பஹ்ரைனில் ஐயப்பன் பூஜை மிகவும் விமரிசையாக நடக்கும்..
காலை ஆரம்பிக்கும் பூஜை மற்றும் பஜனை விருவிரு என சூடு பிடித்து மதியம் ஒரு மணி அளவில் கட்டுக்கடங்காத கூட்டம். உள்ளே ஒவ்வொருவராக வரும் நண்பர்கள் சுவரோரம் உட்கார இடம் தேடுவார்கள்(சாய்ந்து கொள்ள). போன் மணியடிக்க ஓரிருவர் அவசரமாக எழுந்து ‘பரயு! ஞான் பின்னே விளிக்காம்!’ என ஓடுவார்கள்.
அப்போது உள்ளே நுழையும், எல்லோருக்கும் பரிச்சையமான தம்பதியை எல்லோரும் தலை நிமிர்த்தி பார்ப்பார்கள். பையன் முருகன் நாராயணசாமி. பெயருக்கு ஏற்றார் போல அழகான, திருத்தமான களையான முகம். தன் நீண்ட சடைமுடியை அள்ளி முடித்து ரப்பர் பேண்ட் போட்டிருப்பார். நெற்றியில் பளிச்சென விபூதி குங்குமம் அவரை பார்த்தவுடன் வணங்கத்தோன்றும். டீஷர்ட், வேஷ்டியுடன் வந்து முன்னால் உட்கார்ந்து பஜனையுடன் பஜனையில் ஐக்கியமாகி விடுவார்.
உச்ச ஸ்தாயியில் அல்முல்லா கார்கோ கண்ணன் அண்ணா பழனி மலை முருகன் பாடல் பாடுவார். அவர் முடித்த கையோடு பின்னால் ஏழுமலையான் பாடலை விசுவநாதன் கணீரென ஆரம்பிக்க நண்பர் Anand Subramanyam இன் அபாரமான மிருதங்கம். Vinod R.Krishnan , Sridhar Kalyanaraman மற்றும் Ramesh Ram என ஒவ்வொருவராக பாடுவார்கள். பூஜை பண்ணி வைக்கும் சுந்தர் Sunder Ganesh அவர்கள் அசராமல் பத்து பதினைந்து பாடல்கள் பாடுவார். ஆர்மோனிய பெட்டியுடன் நடுநாயகமாக உட்கார்ந்து விட்டலா… விட்டலா என அவர் ஆரம்பித்தால் பூஜை முடியப்போகிறது என அர்த்தம். சுமார் 20 நிமிடம் நம்மை பக்திப்பரவசத்துடன் புல்லரிக்க வைத்துக்கொண்டு போவார்.
விசுவநாதன்-ராஜி Raji Suresh தம்பதியினர் வீட்டிலிருந்து நிசான் பிக்கப்பி்ல் பெரிய பெரிய பாத்திரங்களில் மகாப்பிரச்சாதம் வந்திறங்க, சாம்பார் சாதம், அலுமினியம் ஃபாயிலில் சப்பாத்தி, நெய்யில் வறுத்து தூவிய தேங்காய் பற்களுடன், பஞ்சசாரம், ஏகத்துக்கும் தேங்ஙா பால் விட்ட பாசிப்பருப்பு பிரதமன், கார்ட்போர்ட் அட்டைப்பெட்டியில் அப்பளம், பிளாஸ்டிக் ப்ளேட்களுடன் வந்திறங்க, ஜிம் பாடியுடன் நாலைந்து இளைஞர்கள் எழுந்து ஓடிப்போய், பஜனைக்கு இடையூறு இல்லாமல் அந்தப்பக்கம் அறையில் கொண்டு போய் வைப்பார்கள். ஆரத்தி விளக்கிற்கு நெய் ஊற்றி திரியை ஏற்றி ‘ஓம் ஜெய ஜெயதீஷ ஹரே’ என தீப ஆரத்தியுடன் பூஜையை முடிப்பார்கள்.
பூஜை முடித்து அங்கங்கே ‘சுகந்தன்னே?’…. ‘நாட்டுக்கு போய் வந்நோ?’ .. ‘நிங்கள் நாட்டுக்கு எப்ப போறேள்?’ போன்ற பாலக்காட்டுத்தமிழ் விசாரிப்புகளின் நடுவே, நண்பன் வெங்கடேஷ் Venkitesh Ramanathan என்னிடம் வந்து அந்த முருகனை அழைத்து வந்து ‘அண்ணா! நேரத்தே ஞான் சொன்னேனில்லியா! இது என் ஃப்ரெண்டு முருகனாக்கும்’ என அறிமுகப்படுத்த அழகாக சிரித்தார் அந்த இளைஞர். ‘அண்ணா! நீங்க வெகேஷனுக்கு திருச்சி வந்திருந்தப்ப நான் கும்பகோணத்துல இருந்து போன் பண்ணேன் இல்லியா? ஒரு ஜாப் வேணும்னு கேட்டிருந்தேன் ஞாபகமிருக்கா?’ என அந்த இளைஞர் அறிமுகப்படுத்திக்கொண்டு, பிறகு பல வருடங்களாக என் நெருங்கிய நட்புக்குழாத்தில் ஒருவராக இருப்பவர்.
பூர்வீகமான கும்பகோணத்தில் படித்து வளர்ந்தவர். பஹ்ரைனில் பல வருடங்களாக இருப்பவர். காதல் மனைவி ரதி Bhahirathi Venugopalan படு ஸ்மார்ட். கலகலவென சிரித்த முகத்துடன் அரட்டையடிக்கும் சகலகலாவல்லி. அருமையான ஆங்கிலம் வேறு. நவராத்திரி விழாவின் போது தவறாமல் பரஸ்பரம் வீட்டிற்கு விஜயம் செய்வதுண்டு. பஹ்ரைனில் காணூ டொயோட்டா கம்பெனியில் நல்ல வேலையில் இருப்பவர். ரஜினியின் தீவிர ரசிகர். ரஜினி பட ரிலீஸ் அன்று முதல் காட்சிக்கு ரஜினி டீஷர்ட்டுடன் வந்து விடுவார்.
சில மாதங்கள் முன்பு பஹ்ரைனை விட்டு நான் கிளம்பும்போது ‘அண்ணா! உடனே உங்கள பாக்கனும்’ என சொல்லி மனைவியுடன் வந்து அற்புதமான பரிசு ஒன்றை தந்து விட்டுச்சென்றனர் முருகன்-ரதி தம்பதி.
இன்று முருகனுக்கு பிறந்தநாள். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முருகன்!
No comments:
Post a Comment