Friday, June 20, 2025

பெங்களூர் எம்எல்ஏ ரகு

 பெங்களூரில் நாங்கள் வசிக்கும் சி.வி.ராமன் நகர் மற்றும் மல்லேஷ் பாளயா எல்லாமே இந்திரா நகரின் நீட்டிப்புப்பகுதிகளாகும். கடை கண்ணிகளுடன் ஆசுபத்திரிகள், சூப்பர் மார்கெட்டுகள், உணவகங்கள் என இரவு 10 மணி வரை மக்கள் நடமாட்டம், வாகனங்கள் என பரபரப்புடன் இயங்கும் பகுதி.

ஒரு நாள் காலை மல்லேஷ்பாளயாவில் திடீரென 500க்கும் மேற்பட்ட மோட்டர்பைக்குகளில் சாலைகளையும், குறுக்குத்தெருக்களையும் ஆக்கிரமித்தபடி எங்கு பார்த்தாலும் யூனிஃபார்ம் அணிந்த இளைஞர்கள்.
துரித உணவு, மளிகை மற்றும் உள்ளூர் குரியர் சேவை செய்யும் புகழ்பெற்ற சில்லறை விற்பனை கம்பெனி ஒன்று அப்பகுதியில் ஒரு கிடங்கை வாடகைக்கு எடுத்து அங்கிருந்து நகரின் எல்லா பாகங்களுக்கும் பைக் இளைஞர்கள் மூலம் விநியோகம் செய்ய ஆரம்பிக்க, அந்த ஏரியாவே திமிலோகப்பட்டது. பெருவாரியான பைக் இளைஞர்கள் பெங்காலி, ஹிந்தி பேசுபவர்கள்.
சாலைகளின் ஓரங்களில் ஜனங்கள் நடமாட முடியாதபடி பைக்குடன் தம் மொபைலை நோண்டிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் ஆர்டர் கிடைத்தவுடன் கம்பெனி கிடங்கை நோக்கி தலைதெறிக்க ஓட்டி, சாதனங்களை எடுத்துக்கொண்டு மீண்டும் தலைதெறிக்க ஓ(ட்)டுவது கண்டு உள்ளூர் கன்னடக்காரர்களும் தமிழர்களும் பொங்கி எழுந்தனர்.
‘ஈ வியக்திகளு யாரு?’ என ஒரு மஞ்சுநாத் ரோட்டில் நின்றபடி கேட்க, ‘அவரு ஆ கம்பனிய டெலிவரி பாய்களு’ என யாரோ பதில் சொல்ல ‘ஆமாவா?’ என சில தமிழர்களும் சேர்ந்துகொள்ள, உள்ளூர் மக்கள் கொதித்தெழுந்தனர்.
அடுத்த சில நாட்களில் சில ரிடையர்டு ஆசாமிகளும், பெண்களும் சேர்ந்து கம்பெனி கிடங்கை நோக்கி கூட்டமாக சென்றனர். அப்போதும் வழியை அடைத்துக்கொண்டு இளைர்கள். ஒரு பாழடைந்த கட்டிடத்தையும் அந்த இளைஞர்கள் விட்டு வைக்காமல் மலஜலம் கழிக்க பயன்படுத்த, விஷயம் பூதாகரமானது.
கம்பெனி நிர்வாகிகள் தகுந்த பதில் அளிக்கவில்லை. பிறகு தற்காலிகமாகத்தான் அங்கு இயங்குவதாக தெரிவித்தார்கள். இருப்பினும் ஒரு மாதமாக இது தொடரவே அப்பகுதி MLA திரு. ரகு அவர்களை தொடர்பு கொண்டனர் மக்கள். இந்திரா நகர், ஜீவன் பீமா நகர், திப்பசந்திரா என எல்லா பகுதியின் ரோட்டு முகனையில் MLA ரகு அவர்களின் புகைப்படமும் அவர் சி.வி. ராமன் தொகுதி MLA என மஞ்சள் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
எஸ்.வி. ரங்காராவ் போல ஆஜானுபாகுவான தோற்றத்துடன் சினிமா விநியோகஸ்தர் போல இருந்தார் MLA. ஆந்திராக்காரர் என்கிறார்கள். பந்தா ஏதுமின்றி மக்களுடன் கலந்து பேசிக்கொண்டு மக்களின் குறை தீர்க்கிறார். வாட்ஸ்அப்பில் நாம் அவருக்கு மெசேஜ் அனுப்பலாம். பதில் அனுப்பி உடனே செயல்படுகிறார். வயது ஐம்பது இருக்கும். நான்காவது முறை இத்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாராம்.
ஒரு நாள் காலை ஏழெட்டு கார்கள், பலேரோ, ஸ்கார்ப்பியோ போலிஸ் வண்டிகள் சூழ இன்னோவாவில் வந்தார் MLA. தேங்காய்ப்பூ துவாலை போர்த்திய இருக்கையிலிருந்து அவர் இறங்க, அடுத்தடுத்த கார்களில் இருந்து ஆபிசர்கள் இறங்கினர். அந்த கம்பெனி கிடங்கின் முன் மக்கள் கூட்டத்துடன் நின்றார் MLA.
