரான Ganapathi Subramanian என்னை ‘ஒழுங்கா படிடா!’ என கன்னாபின்னாவென திட்டுவான்.
இன்டர் பாஸ் செய்து, கணபதி மூலம் கிடைத்த பம்பாய் வேலையில் இருந்துகொண்டே ‘சி.ஏ ஃபைனல் பரிட்சை எழுதப்போறேன்’ என்ற உடான்ஸுடன் திருச்சியை விட்டுக்கிளம்பி, அப்பாவை மறுபடியும் கனவு காண ஆரம்பிக்க வைத்தேன். பம்பாய் வந்திறங்கினால் அங்கே ஒரு நண்பர்கள் பட்டாளம். அவனுங்களும் திருச்சி தான். திருச்சி தாவணிகளை விட பம்பாய் சுடிதார்கள் கண்ணுக்கு அழகாக தெரிந்தது. கணபதி சி.ஏ முடித்து இந்தோர் பக்கம் போய் விட, நான் பேக்கி பாண்ட், அமீர் கான் போல முழங்கை வரை சன்னமாக மடித்து விட்டு இன்சர்ட் செய்த தொளதொள சட்டை, வெள்ளை சாக்ஸ் தெரியும் மெல்லிய கட்ஷூ இத்யாதிகளுடன் நண்பர்கள் புடைசூழ பம்பாய் ஃப்ளோரா ஃபௌண்டனில் வடா பாவ், பேண்ட்ரா லிங்கிங் ரோடு ஷாப்பிங், எக்ஸெல்ஸயர் சினிமாவில் மாட்னி ஷோ, கிராண்ட் ரோடு சர்தார்ஜி கடை பாவ்பாஜி என மறுபடியும் உல்லாச வாழ்க்கை. திருச்சியில் கனவுகளுடன் நைனா!
ஆபிஸில் கூட என் நலம் விரும்பிகள் சிலர் ‘ஏம்ப்பா! எப்ப சி.ஏ முடிக்கப்போறே? இன்டர் முடிச்சு 2 வருஷமா ஃபைனல் பரிட்சை பக்கமே போகாம இப்படி இருக்கலாமா? கை நிறைய சம்பளம் இப்ப கிடைச்சாலும் இது நிலையான வேலை அல்லவே!’ என உபதேசம் செய்தார்கள். அம்மா அப்பாவும் ஒன்றும் சொல்வதில்லை.
ஒருநாள் அம்மாவிடமிருந்து காட்டமான கடிதம், ‘ஏமிரா இட்ட சேஸ்தாவு? இப்பவே 27 வயசாயிடுச்சு. பணம் அனுப்பறதில்லை. பாஸ் பண்ணவும் இல்லை. உனக்கு கல்யாணம் பண்ணனும். என்ன செய்யப்போறே?’ எனக்கேட்டு பெரிய இன்லாண்ட் லெட்டர். கணபதி அதற்குள் பஹ்ரைன் வந்து விட்டான். ‘சீ.ஏ எப்ப முடிக்கறதா உத்தேசம்?’ என அவனும் கேட்டு துளைக்க ஆரம்பித்தான். என்ன நினைத்தேனோ தெரியவில்லை. அம்மாவிற்கு மாதாமாதம் ரூ.500 க்கு அனுப்ப ஆரம்பித்து, மெதுவாக சி.ஏ புத்தகங்களை எடுத்து தூசி தட்டினேன்.
ஆபிசுக்கு ஒரு மாதம் சம்பளமில்லா விடிப்பு எடுத்தேன். கொலாபா கஃப் பரேட் பகுதியில் உள்ள எங்கள் சி.ஏ இன்ஸ்டிட்யூட்டில் 200 பேர் அமர்ந்து படிக்க ஏதுவான பெரிய நூலகம். 24 மணி நேரமும் திறந்து வைக்கப்பட்டிருக்கும் அங்கே நண்பன் Aloysius James உடன் படிக்க ஆரம்பித்தேன். அவனது குடும்பத்தார் திருச்சி செல்லா ஸ்டோர்ஸ், ஜகந்நாதன் புக் டெப்போ நிறுவனத்தார்.
காலை 7 மணிக்குள் செம்பூர் கீதா பவன் பூரி பாஜிக்கப்பறம் புத்தக மூட்டையுடன் ரயிலில் வீ.டி ஸ்டேஷனில் இறங்கி கொலாபா நேவி நகர் பஸ் பிடித்து 8 மணிக்குள் இன்ஸ்டிட்யூட் நூலகம் சென்றடைந்தால் தான் அந்த 200 மாணவர்களில் ஒருவனாக அங்கே இடம் பிடிக்க முடியும். அலாஷியஸும் வந்து விடுவான்.
