Friday, June 20, 2025

டீயினால் சுட்ட வடு…


சட்டென மூளையை சுறுசுறுப்பாக்கி நமக்கு உற்சாகமூட்டி புத்துணர்ச்சி கொடுக்கும் பானங்களில் பிரதான இடம் தேனீருக்கு தான். இன்னும் வாஞ்சையுடன் ‘டீ’ என சொல்லலாம். இலங்கையில் தேத்தண்ணீர் (தேயிலை நீர்), கேரளாவில் சாயா, வட இந்தியாவில் சாய்.
அந்த காலத்தில் காபி கிளப் ஹோட்டல்கள் பெருவாரியாக வியாபித்திருந்தன (அங்கே டபரா டீயும் கிடைத்தாலும்). தற்போது அவை ரெஸ்டுரண்ட்களாக மாறி, நகரங்களில் coffee shopகள் காளான் வளர்ச்சியடைந்ததை பரவலாக நாம் காண முடிகிறது. ஆனால் டீக்கடை என்பது இப்போதும் நம் எல்லோருடைய வாழ்வில் ஒரு அங்கம். காசில்லா ஏழைகளின் பசி போக்கும் துரித உணவு டீ தான்.
மலையாள சினிமா டைரக்டர்களுக்கு நீள பெஞ்சு, மேசை போட்ட டீக்கடை காட்சி அதி முக்கியம். கட்டாயம் விருது கிடைச்சுடும்.
70களில் தென்னூர் மூலக்கொல்லை தெருவில் சாயபு ஒருவர் நடத்தும் டீ கடைக்கு ஓடுவோம். கடைக்கு வெளியே வடிகட்டிய டீத்தூள் பிளாஸ்டிக் பக்கெட்டிலிருந்து நிரம்பி வழியும் அளவிற்கு நூற்றுக்கணக்கில் டீ ஆற்றுவார் சாயபு. காலை 4 மணிக்கு எழுந்து நிலக்கரி, ராட்டி, கொஞ்சம் கிருஷ்ணாயில் சேர்த்து பாய்லரை பற்ற வைத்து பக்கத்தில் பெரிய தேக்சாவில் பால் காச்சுவார் சாயபு. சாரி சாரியாக மக்கள் வந்து டீ குடிக்க, அவ்வப்போது டீ வடிகட்டும் துணியை திருப்பி டீத்தூள் சக்கைக்கு விடை கொடுப்பார்.
முதலில் கண்ணாடி க்ளாஸ்களை மிலிட்டரி வரிசையில் நிற்க வைத்த பின், பிடி வைத்த அலுமினிய போவினி,ஜென்மத்துக்கும் மூடியில்லாத சக்கரை டப்பா, சர்க்கரை தூவ ஈர ஸ்பூன், ஸ்டவ்வில் கொதிக்கும் பாலை செல்லமாக அள்ள சாம்பார் குழிக்கரண்டி, பாய்லரின் கழுத்து பகுதியில் உட்கார்ந்திருக்கும் இன்னொரு பிடி வைத்த சின்ன போவினி.. மேற்படி உபகரணங்கள் கொண்டு டீ டிகாக்‌ஷனை பெரிய போவினியில் விட்டு, கீழே கலர் பார்த்து மேலும் கொஞ்சம் டிகாக்‌ஷனை விட்டு, அடுத்த நொடி கூரை வரை உயர்த்திய வலது கை ஆற்றும் வானவில் போன்ற டீயை இடது கையில் வாங்கி ஆற்றி முதல் க்ளாசில் இறக்கி, அடுத்தடுத்த க்ளாஸ்களில் விடும்போது டீ ஆற்றும் உயரம் குறைந்து கொண்டே வரும்.
லைட் டீ, ஸ்ட்ராங் டீ, மீடியம் டீ எல்லாமே அந்த சில நொடிகளில் டீ வடிகட்டுவதில் அவர் செய்யும் ஜாலம் தான். ஸ்ட்ராங் டீக்கு மட்டும் வடிகட்டியை லேசாக குலுக்குவார்.
டீயின் ஒன்று விட்ட சகோதரன்கள் இருவர். ஒருவன் பன். இன்னொருத்தன் பொறை. பொறையை சில ஊர்களில் வர்க்கி என்பார்கள். கேரள ஃபாதர் சன்னி வர்க்கிக்கும் ஊட்டி வர்க்கிக்கும் எவ்வித ஸ்நான ப்ரார்த்தியும் கிடையாது.
டீக்கடைகளில் பொதுவாக இனிப்பை கூட்ட சர்க்கரையில் சாக்கரீன் (saccharin) கலப்பதாக பரவலாக பேசப்பட்டாலும் அதை எங்கே வாங்குவார்கள், எப்போது கலப்பார்கள் என்பதை நான் பார்த்ததில்லை. சக்கரை டப்பா எப்போதும் பாதி நிரம்பி பக்கவாட்டில் இங்குமங்கும் அப்பிக்கொண்டு இருக்கும். ஈர ஸ்பூனில் சர்க்கரையை தூவினாலும் அரை ஸ்பூன் தான் விழும் என்பதால் சும்மா அள்ளி விடுவார் டீ மாஸ்டர். பாய்லர் டீயில் சர்க்கரை எப்போதும் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். மீடியம் ஷுகர் என ஆர்டர் செய்வதே உசிதம்.
மணிக்கொரு தரம் பாய்லரின் இடுப்பிலுள்ள இரும்புப்பிடியை கடகடவென அவர் இழுத்து ஆட்ட, மேலே நெருப்பு கங்குகள் சடசடவென வெளியே கிளம்ப, ஏனத்தால் அண்டாவிலிருந்து நீரை மொண்டு பாய்லரின் கழுத்துப்பகுதியில் மூடியை திறந்து கொட்டினால் , டீ வியாபாரம் அமோகம் எனக்கொள்க.
