Friday, June 20, 2025

ஜோர்டான்

 சில வருடங்களுக்கு முன் பஹ்ரைன் சி.ஏ. அங்கத்தினர்களுக்காக குறைந்த கட்டணத்தில் ஜோர்டான் நாட்டு சுற்றுலாவிற்கு அழைப்பு விடுத்தபோது பெயர் கொடுத்த மிகச்சிலரில் நானும் ஒருவன். 'அந்த ஊர்ல என்னா இருக்கு!' என சலித்துக்கொண்டு பின் எங்களை பார்த்து பெருமூச்சிட்டவர் பலர். கல்ஃப் ஏர் விமானத்தில் சுமார் மூன்று மணி நேர பயணம். எங்களுடன் வினோத்- PriyaDarshini Narayanan தம்பதியும் குழந்தைகளுடன்.

பொதுவாக அரபு நாடுகளைப்பற்றி இரண்டே வரியில் சொல்லலாம். மன்னராட்சி, குறைவான மக்கள் தொகை, சுத்தமான காற்று, கண்டிப்பான விதிமுறைகள், விஸ்தாரமான சாலைகள், பெரிய்ய்ய கார்கள், குறைவான இரு சக்கர வாகனங்கள், உயர்தர வாழ்க்கை, மக்கள் நலனுக்காக ஏராளமான மானியங்கள், வரியில்லா வருமானம். போதுமா?
கிட்டத்தட்ட ஜோலார்பேட்டை மாதிரி ஒரு ரெண்டுங்கெட்டான் ஊர் தான் தலைநகர் அம்மான். அதிக வளர்ச்சி இல்லை. ஆனால் எல்லா நாட்டுக்காரர்களும் வந்துபோகும் ஒரு சந்திப்பு. இஸ்ரேல், பாலஸ்தீனம், சிரியா, சவுதி மற்றும் இராக் ஐந்து நாடுகள் சூழ, செங்கடல் (Red sea) மற்றும் சாக்கடல் (dead sea) நாட்டிற்கு ஆபரணமாக அழகு சேர்க்கின்றன. மத்தியக்கிழக்கு நாட்டு மக்கள் உண்ணும் பழங்கள், காய்கறிகள் (குறிப்பாக தக்காளி) அனைத்தும் பெருவாரியாக ரோடு மார்க்கமாக ஜோர்டானிலிருந்து வருபவையே. பல்லாயிரக்கணக்கான சதுரமீட்டர் நிலங்கள் உபரியாக சாகுபடி செய்ய ஏதுவாக உள்ளன. நிலையான அரசு, மற்ற வளைகுடா நாடுகளுடன் நட்புறவு என சொல்லிக் கொள்ள நிறைய நேர்மறை அம்சங்கள்.
15 இருக்கை மினி பஸ்ஸுடன் எங்களை வரவேற்ற கெய்த் எனும் பெயர்கொண்ட கெய்டுக்கு ஆறடி உயரம். சட்டை ஜீன்ஸ் அணிந்திருந்தாலும் அரேபியர்கள் தலையில் அணியும் சிகப்பு வெள்ளை கட்டங்களுடனான ஷுமாக் எனப்படும் வஸ்திரத்தை தலைப்பாகை மாதிரி சுற்றியிருந்தான். சீராக வேயப்பட்ட தாடி. கெயித் அல்ல.. ஹ்கெய்த் என்று தான் உச்சரிக்க வேண்டுமாம். முதலில் ஜோர்டான் நாட்டைப்பற்றி சுறுக்கமாக சொன்னான்.
“1916 ஆம் ஆண்டு ஜோர்டான் அல்-ஹுசைன் பின் அலி என்பவர் பெரும் போராட்டம் நடத்தி ஒட்டோமோன் பேரரசிலிருந்து ஜோர்டான், லெபனான், பாலஸ்தீனம், ஈராக், சிரியா போன்ற அரபு நிலங்களை விடுவித்து 1921 இல் டிரான்ஸ்ஜோர்டான் எமிரேட்டை நிறுவி மகன் முதலாம் அப்துல்லாவிடம் லட்டு மாதிரி அதிகாரத்தை கொடுத்தார். தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்த பிரிட்டிஷ் காரனுக்கும் லட்டு தின்ன ஆசை வர, 1922 இல் ஜோர்டானை தம் வசம் கொண்டு வர, ஆரம்பமானது அரபு கிளர்ச்சி”
“தம்பி கெய்த்து! கொஞ்சம் இரு. கிளர்ச்சிக்கப்பறம் ஒவ்வொரு வாரிசும் நாட்டை ஆள, அடுத்த வாரிசுக்கள் ஸ்கெட்ச் போட்டு ஆளை தூக்கி வரிசையாக ஆட்சியை பிடிச்சாங்க. அதானே சொல்ல வர்ரே?”
“அட.. ஆமாம் ப்ரதர்!”
“நாங்கள்ளாம் திருச்சிடா! சோழ பாண்டிர்கள், சந்தா சாகிப், மாலிக் கஃபூர், திப்பு சுல்தான், உடையார்னு எல்லா கதையும் கேட்டிருக்கோம்ல”
