Friday, June 20, 2025

திருச்செந்துரை ராம்மூர்த்தி சங்கர்

 1999/2000 ல் இவர் முதன்முதலாக எங்கள் 'பஹ்ரைன் ஸ்லோகா க்ரூப்’பில் எனக்கு அறிமுகம் ஆனவர். அப்போது அதிக தொடர்பு இல்லை. பிறகு மற்ற வளைகுடா நாடுகளான துபாய் மற்றும் கத்தாரில் வேலை செய்துவிட்டு இந்தியா திரும்பும் முன் ஏழெட்டு வருடங்களாக மறுபடியும் இவர் பஹ்ரைனில் இருந்த போது எனது இனிய நண்பர். சவுதியில் வேலை பார்த்துக்கொண்டு வார இறுதியில் பஹ்ரைன் வந்து விடுவார்.

பழக இனிய நண்பர். எங்கூர்க்காரர், திருச்சி, மற்றும் சி.ஏ. இது போதாதா நமக்கு. ரொம்ப நெருங்கிய நண்பர்களில் ஒருவாகி விட்டார். சி.ஏ மற்றும் அதுசார்ந்த ICWA போன்ற உயர் படிப்புகள் படித்தும் படாடோபமில்லாமல் ரொம்ப அடக்கம், எளிமையாக கட்டம் போட்ட மஞ்சள் சட்டையும் ஜீன்ஸ் பாண்ட்டும் நெற்றியில் கத்தையாக புரளும் மயிர்க்கொத்து, எப்போதும் முகத்தில் அணிந்திருக்கும் புன்னகை இதெல்லாம் அடையாளங்கள்.
தவறாமல் வீட்டுக்கு வருவார். சாப்பிட ஹோட்டலுக்கு கூட்டிப்போவார். மணிக்கணக்கில் சுவாரசியமாக பேசிக்கொண்டிருப்பார். அரசியல், இசை, சினிமா, வளைகுடா சார்ந்த வேலை என பேசுவதற்கு சங்கதிகள் ஏராளம் இவரிடம்.
தயக்கமில்லாமல் சொல்ல வந்த கருத்தை தாழ்மையுடனும் பட்டென சிரித்த முகத்துடன் அழுத்தமாகவும் சொல்பவர்.
பம்பாய் சர்னி ரோடு மரைன் ட்ரைவ் பகுதியில் தினமும் அன்றைய நிகழ்வுகளை சம்மந்தப்படுத்தி வெளியிடப்படும் மிகப்பிரபலமான 'அமுல் வெண்ணெய் விளம்பரம்' போல தனது அரசியல் பதிவுகளை நாலைந்து வரிகளில் நையாண்டி/நகைச்சுவை கலந்து நச்சென எழுதுபவர்.
முகநூலில் கதை, கட்டுரை, கவிதை, இந்திய/உலக அரசியல், தமிழ்/ஆங்கில இலக்கியம் என எல்லா துறைகளிலும் கலக்குபவர்.
'மோட்டுவளைச்சிந்தனைகள்' மற்றும் 'காதல் தஸ்தாவேஜுக்கள்' தொடர்கள் எழுதி முகநூல்
உலகையை அசத்தியவர். ஏன் மீள் பதிவு போட தயங்குகிறார் தெரியவில்லை. ‘நப்பிண்ணை’ எனும் பாத்திரம் கொண்ட கதை ஆர்.சி. சக்தி ஸ்டைலில் எழுதி அசத்தியிருப்பார்.
நகைச்சுவை தான் இவரது பலம் என்பதற்கு இவரது பதிவுகளில் நிறைய சான்றுகள். சாம்பிளுக்கு சில இதோ...
பெட்டிக்கடியில் வைத்து கை வைத்த வெள்ளை பனியனை தேடுவதைப்பற்றி எழுதி அப்படியே நவநீத கிருஷ்ணனை(விஜய லக்ஷ்மி) கலாய்ப்பது.
ஹிந்தி ராஜேஷ் 'காக்கா' இறந்தபோது அவருக்கு விருது வழங்கியிருக்கலாமென அங்கலாய்க்காமல் 'காக்கா' ராதாகிருஷ்ணனுக்கு விருது வழங்க 'பரிந்துரை' செய்தவர்.
இலங்கையில் புதிய ஆட்சி மலர்ந்ததும் 'டெசோ, சீமாசோ, வைகோசோ, நெடுசோ' என எல்லோரையும் சாடியவர்.
'தி'றந்த 'ம'டல் கிருஷ்ணா' வாம்.
'சிறு குழந்தை போல நடந்துகொண்ட அத்வானியை 'LK'ji என்பதற்கு பதிலாக இனி LKG என அழைக்கலா'மாம்.
'என்ன சங்கர்...ஃப்ரெஞ்ச் ஓப்பன் ஜிம் குரியர்.. வயது 21 ன்னு போடறான்.. சட்டைய கழட்னா பூணூலே இல்ல' என கேட்கும் மாமா புள்ள நந்து.
'பிராண்டு அம்பாசிடரா? ஏண்ணே அம்பாசிடரத்தான் மூடிட்டாங்களாமில்லே!'