எனக்கு பிடிக்காதது சில பேர் ஆவலுடன் குடிக்கும் பால் டீ. சூடான பாலை க்ளாசில் ஊற்றி டிக்காஷனால் மேலே ஒரு ரவுண்டு போட்டால் பால் டீ ரெடி. அந்த வஸ்துவிற்கெனவே ஏழெட்டு பேர் தினமும் வருவதுண்டு.
சிலர் ‘ஆடை போட்டு குடுங்க’ என ஆர்டர் செய்வர். அதாவது டீயில். கொதிக்கும் பாலின் மேற்பரப்பிலிருந்து சர்வ ஜாக்கிரதையாக ஆடையை வெட்டி டீ கிளாசின் மேல் பரத்தி வைத்துக்கொடுக்க, முதலில் விசுக்கென ஆடையை உறி்ஞ்சி இழுத்து மென்று சாப்பிட்ட பின் மெதுவாக டீயை ரசித்து உறி்ஞ்சும் பார்ட்டிகள் உளர்.
கடைசி ஓரிரு வாய்க்கு டீ க்ளாசை வட்டமாக கடிகார சுற்றுக்கு எதிராக இரண்டு மூன்று தடவை சுற்றி மடக்கெட வாயில் கவிழ்ப்பவர்கள் உண்டு.
80களில் திருச்சி டோல்கேட் பகுதியில் மாலை வேளை டீக்கடைகளில் இளையராஜா பாடல்களுக்கு மத்தியில் ‘செய்திகள் வாசிப்பது செல்வராஜ்’ இன் குரலை கேட்டபடி ஸ்ட்ராங் டீ உள்ளே இறங்கும்.
சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் இரவு வேளைகளில் டீ வியாபாரம் சுறுசுறுப்பாக இருக்கும். பாலும் நன்றாக சுண்டி கொதித்து லேசான மஞ்சள் நிறத்தில், பாய்லரிலிருத்து பறந்து வந்த கரித்தூள் பாலின் மேற்பரப்பில் ஆங்காங்கே உட்கார்ந்திருக்கும்.
பிரம்மச்சாரிகள் இரவுக்கடைகளில் வந்து உடம்பை தேத்த பால் சாப்பிடுவார்கள். ‘காளிதாசன்.. கண்ணதாசன்’ பாடல் திருச்சி மன்னர்புரம் நால்ரோடு நைட்டுக்கடைகளில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஒலிக்க ஜெயச்சந்திரன்-சுசிலா குரல்களில் லயித்து, பிஸ்கட் கடித்து டீ உறிஞ்சும் சுகமே அலாதி.
காலை பன், பொறை விற்பனை முடிந்து பத்து பதினோறு மணி வாக்கில் கமகமவென கருவேப்பிலை வாசனையுடன் பருப்பு வடை மற்றும் வெல்லம்+மைதா மாவில் செய்த வெடிகுண்டு சைஸ் கரிய இனிப்பு போண்டா.. சட்டென டீயுடன் பறந்து போகும் ஐட்டங்கள்.
மாலை நாலு மணியிலிருந்து போண்டா மற்றும் வாழைக்காய் பஜ்ஜி அமோக விற்பனை. பழைய தினத்தந்தியை 16ஆக மடித்து சின்ன சதுர காகிதங்களாக ஆணியில் மாட்டியிருக்கும். டிஷ்யூ பேப்பரே பெருமூச்சு விடுமளவிற்கு பஜ்ஜி எண்ணெயை தினத்தந்தி பேப்பர் இறக்கி கையையும் துடைக்க உதவி, சில சோம்பேறிகளுக்கு அந்த அகால வேளையிலும் துண்டு பேப்பரில் சிந்துபாத் கதையை கஷ்டப்பட்டு படிக்க உதவும்.
வட இந்தியர்கள் தட்டிப்போட்ட இஞ்சி, ஏலம் கலந்து பாலில் டீத்தூள் போட்டு கொதிக்க வைத்து பாத்திரத்தை இறக்கும் முன் ஒரு சொட்டு டீயை இடது கையில் விட்டு நக்கி பார்க்கும் அல்ப வழக்கம் தமிழனுக்கு கிடையாது.
தற்போது குங்குமப்பூ டீ, வாடாமல்லி டீ, ரோஜா டீ, செம்பருத்தி டீ, கெமோமில் (சாமந்தி) டீ என விதவிதமான சுவைகளில் டீ அநியாய விலைக்கு கிடைத்தாலும், நம் இல்லங்களில் பாரம்பரியமாக தயாரிக்கும் தேநீர் மற்றும் டீக்கடை பாய்லர் டீக்கே சுவை அதிகம்.
அலுவலகங்களில் காரசாரமான விவாதங்கள் கூட கேண்டீன் டீயால் சுமூகமாகி போவதுண்டு.
டீயினால் சுட்ட வடு…
சில இளசுகளுக்கு ஆபிஸ் கேண்டீன் டீயால் காதல் மலர்ந்து ‘செத்தாண்டா சேகரு’ ஆன கதைகள் ஏராளம். ‘சே! இந்த மூஞ்சியவா அப்படி விழுந்து விழுந்து காதலிச்சோம்!’ என பிற்காலத்தில் காண்டீனை பார்த்து பெருமூச்சு விடும் ஸ்த்ரீகளும் உண்டு.

No comments:

Post a Comment