94இல் புதிதாக பஹ்ரைன் வந்தவுடன் ஹூரா/குதேபியா பகுதியில் குடியேறினோம். நம்மூர் மயிலாப்பூர் போல. பழைய மாடல் டொயோட்டா அல்லது நிஸான் சன்னி கார் மற்றும் 2 பெட்ரூம் ஃப்ளாட், லேசான நரையுடன் ஏதாவது குடும்ப கம்பெனியில் அக்கவுண்டன்ட், மதுரை/சென்னையில் வாங்கி போட்ட சுடிதாருடன் மனைவி... புதிதாக பஹ்ரைன் வந்திறங்கிய நடுத்தர வர்க்கத்தினரின் அடையாளங்கள் இவை.
முதன் முதலில் அல் முந்தசா சூப்பர் மார்க்கெட்டை பார்த்து பிரமித்துப்போனோம். பால், தயிர், அரிசி, மளிகை, காய்கறி, ப்ரெட், பிஸ்கட், விளையாட்டு பொம்மைகள், பேனா, பென்சில், பேப்பர் என சகலத்தையும் வாங்கி ட்ராலியில் தள்ளிக்கொண்டு சென்றது எல்லாமே அதிசயமாக இருந்தது. அப்போது தான் மோகன் Mohan Gopal Krishnan லக்ஷ்மி Lakshmi Mohan தம்பதியை சந்தித்தோம். கணபதி Ganapathi Subramanian தான் இவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தினான். மோகன் Cost Accountant. நாக்பூரில் இருந்த வடநாட்டு தென்னிந்தியர். ஃபில்டர் காபி ப்டாது.. ச்சாய் தான். வார்த்தைக்கு வார்த்தை ‘சாலா’ என்பார். ‘சாலா ஏமாத்திட்டான் பாருங்க’ என நகைச்சுவையாக சொல்லி யாரையாவது கலாய்ப்பார். எனக்கு இணையான அலைவரிசை (வேவ் லெந்த்ங்க!). எங்கள் வீட்டிலிருந்து நாலு கட்டிடங்கள் தாண்டி ஜாகை. தெரு முழுக்க டொர்ர்ர்ரென ஏசி மிஷின் சத்தத்துடன் உக்கிரமான வெயில் காலம்.
இவர்களுக்கு ஒரு பெண் ஷ்யாமளா மற்றும் கைக்குழந்தை அரவிந்த். ஷ்யாமளாவிற்கு 6 வயது. பையனை குழந்தைகளுக்கான தள்ளு வண்டியில் உட்கார வைத்து, அவன் காலுக்கு கீழேயே 10 கிலோ அரிசி மூட்டையை வைத்து தள்ளிக்கொண்டு வீடு வந்து சேரும் மோகன்.. சாலா! கில்லாடி.
ஷ்யாமளா என் இரண்டு பையன்களிடம் அவ்வளவு ஒட்டுதல். அதிலும் என் சின்னவன் ப்ரணவ் என்றால் அவளுக்கு உயிர். நான்கு குழந்தைகளும் சேர்ந்தே விளையாடுவார்கள். ஷ்யாமளா அக்கா என பின்னாலேயே சுற்றுவான் அரவிந்த். லேசாக அதட்டினாலும் உதட்டை பிதுக்கி கண்ணீர் துளிக்க ஏவியெம் ராஜன் போல அழ ஆரம்பிப்பான் அரவிந்த். லக்ஷ்மியின் ஒரே அதட்டலில் சட்டென அழுகையை உள் வாங்கி லேசாக சிரிக்கும் சமர்த்து. அவன் தூரத்தில் விளையாடிக்கொண்டிருக்கும்போது வலது கையால் ஷ்யாமளாவை நான் பட் பட்டென அடிப்பது போல பாவலா செய்து, இடது கையால் என் தொடையில் அடித்து சத்தம் எழுப்ப, ‘அரவிந்த்! அங்கிள் என்னை அடிக்கறா பார்!’ என ஷ்யாமளா கத்த ஓவென பெருங்குரலில் அழுது ஒடி வருவான்.
