பால்ய நண்பன் Ganapathi Subramanian இல்லத்திருமணத்திற்கான கோவை பயணத்தின்போது இவரை எப்படியும் சந்தித்து விடுவதென முடிவு செய்திருந்தேன்.
கல்யாணத்திற்கு முதல் நாள் காலை மண்டபத்தில் பாலிகை தெளித்தல், நிச்சயதார்த்தம் போன்ற சடங்குகள் முடிந்து மதிய உணவிற்கு முன் இவரை சந்திப்பதாக முடிவானது, ஆனால் காலை டிபனின் மெல்லிய பொன்னிற சல்லடை போன்ற முறுகல் ரவாவும், அசோகா அல்வாவும், அஸ்கா சேர்த்த ஃபில்டர் காபியும் என்னை நாற்காலியில் சரிய வைத்து கண்களை சொறுக வைக்கும் என யார் எதிர்பார்த்தார்கள்! அதனால் மாலை மூன்று மணிக்கு மேல் கிளம்பினேன்.
பக்கத்தில் ராம் நகர் விடுதி ஒன்றில் தங்கியிருந்த நான் ‘நவாப் ஹகிம் தெரு போங்க’ என சொல்லி ஆட்டோ ஒன்றில் ஏறியமர, சுறுசுறுப்பான தெருக்களில் பறந்தார் ஆட்டோக்காரர். கோவை மாநகராட்சி உடனே பெங்களூர் முனிசிபாலிடிகாரர்களுக்கு பாடம் எடுக்கலாம், அந்த அளவிற்கு சுத்தமான ரோடுகள். சிகப்பு வர்ணம் கொண்ட சாலைகளை காட்டிய கூகிள் மேப் நேராக என்னை இஸ்மாயில் தெருவிற்கு கொண்டுபோய் இடது வலது எங்கும் திரும்பாத நட்டநடு ரோட்டில் நிறுத்தி ஆட்டோவிலிருந்து பக்கவாட்டில் அப்படியே நூறடி தூரத்திற்கு குதித்தால் தான் செல்ல வேண்டிய இடத்தை அடைய முடியும் எனக்காட்ட, குழம்பியபடியே இறங்கி ஆட்டோவை அனுப்பி விட்டு, இஸ்திரிக்கடை ஒன்றில் விசாரித்து, நேராக இவரது ஓவிய பட்டறைக்கு வந்து சேர்ந்தேன்.
இவர் அங்கில்லை, தனது அலுவலகத்தில் இருக்கிராரென தெரிந்து கொண்டு பொடி நடையாக ஓரிரண்டு குறுக்கு சந்துகளில் நுழைந்து சினி ஆர்ட்ஸ் அலுவலகம் வந்து சேர்ந்தேன்.
உள்ளே நுழைந்தால் முன் வரவேற்பறை, 3 நாற்காலிகள் மற்றும் ஒரு சிறிய டெஸ்க் போடப்பட்டு. சுவற்றில் ஆணியில் அறையப்பட்ட மர அலமாரி முழுக்க இவர் வாங்கிய கோப்பைகள். அந்தக்காலத்தில் கோவையில் புகழ் பெற்ற பேனர் ஓவியங்கள் வரைபவர்கள். தந்தை அந்நிறுவணத்தை துவக்கி பல வருடங்கள் வெற்றிகரமாக நடத்திய பின் அடுத்த தலைமுறைக்கு கடத்தியவர்.
