Friday, June 20, 2025

ஹலசூரு ஏரி

 காலை 7 மணி வாக்கில் ஹலசூரு (Ulsoor) ஏரி பக்கம் நடைபயிற்சிக்காக சி.வி.ராமன் நகரிலிருந்து கிளம்பினோம். 22 டிகிரியில் சில்லென காற்று லேசாக வீச, ராணுவ அமைச்சகத்தின் மரங்களடர்ந்த ஆளறவமற்ற DRDO வளாகம் வழியே பழைய மதராஸ் சாலையை பிடித்து சாலையை ஆக்கிரமித்த பெங்களூரு சரிகே டவுன் பஸ்களை கடந்து ஹலசூரு ஏரி கார் நிறுத்தம் வந்து சேர்ந்தோம்.

மிகப்பெரிய ஏரி. நடுவே பச்சைப்பசேலென குட்டித்தீவு. ஏரியைச்சுற்றிலும் உயரமான மரங்களுடன் வட்டமான நடைபாதை. நடுநடுவே பூங்காக்கள். குளுகுளுவென சீதோஷ்ணம் மனதிற்கு ரம்மியமாக இருந்தது. எதிரே மேலும் கீழும் ஹிந்தி பேசியபடி மக்கள் நடந்துகொண்டிருந்தார்கள். பெங்களூரில் கன்னடம் பேசும் மக்கள் குறைய ஆரம்பித்து விட்டார்கள். இரும்புக்கடை மற்றும் ஹார்ட்வேர் கடை மார்வாடிகள் கன்னடத்தில் பொளக்கிறார்கள். சரியாக பராமரிக்கப்படாத நடைபாதையில் நடக்க சற்று சிரமமாக இருந்தது.
பெங்களூரில் எப்ப மழை பெய்யும் எப்ப வெயிலடிக்கும் தெரியாது. ஆட்டோக்காரர்கள் வருடம் முழுக்க ஸ்வெட்டர் போடுகிறார்கள். பூங்கா நடைபாதையிலும் அநேகம் பேர் குளிருக்கு ஸ்வெட்டருடன்.
ஏரிக்கு ஒருபுறம் Madras Sappers எனப் படும் இந்திய இராணுவத்தின் பொறியாளர் குழு (மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் MEG). பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் முந்தைய மெட்ராஸ் பிரசிடென்சி இராணுவத்திலிருந்து தோன்றிய இந்த படைப்பிரிவு வீரர்களை ‘தம்பிகள்’ (Thambis) என அழைப்பார்களாம். 200 ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள பல போர்க்களங்களில் தங்களை வேறுபடுத்திக் காட்டியுள்ள இந்த மெட்ராஸ் சாப்பர்ஸ் பெங்களூருவில் சிவில் மற்றும் இராணுவ கட்டிடங்களின் கட்டுமான நடவடிக்கைகளில் பெரும்பகுதியில் ஈடுபட்டிருந்தனராம். ஏரியின் நடுவே உள்ள தீவில் The Madras Sappers இன் பெரிய பதாகை வைக்கப்பட்டுள்ளது. ஏரியின் தூர் வாரும் பணியும் அவர்கள் தான் செய்கிறார்களாம்.
பூங்காவினுள் உடற்பயிற்சி செய்ய உபகரணங்கள் இருந்தன. 50 வயதிற்கு மேற்பட்ட ஒருவர் இரும்பு சைக்கிள் மீதமர்ந்து பெடல் போட்டுக்கொண்டருக்க, மற்றொரு 60+ ஆசாமி சீட்டில் அமர்ந்தபடி கையல் எதையோ பிடித்துக்ககொண்டு , கீழே இடுப்புப்பகுதியை அசைக்க, அபாயகரமாக அவரது இடுப்பு முறுக்கியது பார்க்க பயமாக இருந்தது. அந்த வயதிற்கு இப்படிப்பட்ட உடற்பயிற்சி தேவையா எனத்தோன்றியது எனக்கு.
நடை பயிற்சி முடிந்து பூங்கா விட்டு வெளியே வந்தோம். அடுத்து என்ன! நாஷ்டா தானே! சாந்தி சாகர், நம்ம இட்லி போன்ற தர்ஷினி கடைகளில் நின்றபடி டிபன் பண்ணும் கூட்டத்தையடுத்து அடுத்து அடையார் ஆனந்த பவனுக்குள் நுழைந்து மினி டிபன் முடித்து வெளியே வந்தோம்.
ஏரிக்கு எதிரே கோவில். ஏரியை பார்த்தவாறு கோயில் என்பதால் Lake View பிள்ளையாராம். அழகான வெள்ளிப்பூண் போட்டு அலங்காரத்தில் ஜொலித்துக்கொண்டிருந்தார் கணபதி. உலகத்திலேயே தென் திசை பார்த்தவாறு வீற்றிருக்கும் ஒரே பிள்ளையார் இந்த கோவிலில் மட்டும் தானாம். அருகே சனீஸ்வரர். மாடியில் 7 அடி உயர வெங்கடாஜலபதி பெருமாள், அங்காள பரமேஸ்வரி, ஆஞ்சநேயர், ராம லக்ஷ்மணர், லக்ஷ்மி நாராயண சுவாமி, ஷிரிடி சாய்பாபா மற்றும் தத்தாத்ரேயா சுவாமி சன்னதிகள் என கண்கொள்ளா காட்சி .
லேசாக தூறலுடன் குண்டும் குழியுமான பழைய மதராஸ் சாலையில் திரும்ப வீடு வந்து சேர்ந்தோம். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பெங்களூர் சாலைகளுக்கு விமோசனமே கிடையாது.

No comments:

Post a Comment