Friday, June 20, 2025

ஓம் பூர் புவஸ்ஸுவஹ…

சுமார் 20 வருடங்கள் முன்பு பஹ்ரைனில் நண்பர் Shyam Krishnan அவர்கள் தன் இல்லத்தில் காயத்ரி பூஜை ஒன்றை செய்தார். பூஜையை நடத்தியது என் நெருங்கிய நண்பர் காஞ்சி கணேஷ். காஞ்சி மடத்தில் பெரியவருடன் பத்து வருடங்கள் இருந்தவர். பஹ்ரைனில் பல வருடங்கள் இருந்து நிறைய தமிழர்களுக்கு பூஜைகள் நடத்திக்கொடுத்தவர்.
பூஜைக்காக சுமார் நான்கடி உயரத்திற்கு காயத்ரி தேவியின் படம் ஒன்றை வரையும் கட்டளை எனக்கு கிடைக்க, வித்தியாசமான படம், அதுவும் நான்கடி உயரத்திற்கு எப்படி வரைவதென யோசித்தேன். மனைவி Usharani Sridhar கொடுத்த ஐடியாவின் பேரில் கண்ணாடியில் வரைய முடிவு செய்தேன். அதற்கான glass paint, ஆபரணங்களுக்கான சமிக்கி போன்றவை வாங்கியாயிற்று. வெள்ளைத்தாளில் outline வரைந்து கண்ணாடியின் பின் புறம் ஒட்டி விட்டு முன் புறம் ப்ரஷ்ஷால் ஓவியம் வரைய வேண்டும். வித்தியாசமான அனுபவம். சுமார் 18 மணி நேரங்கள் ஆயிற்று. ஆபிசில் (ட்ராஃப்கோ) சர்தார்ஜி கார்பென்டர் ஒருவர் கண்ணாடியைச்சுற்றி மரத்தினால் சட்டம் அமைத்துக்கொடுக்க, கண்ணாடியில் ஓவியத்தை தொடர்ந்தேன். விடிகாலை 3 மணிக்கு முடித்து உருவப்படத்தை ஷ்யாம் வீட்டிற்கு கொண்டு சென்று 5 மணிக்கு மேல் பூஜை துவங்கியது.
கணேஷ் அவர்கள், ஆகமங்கள் கூறும் ஆலய அமைப்பு தொடர்பான கிரியை முறைகளுள் ஒன்றான ப்ராண பிரதிஷ்டையை அவ்வுருவப்படத்திற்கு முறையாக செய்து உயிர்ச்சக்தி வழங்கினார். பாதி பஹ்ரைன் இந்தியர்கள் கலந்துகொண்டது அந்த விமரிசையான பூஜை.
பூஜை முடிந்து அடுத்த 20 ஆண்டுகள் எங்கள் பூஜையறையில் ஆளுயர சாமி மண்டபத்தை அலங்கரித்துக்கொண்டிருந்தது அந்த காயத்ரி படம் (கடைசி படம் பார்க்க!) அதனால் ஒரு விதமான அதிர்வு என்றைக்குமே எங்கள் இல்லத்தில் உண்டு என நண்பர்கள் எல்லோரும் சொல்வதுண்டு.
6 மாதங்கள் முன்பு பஹ்ரைனை விட்டு கிளம்பும்போது எங்கள் முதல் கவலை அந்த காயத்ரி படத்தை எப்படி எடுத்துச்செல்வது என்பதே. சுமார் 20 கிலோ எடை. பெங்களூர் இல்லத்தில் பூஜை அறை கிடையாது. ஹாலிலேயே ஒரு சிறிய சாமி மண்டபம் அமைத்திருந்தோம். இந்தப்படம் அந்த மண்டபம் உள்ளே செல்ல இயலாது. சுமார் 12000 முறை மந்திரங்கள் சொல்லி பிரதிஷ்டை செய்விக்கப்பட்ட அந்த உருவப்படத்தை
வெறும் அலங்காரப்பொருளாக ஹாலில் வைத்துக்கொள்ள உஷாவிற்கு விருப்பம் இல்லை. தினசரி பூசைகள் செய்ய வேண்டும் அல்லவா! பத்திரமாக cardboard இல் pack செய்யப்பட்டு கண்டெய்னரில் கப்பலில் கொண்டு வரப்பட்ட காயத்ரி படத்தை மற்றொரு அறையில் வைத்திருந்தோம். எதாவது கோவிலுக்கு கொடுத்து விடலாமா எனவும் யோசனை.
