Friday, June 20, 2025

காலடி டூ குருவாயூர்

 நெருங்கிய பஹ்ரைன் நண்பன் Maheshkumar Narayan வீட்டு உபநயனம் விழாவில் கலந்துகொள்ள கேரளா-காலடி சிருங்கேரி சங்கர மடம் வந்திருந்தேன். பெங்களூரிலிருந்து கோவை மருதமலை சென்று தரிசனம் முடித்து காலடி வந்து சேர்ந்ததும், மனைவி உஷா கூகிளை பார்த்து ‘குருவாயூர் அங்கேர்ந்து 78கிமீ தூரம் தான்.. போய்ட்டு வந்துடலாமா?’ என கேட்க, என்ட குருவாயூரப்பனை தரிசிக்கும் ஆவல் மேலிட்டது. 80களில் ஒரு தரம் போயிருக்கிறேன்.

உபநயன விழாவில் சடங்குகள் பல கட்டங்களில் செய்விக்கப்படுவதால், நடுவே சில மணி நேரங்கள் கிடைக்க, மதிய சாப்பாடு கழிஞ்ஞு சட்டென காரை ஓட்டிக்கொண்டு செல்வதாக முடிவானது. மதிய சாப்பாடு திவ்யம். முளகூட்டான், அவியல், மோர்க்குழம்பு, அடப்பிரதமன், பாகற்காய் பச்சடி என ஃபுல் கட்டு கட்டி ‘யப்பா! போதும்.. ரொம்ப சாப்ட்டுட்மோம்.. கைய அலப்பிடறது உத்தமம்னு எழ எத்தனிக்கும்போது, சட்டென எங்கிருந்தோ என்ட்ரியான பாலக்காட்டு சமையல்கார மாமா போளியை மடித்து இலையில் வைத்து அதன் மேலே மணக்கும் சூடான பசு நெய்யை ஊற்றினார். நெய் கீழே சிந்தாவண்ணம் பாயைச்சுருட்டுவது போல போளியைச்சுருட்டி மூன்றே கடிகளில் வாயில் திணித்து, கண்களை மூடி ரசித்து சாப்பிட்ட கையோடு இலையில் சிந்திக்கிடந்த மீதி பூரணத்தையும் வழித்து உள்ளே தள்ளி ஒரு வழியாக காரை ஸ்டார்ட் செய்தேன்.
ரேடியோ எஃப்பெம்மில் யாரோ நடிகர் அனூப் மேனன் பழைய பாடல்களை தொகுத்து வழங்க, பிரேம் நசீர் படத்தின் ‘ஸ்வர்க்கம் தானிறங்ஙி வந்நதோ’ என தாசேட்டன் என்னை போளியில் ஊற்றிய நெய்யாக உருக வைக்க, வண்டி ஜூம்மென 70,80,90ஐ தாண்டியது.
அந்த ஒரு மணி நேரப்பயணம் ஒரு சுகானுபவம். அங்காமலி, கருக்குட்டி, கிழக்குமுரி, கொரட்டி, பெரும்பா, சாலக்குடி என விதவிதமான பெயர்களில் ஊர்கள். வழி நெடுக எல்லாமே கடைகள். காடுகளோ, மலைகளோ இல்லாமல் அந்த 50, 60 கிமீ முழுக்க சாலையின் இருமருங்கும் வீடுகளும் கடைகளும். பார்க்கவே செழிப்பாக இருந்தது. கிட்டத்தட்ட வளைகுடா நாட்டின் சாலையில் பயணம் செய்வது போன்ற உணர்வு. கடைகளில் ஒளி வெள்ளம். பிரம்மாண்டமான சூப்பர் மார்க்கெட்டுகள், கார் ஷோரூம்கள், பெரும் உணவு விடுதிகள், அரேபிய ஷவர்மா கடைகள். சாலையின் இடைநிலை (median) நேர்த்தியாக க்கட்டப்பட்டு நடுவே பூச்செடிகள். மூன்று வழிச்சாலையின் அடையாள வெள்ளைக்கோடுகள். சீரான ரோடில் வழுக்கிக்கொண்டு பாதுகாப்பான பயணம் அது.
