70களில் திருச்சி தென்னூரில் குடியிருந்தோம். தொலைக்காட்சி பெட்டி இல்லாத நேரம். விவித பாரதி, வண்ணச்சுடர் மற்றும் சினிமா தியேட்டர்கள் தான் மக்களுக்கு பொழுது போக்கு. வீட்டிலிருந்து எல்லா சினிமா தியேட்டர்களுக்கும் நடந்தோ குதிரை வண்டியிலோ போகலாம். என்னையும் என் தம்பி ரவியையும் விட்டு விட்டு அம்மாவும் அக்காவும் சினிமா போனால் ‘அம்மா..அம்மா' வென கெஞ்சிக்கொண்டே பின்னாலேயே போவோம். தென்னூர் வண்டி ஸ்டாண்டு, அக்ரஹாரம், சம்மர் ஹவுஸ், ஹிந்தி பிரசார சபா, ரயில்வே கிராஸ் வழியாக ராமகிருஷ்ணா , ஜுபிடர் அல்லது பேலஸ் தியேட்டரில் இரக்கமே இல்லாமல் எங்களை வெளியே விட்டு விட்டு ஜெய்சங்கர், ஶ்ரீகாந்த், முத்துராமன், சிவகுமார் நடிக்கும் ஏதாவது படங்களுக்கு போவார்கள். அன்று ‘கோமாதா என் குலமாதா’ என நினைக்கிறேன். தியேட்டருக்குள் அவர்கள் போனதும் ஏமாற்றத்துடன் நாங்கள் திரும்புவோம்.
வழியில் கோவிந்தராஜ் கல்யாண மண்டபத்தில் நடக்கும் ஏதோ ஆர்க்கெஸ்ட்ரா (வணக்கம்.. பலமுறை சொன்னேன்.. சபையினர் முன்னே..) பார்த்து விட்டு அமிருதீன் ஆஸ்பிடல் அருகே உள்ள மைதானத்திற்கு போனால், பெரிய கூட்டத்திற்கு நடுவே ஒருவன் தரையில் படித்திருப்பான் (வாயில் நுரை). இன்னொருத்தன் ஒரு ரூபா நாணயத்தில் அந்த நுரையை துடைத்தெடுத்து பார்வையாளர்களுக்கு காட்டி.. 'அய்யாமாருங்களே! இந்த ஒடம்பு இப்போ 4 அடி மேலே போகும்...எல்லாம் இந்த வாய்க்கு ..வயித்துக்குத்தான்' என்று சொல்வான். அது எதற்கு இருந்தாலும் சரியென்று நாங்களும் (1 மணி நேரத்திற்கு மேல்) அங்கேயே உட்கார்ந்து விடுவோம். அவன் கீழே படுத்திருப்பவன் மேல் பலவிதமான அழுக்கு துணிகளை ஒவ்வொன்றாக போட்டு மூடி மெல்ல கையை உயர்த்த அந்த உடல் 3 , 4 அடிக்கு உயரும். நாங்கள் குனிந்து பார்த்தால் மெய்யாலுமே உடலுக்கு கீழே வெற்றிடம் தான். ‘பாதியில் எழுந்து போனா பேதியில் போகும்’ என அவன் மிரட்டி வைத்திருப்பதால் கடைசியில் தான் கிளம்புவோம்.
நகர்ப்புற தியேட்டர்களில்லாமல் சிம்கோமீட்டர் சத்யா, சுப்ரமணியபுரம் சுரேஷ் போன்ற டூரிங் தியேட்டர்களில் படம் பார்ப்பதும் சுகானுபவம். உயர்ந்த மனிதன் படக்காட்சியில் ஏற்கனவே புகை மண்டலம் (நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா). தியேட்டரிலும் பீடிப்புகை மண்டலம். குறைந்த கட்டணம். படத்தை விட இடைவேளைக்காக ஏங்கி காத்திருந்து முறுக்கு, கடலை மிட்டாய் சாப்பிடனும்.
இடைவேளையில் விதவிதமான ஸ்லைடுகள்.. எலிகன்ட் டெய்லர்ஸ், ஜோதி டெய்லர்ஸ், திருச்சி மாடர்ன் ஸ்டுடியோ, சோஃபீஸ் கார்னர், விட்கோ பாரடைஸ், ஹாட்டின் பீடி, அவசர உதவிக்கு 100. 'தினசரி 3 காக்ஷ்சிகளு'க்கு 'ட்' அல்ல 'க்ஷ்' தான்.
ஏராளமான விளம்பரங்கள்.
'என்னாச்சு?
‘அவ என் வாய் நாறுதுங்கறா.' (கோல்கேட் விளம்பரம்), தலைவலி, ஜலதோஷத்தால் மூக்கில் கொட்டி அவதியுறும் இளைஞன் விக்ஸ் ஆக்ஷன் 500 எடுத்துக்கொண்டதும் திடீர் புத்துணர்ச்சியுடன் விடுவிடுவென படிக்கட் ஏறி (பேக் க்ரௌண்டில் ‘வ்வக்க வ்வக்க’எனும் வாவா கிடார்)ஆபீஸ் நுழைந்து சீட்டில் உட்கார்ந்து அழைக்காத போனை எடுத்து காதில் வைக்கிறான்.
