பல வருடங்களுக்கு முன் நான் வளைகுடாவில் வேலைக்கு சேர்ந்து சில நாட்களில் அந்நிறுவனத்தில் முன்பு எப்போதோ நடந்த முதலீடுகளை மறுதணிக்கை செய்ய தணிக்கையாளர்கள் சாரிசாரியாக கம்பெனிக்குள் நுழைந்த சமயம். புதிதாக வேலைக்கு சேர்ந்த எனக்கு தலையை பிய்த்துக்கொள்ள வேண்டிய நிலை. பழைய தஸ்தாவேஜுக்களை புரட்டி எடுத்து, படித்து, புரிந்துகொண்டு ஆடிட்டர்களுக்கு விளக்குவதற்குள் தலையில் அங்கங்கே நரைமுடி முளைக்க ஆரம்பித்தது.
துறுதுறுவென ஒடிசலான நெடும் உயரத்துடன் கையில் லேப்டாப்புடன் என் எதிரில் அமர்ந்த அந்த இளைஞன் பெயர் ரங்கேஷ். ஆடிட்டராம். நெற்றியில் கற்றையாக கேசம் புரள, மழமழவென மழித்த மீசையிலா பச்சை முகம். பார்க்க வட இந்தியனைப்போல இருந்தான். அவனிடமிருந்த லாப்டாப்பை அதிசயத்துடன் பார்த்தேன். முதன்முதலில் அப்போது தான் லாப்டாப் என்கிற வஸ்துவையே பார்க்கிறேன்.
எதிரே உட்கார்ந்தபடி நிதி சார்ந்த விசாரணைகளை அவன் திறம்பட மேற்கொள்ள, நானும் ‘இப்பத்தான் இங்க வேலைக்கு சேர்ந்தேன். பழைய ரெகார்டெல்லாம் தேடிப்புடிச்சி இந்த ஃப்ளாப்பி டிஸ்க்ல போட்ருக்கேன், பாருங்க!’ என சமர்ப்பித்தேன். பத்திரமாக வாங்கிய அவன் கோப்பின் பெயர் எழுதிய ஸ்டிக்கரை டிஸ்கில் ஒட்டி, நாமகரணம் சூட்டி, லேப்டாப்பில் அதனை சொறுகி, பளிச்சென உயிர்பெறச்செய்த சீலையில் சிறிய சிறிய எண்கள் தெரிய, முதலிரவில் புது மனைவியைத்தொடுவது போல தன் விரல்களால் விசைப்பலகையை நளினமாக, செல்லமாக வருடி, எண்களை இங்கிட்டும் அங்கிட்டும இழுத்து ஒரு ஒரத்திற்கு கொண்டு போய் உட்கார வைத்து, வைத்த கண் வாங்காமல் உற்றுப்பார்த்து, எண்கள் மேல் கண்களால் படர்ந்ததை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன்.
தாமரை (Lotus)123 யுடன் போராடி நான் சேமித்த பெரிய பெரிய ரிப்போர்ட்டுகளை அடுத்த சில நிமிடங்களில் துகிலிரித்து அடுத்தடுத்த காப்பகங்களில் (பக்கங்களில்) கொண்டு சேர்த்த பின், சிறப்பு சட்டப்பிரிவு 142இன் (Article 142) பிரத்யேக அதிகாரத்தின் கீழ் விடுவிப்பதைப்போல ஃப்ளாப்பி டிஸ்க்கை வெளியே எடுத்து என்னிடம் கொடுத்த பின், ‘சூடா ஒரு காபி கிடைக்குமா ஶ்ரீதர்?’ என தமிழில் கேட்டபோது தான் ‘அட! நம்ம தமிழ்க்காரப்பையன்!’ என பிரகாசமடைந்தேன்.
முழுப்பெயர் ரங்கேஷ் எம்பார். நம்ம திருச்சி ஶ்ரீரங்கம். அதுவும் பிஷப் ஹீபர் பள்ளி/கல்லூரி. பொதுவாக தணிக்கையாளர்கள் ஆடிட் செய்யும்போது க்ளையண்ட்டுகளுடன் அதிக ஸ்னேகத்துடனோ, தனிப்பட்ட முறையில் சிறு பெறு உதவிகள் பெறுவதோ கூடாது எனும் எழுதப்படாத விதியை மாநில ஆளுநர் போல கண்டிப்பாக கடைபிடித்தான் ரங்கேஷ். இருந்தாலும் திருச்சிக்காரனாச்சே! சட்டென நண்பர்களானோம். அதே சமயம் ஆடிட் மற்றும் அலுவல் சார்ந்த எதனையும் ஆங்கிலத்திலேயே சம்சாரிப்பதும், தேவையான தகவல்களை கராராக கேட்டு வாங்கியும் தன் பணியை செவ்வனே செய்து முடித்தான்.
கடந்த 26 வருடங்களாக எனது நெருங்கிய நட்பு வட்டார நண்பர்களில் ஒருவனானான். பஹ்ரைனின் கல்ஃப் ஏர் மற்றும் அபுதாபி எதிஹாத் விமான நிறுவனங்களில் நிதித்துறை வைஸ் பிரெசிடென்ட் போன்ற உயர் பதவிகளில் இருந்து விட்டு தற்போது அமெரிக்காவில் செட்டிலான ரங்கேஷை சில வருடங்களுக்கு முன் துபாயில் சந்தித்து நண்பர்களுடன் ஐபிஎல் மாட்ச் பார்த்து மகிழ்ந்தது மறக்க முடியாத அனுபவம்.
No comments:
Post a Comment