பட்டத்து ராணி Srinidhi Sriprakash
சப்தஸ்வரங்கள் லிட்டில் மாஸ்டர்ஸ், ரேடியோ சிட்டி சூப்பர் சிங்கர் புகழ் ஶ்ரீநிதி அவர்கள் Subhasree Thanikachalam அவர்கள் வழங்கும் QFR (Quarantine From Reality) யில் பாடும் பாடகிகளில் ஒருவர். பி.சுசிலா, ஜானகி, LRஈஸ்வரி என எல்லோருடைய பாடல்களும் இவருக்கு அசாத்தியமாக வருகிறது.
‘கேட்பதில் தீரும் உங்கள் தாகம்’ என லேசான நடுக்கத்துடன் LRE அவர்களே வியக்கும்படி பாடுவார் ஶ்ரீநிதி. பாடல் ‘ஹலோ மை டியர் ராங் நம்பர்’ (QFR-89). ‘நேரிலே பார்த்தால் என்ன லாபம்’ வரியில், உள்ளோசையை (கமகம்) கவனியுங்கள்! அது ‘லாபம்’ அல்ல.. ‘ல..ஆ.. ப.. ம்..ம்..ம்’. இசையொலிகளுக்கு அழகூட்டும் ஒலி அசைவுகள்/அலைவுகளை எவ்வளவு நுணுக்கமாக சிரமமின்றி பயன்படுத்துகிறார் ஶ்ரீநிதி. பாடலின் சிறப்பிற்கு இது போன்ற nuances அவசியம்.
‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ பாடலின் ஈர்ப்பினால் மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த பாடல் ‘அம்மம்மா கேளடி தோழி’ அதே ராகத்தில் (சாருகேசி). QFR பாடல்களில் ரசிகர்களை கவர்ந்த பாடல்களில் ஒன்று இது (QFR-50). ஶ்ரீநிதியின் குரல் பிசிரில்லாமல் அபாரம்.
‘உன்னழகை கண்ணியர்கள்’ (QFR-215) பாடலில் ‘சொன்னதினாலே’, ‘ஆனதினாலே’, ‘கொண்டதினாலே’ என் முதல் வரியில் கட் செய்து அடுத்த வரியில் சொன்னதினாஆஆஆலே.. ஆனதினாஆஆஆலே.. என இழுப்பார் பாருங்கள். அபாரம் ஶ்ரீநிதி!
இவர் பாடிய ‘பாடவா உன் பாடலை (QFR-318) மற்றும் ‘அந்த சிவகாமி மகனிடம்’ (QFR-177) இரண்டிலும் ஜானகி மற்றும் சுசிலா அவர்களின் பாடல் நுணுக்கங்களை காணலாம்.
சினிமாவில் பொதுவாக மெட்டு அமைத்து பாட்டெழுதுவார்கள். சில பாடங்களுக்கு இன்ன ராகத்தில் தான் இசையமைக்கிறோம் என நினைத்து செய்யாமல் பாடலில் வரும் வார்த்தைகளின் அடிப்படையிலும் ராகத்தை தேர்வு செய்வதுண்டு. அப்படி மிக கடினமான வரிசைக்கிரமம் (sequence) உள்ள பாடல் தான் ‘பட்டத்து ராணி பார்க்கும் பார்வை’ (QFR-250).
Subhasree அவர்கள் சொன்னது போல ராஆஆனி.. பாஆஆஆர்க்கும்… பாஆஆர்வை என ஆகாரங்கள் மற்றும் கடினமான வார்த்தை பிரயோகங்கள். MSV அவர்கள் இப்பாடலுக்கு தேர்வு செய்த வித்தியாசமான ராகம் கலிங்கடா. (‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது’ பாடலும் கலிங்கடா ராகம் தான். அதுவும் எகிப்திய பிண்ணனி செட்டப் மற்றும் இசை)
‘பட்டத்து ராணி’ பாடல் MSV அவர்களின் இசையில் ஒரு மைல்கல். நூற்றுக்கணக்கில் இசை வாத்தியங்கள். பெர்ஷியன் மற்றும் உஸ்பெக் இசை கலந்த ‘இப்பாடலின் வெற்றி இசையினாலும் பாடல் வரிகளினாலும் மட்டுமல்ல. முக்கியமாக பாடகி LRE அவர்களாலும் தான்’ என MSV அவர்களே சொல்லுவார்.
இப்பாடலை LRE அவர்களுக்கிணையாக ஶ்ரீநிதி பாடி வேறு லெவலுக்கு தாவி விட்டார். பாடல் ஆரம்பத்தில் ‘லா..லா..லா..’ என ஹை பிட்சில் sopranoவில் ஆரம்பித்து ‘ஹா..ஆ..ஆ..’ என சற்று nasal குரலில் LRE அவர்களைப்போலவே முடித்து பாடலுக்கு மகுடம் சேர்த்துள்ளார். சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது ஶ்ரீநிதி பாடிய இப்பாடலில்.
QFRக்கு முதன் முதலில் இவர் பாடியது ‘என்னை எடுத்து தன்னை கொடுத்து’ (QFR-13). இந்த ஒரு பாடலை கேட்டாலே போதும், இவர் பின்னணிப்பாடகர் ஆவதற்கு எவ்வளவு சாத்தியக்கூறுகள் உள்ளனவென. பக்க வாத்தியங்களில்லாமல் இவர் குரலை மட்டும் கேட்பதற்கு மிக இனிமை. சுசிலாம்மா இப்பாடலை கேட்டிருக்கிறார்களா தெரியாது. மிக்க மகிழ்ச்சியடைவார்.
No comments:
Post a Comment