என் மூத்த சகோதரி (50) சுமார் 15 வருடங்களுக்கு முன் திடுதிப்பென கணவருடன் (தாய் மாமா) சென்னையிலிருந்து பல்லவனில் கிளம்பி அம்மா வீட்டிற்கு (திருச்சி) வந்திறங்கினார். கடுமையான வலியுடன் அடிவயிறு பெருத்து இருந்தது. சற்றும் பதட்டப்படாமல் அம்மா அவரை என்
இரண்டாவது சகோதரி (கணவர் டாக்டர்)யிடம் அழைத்துச்சென்றார்.
பரிசோதனைகளுக்குப்பிறகு புற்றுநோய் என் ஊர்ஜிதம் செய்து அடுத்த இரண்டு வருடங்கள் அம்மா நன்றாக அக்காவை பார்த்துக்கொண்டும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் இறுதியில் புற்றுநோய் தான் வென்றது. மகளை இழந்து பல வருடங்கள் கழித்து ஒரு நாள் பஹ்ரைனில் என்னிடம் அம்மா சொன்னது: ‘வயிறு பெருத்து அவ வந்திறங்கினதும் எனக்கு தெரியும் அது கேன்சராத்தான் இருக்கும்னு’. முகத்தில் பயம், கலவரம், சோகம் என எந்தவித வெளிப்பாடும் இல்லாமல் நிலமையை கையாள்வார்.
உறையூரில் இருதயநோய் நிபுணர் டாக்டர் சென்னியப்பன் அம்மாவை பரிசோதித்து ‘எல்லாம் நல்லபடியா இருக்கு, இந்த மருந்தை சாப்பிடுங்க, தேங்கா சட்னி தெனமும் சேர்த்துக்க வேணாம்’ என சொல்லியனுப்பினார். பிறகு எங்கள் குடும்ப நண்பர் டாக்டர் ஜமீர் பாஷாவிடம் வேறு பிரச்னைக்கு போகும்போது ‘மத்தபடி ஹார்ட் எல்லாம் எப்பிடி இருக்கு?’ என அம்மா கேட்க, படாரென அவர் ’அதான் ரிபோர்ட் சொல்லுதே, இதயத்துலயும் கோளாறுன்னு’ என போட்டுடைத்தார். சிறு சலனமோ்அதிர்ச்சியோ எதையும் காட்டிக்கொள்ளாமல் அம்மா ‘சரி பார்க்கலாம்’ என கிளம்பினார். ‘வயது அதிகமாயிட்டதால ஒன்னும் செய்ய வேணாம் அப்பிடியே இருக்கட்டும்’ என டாக்டர்கள் அம்மாவிற்கு தெரியாமல் எங்களிடம் சொன்னது கூட அம்மா எப்படியோ கண்டுபிடித்தும் தெரிந்த மாதிரி காட்டிக்கொள்ளாமல் அடுத்த 10 வருடங்கள் காலத்தை கடத்தியிருக்கிறார்.
தனக்கே புற்று நோய் வந்தும் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பையை அகற்றி வார்டுக்கு வந்த மறுநாள் பார்த்தபோது தையல் சரியாக போடப்படாததால் வெட்டுப்பட்ட வயிற்றுப்பகுதியில் தோல் கறுத்து ஒரு கோடு போல மேல் தோல் வெளிப்புறம் சுருண்டு லேசாக வயிறே திறந்த நிலையில் இருப்பது போல இருக்கவும், டாக்டர் பார்த்து விட்டு ‘ அம்மா! திரும்பவும் மயக்க மருத்து குடுத்து 2,3 மணி நேரத்துல பழைய தையலை பிரிச்சிட்டு வேற தையல் போடனும்.. செஞ்சிரலாமா?’ என பவ்யமாக கேட்க, பக்கத்திலிருந்த நான் சட்டென நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன் (தலையே சுற்றி விட்டது). சற்றும் யோசிக்காமல் லேசாக சிரித்தபடியே அம்மா ‘செஞ்சித்தானே ஆகனும்! பண்ணுங்க’ என்ற போது செவிலிப்பெண்கள் அம்மாவை அதிசயமாக பார்க்க, பச்சை ஏப்ரன், தொப்பி சகிதம் ஏதோ சினிமா தியேட்டர் போவது போல ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்றார் அம்மா.
அடுத்த சில நாட்களில் ரேடியேஷன் தெரபி இத்யாதியெல்லாம் அசால்டாடாக கையாண்டு, பேத்தியின் (இறந்து போன என் மூத்த அக்காவின் மகள்) பிரசவத்தையும் பஹ்ரைனில் பார்த்துக்கொண்டு கொள்ளுப்பேரனை பார்த்த பிறகு 86 வயதிலும் பஹ்ரைனிலிருந்து தனியே விமான பிரயாணம், அதுவும் கொழும்புவில் இறங்கி 3,4 மணி நேரத்தில் திருச்சி விமானம் பிடித்து வந்து கையோடு தனது புற்றுநோயிடம் தோற்றார்.
மனோதிடம், தைரியம், அசாத்திய கடவுள் நம்பிக்கை, பழைய டைரியில் சமையல் குறிப்புகள் எழுதிக்கொண்டு எந்த ஒரு புதிய பலகாரத்தையும் செய்து பார்த்து விடும் ஆற்றல், முன்பின் தெரியாதவர்களிடம் கூட தயக்கமன்றி போய் பேசுவது போன்ற அரிய குணங்கள் அம்மாவற்கு..
அன்னையர் தினத்தன்று அம்மாவின் ஆசி வேண்டி…..
No comments:
Post a Comment