காயத்ரியை ஒரு விருந்தினர் போல guest room இல் சுவற்றில் சாய்த்து வைத்திருந்தது மனசுக்கு திருப்தியாக இல்ல. சுவற்றின் மேலே ஒரு பெரிய புத்தக அலமாரி. ஏராளமான கனமான புத்தகங்கள். கப்பலில் கொண்டு வந்திருந்த மற்ற மரச்சாமான்கள், சோபா போன்றவையை நிலைநிறுத்தி, சுவற்றுக்கு புதிய வர்ணம், சமையலறை அலமாரிகள் என 3,4 மாதங்கள் நிறைய வேலைகள். காயத்ரியை மறந்து விட்டோம் என்ற குற்றவுணர்வு மெல்ல மேலோங்கத்தோன்றியது. ‘சரி! பழைய படம் அப்பிடியே இருக்கட்டும். சின்னதா வேற காயத்ரி படமாவது வரைஞ்சு சாமி மண்டபத்துல வைக்கலாமில்ல!’ என்ற மனைவியின் வேண்டுகோளையும் ‘இதோ செய்றேன்’ என தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். மொத்தத்தில் ஏதோ பெரிய தப்பு செய்கிறோமோ என்ற எண்ணம்.
சென்ற மாதம் ஒரு நாள் நள்ளிரவு 2 மணி வாக்கில் ‘டமார்’ என பெருஞ்சத்தம். தொடர்ந்து ‘தப.. தபா’ வென எதோ சரியும் சத்தம். பயந்தடித்துக்கொண்டு ஓடிப்போய் சத்தம் வந்த அந்த அறையில் பார்த்தால், அந்த புத்தக அலமாரி சுவற்றிலிருந்து அப்படியே சரிந்து கீழிறங்கி, பாதி புத்தகங்கள் தரையில் கிடக்க, சுவற்றில் அறையப்பட்ட 8 ஆணிகளும் கழன்று, புத்தக அலமாரி எந்த நேரத்திலும் தரையில் விழுவதற்கு காத்திருந்தது.
நம் மேல் புத்தக அலமாரி விழுந்து விடுமென பக்கத்தில் செல்லவும் பயம். சற்று தள்ளி நின்று பார்த்த போது தான் கவனித்தோம், புத்தக அலமாரி, சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த காயத்ரி படத்தின் (கார்ட்போர்ட் packing) மேல் அம்சமாக உட்கார்ந்திருந்தது. மரச்சட்டத்தினுள் கண்ணாடியும் உடையாமல் இருந்தது. தரையிலும், சற்று தள்ளி இருந்த கட்டிலிலும் இறைந்து கிடந்தன புத்தகங்கள். ஊரிலிருந்து வந்திருக்கும் என் மாமியார் வழக்கமாக அந்த கட்டிலில் தூங்குவதோ அல்லது புத்தக அலமாரியின் கீழே சேரில் அமர்ந்து புத்தகம் படிப்பது வழக்கம்.
ஆக, காயத்ரி தேவி என்னிடம் ஏதோ சொல்ல வந்திருப்பதாக உணர்ந்தேன். நேரம் கடத்தியது எவ்வளவு தவறு! தினமும் 20,25 முறையாவது காயத்ரி ஜெபம் சொல்பவன் நான். ட்ராஃபிப் சிக்னல், சினிமா தியேட்டர் என எந்த இடத்திலும் நான் சொல்லும் இந்த ஜெபத்தினால் முழு பயனும், மன நிம்மதியும் பெறுபவன் நான். ஆபிசில் எதாவது பிரச்னை, சிறிய உடல் உபாதை, சரியான முடிவு எடுக்க முடியாதபடி மனக் கிலேசம் என எல்லாவற்றிற்கும் உடனடியாக தீர்வோ, மன அமைதியோ எனக்கு கிடைக்க பெரிதும் உதவுவது இந்த மந்திரம் தான்.
மேற்படி சம்பவம் எனக்கு இட்ட தெய்வத்தின் கட்டளை. உடனே புதிய படம் ஒன்றை வரையத்துவங்கினேன். பத்து நாட்கள் தினமும் சில மணி நேரங்கள் வரைந்து காயத்ரியின் புதிய படம் A3 சைஸுக்கு வரைந்து இதோ புதிய சாமி மண்டபத்தில். உஷாவிற்கு திருப்தி.
இன்று மாலை ஆருயிர் நண்பன் Ganapathi Subramanian பெங்களூர் வந்திருந்தான். காயத்ரி படத்தின் முதல் பிரதி அவனுக்குத்தான் கொடுத்தேன். காயத்ரி ஜெபத்தின் சக்தியையும் மகிமையையும் எனக்கு விளக்கி, தினமும் அம்மந்திரத்தை ஜெபிக்க வைத்ததும் அவன் தானே!
"ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்."

No comments:

Post a Comment