சக பம்பாய் மாணவர்களுடன் பேச ஆரம்பித்த போது தான் சீ.ஏவுக்கு நாம் இதுவரை படித்த சில பாடத்திட்டங்கள் மற்றும் நமது அனுகுமுறையும் பாஸ் பண்ணுவதற்கு பத்தாது எனத்தெரிந்தது. அமலாக்கத்துறை சார்ந்த சட்டங்கள் எங்கள் பாடத்திட்டத்தில் இருந்ததால் போஃபர்ஸ் ஊழல் போன்றவை எப்படி அந்த சட்டங்களில் சிக்கியது என சக மாணவர்கள் கலந்தாலோசிப்பதை பார்த்து மலைத்துப்போனேன். திருச்சி ராக்ஸி வெலிங்டன்ல சிவராத்திரிக்கி மிட்நைட் ஷோ என்ன படம் போன்றான் போன்ற சமாசாரங்கள்ன்னா பேசிட்ருப்போம்! அகில இந்திய அளவில் ராங்க் வாங்கிய மாணவர்கள் சிலரும் அங்கே இருக்க, தாழ்வு மனப்பாண்மையுடன் வலிய சென்று பழகி, அவர்களுடன் தோள் உரசினேன்.
ஊதாரித்தனத்துடன் ஊர் சுற்றிக்கொண்டும், உடைகளுக்கும் ஓப்பனைகளுக்கும் அதிமுக்கியத்துவம் கொடுத்துக்கொண்டு எதிர்காலம் பற்றிய எந்தவொரு திட்டமும் இல்லாமல் 28 வயது வரை… ச்சே! வெட்கித்தலை குனிந்தேன்.
எங்கிருந்தோ ஒரு உத்வேகம் திடீரென ஏக்நாத் ஷிண்டே போல கிளம்ப, வயிற்றில் பயம் களி போல உருள, காலை எட்டு முதல் இரவு பத்து வரை இன்ஸ்டிட்யூட் நூலகமே கதி என படிப்பு. டப்பாவாலாவின் மதிய உணவு நூலகத்திற்கே வந்து விட, அலாஷியசுடன் மணிக்கொரு முறை வோட் ஹவுஸ் ரோடு இராணி கடையில் டீயும் மஸ்கா/பன்னும். இரவு பதினோறு மணிக்கு மேல் செம்பூர் திரும்பி தூங்கியெழுந்து மறுபடியும் காலை எட்டுக்குள் கொலாபா திரும்ப வேண்டும். படிக்கும்போது சக மாணவர்கள் என்ன படிக்கிறார்கள் என்பதையும் அவர்கள் கூடி ஆலோசிப்பதையும் வேடிக்கை பார்ப்பது என காலம் சென்றது.
சீ.ஏ ஃபைனல் பரிட்சை ரிசல்ட் வந்தது. குறைந்த மதிப்பெண்கள் வித்தியாசத்தில் தோல்வி. எத்தனை முறை பரிட்சை எழுதினேன் என பரோட்டா சூரி போல கணக்கு வைத்துக்கொள்ள முடியவில்லை. தலா நாலு சப்ஜெக்ட்கள் கொண்ட 2 க்ரூப்புகள்(8 பேப்பர்கள்). இன்டர், ஃபைனல் என மொத்தம் 4 க்ரூப்புகள்(16 பேப்பர்கள்). நாலு சப்ஜெக்ட்டுகளிலும் பாஸ் மார்க் 40 மற்றும் மொத்த மதிப்பெண்கள் 200 (50%) வாங்க இல்லையென்றால் அந்த க்ரூப்பே ஃபெயில். சுத்தம்! நாலு பேப்பர்களிலும் பாஸ், ஆனால் மொத்த மார்க் 198 என இரண்டே மார்க்கில் கோட்டை விட்டால் மறுபடியும் அந்த நாலு பேப்பரையும் எழுத வேணும். கிழிஞ்சது! அடுத்த முறை மொத்தம் 210 (50%க்கும் மேல்) ஆனால் ஒரு சப்ஜெக்டில் 39 மார்க். ‘தம்பி நீ ஃபெயில், திரும்ப நாலு பேப்பரையும் எழுதுடா கண்ணா!’ என்பார்கள் பாவிகள்.
இப்படி நான்கு நான்காக மொத்தம் 16 பேப்பர்கள் எழுதி முடித்து பல வருடங்களில் சீ.ஏ பாஸ் செய்யும் முன்னறே நிறைய செட்டியார் பையன்களுக்கு திருமணமாகி சீ.ஏ இன்டர் (கோர்ஸ்) தொடர்வார்கள்
. சிலர் ‘இவ என் மனைவி சீ.ஏல எனக்கு ஜூனியரா இருந்தா’ என தம்பதி சமேதராக பரிட்சை எழுதி அட்சதை போட வருவர். சில நண்பர்களின் மனைவி சட்டென சீ.ஏ முடித்து நண்பர் மட்டும் உத்தவ் தாக்கரே போல தனித்து விடப்படுவர்.

திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில் நடக்கும் சீ.ஏ பரிட்சைக்கு சிலர் சிந்தாமணி அருகே ஓரமாக நின்று புத்தகங்களை புரட்டி விட்டு பரிட்சை ஆரம்பமாக ஒரிரு நிமிடங்களுக்கு முன்னே சத்தம் போடாமல் பின் கேட் வழியாக உள்ளே வந்து பரிட்சை எழுதி விட்டு அவசரமாக வெளியே ஓடி வந்து 88A கே. கே. நகர் பஸ்ஸை பிடித்து தலைமறைவாவது சகஜம். ‘டேய் நீ எப்பிடி எழுதனே! நான் 70மார்க் தான் அன்டென்ட் பண்ணேன். அடுத்த எக்ஸாம்ல பக்கலாம்’ என வெட்கமே இல்லாமல் வெள்ளந்தியாக பறைசாற்றியவர்களில் அடியேனும் உண்டு.
ரிசல்ட் அன்று நோட்டிஸ் போர்டில் ஒட்டிய பேப்பரை, மாணவர்கள் கூட்டத்தில் முண்டியடித்து நமது எண் இருக்கா எனத்தேடி தேடி, 2435, 2442, 2444… ஐயோ! நம்ம நம்பர் 2443 ஆச்சே! போச்சு.. ஃபெயில்!
தோல்வியடையும்போதெல்லாம் அடுத்த முறை படிக்க பாடங்கள் சுலபமாக இருக்கும். பாஸ் செய்தவர்களை பார்க்க பொறாமையெல்லாம் வராது. அறங்கேற்றம் பிரமிளா போல வெற்றுப்பார்வை பார்ப்போம். நம் மீது ஒருவித வெறுப்பும் வரும். படிப்பில் நிறைய சந்தேகங்கள் தீரும். பயத்துடன் கொஞ்சம் சொரனையும் வரும். தலைக்கணம், செறுக்கு, எகத்தாளம் எல்லாம் போய் பேயறைந்தது போல ஆகி ஒரு வித திகிலுடன் ஷரத் பவார் போல வலம் வருவோம். கொலாபா சீ.ஏ. இன்ஸ்டிட்யூட் நிறைய பாடங்களை கற்றுத்தந்தது.
1990.. ரிசல்ட் வந்த அன்று மாணவர்கள் கூட்டத்தில் முண்டியடித்து நிற்காமல், கொலாபாவிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் தாதர் பகுதி சித்தி விநாயகர் கோவில் வரிசையில் உதடுகள் மந்திரங்களை உச்சரித்துக்கொண்டு 3 மணி நேரத்திற்கும் மேலாக நின்று, விநாயகருக்கு தேங்காய் உடைத்து விட்டு ரிசல்ட் பார்க்க கொலாபாவற்கு பஸ் பிடித்தேன். ‘புள்ளையார சேவிச்சட்டு ரிசல்ட் பார்க்கப்போப்பா’என பஹ்ரைனிலிருந்து கணபதியின் கட்டளை.
அட! சீ.ஏ ஃபைனல் பாஸ்! அவ்ளோ தான்! எந்த வித ஆரவாரமோ ஆர்ப்பாட்டமோ இல்லை. நெஞ்சை அடைத்து மனம் முழுதும் வெற்றிடம் போல வெறும் அமைதி. சந்தோஷப்படாமல் சிறையில் இருந்து வெளிவரும் ஆயுள் கைதி போல அமைதியாக நடந்து எஸ்டிடி பூத்தில் அம்மாவிற்கு தெரியப்படுத்தியபின் தான் வயிற்றிலிருந்த உருண்டை மறைந்தது. ‘ரொம்ப சந்தோஷம்’ என அப்பாவும் வாழ்த்த, அவரது 9 ஆண்டு கனவு நிறைவேறியது.
அடுத்த இரண்டு வருடத்தில் 31 வயதில் திருமணம், நான்கு வருட பம்பாய் வாசம், 26 வருட பஹ்ரைன் வாழ்க்கை, குழந்தைகளின் சீ.ஏ படிப்பு, பதவி உயர்வுகள், முகநூல் நண்பர்கள், எழுத்து, ஓவியம்…… இதெல்லாமே மாலை 5.30க்கு மதராஸ் சென்ட்ரலில் ஷதாப்தி பிடித்து 10 மணிக்கு பெங்களூர் கிருஷ்ணராஜபுரத்தில் இறங்கியது போன்ற வேகத்தில்!
Happy Chartered Accountants Day (1st July) ! to all my CA friends and the entire CA fraternity
No comments:
Post a Comment