அதிகபட்சமாக இந்தியாவிற்கு பணம் அனுப்புவது துபாய், அபுதாபியில் குடியிருக்கும் இந்தியர்கள் தானாம். அதுவும் ரிசர்வ் வங்கியின் தரவுப்படி அதிக அளவில் பணம் அனுப்பப்படுவது கேரளாவுக்கு தான் என்பதை நாடே அறியும். இந்தியாவின் மொத்த உள்நோக்கிய பணத்தில் 19 சதவீதத்தைப் பெறுவது கேரளா. அடுத்து மஹாராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் தமிழகம் எல்லாம் ஏழெட்டு சதவிகிதம் தானாம். உத்திரப்பிரதேசம் வெறும் 3% மட்டுமே. ஏன் இருக்காது! பஹ்ரைனில் சிகை அலங்காரம் மற்றும் இஸ்திரி கடைகள் மட்டுமே உ.பி பய்யாக்கள். மற்றபடி ஆட்டோமொபைல், கட்டுமானம், தச்சு வேலை, சிறு மற்றும் பெறு வணிகங்கள், உணவகங்கள், டாக்டர்கள், செவிலியர்கள் எல்லாம் மலையாளிகள் தான். அதனால் தான் சாலக்குடி போன்ற டவுன்கள் கூட துபாய் போல பளிச்சென செழிப்பாக உள்ளன. வடிவான சேச்சிகளும் தங்க நகைகள் மினுமினுக்க சீராக திருத்தப்பட்ட புருவங்களுடன் கியா செல்டோஸில் சர் சர்ரென நம்மை முந்திச்செல்கிறார்கள்.
திரிஷ்ஷூர் தாண்டி அடுத்த 20 நிமிட பயணம் வாழ்க்கையில் மறக்க முடியாதது. கேரள இயற்கை அழகு. அடர்ந்த மரம் செடிகொடிகள் இருபுறம். வளைந்து வளைந்து செல்லும், எதிரே வரும் வண்டிகள் உரசிக்கொள்ளாத குறையாக, மிகக்குறுகலான சாலை. பெரும்பாலும் பூட்டிக்கிடக்கும் பெரிய பெரிய வீடுகள். வாசலில் ஹ்யுண்டாய் ஐ-20 கார்கள். ஏராளமான சாயா கடைகள், பேக்கரிகள். அமோகமான வியாபாரம் எங்கும். ஆங்காங்கே மக்கள் வரிசையாக மெழுகுவர்த்தியுடன் தேவாலயங்கள் முன் நின்று கொண்டிருந்தார்கள் (வீடியோ பார்க்க!)
குருவாயூரில் கூட்டமோ கூட்டம். செல் போன், ஸ்மார்ட் வாட்ச் எல்லாவற்றையும் கழற்றிக்கொடுத்துவிட்டு டோக்கன் வாங்கிக்கொண்டோம். செக்யூரிட்டி ஒருவரிடம் போய், பஹ்ரைனில் கற்றுக்கொண்ட சொற்ப மலையாளத்தில் ‘ இவ்வடே கூட்டம் ண்டு. ஸ்பெஷல் டிக்கெட் ஏதெங்கிலும் உண்டோ?’ என எதையோ நான் உளறிக்கொட்ட, அவர் ‘டிக்கெட் கவுன்ட்டர் உதர் ஹெ’ என கை காட்டினார். புரிந்துவிட்டது எனக்கு. மலையாளத்தில் சம்சாரிப்பதை தற்காலிகமாக நிறுத்திக்கொண்டேன் மரியாதை நிமித்தம். டிக்கெட்டை காட்டியதும் அவர்கள் திறந்து விட்ட கேட்டில் நுழைந்தால் நேராக சாமிக்கு மிக அருகில் வரிசையில் சேர்ந்து கொண்டோம். பத்தே நிமிடத்தில் திருப்திகரமான தரிசனம் முடித்து வெளியே வந்து திரும்ப பனியனையும் சட்டையையும் மாட்டிக்கொண்டு, ஒரு சாயா குடித்து விட்டு காலடி சங்கர மடம் சத்திரம் நோக்கி பயணம்.
வெள்ளை மற்றும் மஞ்சள் சேவை.. அது கழிஞ்ஞு சூடான சாதத்தில் கலந்த தயிர்சாதம் வயிற்றில் செட்டிலாக, சுழட்டி அடித்தது தூக்கம். மறுநாள் காலை உபநயன விழா. அதிலும் காலை டிபன் பற்றி தனி வியாசமே எழுதணும்.

No comments:

Post a Comment