Friday, June 20, 2025

உத்தரகாண்டம் ஔலியில் ஓரிரவு

 உயிரை கையில் பிடித்துக்கொண்டு மைனஸ் 4 டிகிரி குளிரில், இரவு 10 மணிக்கு மேல் ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளையும் பல மண் சரிவுகளையும் சர்வ ஜாக்ரதையாக கடந்து ஒரு வழியாக மலை உச்சிக்கு ‘ஹர ஹர மஹாதேவ’ மற்றும் ‘நாராயண நாராயண’ என உதடுகள் துடிக்க வந்து சேர்ந்தோம். அந்த ஊரின் பெயர் ஔலி. உத்தரகாண்ட் மாநிலத்தின் அழகிய மலைநகரங்களில் ஒன்று. கடல் மட்டத்திலிருந்து சுமார் 9ஆயிரம் அடி உயரத்தில் பரந்த சமவெளியில் உள்ளது.

கீழே மற்றொரு மலைநகரமான ஜோஷிமட்டில் இருந்து சுமார் 14 கி.மீ மலைப்பாதையில் இது போல ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணம் செய்தது தான் ஔலி வந்து சேர முடியும். வாழ்க்கையில் மறக்க முடியாத பயணம் அது.
தேவபூமி என அறியப்படும் உத்தரகாண்ட் மாநிலத்தின் புகழ் பெற்ற மலை நகரங்கள் இவை. அங்கிருந்து மேலும் 70 கிமீ தூரத்தில் உள்ள பத்ரிநாத் ஸ்தலம் முழுக்க பனி சூழ்த்து விட்டதால் தற்போது மக்கள் அங்கு செல்ல தடையாம்.
குறுகிய சாலை, ஒரு பக்கம் அதள பாதாளம், மறுபக்கம் வாகனங்களை உரசும் மலைப்பாறைகள், எதிரே வேகமாக கீழ் நோக்கி வரும் வாகனங்கள், கும்மிருட்டு, நடுவே ஊ.. ஊ.. வென சைரன் எழுப்பியபடி நம்மை கடந்து செல்ல முடியாமல் திணறும் ஆம்புலன்ஸ், மண் சரிவால் பாதி சாலை விழுங்கப்பட்டு ஒற்றையடிப்பாதை போல சாலைகள் ஆங்காங்கே.
சரி மலை உச்சியில் ஔலி டவுன் வந்து சேர்ந்தும் நாம் செல்ல வேண்டிய செம்வால் ஹோட்டலை காணோம். ஒரே இருள். எந்த பக்கம் திரும்பினாலும் அதள பாதாளமோ என பயம். காரை எங்கோ நிறுத்தி விஜாரித்ததில் மேலும் இரண்டு கிமீ தொலைவில் ராணுவ முகாம் அருகே ஹோட்டல் இருப்பதாக தெரிந்து கொண்டு மேலும் முன்னேறினோம். ராணுவ முகாம் கேட் அருகே ஒரு சிப்பாய் எங்களை நிறுத்தி அதற்கு மேல் செல்ல முடியாது என்றதும் துனுக்குற்றோம். பின் எங்கு தான் செல்வது! பேசாமெ கீழே ஜோஷிமட் போயிடலாமாவென யோசிக்கும்போதே எங்க கூட வந்திருந்த சாகர் ஷர்மா அங்கிருந்தே ‘இங்க யாருப்பா செம்வால்’ என அப்பிரதேசமே எதிரொலிக்க கத்தினான். என்ன ஆச்சரியம்! கீழே கொஞ்சம் பள்ளத்தில் தூரத்தில் எங்கோ பளிச்சென விளக்கு எறிய ‘தோ.. வந்துட்ருக்கேன்பா! (ஹான்! மே ஆரஹா ஹூன்) ’ என மற்றொரு எதிரொலி ஹிந்தியில்.
அடுத்த பத்து நிமிடத்தில் அந்த பழங்கால விடுதியில் இருந்தோம். விடுதியை சுற்றிலும் எங்கும் இருள். விடுதியை நடத்தும் நரேஷ் செம்வால் மாலை 8 வரை எங்களுக்காக காத்திருந்து, நாங்கள் வரவில்லையென்றதும் ஷட்டரை மூடி விட்டதாக சொன்னார். வெட வெட குளிர். அறையில் ஹீட்டர் இருந்தது. அப்பாடா நிம்மதி! எங்களுடன் சாகருக்கு எக்ஸ்ட்ரா கட்டில் போட 500 ரூபாய். சட்னு சொல்லிடுங்க.. உங்களுக்கு ரொட்டி, சப்ஜி பண்றோம். அடுத்த ஒரு மணி நேரத்துல இருந்து கரண்ட் இருக்காது காலை வரைக்கும் என குண்டை போட்டார். ‘பயப்படாதீங்க. ஹீட்டர் வெட்பம் இரவு முழுக்க இருக்கும். கம்பளியை போர்த்திக்கிட்டா குளிரே தெரியாது’
விடுதிக்கு வெளியே ஒரு பெரிய கடை வைத்திருக்கிறார். ‘உங்களுக்கு என்ன வேணும்? இங்க இல்லாத சாதனமே கிடையாது ’ என சவால் விட்டார். மளிகை, சோப்பு, பவுடர், காலணிகள், துணிமணி ஸ்வெட்டர், மாகி நூடுல்ஸ், பொம்மை, மருந்து, ஜீன்ஸ் வகைகள், மெழுகுவர்த்தி, பெப்ஸி, ஸ்வீட், கேக் என கணக்கிலடங்கா பொருட்கள். எந்த பொருள் கேட்டாலும் எடுத்து காட்டுகிறார். அசந்து விட்டோம்.
