கடந்த 27 வருடங்களாக பஹ்ரைனில் தானியங்கி (ஆட்டோமாடிக்) இடது பக்க வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தாலும் தாயகம் வரும்பொழுதெல்லாம் கியர் வண்டியில் கார் ஓட்டும்போது இட வல மாற்றம் என்ற சிரமம் இருந்ததே இல்லை. 90களில் ஓட்டுநர் உரிமம் எடுக்க மாருதி-800 இல் பம்பாய் செம்பூர் ரோடுகளில் பழகியபோது அருமையாக சொல்லிக்கொடுத்திருந்தார் அந்த மராட்டிய முதியவர்.
பெங்களூர் சாலைகளில் அதிகமாகவும் திருச்சி, மதுரை, சென்னை, பாண்டி, கேரளா என எல்லா இடங்களுக்கும் நெடுஞ்சாலைகளில் கார் ஓட்டுவது நல்ல அனுபவம்.
சாலைகள் சரியாக பராமரிக்கப்பட்டிருந்தால் பயணங்கள் சுகம் தான். 80களில் நான் பார்த்த திருச்சிக்கும் இப்போதைய திருச்சிக்கும் நிறைய வித்தியாசம். முன்பு சாலை முழுவதையும் ஆக்கிரமிக்கும் வாகனங்கள், குறுகலான சாலைகள், சடாரென கடக்கும் மக்கள். ஆனால் தற்போது சாலைகள் பளிச்சென சுத்தம். நடைபாதை கடைகளை அப்புறப்படுத்தி, சாலைகள் விரிவாக்கப்பட்டு இருபுறமும் கோடுகள் போட்டு, பாலக்கரை போன்ற பகுதிகளில் மேம்பாலங்கள், அங்கங்கே கார் நிறுத்தங்கள், புறநகர் வழிச்சாலைகள் என வாகனங்கள் எங்கும் நிற்காமல் சீராக ஓடிக்கொண்டிருக்கின்றன. வருடாவருடம் வாகனங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டு போனாலும் திருச்சி நகரம் அதை சந்திக்க தயார் என்ற அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.
சென்னை மாநகரத்தினுள் வாகனம் ஓட்டுவது எனக்கு பிடிக்கும். டிராஃபிக் ஜாம் எதுவுமில்லாமல் வளைந்து வளைந்து செல்லும் அழகான மரங்களடர்ந்த சாலைகள், சட்டென எதிரே வரும் மேம்பாலங்கள், எல்லா இடங்களிலும் போலீஸ்காரர்கள் டிராஃபிக்கை ஒழுங்கு படித்தி, நிறைய சிக்னல்களுடன் வாகன ஓட்டம் வெகுவாக சீராக்கப்பட்டுள்ளது.
இருவழிச்சாலைகள் வந்த பின் விபத்துக்கள் கனசமாக குறைந்துள்ளன. முன்பெல்லாம் திருச்சி-தஞ்சை நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் வாகனங்கள் மோதிக்கொள்வதாலும், வாகனங்களை முந்தும்போது எதிரே வரும் வாகனத்துடன் மோதி ஏற்படும் கோர விபத்துக்களால் பெரும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன. ஆனால் தற்போது அது போன்ற விபத்துக்கள் கனிசமாக குறைந்திருந்தாலும், பின்னால் வந்து இடிப்பதும், முந்திச்செல்ல வேகம் கூட்டும்போதும், லேன் மாறும் போதும் இரு வழிச்சாலையாக இருந்தாலும் விபத்துக்கள் தொடர்கின்றன. புறநகர் நெடுஞ்சாலையில் கார் ஓட்டுவதற்கென முறையான பயிற்சி அல்லது அனுபவம் அவசியம் தேவை.