“ஆனா பிரிட்டிஷ் காரனை மட்டும் நாங்க மன்னிக்க மாட்டோம்’. கர்சீப்பால் கோபத்துடன் துடைத்துக்கொண்ட கெய்த் முகம் சிவந்துடுச்சு. ‘அட.. அவந்தான் சுதந்திரம் கொடுத்துட்டு போனவுட்டு பின்னால் வந்த நீங்க தானே அடிச்சிக்கிட்டீங்க!’ என கேட்டா நமக்கும் அடி விழுமென்ற பயம். ‘இருக்கட்டும்பா! கொஞ்சம் உங்க நாட்டு பொருளாதாரம் பத்தி சொல்லு’ என பேச்சை மாற்ற, ‘அரபு பிராந்தியத்தின் மிகச்சிறிய பொருளாதாரங்களில் ஒன்றான ஜோர்டான் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும். சாக்கடலின் கனிம வளங்கள் மற்றும் இயற்கை மூலகைகள் மூலம் நன்கு வளர்ந்த சுகாதாரத் துறை காரணமாக மருத்துவ சுற்றுலாவை ஈர்க்கிறது இந்நாடு’ என சுறுங்கச்சொல்லி முடித்தான்.
சன்னமான குரல், இனிமையான ஆங்கிலம். ஜோர்டான் பல்கலைக்கழகத்தின் சுற்றுலாத்துரையில் விரிவுரையாளராக இருந்தவனாம். ‘இவ்ளோ அருமையா ஆங்கிலம் பேசிறியே! சொல்லிக்கொடுத்தது பிரிட்டிஷ்காரன் தானே! அவன் மேல என்ன கோபம்?’ என மறுபடியும் அவனை உசுப்ப, பக்கத்திலிருந்த மனைவி Usharani Sridhar ‘அவனை சீண்டாமெ உங்களுக்கு பத்திரமா ஊர் போய் சேர வேண்டாமா? அவனுக்கு பிரிட்டிஷ் காரன் மேல ஏதோ பூர்வஜென்ம பகை’ என முறைத்தாள்.
இப்ப உலக அதிசயங்களில் ஒன்றான பெட்ராவை பார்க்க போகிறோம் என்ற கெய்த் பஸ்ஸை விட்டு இறங்கினான்.
சூரியக் கண்ணாடி, தொப்பி, தண்ணீர் பாட்டில்களுடன் அவனை பின்தொடர்ந்தோம். குதிரையிலும் சவாரி செய்யலாமாம். பூமியின் உள்ளே ஆழமாகச் சுற்றி சுற்றி சுரங்கம் போல வளைந்து கீழ் நோக்கி செல்லும் சரிவான மண் பாதை. சுமார் 1 மணி நேர நடை. மேலே மேகங்களுடன் வானத்தையும் பக்கவாட்டில் இருபுறமும் மலைப்பாறைகளையும் கண்டுகொண்டே வந்த நாங்கள் சட்டென ஒரு திருப்பத்தில்.. ஆஹா! எங்கள் கண்களை நம்ப முடியவில்லை .. red sandstone gorge எனப்படும் பெரும் பாறைகளின் குறுகிய இடைவெளியில் வரலாற்று சிறப்புமிக்க பெட்ராவைக் காண முடிந்தது. விரிந்த கண்களுடன் இன்னும் கிட்டே போக, ஏழெட்டு தூண்களைக் கொண்ட ஒரு கோட்டையின் நுழைவாயில் போன்ற, ரோஜா அல்லது இளஞ்சிவப்பு நிறத்துடனான உயரமான அழகான அமைப்பு. நாம் அனைவரும் விசித்திரக் கதையின் ஒரு பகுதியாக இருப்பதைப் போல உணர்ந்தோம். கஜானா என்ற பெயருடனான அந்த இடத்தில் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புதையலை சேமித்து வைத்ததாக நம்பப்படுகிறது. அடுத்து வேறென்ன செய்யப்போகிறோம்! டக் டக்கென புகைப்படங்கள் எடுத்து கொண்டோம். பக்கத்திலேயே மேலும் சில புராதன அமைப்புகள், கோட்டைகள், பழங்குடியினர் தயாரிக்கும் கைவினைப்பொருட்கள் என சொல்லிக்கொள்ள ஒன்றும் பெரிதாக இல்லை.
மறுநாள் சாக்கடல் (dead sea) நோக்கி சுமார் நான்கு மணிநேர பயணம். உற்சாகமாக பேசிக்கொண்டு வந்தான் கெயித். சமயம் கிடைக்கும்போதெல்லாம் அமெரிக்கரையும் பிரிட்டிஷாரையும் திட்டக்கொண்டு வந்தான். எனக்கு பொறுக்கவில்லை.