‘சின்னூன்டு புகைப்படத்த பாத்து எப்பிடி சார் பிரம்மாண்டமான பேனர்கள் வரைஞ்சீங்க?’ என ஆச்சரியத்துடன் கேட்டேன். ‘இருட்டு அறையில் அந்த சின்ன புகைப்படத்த ஒரு மின் விளக்கு கீழே பொருத்தப்பட்ட கண்ணாடி மேல் கவிழ்த்து வைத்து அதனின் பன்மடங்கு அதிகரிக்கப்பட்ட பிம்பத்தை வெள்ளை பேனரின் மேல் பாய்ச்சுவோம். பிறகு பேனரின் பிம்பத்தின் மேல் தலை, தோள், உடல் என குறிப்பிட்ட பாகங்களை மட்டும் கோடுகள் மூலம் குறித்துக்கொண்டு, பேனரை வெளியே கொண்டு வந்து புருவம், கண், மூக்கு என ஒவ்வொரு பாகத்தையும் துல்லியமாக வரைவோம் என அவர் சொன்னபோது, அந்தக்காலத்தில் சாலை ஒரத்தில் மிகவும் அதிக உயரத்தில் ஷோலே பட பேனர்களை அவர்கள் வரைந்து வைத்தது நினைவுக்கு வந்தது. அபாரமான ஆற்றல் வேண்டும் அப்படி வரைய. நூற்றுக்கணக்கான பேனர்கள் வரையப்பட்டு இரவில் லாரிகளில் வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்படுமாம்.
‘அந்தக்காலத்துல எல்லாம் ரோட்ல போறப்ப சினிமா பேனர்களை பாத்து மக்கள் நின்னு ரசிப்பாங்க. வரைஞ்ச ஓவியர்களுக்கும் மனசு நிறைவா இருக்கும். இப்பெல்லாம் கம்ப்யூட்டர்ல பிரிண்ட் செஞ்சு பெரிய்ய சைஸ் போட்டோ மாதிரி வச்ச ஃப்ளெக்ஸ் போஸ்டரை யார் சார் பாக்குறாங்க!’ என்ற இவரது ஆதங்கம் நியாயமானது தானே!
டிஜிடல் ஓவியங்களைப்பற்றி சிறிது நேரம் விளக்கியவர் ‘வாங்க உள்ள’ என அடுத்த அறையிலுள்ள தனது ஓவியக்கூடத்திற்குள் அழைத்துச்சென்றார். ஃபோட்டோஷாப் மென்பொருள் மூலம் படங்களை வரைவதற்கேற்ப திருத்தி, மேசையின் மேலுள்ள பேடில் இவர் டிஜிடல் பேனாவால் கொடுகள் இழுக்க எதிரே கம்ப்யூட்டர் திரையில் பளிச்சென உருவம்! அடுத்து திரையின் பக்கவாட்டில் தனக்கு வேண்டிய வர்ணங்களை தேர்வு செய்து அள்ளி ஒவியத்தினுள் வீசி கலக்கலானார். இளம் பெண்ணின் கேசம், மின்னும் உதடுகள், பளிச்சென கண்கள் என ஓரிரு நிமிடங்களில் அற்புத ஓவியத்தை என் கண் முன் கொணர்ந்தார். அதிசயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.
‘வாங்க.. அப்பிடியே வெளிய போய் காபி சாப்டலாம்’ என என்னை அழைத்துக்கொண்டு புகழ் பெற்ற ஒப்பணக்கார வீதிக்கு வந்தார். ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், மின்சாதன பொருட்கள் என ஏராளமாக பணம் புழங்கும் இடங்களைத்தாண்டி விடுதி ஒன்றில் காபி குடித்த பின் ஆட்டோ ஒன்றை பிடித்து என்னை அனுப்பி வைத்தார், தனது ‘திரைச்சீலை’ என்ற நூலுக்கு ஜனாதிபதி விருது பெற்றவரும், அரசியல் அறிவியல் (Political Science) மற்றும் சட்டத்துறையில் பட்டப்படிப்பு படித்தவரும், தமிழ் திரை உலகின் ஓர் அங்கமான CineArtsஇன் ஸ்தாபகரான தந்தை வழியில் அந்நிறுவனத்தை இன்றும் சகோதரர்களுடன் வெற்றிகரமாக இயக்குபவரும், புகழ் பெற்ற ஓவியருமான திரு. Jeeva Nanthan அவர்கள்.
No comments:
Post a Comment