ஒரு கம்பெனி துவங்க அரசின் எந்தெந்த துறைகளிடம் அனுமதி கோர வேண்டுமோ, அந்த துறை நிர்வாகிகளிடம் மேற்படி கப்பெனி அனுமதி கோரி உரிமம் பெற்றுள்ளதா என எல்லா விபரங்களையும் சேகரிக்கத்தான் MLA அவர்கள் இத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டார் என்பது தெரிய வந்தது. அன்று அந்தந்த துறை அலுவலர்களையும் கையோடு அழைத்துக்கொண்டும் வந்து விட்டார். அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்த பின்னர் தான் அந்த கம்பெனி உரிமம் வழங்க பேப்பர்களை சமர்ப்பித்திருந்ததாம். அதுவரை சட்டவிரோதமாகத்தான் இயங்கி வருகிறதென்றும், இதுபோன்ற குடியிறுப்பு பகுதிகளில் இயங்க அவர்களுக்கு அனுமதி கிடைக்காது போன்ற விபரங்கள் பின்னர் தெரிந்தது.
அந்த பிரதேசமே அதிரும்படி யாரோ கத்துவது கேட்டது. கூட்டத்தில் முண்டியடித்து நாமும் முன்னே போய் பார்த்தால், கத்தியது MLA தான். கிடங்கின் ஒருக்கழித்த கதவுக்கு பின்னாலிருந்தான் ஒரு இளைஞன்.
‘ஆருப்பா உள்ள இருக்கறது? வெளிய வா!’ MLA கர்ச்சித்தார்.
‘சார்! இங்க வேற யாரும் இல்ல”
‘மேனேஜர் எங்க?’
‘அவர் இன்னும் வல்ல’
‘போன் போட்டு அவர கூப்பிடுய்யா!’
‘சார்! எங்க கம்பெனி இருக்கறது நொய்டா!’
‘போனை வைடா! நாங்க சொல்றத செய்டா!’
கூட்டத்திலிருந்தும் யாரோ கத்தினார்கள்.
அடுத்த 30 நிமிடங்களில் கம்பெனி மேலிடத்திலிருந்து அலுவலர்கள் வர, ‘ஏய்யா! பிசினஸ் பண்ண இந்த இடம் தான் கிடைச்சுதா உனக்கு? இன்னிக்கி ராத்திரிக்குள்ள இந்த இடத்த காலி செய்யனும். இல்லாகாட்டி போலிஸ் உதவியோட உன் கிடங்கை நாங்க காலி செய்வோம்’ என ஆங்கிலத்தில் MLA ஆக்ரோஷமாக பேசி எச்சரித்தார்.
‘பக்கத்து பில்டிங் கார் பார்க்குல அம்பது சேர் போட்ருக்கோம். நீங்க அங்க வாங்க சார்! உங்களுக்கு நன்றி தெரிவிக்கனும்’ என ஒருவர் MLAவிடம் கேட்டதுடன், ‘ரேய்! சமோசா, ச்சாய் தொரக்கிந்தா?’ எனவும் பக்கத்தில் கேட்டார்.
‘மொதல்ல அவங்க இடத்த காலி பண்ணட்டும் அப்பறம் சமோசா, சாய் குடிக்க வாரேன்’ என்ற MLA சட்டென கிளம்ப முற்பட்டார்.
‘உங்களுக்கு ரொம்ப சிரமம் கொடுத்து விட்டார்கள் இவர்கள். தயவு செய்து என்னை மன்னிக்கவும். உடனே இந்த கிடங்கை காலி செய்ய வைப்பது என் பொறுப்பு’ என எங்களிடம் கைகூப்பினார்.
‘ஐயய்யோ! மன்னிப்பெல்லாம் எதுக்கு!’ என உணர்ச்சிவசப்பட்டு MLA கையை பிடிக்கப்போன பெருசை சிலர் பின்னுக்கு இழுத்துக்கொண்டார்கள்.
உடனே என்னுடைய சகலை Gokul Doraibabu ‘சார்! இவுரு என்னோட சகலை ஶ்ரீதர். உங்க படத்தை வரைஞ்சிருக்கார். நன்றி தெரிவிக்க இந்த ஓவியத்தை உங்களுக்கு அவர் கையால கொடுக்கலாம்னு….’ என இழுக்க, நான் ஆவலுடன் கழுத்தை முன்னே நீட்டினேன்.
‘நோ.. நோ.. மொதல்ல பிரச்னை முடியட்டும். அப்பறமா ஓவியம் எல்லாம். இப்ப இதெல்லாம் முக்கியம் இல்ல’ என அவர் முன்னிருக்கையில் ஏறி வணக்கம். சொல்லி கிளம்ப, சர்.. சர்ரென கார்கள் பின்னால் பறந்தன.
அடுத்த நாள் அந்த இடம் காலியாகி, மீண்டும் மக்கள் சுதந்திரமாக நடமாட ஆரம்பித்தார்கள்.
சென்ற மாதம் நான் மனைவி Usharani Sridharஉடன் அவசரமாக திருச்சி வந்திருந்தபோது சகலை கோகுலிடமிருந்து போன். MLA அந்த இடத்தை பார்வையிட வருகிறாராம். நான் வரைந்த அவரது ஓவியத்தை அப்பகுதி மக்கள் சார்பாக அவரும் மனைவி Vandhana Gokulம் MLA அவர்களுக்கு வழங்கி நன்றி தெரிவித்தனர்.
‘நல்லா வரைஞ்சிருக்கார். ரொம்ப தேங்க்ஸ்ன்னு அவருக்கு சொல்லுங்க. அவர் ஊர்ல இருந்து வந்தவுன்ன என்னை சந்திக்கலாம்னு சொல்லுங்க’ என MLA ரகு விடைபெற்றுக்கொண்டாராம்.
வாழ்த்துக்கள் திரு. ரகு!

No comments:

Post a Comment