தாதாஜி! பாட்மின்டன்(ஶ்ரீராம் லாகு ஹிந்தியில் வாயசைக்க தமிழ் டப்பிங்). எல்லோருக்கும் பிடித்த ‘லா… லலல்ல லா..’ லிரில் சோப், ஓகே அழகு சோப், ‘கர்ச்’ என ஆப்பிள் கடிக்கும் இளைஞன், ‘கட்டக்’ என பாதாம் கொட்டையை கடிக்கும் தாத்தா (வீக்கோ வஜ்ரதந்தி டூத்பேஸ்ட்), ஆனந்தா மற்றும் சாரதா பட்டுப்புடவை கடை…
படம் என்றால் எங்களுக்கு ‘இந்தியன் நியூஸ் ரெவ்யூவில் ஆரம்பித்து படம் பார்க்கனும். கெயிட்டி தியேட்டர் என்றால் இடைவேளைக்குப்பிறகு இந்திப்பட டிரெய்லர் அவசியம் உண்டு. நெற்றியில் நீள செந்தூர், முகத்தை பாதி மூடி குதிரையில் ‘டாக்கூ’வாக வரும் சுனில் தத் பட்பட்டென துப்பாக்கியில் சுட ஆவென வில்லன் கத்த, தொடர்ந்து அடுத்த நொடியே மெயின் பிக்சரில் முத்துராமன் வர, எல்லோரும் நிமிர்ந்து உட்காருவார்கள். சுவாரசியமான அனுபவங்கள்.
தியேட்டரில் படம் பார்க்கும் போதே என்ன பதார்த்தங்கள் சாப்பிடலாம் என்ற கட்டுப்பாடு எங்கள் வீட்டில் இருந்ததுண்டு. ‘மொதல்ல உச்சா போய்ட்டு வா.அப்புறம்தான் திங்க ஏதாவது வாங்கித்தருவேன்’ என அம்மா சொன்ன அடுத்த நொடி டக்கென தரையில் உட்கார்ந்து அங்கேயே வேலையை முடிப்போம். 50 பைசா டிக்கெட்டில் ரொம்ப வசதி.
கண்ட கண்ட தீனியெல்லாம் கூடாது, கடலை மிட்டாய் தான் சாப்பிடனும் என்று காசு கொடுத்தால், நாங்கள் கலர் தேங்காய் தூள் தூவிய பீடா வாங்கி விடுவோம். அவ்வள தான் அம்மா 'காசுனி வேஸ்ட் சேஸ்திவேரா! ' என நடு தொடையில் கன்னிப்போகும் அளவிற்கு ஒரு non stop கிள்ள, அப்பசத்திக்கு அதை நிறுத்த ஒரே வழி தியேட்டரில் எல்லோரும் பார்க்கும்படியாக 'லேது..லேது .. ஒத்து...' என காட்டுக்கத்தல் போட, வெட்கப்பட்டு அம்மா (நுவ்வு இன்டிக்கி ரா.. என்று சன்னமாக மிரட்டி) விட்டுவிடுவார்கள்.
முக்கோண காய்கறி சமோசா, கல்ல மிட்டாயி, 8 track முறுக்கு, முட்டைகோசு வடை(பிளாசா தியேட்டரில் மட்டும்), டிர்ரிங்க் என்று பாட்டிலில் சாவியால் ஒலி எழுப்பியபடி பையன்கள் விற்கும் ‘சோடாலேர்’(சோடா கலர்) இதெல்லாமில்லாமல் தமிழ் படமா? அப்ப எங்களுக்கு MGR ராதா சலூஜாவை கல்யாணம் செஞ்சா என்ன, செய்யாட்டி என்ன...
காலேஜ் படிக்கும் வயதில் சென்ட்ரல் தியேட்டரில் மதியானம் 2 மணிக்கு மலையாள படம். ‘நடுவுல அந்த சீனை 3 நிமிஷம் புகுத்துவாங்க’ என நண்பன் சொல்ல அவசரமாக ஓடினோம். தியேட்டர் ஃபுல். பக்கா குடும்பப்படம். வில்லன் யாரோ பாலனாம். இன்டர்வல் வரை ஒன்றும் வரவில்லை. ‘இன்டர்வலுக்கு முன்னாடி போட்டா தியேட்டர் காலியாயிடும்டா.. கடசீ சீன்லதான் வரும்னு நம்பிக்கையோட சொன்னான் ஃப்ரெண்டு’. பாலன் தான் அடிக்கடி வந்தான். ரொம்ப வேர்த்துச்சு. கடேசி சீன் வந்து பாலனை போலீஸ் ஜீப்பில் ஏற்றி கல்யாணத்தோட சுபம் என முடித்தான். வெளிய வற்ரச்சே படத்தில் வராத அந்த சீன் போஸ்டரில் தெரிய, மக்கள் போஸ்டரை கோபமாக கிழித்தார்கள். பெரிய மார்க்கெட் அருகே டீ குடித்துவிட்டு ஜங்ஷன் பஸ்ஸை பிடித்தோம். கொஞ்ச நாளைக்கி யாரிடமும் இதை சொல்லவில்லை.
No comments:
Post a Comment