‘ஏம்ப்பா கெயித்து! நம் சுதந்திரத்திற்கு முன்னால் ஆங்கிலேயன் ஆண்டாலும், நம்ம ஊர் உலகத்த எப்பிடி வளப்படுத்தினான்! நூலகங்கள், புகைவண்டி நிலையங்கள், வங்கிகள், கட்டிடங்கள், தேவாலயங்கள்ன்னு கட்டி போட்டுட்டு போயிட்டான். இப்பவும் ஸ்ட்ராங்கா இருக்கே! எல்லாத்தையும் நமக்கு விட்டுட்டு தானே போனான்!’ கெயித் கடைசி வரை ஒப்புக்கொள்ளவில்லை.
சாக்கடல் வந்து சேர்ந்தோம். கடற்கரையில் மண்ணை குழைத்து உடல் முழுவதும் பூசிக்கொண்டு ஒரு மணி நேரம் அப்பிடியே கிடந்தால் தோல் சம்மந்தப்பட்ட பிரச்னைகள் வராதாம். பூசிக்கொண்டோம். சகிக்கலை. கடலில் இறங்கி ஹாயாக காலை நீட்டி படுத்துக்கொண்டு.. என்ன ஆச்சரியம்! அப்படியே மிதந்தோம். சாக்கடலின் உப்புத்தன்மை மற்றும் கூடுதல் அடர்த்தியால் நம் உடல் மிதக்குமாம். வித்தியாசமான அனுபவம்.
கடலுக்கு அப்பால் சில கிலோமீட்டர் தொலை தூர நிலத்தில் கட்டிடங்கள், கார்கள், மக்களின் நடமாட்டத்தை பார்க்க முடிந்தது. அது பாலஸ்தீனிய நாட்டின் காசா கீற்றாம் (Gaza strip). படகில் இன்னம் கிட்ட போய் காசா நகரை தண்ணீரிலிருந்தே பார்த்தோம். அந்நகருக்கு பின்னால் 11 கி.மீ தொலைவில் எகிப்திய மலைகள் தெரிந்தன. 30 கி.மீ தள்ளி இஸ்ரேலாம்.
மறுநாள் மதியம் பகல்
உணவு ஒரு அரேபிய உணவகத்தில். பூரி போல உப்பிய லெபனீய
ரொட்டியுடன் கத்தரிக்காயில் செய்த முத்தாபில், காபூலி சன்னா விழுதில் செய்த ஹம்மூஸ், எல்லா பண்டங்களின் மீதும் தூக்கலாக விட்ட பச்சை ஆலிவ் எண்ணெயுடன் அற்புதமான அரபிய உணவை மொஸ்க்கினோம். அரபிய சுலைமானி(கருப்பு தேனீர்) அருமை. Downtown எனப்படும் சரிவான அம்மான் நகர கடைவீதிகளில் வேகமின்றி பஸ் ஊர்ந்து செல்ல வேடிக்கை பார்த்துக்கொண்டே நகரின் அழகை ரசித்தோம்.
அப்துல்லா மன்னர் பள்ளிவாசல், ரோமன் தியேட்டர், பழங்கால இடிந்த கோட்டைகள், பன்னாட்டு நிறுவனங்களின் நவீன அலுவலகங்கள், பிரம்மாண்டமான அராப் வங்கியின் தலைமையகம் என புதுமை மற்றும் பழமை கலந்த அழகான நகரம்.
‘ஏம்ப்பா கெயித்து! இந்த இஸ்ரேல் பாலஸ்தீனிய சண்டை எப்போ முடிவுக்கு வரும்?’ என வெள்ளந்தியாக கேட்டோம். ‘ஆங்கிலேயர்கள் ஆரம்பிச்சு வச்ச சண்டை. யூதர்களும் அரபியர்களும் இப்பவும் சண்டை போட்டுக்கறாங்க. வெஸ்ட் பாங்க், காசா கீற்று இன்னம் ஆக்கிரமிப்புல இருக்கு. யாரு உசிப்பி விடறாங்க தெரியுமா? ’ என மறுபடியும் அவன் ஆரம்பிக்க நாம் கப்சிப்.
மறுநாள் அம்மான் விமான நிலையத்தில் எங்களை இறக்கி விட்ட கெயித்துக்கு நன்றி சொல்லி அன்பளிப்பாக கொஞ்சம் டாலர்கள் கொடுத்து விடை பெற்றுக்கொண்டு,
‘அழகான ஆங்கிலத்தில் அற்புதமா விளக்கினீங்க. நன்றி. உங்க குடும்பத்தாரை விஜாரித்தாக சொல்லுங்க’ என்றதும் பெருமிதத்துடன் சட்டென பர்சை திறந்து தன் அழகான ஒரு வயது மகளின் புகைப்படத்தை காட்டினான் கெயித்.
‘பூனை விழிகளுடன், ரோஸ் கலரா ரொம்ப அழகா இருக்காளே உன் பொண்ணு! பேரு?
‘பேர் எம்மா. என் உயிரே எம்மாவும் என் மனைவி ஒலிவியாவும் தான்’ என அழகான தன் மனைவியின் போட்டோவையும் எடுத்து காட்டி
‘ஒலிவியாவுக்கு பூர்விகம் இங்கிலாந்து’ என்றான் பெருமையுடன்.

No comments:

Post a Comment