வளைகுடா நாடுகளில் ஆறு அல்லது எட்டு வழிச்சாலைகளில் அபாயமின்றி பாதுகாப்புடன் வண்டி செலுத்துவது போன்ற அமைப்பு இன்னும் இங்கு வரவில்லை. பஹ்ரைனில் 100 கி.மீ வேகத்தை கடந்தால் அங்கங்கே வைக்கப்பட்டுள்ள ரடார் காமெராவில் சிக்கிக்கொள்வோம். வாகனம் ஓட்டும்போது செல்ஃபோன் பயன்படுத்துவது, சீட் பெல்ட் போடாதிருப்பது, மடக்கென அவசரமாக தண்ணீர் எடுத்து குடிப்பது எல்லாமே காமெராவில் படம் பிடிக்கப்படும். அபராதத்தை வாகனத்தின் வருடாந்திர புதுப்பித்தலுக்குள் கட்டலாம். பிடிபட்ட அன்றே அபராதம் செலுத்தினால் 50% கழிவு. மூன்று முறை பிடிபட்டால் உரிமம் ரத்து.
நெடுஞ்சாலை பயணம் பற்றி குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அதிலும் நீங்களே வண்டி ஓட்டக்கொண்டு. அது குறித்து சக ஓட்டுநர்களுக்கு சில ஆலோசனகள்:
1. நீங்கள் வண்டி ஓட்ட, பக்கத்து இருக்கையில் மனைவி.. உங்கள் மனைவி
. நெடுந்தூர பயணம். ஆஹா.. அந்த க்ஷணத்தை அப்படியே ரசித்து அனுபவியுங்கள். சுவாரசிமாக பேசிக்கொண்டே வண்டி ஓட்டுங்கள்.

2. உங்களுக்கோ மனைவிக்கோ பிடித்த நல்ல தமிழ், ஹிந்தி, ஆங்கிலப்பாடல்கள் சன்னமான ஒலித்துக்கொண்டிருக்கட்டும். அனிருத்தின் ‘தட்லாடம் தாங்க தர்லாங்க சாங்க..�உள்ளார வந்தானா பொல்லாத வேங்க’ போன்ற குத்து பாடல்கள் ஆபத்து. அதற்காக பெரும் இரைச்சலுடன் ஹாரிஸ் ஜெயராஜின் காதல் பாடல்களும் வேண்டாம். ‘நான் பழைய பாடல்களை விரும்புகிறவன்’ என்பவர்களும் ‘ஆடிய ஆட்டமென்ன!’ போன்ற தத்துவ/சோக பாடல்களை தவிர்க்கலாம்.
3. ‘ பெரியவ கல்யாணம் இப்ப வேண்டாங்கறாளே!… சின்னவனுக்கு நீங்க ரொம்ப இடம் கொடுக்கறீங்க ஆமா!’ போன்ற சென்சிடிவ் டயலாகெல்லாம் அப்போது வேண்டாம். பெங்களூரிலிருந்து ஹோசூர் தாண்டுவகற்குள் உங்களுக்குள் சண்டை வந்து விடும்.
4. மிதமான வேகம் போதும். மற்றவர்களை முந்திக்கொண்டு தலை தெறிக்க வண்டி ஓட்ட வேண்டாம். எவ்வளவு ஸ்பீடாக போனாலும் எல்லோரும் ஶ்ரீபெரும்புதூரில் சந்திப்பீர்கள்.
5. இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை வண்டியை ஒரத்தில் நிறுத்தி விட்டு கையை காலை நீட்டி ஸ்ட்ரெட்ச் செய்வதால் புத்துணர்ச்சி கிட்டும். களைப்பு தெரியாது. வண்டி இஞ்சினுக்கும் அவ்வப்போது ஓய்வு தேவை.
6. ஆளறவமற்ற நெடுஞ்சாலையில் நிறுத்த வேண்டாம். நிறுத்தப்பட்ட வண்டிகளை இடித்து ஏற்படும் விபத்துக்கள் எண்ணிலடங்கா. சரியான இடம் என்றால் எதாவது சுங்கச்சாலை (டோல் கேட்) தான். அங்கேயே பக்கத்தில் இளநீர் கிடைக்கும். வயிற்றுக்கு நல்லது.
