Friday, June 20, 2025

ஷாந்தினி ராஜா

 பஹ்ரைனில் பிரபலமான பெண்கள்(உள்ளூர் பெண்களையும் சேர்த்து) வரிசையில் முதல் பத்து இடத்திற்குள் இருக்கும் பெண்மணி இவர் எனலாம். தகவல் தொழில் நுட்பத்துறையில் சிறந்த ஒரு தொழிலதிபர்.

இந்தியாவில் கம்ப்யூட்டர் முதுகலை படித்து கல்லூரி விரிவுரையாளராக இருந்து கணவருடன் 23 வருடங்களுக்கு முன் பஹ்ரைன் வந்த இவர் RSquare Technology எனும் தனது சொந்த நிறுவனத்தை ஸ்தாபகம் செய்து அதன் Founder & CEOவாக கடந்த 12 வருடத்திற்கும் மேலாக கோலோச்சி வருகிறார்.
பஹ்ரைனில் பெரிய வங்கிகள், அரசு நிறுவனங்கள், அரசுத்துறைகள், அமைச்சகங்கள் மற்றும் வர்த்தக சபை (Bahrain Chamber of Commerce) எல்லாமே இவரது வாடிக்கையாளர்கள்.
அது மட்டுமல்ல. சேம்பர் ஆஃப் காமெர்ஸின் தகவல் தொழில்நுட்ப வழிகாட்டும் குழு (IT Steering Committee)யின் அங்கத்தினர்களில் ஒருவரான ஒரே இந்தியர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. முழுக்க முழுக்க அரபி தொழிலதிபர்கள் கூடும் அதி போன்ற மீட்டிங்குகளில் கணீரென மைக்கை பிடித்து உரையாற்றும் ஆற்றல் மிக்கவர்.
Bahrain FinTech Bay எனப்படும் முன்னணி ஃபின்டெக் மையத்தில் தனது அதிநவீன அலுவலகத்தை இயக்கும் பெருமை மிகும் இந்தியர்.
இந்தியாவிலிருந்து இளம் கணினி மென்பொருள் (Software) டெவலப்பர்களை பஹ்ரைனில் தனது நிறுவனத்தில் வேலைக்கமர்த்தி, அவர்களுக்கு தங்கும் இடம், தேவையான ஃபர்னிச்சர்கள் வாங்கிப்போட்டு அந்த பையன்கள் வேறெங்கும் அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு, தாவி ஓட விடாமல் தக்க வைத்துக்கொள்ளும் ஸ்மார்ட் பெண்மணி இவர். புதிய மென்பொருட்களை உருவாக்கி நல்ல விலைக்கு சந்தைப்படுத்தி விற்பதுடன், தக்க நேரத்தில் பைசாவையும் வசூல் செய்யும் சாதுர்யம் மிக்கவர்.
அரசுத்துறை, அமைச்சக, வணிகம் சம்மந்தமான மீட்டிங்குகள் எல்லாவற்றிர்க்கும் இந்திய பாரம்பரிய உடையில் (புடவை) கலந்துகொள்பவர். (எங்களுடன் சினிமா பார்க்க வரும்போது கூட)
மதிப்புமிக்க Bahrain Business Women Associationனிலும்அங்கத்தினராக இருப்பவர்.
கணவர் Raja Rahamathullah அவர்கள் Man of few words எனப்படும்படியாக அதிகம் பேசாத இனிமையான இன்டெலிஜென்ட் ஆசாமி. அவருக்கும் சேர்த்து இவரே பேசி விடுகிறார் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. கணவரும் தகவல் தொழில் நுட்பத்துறை வல்லுநர். பஹ்ரைனின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனத்தில் (Bahrain Telecommunications Co) 23 வருடங்காக பணிபுரிகிறார்.
குழந்தைகள் இருவரும் அமெரிக்காவில் படிக்க, கணவருடன் நண்பர்கள் இல்லங்களுக்கு அரட்டை அடிக்க தவறாமல் விஜயம் செய்வதும், சினிமா செல்வதும், இவரது கல்லூரி வாழ்க்கை பற்றியும், எப்படி ராஜா இவரை சுற்றி வளைத்து பிடித்து மணம் புரிந்தார் என்பதையும், அப்படி அவரிடம் சிக்க இவர் என்னென்ன உபாயங்களை கையாண்டார் என்பதையும் நயம்பட அதீத நகைச்சுவையுடன் சிலாகிப்பதை நாங்கள் குபீரென்ற சிரிப்புடன் ரசிப்பதுண்டு, இவர்களது ருசியான சமையலை உண்டபடி.
எங்களுக்கு நெருங்கிய உறவுக்கார பெண்மணி இவர் என்பது கூடுதல் தகவல்.

No comments:

Post a Comment