Friday, June 20, 2025

கார்த்திக் கங்காபிரகாஷ்

 சட்டென பார்த்த மாத்திரத்தில் ‘டேய்! நீ மதுரை தானே!’ என கேட்டுவிடக்கூடிய முகம். படிய வாரிய தலை, கண்ணாடி, மலர்ந்த முகம், பெண்மையுடன் கூடிய பளிச்சென கண்கள், ‘சார்! எப்பிடி இருக்கீங்க’ என வாய் நிறைய சிரிப்புடன் வரவேற்கும் குணம். இது தான் கார்த்திக்.

முதன் முதலில் பஹ்ரைன் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ் டோஸ்ட் மாஸ்டர்கள் க்ளப்பில் இவனை பார்த்தவுடன் ஏதோ ஒரு ஈர்ப்பு. நல்ல நண்பர்களோம். வயது வித்தியாசம் பெரியதாக ஒன்றுமில்லை. இவன் பிறந்த ஆண்டு (1981) நான் சி.ஏ சேர்ந்த வருடம்.
சிஏ படித்திருந்தாலும் நிறைய பேருக்கு மேடையில், அலுவலகத்தில் மற்றும் பொது இடங்களில் ஆங்கிலத்தில் தவறின்றியும், பயமில்லாமலும், வயிற்றில் பட்டாம்பூச்சி படபடக்காமல் பேச வருவதில்லை என்பதால் இந்த க்ளப் எங்கள் அங்கத்தினர்களுக்கு பயிற்சியளிக்கிறார்கள். பொதுபேச்சு (public speaking) , நகைச்சுவை பேச்சு, உடல்மொழியுடனான பேச்சு (body language) என சுமார் ஆறே மாதங்கள் பயிற்சியில் நிறைய அங்கத்தினர்கள் மேடைப்பேச்சில் போடு போடு என பேசி கலக்குகிறார்கள். மற்ற க்ளப்புகளுடன் போட்டி நிகழ்ச்சிகளிலும் எங்கள் அங்கத்தினர்கள் வென்று, அடுத்தடுத்த தளத்திற்கு முன்னேறி இறுதிச்சுற்று வரை முன்னேறுகிறார்கள். அவர்களில் இவனும் ஒருவன்.
பஹ்ரைன் பேச்சாளர்களில் மிகவும் பிரபலமானவன். மேடைகளில் நகைச்சுவை மற்றும் அற்புதமான ஆங்கிலத்தில் பேசும் இவன் மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் கில்லாடி. Table Topic எனப்படும், நாம் மேடையில் ஏறிய பிறகே தலைப்பை கொடுத்து குறைந்த பட்சம் 3 நிமிடம் பேசவைக்கும் extempore பேச்சுப்போட்டியில் நம்மை வியர்க்க வைத்து உதற விடுவார்கள் படுபாவிகள். ‘நமக்கு இப்ப இதெல்லாம் தேவையா!’ என எண்ண வைக்கும் அதிபயங்கரமான வைபவம் அது. சில அங்கத்தினர்கள் மேடையில் ஏறி தலைப்பை கொடுத்ததும், எத்தினி பேர் வந்திருக்காங்க என கூட்டத்தினரை பார்த்து எண்ணி விட்டு லேசா வழிந்தவாறே மேடையிலிருந்து இறங்குவார்கள். அந்த போட்டியிலும் வென்று பரிசுடன் வருவான் இவன்.
அதில்லாமல் பஹ்ரைன் சென்டரில் சீஏ பரிட்சை எழுதும் மாணவர்களுக்கு Crash course வகுப்புகள் எடுத்து அவர்களை பரிட்சைக்கு தயார் செய்வதிலும் நிபுணன்.
சென்னை ஶ்ரீதர் & சந்தானம் ஆடிட்டர்களிடம் சீஏ படிப்பிற்கான 3 வருட ட்ரெய்னங் முடித்து, பஹ்ரைனின் பிரதான தொலைதொடர்பு நிறுவனத்தில் பல வருடங்களாக Forensic Internal Auditor ஆக பணியில் இருக்கும் இவனிடம் நான் கற்றுக்கொண்டவை ஏராளம். 5 வருடங்கள் முன் இவனது அப்பா (62) புற்றுநோயால் அவதியுற்று அதற்கான சிகிச்சை பலனளிக்காமல் ‘அடுத்த சில நாட்கள் தான்’ என்ற தருணத்திலும் ‘அப்பா எப்பிடி இருக்கார்ப்பா?’ எனும் கேள்விக்கு சற்றும் சளைக்காமல் ‘ பக்கலாம் சார்.. வலியில்லாம, அவஸ்தைப்படாமெ அவர் போனாப்போதும் எங்களுக்கு!’ என சலனம் மற்றும் முகத்தில் சோகத்தை காட்டாமல் லேசான புன்சிரிப்புடன் அமைதியாக பதிலளிக்கும் அந்த முதிர்ச்சி மற்றும் பக்குவ மனநிலையை கண்டு வியந்தேன்.
வாராந்திர சத்சங்கம், பஜனைகள், பகவத்கீதா கலந்துரையாடல் என ஆன்மிகத்தில் ஈடுபாடு இவனுக்கு. உத்கர்ஷ், சஹானா என இரண்டு குழந்தைகள். காதல் மனைவி கிருத்திகா Krithika Karthik எங்களுக்கு மகள் மாதிரி. ‘வாங்களேன் நாளைக்கு லஞ்ச்சுக்கு!’ என எங்களை அழைத்தால் நானும் உஷாவும் (Usharani Sridhar) அந்த வத்தக்குழம்பை சுவைப்பதற்கென்றே தவறாமல் காலை உணவு சாப்பிடாமல் இவர்களது இல்லத்திற்கு செல்வோம்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Karthik Gangaprakash.🎉🎉🎉

No comments:

Post a Comment