7. டோல்கேட்டில் குறைவான வாகனங்கள் உள்ள கேட்டில் நீங்கள் வரிசையில் சேர்ந்துகொண்டாலும், பக்கத்து லேன் வேகமாக போகிறது என படாரென அங்கே குதிக்க வேண்டாம். ஓரிரு நிமிடங்கள் வித்தியாசம் தான்.
8. டாய்லட் வசதி பற்றிய, குறிப்பாக பெண்களுக்கு, கவலையே வேண்டாம். அநேகமாக எல்லா பெட்ரோல் பங்க்குகளிலும் சுகாதாரமான முறையில் கழிவறைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பிரதமரின் ஸ்வட்ச் பாரத் திட்டத்தின் சாராம்சங்களை விளக்கி பதாகைகளில் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆண் பெண் தனித்தனி கழிவறைகள், வெளியே வாஷ் பேசின், சுத்திகரிப்பான்(sanitiser) அனைத்தும் இத்திட்டத்தின் கீழ் வலியுறுத்தப்பட்டுள்ளன.
9. சரவணா பவன், கிருஷ்ணா இண் (கிருஷ்ணகிரி) போன்ற ஓட்டல்களில் காலை டிபன், மதிய உணவு சாப்பிடலாம். வண்டி ஓட்டுபவர்கள் பொங்கல், தயிர் சாதம் சாப்பிட்டால் தூக்கம் வரும் என்பதையெல்லாம் நம்ப வேண்டாம். வயிறு முட்ட சாப்பிட்டு வண்டி ஓட்டுவது தான் நல்லதல்ல.
10. ஆர்டர் செய்யும்போது ஒரு ப்ளேட் இட்லி என நீங்கள் எத்தனை தடவை சொன்னாலும் ‘இட்லி வடையா?’ என திரும்ப கேட்பார்கள். வடை, சோளேபூரி போன்ற எண்ணெய் பதார்த்தங்கள் பயணத்தின்போது தவிர்க்கலாம்.
11. காரில் போகும்போது நம்மூரில் கிடைக்காத அரிய வகை பொருட்கள் கிடைத்தால் தயக்கமின்றி வாங்கி டிக்கியில் (இடமிருந்தால்) போடுங்கள்.
12. ஃபுல் டாப் அப் என பெட்ரோல் டாங்க்கை முழுவதும் நிரப்புவது பாதுகாப்பானது அல்ல. கூகிள் மேப்பில் அடுத்து வரும் பெட்ரோல் பங்க்குகள், உணவகங்கள் எல்லாமே நீங்கள் பார்த்து தேர்வு செய்துகொள்ளலாம்.
13. நெடுந்தூரப்பயணம் என்றால் பெட்ரோல் போடும்போதே டயர் அழுத்தம் சரி பார்த்து வண்டி எடுப்பது உசிதம்.
14. அவரச தொலைபேசி அழைப்புக்களை மட்டும் ஏற்கலாம். ப்ளூடூத் வசதி காரில் இருந்தால் இன்னும் பாதுகாப்பு. ‘ஹலோ! எப்பிடி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சேன்னு தான் போன் பண்ணேன். பீஸ்ட் படம் பாத்துட்டீங்களா’ போன்ற கால்களை பூந்தமல்லி ஹைரோட்டில் பேசிக்கொல்லலாம்.(கொள்ளலாம் அல்ல)
ஜாலியாக, உற்சாகமாக, ஜாக்ரதையாக, பாதுகாப்பாக வாகனம் செலுத்துங்கள். உங்களை நம்பி உங்கள் குடும்பம் உள்ளது என்பதை மறக்க வேண்டாம்.
No comments:
Post a Comment