வார இறுதிகளில் அவர்களுடன் பார்க், பீச் என சுற்றுவோம். எங்களது மகிழ்ச்சியே வீடு, மனைவி, மக்கள் மற்றும் நண்பர்கள் தானே! திரும்பி வரும்போது அப்படியே குதேபியா பகுதியில் மைசூர் ரெஸ்டுரன்டில் நீர் தோசா, பூரி பாஜி. சிறிலங்கன் நடத்தும் சமர் வீடியோவில் எதாவது காசெட் வாங்கிக்கொண்டு வந்து நள்ளிரவு வரை படம் பார்ப்போம். எங்குமே கிடைக்காத படங்களைக்கூட கொண்டு வந்துவிடுவான் அவன். ‘பத்தாம் பசலி’ இருக்காங்க என விளையாட்டுக்கு தான் கேட்டேன். ரோட்டை க்ராஸ் செய்து எதிர் பில்டிங்கில் வீட்டிற்கு ஓடிப்போய் உடனே கொண்டு வந்து விட்டான். டீவியில் ஓடும் அரதப்பழசான படங்கள் ஒன்று விடாமல் ரெகார்ட் செய்து விடுவான். அதற்கெனவே நிறைய வாடிக்கையாளர்கள். பேசிக்கொண்டிருக்கும் போதே போனை எடுத்து ‘என்ன படம் கேட்டீய? தாய் மகளுக்கு கட்டிய தாலியா? வடிவான பிரிண்ட்.. இருக்கு வாங்க’ என்பான்.
பரதம் கற்றுக்கொண்ட ஷ்யாமளாவின் அரங்கேற்றம் மனாமா தட்டாய் ஹிந்து கம்யூனிட்டி கிருஷ்ணன் கோவில் வளாகத்தில் விமரிசையாக நடக்க, முன் வரிசையில் கை தட்ட நாங்கள். கேம்ப்கார்டர் வாங்கிய புதிது எனக்கு. அது மற்றவர்களுக்கு தெரியனுமே!ஷ்யாமளா நாட்டியத்தை வீடியோ படம் பிடிப்பது என் வேலை. வீட்டிற்கு வந்தவுடன் டைட்டில் போடுவதற்காக பெயர்களை அட்டையில் எழுதி அரவிந்தை விட்டு ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டச்சொல்லி புதுமையாக வீடியோ ஆல்பம் செய்து (செய்வதாக நினைத்துக்கொண்டு) புளகாங்கிதமடைந்தேன். பரதம் கற்றதால் ஷ்யாமளாவிற்கு சினிமா பாடல்களுக்கான நடனம் சுளுவாக வந்தது. ‘ டக்சிக்கு டக்சிக்கு.. மேகம் கருக்குது’ என ஜோதிகா நடனங்களை ஆடித்தள்ளி, பள்ளியிலும் எல்லா நிகழ்ச்சிகளிலும் நடனமாடுவாள்.
12ஆம் வகுப்புக்கு முன்பே அவளை இந்தியாவிற்கு அனுப்பினார் மோகன். நாக்பூர் ஹாஸ்டலில் இருந்தாள். பிறகு எம்.எஸ்ஸி மைக்ரோ பயாலஜி முடித்து ஏராளமான பரத நிகழ்ச்சிகளில் பங்கேற்று டான்ஸ் டீச்சருமானாள். சட்டென திருச்சிக்கார அமெரிக்கா மாப்பிள்ளை கிடைக்க, கல்யாணமும் ஜாம் ஜாமென நடந்து அமெரிக்காவில் செட்டிலானாள். அங்கும் நாட்டிய பள்ளி தொடங்கி பரதம் கற்றுக்கொடுத்தாள். பத்து வருடங்கள் கழித்து சமீபத்தில் இந்தியா திரும்பி வந்து தற்போது சென்னை அடையாறில்.. இரண்டு குழந்தைகள். கணவர் ராம் ரொம்ப புத்திசாலி. அளவோடு சுறுக்கமாக பேசுவார். ரோஜா பட நாயகன் அரவிந்த்சாமி போல அழகு மற்றும் அடக்கம்.
ஷ்யாமளா அரட்டை என்றும் சொல்ல முடியாது. சீரியசானவளும் அல்ல. ஆனால் கலகலவென சிரிப்பும் கொஞ்சம் இன்னொஸென்ஸ் கலந்த சுபாவம். அப்பா செல்லம். மிகுந்த பொறுமையுடன் அம்மாவிற்கு ஒத்தாசையுடன் இருப்பவள். சூது வாது தெரியாத ஆனால் ஸ்மார்ட்டான பெண். வெகுளியான, அழுத்தமான, மௌனமாக ஜெயித்துக்காட்டக்கூடியவள். கணவர், குழந்தைகள், மாமியாருக்கு மருத்துவ உதவி என மிகுந்த பொறுப்புடன் இருக்கிறாள். எங்களுக்கு மூத்த மகள் மாதிரி.
நேற்று மாலை மோகன் லக்ஷ்மி, டாக்டர் மாலா முரளி தம்பதியினருடன் மஹூஸ் பகுதியில் இரவு உணவு மற்றும் வெகு நேரம் அரட்டை. பல வருடங்கள் முன் பஹ்ரைனில் நாங்கள் சந்தித்தது, குட்டி குழந்தைகளுக்கு இன்று திருமணமாகி விட்டது, ஷ்யாமளா, அரவிந்த், கணபதி குழந்தைகள் என நேரம் போனது தெரியாமல் பேசினோம்.
No comments:
Post a Comment