'மனைவி சொல்லுக்கு எதிர்வாதம் செய்யாமல் 'ஆம்' சொல்லும் அனைவரும் 'ஆம் ஆத்மி' தானாம்.
"பெண்ணின் அப்பா: பையனோட நடத்தை எப்பிடி?
தரகர்: என்ன இப்பிடி கேட்டுட்டீங்க..அவனோட நன்னடத்தைக்காக ஆறு மாசம் முன்னேயே ரிலீஸ் பண்ணிட்டாங்க..
பழைய ஜோக்.. ஆனா சஞ்சய் தத்துக்காக எழுதியதல்ல"வாம்.
Usharani Sridhar உடன் இவரது மனைவி Kalpana Sankar போனில் அரட்டை அடிப்பதைப்பற்றி குறிப்பிடும்போது 'கல்பனா ராங் நம்பர்க்கே அரை மணி நேரம் பேசிட்டு தான் ஃபோனை வைப்பா' என்றது இவரது குறும்பின் ஹலைட்..
ரணகளம் பண்றீங்க சங்கர்!
பஹ்ரைனில் முதல் நாள் இரவு வெகு நேரம் விழித்து சினிமா பார்த்து, மறுநாள் (வார இறுதி வெள்ளியன்று) காலை மெதுவாக எழும்போது வாசலில் காலிங் பெல் சத்தம். கதவை திறந்தால் இவர் மனைவியுடன் வாசலில் நின்றிருந்தார்.
‘சாரி ஶ்ரீதர்! போன் பண்ணாமெ வர்றோம். கல்பனாவுக்கு டிரைவிங் லைசென்ஸ் கிடைச்சாச்சு, முதன்முதலா கார் ஓட்டறாங்க, பக்கத்துல உக்காந்திட்டு வர்றேன். உங்க வீட்டு வழியா வந்தோம். உங்களுக்கு சஸ்பென்ஸா இருக்கட்டுமேன்னு தான் சொல்லாம வந்தோம்’ என மன்னிப்பு கேட்டவரை தடுத்து, சந்தோஷமாக வரவேற்றேன். நண்பர்களுடன் இருக்கும்போது நேரங்காலமெல்லாம் எப்போது நாம் பார்த்தோம்!
அடுத்த ஒரு மணி நேரம் நேரம் போனது தெரியாமல் அரசியல் தலைவர்கள், சில சினிமா ஹீரோக்கள், நண்பர்கள், குழந்தைகள், மனைவியர் என எல்லோரது மண்டையையும் உருட்டி பின் சட்டென விடை பெற்றுக்கொள்வார். இவரது மைத்துனர் Ramakrishnan Venkataraman மற்றும் இவரது சகோதரி Mathangi Ramakrishnan கூட இருந்தால் அரட்டை இன்னும் களை கட்டும்.
மனைவி உஷா இடியாப்பம் மற்றும் ஃபில்டர் காபியை எதிரே வைக்க நம் பேச்சு திருச்சி, பம்பாய், ஶ்ரீரங்கம் பக்கமோ அல்லது முகநூல் நண்பர்கள் பக்கமோ திரும்பும். காபியை கப் & சாஸரில் அருந்துவது இவருக்கு பிடிக்காதென்பதால் நான் ‘உஷா! ஆய்னக்கு காபி எவர்சில்வர் டம்ளர்லோ இஸ்தாவா?!’
சில சமயம் இவர் கிளம்பும் முன் அன்று மதியம் லஞ்ச்சுக்கு ப்ளான் செய்து சரவணபவன் (இவருக்கு பிடித்த உணவகம்) அல்லது வ்ருந்தாவன், சீஃப் பகுதி ‘எல்லோ சில்லீஸ்’ என ஏதாவது உணவகத்தில் உண்ட பின் நேராக அதிலியா பகுதியில் இவர் வசிக்கும் சோஹா ப்ளாசாவில் காபியுடன் மேலும் ஒரு மணி நேரம் கதைத்து, மாலை 4 மணிக்கு கல்பனா தயாரித்த சூடான இட்லி மற்றும் இரண்டாவது ரவுண்டு காபி முடித்து வீடு வந்து சேருவோம்.
மனாமாலிருந்து 20 கிமீ தொலைவில் பாலைவனத்தின் நடுவே எண்ணெய் கிணறுகளுக்கு அப்பால் சீக்கிய குருத்வாரா மற்றும் அம்மன் கோவிலுக்கு லாங் ட்ரைவ் செய்து அங்கே நூற்றுக்கணக்கான மக்களுடன் வரிசையாக தரையில் அமர்ந்து சப்பாத்தி, நெய்சோறு, காபுலிசன்னா, கேசரி, டீ என என்னுடன் மஹாப்ரசாதம் சாப்பிடுவார்.
ஶ்ரீரங்கத்தில் இவரது வீட்டிற்கு போனால் கல்பனா சங்கரின் டிபன் காபி இல்லாமல் நானும் உஷாவும் திரும்பியதில்லை.

No comments:

Post a Comment