சீன எல்லைக்கு சுமார் 100 கிமீ தொலைவான இவ்வளவு ஒதுக்குப்புறமான இடத்தை எப்படி தேர்வு செய்தீர்கள் எனக்கேட்டால் சிரிக்கிறார் செம்வால். ‘எங்களுக்கு பூர்வீகம் டெஹ்ரி. செம்வால் எனும் எங்கள் குலத்தவர் பண்டித்கள். கங்கோத்ரி கோவிலை முழுவதும் பராமரிப்பவர்கள். பூஜை, கோவில் சேவை என எல்லாவற்றையும் விட்டு விட்டு 80களில் டெஹ்ரியை விட்டு எங்கப்பா கிளம்பி ஔலி வந்து இவ்விடத்தை வாங்கி சிறிய வீடு மற்றும் விடுதியை கட்டினார். பின் இந்த பகுதியை ராணுவம் எடுத்துக்கொண்ட போது எங்களை அவர்கள் விரட்டவில்லை. ராணுவ முகாமை ஒட்டியே இருக்கிறோம். பனி படர்ந்த ஒதுக்குப்புறமான இவ்விடம் நல்ல சுற்றுலா மையம். நாளை காலை வெளிச்சத்தில் பாருங்க தெரியும் என தூங்க கிளம்பினார். ‘அது சரி! நாங்க வர்ரச்சே ஆம்புலன்ஸ் சைரனோட போச்சே! ஏதும் விபத்தா?’ என வெள்ளந்தியாக கேட்ட எங்களுக்கு அவர் கொடுத்த பதில்: ‘விபத்தில்லே.. குளிர்ல விரைச்சி 2 பேர் செத்துக்கிடந்தாங்களாம். நீங்க தூங்க போங்க’. எங்கேர்ந்து வரும் தூக்கம்!
மறுநாள் காலை எழுந்தால் ஆச்சரியம். அவர் சொன்னது போல எங்கு பார்த்தாலும் பனிப்படலம். ரம்மியமான குளிர். கைகளால் பனியை அள்ளினாலும் ஜில்லெனவே இல்லை. நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். போட்டோ எடுத்தது போதும் என ராணுவத்தினர் எச்சரிக்க அங்கிருந்து கிளம்பினோம். பனிச்சறுக்கு (Skiing) விளையாட்டு இங்கே பிரசித்தம். இரண்டுநாள் கழித்து ஜோஷிமட்டில் இருந்து கேபிள் காரில் மறுபடி இங்கே வந்து பனிச்சறுக்கு செய்தோம். இந்தோ-திபெத் பார்டர் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளதாம் அப்பகுதி. செம்வால் தன் மஹேந்திரா வேனை எடுத்துக்கொண்டு பொருட்கள் வாங்க கீழே ஜோஷிமட் கிளம்பினார்.
ஜோஷிமட் நகர் முழுக்க முழுக்க சுற்றுலா பயணிகளால் கொழிக்கிறது. நூற்றுக்கணக்கில் மஹேந்திரா பொலேரோ வேன்கள் ஔலிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பறக்கின்றன. ஒவ்வொரு ஐந்தாவது கடையும் முடிதிருத்த நிலையங்கள். ஒவ்வொரு நான்காவது கடையும் ஸ்வெட்டர் மற்றும் உடைகள் விற்கின்றன. நூற்றுக்கணக்கில் டீக்கடைகளும் உணவகங்களும். அடுத்தடுத்து வரிசையாக லாட்ஜ்கள். 24 மணி நேரமும் சுற்றுலா பயணிகள் வந்தும் போய்க்கொண்டும் இருக்க, நகரில் ஏராளமாக பணம் புழங்குவது தெரிகிறது. ஆனால் எங்கும் பணமில்லா பரிவர்த்தனைகள். கூகிள்பே, பேடியெம் என சாதாரண ஜிலேபி சாப்பிட்டாலும் ஜிலேபி தாம்பாளத்தின் நடுவே QR கோட் வைக்கப்பட்டு நாம் கைப்பேசியை முடுக்கி பண பரிவர்த்தனை செய்ய மிகவும் வசதி. சாரிசாரியாக மலை மேல் ஏறி ட்ரெக்கிங் செய்ய இளைஞர்கள் வந்திறங்க அதற்கென பிரயோகிக்கப்படும் ஷூக்கள், ஊன்றுகோள்கள், தொப்பிகள் என விற்பனை அமோகமாக போகிறது.
மிலிட்டரி ஸ்டோர் என ஓரிரு கடைகள் வெறும் இராணுவ சம்மந்தப்பட்ட பொருட்களை விற்கிறார்கள். புத்தம் புதிய ஸ்வெட்டர், ஜாக்கெட், ராணுவ குல்லா, உல்லன் சாக்ஸ், ஷூக்கள் என ராணுவத்தினர் உபயோகிக்கும் பொருட்களை (இராணுவ சீருடை தவிர) பொது மக்களுக்காகவும் தயாரித்து விற்கிறதாம் இராணுவம். விலை? 75% குறைந்த விலையில். அதனால் விற்பனை அமோகம்.
இரவு உணவு, காலை உணவு, டீ என மொத்தம் 4 பேருக்கும் நரேஷ் செம்வால் எங்களுடம் வசூலித்தது வெறும் 560 ரூபாய் மட்டுமே. உணவு தயாரித்து உபசரிப்பது அவர் மனைவி. பெரிய லாபம் எல்லாம் இல்லாவிட்டாலும் தந்தை 80இல் ஆரம்பித்த விடுதியை 20 வருடங்களாக நடத்துகிறாரே! பல்கலைக்கழகத்தில் படித்தவர்,
அருமையாக ஆங்கிலம் பேசுகிறார் Naresh Semwal.

No comments:

Post a Comment